பார்த்திபன் சுஹானா இருவரும் சென்னை வந்தடைந்து விட்டனர். அவரவர் பணிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவர்களுக்குள் நெருக்கம் கூடியிருந்தது.
காலையில் ஒன்றாக சேர்ந்து காபி பருகுவதும் பேருந்து நிறுத்தம் வரை அவளை அவன் வந்து விடுவதும் மாலையில் யார் முன்னால் வந்தாலும் அடுத்தவரின் வரவுக்காக காத்திருப்பதும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்வதும் எப்போதாவது பார்த்தி சமைக்க அவள் உதவுவது எனவும் அழகாக நகர்ந்தன நாட்கள்.
வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல பார்த்திக்குள் அவ்வளவு ஆசை, அவளை நேராக பார்க்கும் போதெல்லாம் விளக்கத் தெரியாத அவனால் விளங்கிக் கொள்ள முடியாத ஏதோ ஒரு தடை.
இணைகள் இருவரும் சமம், அப்படியே அவளை பார்க்க தன்னை பழக்கி வருகிறான், மனைவியாக ஏற்று கொண்டு விட்டதாகத்தான் நினைக்கிறான், ஆனால் அவனது ஆழ் மனதிலோ சுஹானா இன்னும் உயரத்திலேயே இருக்கிறாள். அந்த பிரம்மை அவனிடமிருந்து முழுதாக நீங்காத வரை தாம்பத்யம் அவனுக்கு எட்டாக்கனிதான்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் அன்பான, அனுசரனையான தம்பதிகள்.
விடுமுறை தினங்களில் பார்த்திக்கு அவனது ஆராய்ச்சிப் படிப்பு சம்பந்தமான வேலைகள் இருக்கும், அவளும் ஏதாவது அவனுக்கு உதவுவாள், எப்போதாவது வெளியில் செல்வார்கள்.
தாத்தா பாட்டிக்கு இவர்களை நினைத்து மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி. காயத்ரி தன் மகளுடன் தினமும் பேசி விடுவார், நிவாஸ் தினம் இல்லையென்றாலும் அடிக்கடி பேசுவான். ஆஷுதோஷ் தானாக மகளுக்கு அழைப்பதில்லை, வாரம் ஒரு முறை என சுஹானாதான் அப்பாவுக்கு அழைத்து பேசுவாள்.
அப்போதும் மகளிடம் அவளது கணவனின் தேர்வு குறித்த தன் அதிருப்தியை வெளிக் காட்டாமல் இருக்க மாட்டார் மனிதர்.
அன்று ஞாயிற்றுக் கிழமை, மதியம் உணவருந்திய பிறகு ஹாலில் அமர்ந்து ஹெட் செட் போட்டுக் கொண்டு காணொளி ஒன்றில் தன் படிப்பு சம்மந்தமான குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தான் பார்த்தி.
அவனை தொந்தரவு செய்யாமல் அறைக்கு வந்து விட்ட சுஹானா தூங்கி எழுந்தாள். பார்த்தி இன்னும் ஹாலில்தான் இருந்தான். வார இறுதிதான் இப்படி நேரம் கிடைக்கிறது, அப்போதும் அவருடன் செலவழிக்க முடியவில்லையே என ஆதங்கமாக இருந்த போதும் அவனது நிலை புரிந்தவளாக தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.
முகம் கழுவி வந்தவள் அம்மாவுக்கு அழைத்து பேசினாள், பின் அப்பாவுக்கு அழைத்தாள். காணொளி அழைப்பில் வருமாறு அவர் கேட்கவே அவளும் வந்தாள்.
கைப்பேசி திரை வழியே மகளை பார்த்த ஆஷுதோஷ், “ஏன் வெயிட் குறைஞ்ச மாதிரி இருக்க சுஹா?” என கவலையாக கேட்டார்.
“நல்லாத்தானே டாடி இருக்கேன்” என்றாள் அவள்.
உண்மையாகவே அவள் எடை குறைந்துதான் விட்டாள், ஆனால் ஆரோக்கிய குறைபாடு என எதுவுமில்லை. மும்பையில் கடைபிடித்த உணவு முறை இங்கே மாறிப் போயிருக்க, அதன் காரணமாகவும் வேலைக்கு செல்வதாலும் சற்று மெலிந்திருந்தாள்.
“பார்த்தாலே நல்லா தெரியுதே, சரியா சாப்பிடுறது இல்லையா நீ?” எனக் கேட்டார் ஆஷுதோஷ்.
தாத்தா வீட்டில்தானே சாப்பிடுகிறேன், சரியாக சாப்பிடாமல் போனால் அவர்கள் விடுவார்களா? எனக் கேட்டாள் அவள்.
“ஓ! உனக்கு சாப்பாடு கூட போட முடியாதவனையா கல்யாணம் பண்ணியிருக்க?” என கேட்டு விட்டார் அவர்.
“டாடி!” என கண்டனமாக அழைத்தாள் அவள்.
