அத்தியாயம் 11
விஸ்வாவின் சிறுவயதில், அவனது தாயும், தாய்மாமனும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், அவர்களின் பேச்சுகள் அங்கேசுற்றி இங்கேசுற்றி கடைசியில் மாமனின் மகளைத்தொட்டே முடியும்.
“பிள்ளையை அவங்க கையில் கொடுத்திருக்க கூடாது, நானே வளத்திருக்கணும்…”
“ஆனாலும் இந்த தமிழரசு, இப்படி என்னை ஏமாத்துவான்னு நினைக்கலை. எவ்வளவு திமிர் இருந்தா, தகப்பன் நான் உயிரோட இருக்கும் போதே எம்பிள்ளைக்கு அவனை அப்பான்னு சொல்லிக் குடுத்திருப்பான்?”
இந்த வகையில் அமைந்திருக்கும் சௌந்தரின் பேச்சுக்களை கேட்டு வளர்ந்த விஸ்வாவின் மனதில், சிறுவயதிலேயே தமிழரசுவின் செயல் தவறு என்று அழுத்தம் திருத்தமாக முத்திரை குத்தப்பட்டு விட்டது.
அதிலும் மகளைக் கேட்டு, தன் மாமன் சென்றபோது, கொடுக்க முடியாது என்று சொல்லி, ஊரையே காலி செய்து விட்டு போய்விட்ட தமிழரசுவின் செயல், மிகப்பெரிய ஏமாற்று வேலையாகவே விஸ்வாவின் மனதில் பதிந்து போனது.
வருடங்கள் பல உருண்டு வாலிபனான பிறகும் கூட, இருபக்க நியாயத்தையும் அலசி ஆராய்ந்து பாராமல், மாமனின் பக்கமே மருமகனின் மனத்தராசு சரிந்து நின்றது.
அதனால் தான், தன் மாமனைக் கண்ட அதிர்ச்சியில் கலைவாணிக்கு வந்த நெஞ்சுவலி கூட, அரஸ்ட் வாரெண்டை கண்டவுடன் அரசியல்வாதிகளுக்கு வரும் நெஞ்சுவலி போலவே தெரிந்தது விஸ்வாவுக்கு.
விளங்கச் சொன்னால், ஷக்திக்கும் தனக்கும் நடைபெற இருக்கும் திருமணத்தை தடுப்பதற்காகவே, இப்படி ஒரு நாடகத்தை கலைவாணி ஆடுகிறார் என்று தப்பர்த்தம் கொண்டான் விஸ்வா.
‘இன்று திருமணம் நடைபெறாமல் போனால், திரும்பவும் இந்த திருமணம் நடைபெறுமா?’ என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.
‘உறுதியே இல்லாத ஒன்றை நம்பிக்கொண்டு, எதற்காக இன்றைக்கு கையில் கிடைத்திருக்கும் வாய்ப்பை தவறவிட வேண்டும்? கூடவே எதை நினைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றினார்களோ, அதை முறியடித்து விட்டால் தான் என்ன?’
மாமன் மீதான கண்மூடித்தனமான பாசம், ஏதேதோ எண்ணத்தை எழுப்பி அவன் கண்களை மறைக்க, ஆறுதல் வேண்டி வந்த பெண்ணுக்கு ஆற்றொன்னா துன்பத்தை கொடுத்தான்.
ஆம்… விஸ்வஜித் தன் கழுத்தில் அந்த இடத்தில் வைத்து தாலி அணிவிப்பான் என்று எதிர்பாராத ஷக்தி, அதிர்ந்து போனாள்.
காதலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து, இப்படி ஒரு நிகழ்வுக்காக காத்துக்கிடந்த பெண்மை தான். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிர்ந்து போனவள், “உன்னிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை” என்பது போல விஸ்வாவைப் பார்த்தாள்.
அந்த பார்வையில் இருந்த ஏமாற்றம், விஸ்வஜித்தை குத்தி கூறுபோட்டது.
“இல்லடா, நான்…”
தன்னை தோளோடு அணைக்க முயன்றபடியே, பேச ஆரம்பித்தவனின் பேச்சை கேட்க மறுத்து, அவனிடமிருந்து விலகிய ஷக்தி, பக்கத்தில் இருந்த நாற்காலியில் தடுமாறியபடி பொத்தென்று அமர்ந்தாள்.
இதுவரை நடந்தவை அனைத்தையும் ஒரு அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்த தமிழரசுவிற்கு, மகளின் தடுமாற்றம் மிகப்பெரிய சீற்றத்தை உண்டாக்கியது.
“என்ன விஸ்வா? ஹாஸ்பிடல்ல வச்சு… ஏன் இப்படி?” என்று மருமகனிடம் முணுமுணுத்துக் கொண்டிருந்த சௌந்தரின் மேல், தன் கோபம் அத்தனையையும் கொட்ட தயாரான தமிழரசு,
“சபாஷ்… பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் நல்லாவே ஆட்டுறீங்க சௌந்தர்” என்றார் வெறுப்பு மண்டிய குரலில்.
ஆம்…’இந்த திருமணத்திற்கான ஆரம்பப்புள்ளி, சௌந்தராகத்தான் இருக்க வேண்டும்’ என்று, அவரைக் கண்ட நொடிப்பொழுதே அனுமானித்து விட்டார் தமிழரசு.
“ஆமா… தொட்டில்பிள்ளை, என்னோட சொந்த பிள்ளையா இருக்கும் போது என்ன வேணும்னாலும் நான் செய்வேன். அதைக் கேக்குற ரைட்ஸ் யாருக்கும் கிடையாது. முக்கியமா உனக்கு கிடையவே கிடையாது” என்றார் சௌந்தர் ஆங்காரமாக.
சௌந்தரிடமிருந்து வந்த பதிலில் சீண்டப்பட்ட தமிழரசு, “ஹூம்ம்… கட்டின பொண்டாட்டியை, உயிரோடு வாழவைக்க துப்பில்லாத மனுஷங்க எல்லாம், வெக்கமேயில்லாம எம்பிள்ளை, என் உரிமைன்னு, பேசவந்துட்டாங்க” என்றார் அலட்சியமாக.
இத்தனை வருடங்களுக்கு பின்னரும், தங்கையின் மரணம் தமிழரசுவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்க, கூரிய அம்பென வந்திருந்தது அவரிடமிருந்து குற்றச்சாட்டு.
குற்றச்சாட்டு… இருபத்தியொரு வருடங்களுக்கு முன்னால், தன் தங்கை இறந்த அன்று தமிழரசால் சொல்லப்பட்ட அதே குற்றச்சாட்டு.
பல இரவுகள் சௌந்தரை உறக்கம் தொலைக்க வைத்து, ‘அப்படித்தானோ? நான் தான் செண்பகத்தை திருமணம் செய்து பிள்ளைப்பேறு வரை கொண்டு சென்று, அவளை கொன்றுவிட்டேனோ?’ என்று, தன்னைத்தானே குற்றவாளியாக்கி கேள்வி கேட்டுக்கொள்ள வைத்த அதே குற்றச்சாட்டு, திரும்பவும் குறி தவறாமல் சௌந்தரின் இதயத்தை பதம் பார்த்தது.
“இங்க பாரு தமிழரசு, புரியாம பேசக்கூடாது நீ. செண்பகம் இறந்து போனது நானே எதிர்பாராத ஒன்னு. ஏன்? அவகூட நினச்சு பாத்துருக்க மாட்டாய்யா.”
“நாங்க ரெண்டு பேரும் எங்க வாழ்க்கையைப் பற்றி என்னவெல்லாமோ மனக்கோட்டை கட்டிவச்சிருந்தோம். ஆனா, அது எல்லாத்தையும் மண்கோட்டையாக்கி, அந்த கடவுள் எங்க வாழ்க்கையில விளையாடிட்டான்.”