மும்பையில் அவர் தன் குடும்பத்தை இரவு உணவுக்காக வெளியில் அழைத்து செல்லும் போது செலவாகும் தொகையை சொன்னவர், அப்படி எப்போதாவது உன் கணவன் உன்னை அழைத்து சென்றிருப்பாரா என கேள்வி எழுப்பினார்.
அப்படி அதீதமாக செலவு செய்வதால் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை, பார்த்தி தன் கையால் சமைத்து தரும் எளிமையான உணவுக்கு ஈடு இணை எதுவுமில்லை என அப்பாவுக்கு எடுத்து சொன்னாள் அவள்.
முடியாத ஒன்றை மழுப்பலாக இப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும் என இகழ்ச்சியாக சொன்னார் அவர்.
“எவ்ளோ சொன்னாலும் புரிஞ்சுக்க மறுக்கிற உங்கள்ட்ட இன்னும் என்ன சொல்றது டாடி? விடுங்க, உடம்பை பார்த்துக்கோங்க, நான் வைக்கிறேன்” என்றாள் அவள்.
“உனக்குத்தான் புரிய மாட்டேங்குது, அடம்பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ நல்லா வாழ்ந்தா நானும் சந்தோஷ பட்ருப்பேன், கஷ்ட படும் போது அவன் மேல கோவமா வருது” என சொல்லி அவர்தான் பேச்சை வளர்த்தார்.
“நான் நல்லாத்தானே இருக்கேன், நீங்களா இமாஜின் பண்ணிக்கிட்டு அவரை மரியாதை குறைவா பேசாதீங்க டாடி, பார்த்தி உங்க பொண்ணோட ஹஸ்பண்ட்ங்கிறதை மறக்க வேணாம்!”
“நல்ல ஹஸ்பண்ட்…” பற்களை கடித்தார் அவர்.
அப்பாவுடன் அதற்கு மேல் பேசப் பிடிக்காமல் அழைப்பை துண்டிக்க போனாள் சுஹானா. அவர் விடுவதாக இல்லை.
“நானும்தான் உன் அம்மாவை லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்தேன், உன் தாத்தாகிட்டருந்து எதையும் எதிர்பார்க்காம சொந்த உழைப்புல அவளை வசதி படைச்சவளா வச்சிருக்கேன், அவ பிறந்த வீட்ட விட இங்க வசதியா வாழுறா, என் பேர்ல உள்ளத விட அவ பேர்லதான் நிறைய அசெட் இருக்கு”
“அவ்ளோ சொத்து இருக்கிற அவங்க ஹேப்பியா இருக்காங்களா டாடி?”
“ஏன் அவளுக்கென்ன குறை இங்க?” என கர்வமாக கேட்டார்.
பெற்றோரின் வாழ்க்கை முறை குறித்து விமர்சனம் செய்ய விரும்பாதவள், “பார்த்தி எந்த குறையும் எனக்கு வைக்கல, என் பிறந்த வீட்ல அனுபவிக்காத சந்தோஷம், சுதந்திரம், நிம்மதி எல்லாமே பார்த்தி கூட வாழும் போதுதான் அனுபவிக்கிறேன், ஹீ இஸ் த பெஸ்ட் ஹஸ்பண்ட் ஃபார் மீ!” என்றாள்.
அதில் அவரின் செருக்கு அடி வாங்கி விட, “உனக்கு கல்யாணம் ஆகி த்ரீ மன்த்ஸ் இருக்கும்தானே? இதுவரை என்ன கிஃப்ட் வாங்கி கொடுத்திருக்கான் உன்னை ஹேப்பியா வாழ வைக்கிற உன் பெஸ்ட் ஹஸ்பண்ட்?” என நக்கலாக கேட்டார்.
“இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லணும்னு இல்லை டாடி”
“கண்டிப்பா சொல்லணும். இதுவரை சொல்லு எத்தனை லட்சம் செலவு பண்ணிருக்கான் உனக்காக?” அவரின் உதடுகளில் இகழ்ச்சியான சிரிப்பு.
“அவரும் நானும் வாழுற வாழ்க்கைக்கு எந்த லட்சமும் தேவையில்லை”
“எதுவும் இல்லைனே சொல்லிட்டு போ” என்றவர் மோசமான வார்த்தை கொண்டு பார்த்தியை திட்டி, “உன் லைஃப் ஸ்பாயில் ஆக்கிட்டான்” என்றார்.
“ச்சே எத்தனை கேவலமா பேசுறீங்க, நீங்க முன்னாடி பார்த்திகிட்ட நடந்த முறைக்கு இன்னும் ஸாரி சொல்லாம இருக்கும் போது, உங்ககிட்ட நான் பேசியிருக்கவே கூடாது. பேசினதாலதான் அவரை என்ன வேணா பேசலாம்னு தைரியம் ஆகிடுச்சு உங்களுக்கு. இனி என்கிட்ட பேசாதீங்க” என கண்களில் நீர் திரள சொன்னவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.