ஏதோ நினைவுகளில் மூழ்கியவர் போல பேசிய சௌந்தர், “அந்த கடவுள் செய்த தப்புக்கு, இத்தனை வருஷம் எம்பிள்ளையை எங்கண்ணுல கூட காட்டாம, எனக்கு நீ தண்டனை தந்துட்டியே. அது போதாதா உனக்கு? திரும்பவும் எம்மேலயே பழிபோடுறியே, இது நியாயமா?” என்றார். இப்போது சௌந்தரின் குரல் லேசாக தடுமாறியது.
“ஹஹ… உம்பிள்ளை? நல்ல ஜோக்!” ஏளனமாக சிரித்த தமிழரசு, ஷக்தியை நோக்கி நகர்ந்தார்.
“எங்க, சொல்லு? ஷக்தியை எம்பிள்ளை இல்லைன்னு, உன் மனசாட்சியை தொட்டு நீ சொல்லு பார்ப்போம்? ஷக்தி உனக்கும், உன் மனைவிக்கும் பிறந்த, உங்க இரத்தம் தான்னு தைரியமா சொல்லிடு பார்ப்போம்?” தன் ஆறடிக்கும் நிமிர்ந்து நின்று தமிழரசுவிடம் சவாலாக கேட்டார் சௌந்தர்.
பேச்சின் போக்கு சென்ற திக்கை கண்டு கதிகலங்கி போன பஞ்சவர்ணம், குழம்பி போன முகத்தோடு உட்கார்ந்திருந்த பேத்தியை, தன் வயிற்றோடு அணைத்து கொண்டார். அதற்கு மேலும் ஏதும் கேட்கவிடாமல் ஷக்தியின் காதிரண்டையும் தன்கைகளால் பொத்தியபடியே,
“வேண்டாம் ய்யா, இதுக்கு மேல எதுவும் பேசவேண்டாம் ய்யா, விட்டுருங்க” என்று சௌந்தரைப் பார்த்து கெஞ்சினார்.
“இன்னும் எத்தனை நாளைக்கு உண்மையை மூடி மறைப்பீங்க? எம்பிள்ளை தான் ஷக்தி ங்குற உண்மை என்னைக்காவது ஒருநாள் ஷக்திக்கு தெரியத்தான் வேணும், அது இன்னைக்கா இருந்துட்டு போகட்டும்.”
தனக்குள் ஏதோ புகுந்து கொண்டது போல, பஞ்சவர்ணத்தின் கைகளை ஷக்தியின் காதிலிருந்து விலக்கினார் சௌந்தர். பின்னர், ஷக்திக்கு முன்னால் பாவமன்னிப்பு கேட்பவர் போல மண்டியிட்டு அமர்ந்தவர்,
“இங்க பாரு குட்டியம்மா… இத்தனை நாளும் நீ அம்மா, அப்பான்னு நினைச்சிட்டு இருக்கிறவங்க உன்னோட அப்பா, அம்மா கிடையாது. நான்… நான் தான் உன்னோட அப்பா. உன்னோட அம்மா…” என்றவர் அவசர அவசரமாக தன் பர்ஸிலிருந்த செண்பகத்தின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை எடுத்து மகளின் முகத்துக்கு முன்பு காட்டி,
“இது… இது தான் உன் அம்மா” என்று சொல்லியபடியே, தன் கைகளால் முகத்தில் அறைந்து கொண்டு ஓங்கி அழுதார். “என் வார்த்தைல நம்பிக்கை இல்லைன்னா இவங்க கிட்ட கேளு, ஏன்னா, உன் அம்மாவை பெத்தவங்களே இவங்க தான்” என்று பஞ்சவர்ணத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஒரு தகப்பனாக தன்னைத்தானே அறிமுகப்படுத்தி கொண்டு, தாயையும் புகைப்படம் வழியே மகளுக்கு அறிமுகப்படுத்தும் சௌந்தரின் நிலமை, கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு சோக நிகழ்வு தான். ஏன்? எந்த தகப்பனுக்கும் வரக்கூடாத சூழ்நிலையும் கூட.
ஆனால், எல்லாம் சௌந்தர் தனக்கு தானே இழுத்து விட்டு கொண்டது தானே. இதில் பிறரைக் குறைசொல்ல வழியொன்றும் இல்லையே.
விஸ்வாவின் செயலில் ஏற்கனவே மனம் கலங்கிபோய் உட்கார்ந்திருந்த ஷக்திக்கு, தமிழரசு, சௌந்தரைப் பெயரைச் சொல்லி அழைத்ததும் இல்லாமல், அவரைத் தெரிந்தது போல பேசியது, ஒரு குழப்பத்தை உண்டாக்கியிருந்தது என்றால், சௌந்தர் சொல்லிய தகவல்கள் ஆயிரம் ஆழிப்பேரலைகளை பெண்ணவளின் மனதுக்குள் எழுப்பியது.
அந்த அலைகளில் மூழ்கி மூச்சுத் திணறியவள், விடைத் தேடி தகப்பனையும், அவரின் தாயையும் கேள்வியாய் நோக்கினாள்.
“நீ எம்புள்ளம்மா… அந்த ஆளு லூசுத்தனமா ஏதோ பேசிட்டு இருக்கார், அதை நம்பாத, நீ…நீ எம்புள்ள” பதட்டமாக வந்தது தமிழரசுவிடமிருந்து பதில். பஞ்சவர்ணமோ பதிலேதுமின்றி மௌனமாக நின்றிருந்தார்.
தந்தையின் பதிலில் இருந்த பதட்டமும், அப்பத்தாவின் மௌனமும் ஷக்திக்கு உண்மையான பதிலைச் சொல்லிவிட, அடிவயிற்றில் இருந்து வீறிட்டு எழும்பிய அழுகைத் தொண்டையைக் கடந்து வெளியே வரும்முன்,
“இங்க யாருங்க ஷக்தி? பேஷண்ட் அவங்களை பாக்கணும்னு சொல்லுறாங்க, எங்கூட உள்ள வாங்க” ஐசியூ விலிருந்து வெளியே வந்த வெள்ளை உடை தேவதை ஒன்று ஷக்தியை அழைத்தது.
அடுத்த வினாடியே வந்த அழுகையை தனக்குள் புதைத்த ஷக்தி, எழும்பி அந்த பெண்ணின் பின்னோடு சென்றாள். அங்கே மருத்துவ உபகரணங்கள் சூழ, படுக்கையில் படுத்திருந்த கலைவாணியின் கண்கள் அறை வாசலையே தவிப்போடு பார்த்தபடி இருந்தது.
ஷக்தி அறைக்குள் நுழையவும், “ஷக்தி, நான் தானே உன் அம்மா, சொல்லு…” தன் பலகீனமான குரலில் திரும்பத் திரும்ப கேட்டபடியே புலம்ப ஆரம்பித்தார் கலைவாணி.
‘தாயின் மனநிலையை சமனாக வைத்துக்கொள்ள வேண்டிய நேரமிது’ என்று தெளிவாக புரிந்து கொண்ட ஷக்தி, தன் சோகம் உதறினாள்.
“ஆமா மம்மிஜி… ஷக்திக்கு அம்மா என்னைக்குமே கலைவாணி தான்” என்று தாயின் கைகளைப் பற்றிக்கொண்டு சிரித்தபடி சொன்னாள்.
“ம்ம்…” புன்னகையோடு ஒத்துக்கொண்டு அமைதியாக இருந்த கலைவாணி, மறுநிமிடமே திரும்பவும் அதே கேள்வியை கேட்க ஆரம்பித்தார்.
“மம்மிஜி, சூரியன் கிழக்கு பக்கம் உதிக்கிறது என்னைக்காவது மாறுமா?” தாயின் கண்களை ஊடுருவி பார்த்தபடி நிதானமாக கேட்டாள் ஷக்தி.
“ம்ஹூம்…” லேசாக தலையை ஆட்டினார் கலைவாணி.
“அதே போலத்தான், நீ என் அம்மா ங்குறதும் மாறவே மாறாத நிஜம். மனசை அலட்டிக்காம சீக்கிரம் குணமாகு மம்மிஜி. நாம, நம்ம வீட்டுக்கு போலாம்.”
நோயுற்று கிடக்கும் தன் தாயின் மனதிற்கு, இப்போது இந்த வகையான ஆறுதல் வார்த்தைகளே தேவை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட ஷக்தி, தன் சோகத்தை துளி கூட வெளியே காட்டாது பேசினாள். மகளின் கைகளை பற்றியபடி மெதுவாக கண்களை மூடினார் கலைவாணி.
ஒருசில நிமிடங்கள் அப்படியே நின்று தாயை பார்த்து கொண்டிருந்த ஷக்தி, அந்த அறையில் இருந்த நர்ஸிடம், “சிஸ்டர் நான் அம்மாவை தொந்தரவே செய்யமாட்டேன், கொஞ்ச நேரம் ஓரமா இப்படி உக்காந்துக்கலாமா?” என்று பரிதாபமாக கேட்டாள்.
என்ன நினைத்தாரோ, “சரி” என்று சொன்ன அந்த செவிலி, ஷக்தி உட்கார்வதற்கு ஒரு நாற்காலியும் ஏற்பாடு செய்தார்.
ஒரு நன்றியோடு நாற்காலியில் சரிந்த ஷக்தியின் காதுகளில், சௌந்தரின் வார்த்தைகளே உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘அப்படியானால்… நான் என் தெய்வங்களின் உதிரத்தில் உதித்தவளில்லையா? என் பிறப்புக்கு காரணகர்த்தா, முதல் பார்வையிலேயே என் வெறுப்புக்கு ஆளான அந்த மனிதரா? நான் பத்துமாதம் என் மம்மிஜியின் கருவறையில் குடியிருக்கவில்லையா? அப்படியானால், என் வாழ்க்கையின் கதைதான் என்ன?’
நினைக்க நினைக்க இதயமே வெடித்துவிடும் போலிருந்தது ஷக்திக்கு. சத்தம் போட்டு அழவேண்டும் போலவும் இருந்தது.
ஆனால் சௌந்தரின் எந்த வார்த்தைகளாலும், தன் பெற்றோர் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கையை மட்டும் குலைக்க முடியவில்லை.
‘எதுவாக இருந்தாலும், என் பெற்றோரின் செயலில் கண்டிப்பாக தவறு இருக்காது’ என்று மலையளவு நம்பியவள், இருக்கையிலிருந்து எழுந்து வந்து தாயின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். தன்னை இவ்வளவு நேரமும் அங்கே அனுமதித்த செவிலிக்கு நன்றி கூறி வெளியே வந்தாள்.
சொர்க்கவாசல் கதவு திறக்கவும், அரங்கநாதனை பரவசத்தோடு காணும் பக்தர்களைப் போல, அறைக்குள்ளிருந்து வெளியே வந்த ஷக்தியின் மீது பரபரப்பாக எல்லோருடைய பார்வையும் விழுந்தது.
ஆனால் ஷக்தியின் பார்வை வட்டம் தமிழரசு, பஞ்சவர்ணம், தம்பி சஞ்சீவ் தாண்டி எங்குமே செல்லவில்லை.
“ஷக்தி… நீ என் அக்கா தானே? இவங்கல்லாம் என்னென்னவோ சொல்லுறாங்களே?” தமக்கையைக் காணவும் ஓடிவந்து அவள் கைகளோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு, அவள் தோள் சாய்ந்து சஞ்சீவ் விசும்பினான்.
“ஹேய்… சோட்டுபையா, உன் வாழ்க்கையிலேயே முதல்தடவையா, இன்னைக்கு தான்டா என்னை அக்கான்னு கூப்பிட்டுருக்க.” கண்களைச் சிமிட்டியபடி சொன்ன ஷக்தி, சோர்ந்து போய் நின்றிருந்த தமிழரசுவைப் பார்த்து, “அப்பா…” என்று அழைத்தாள்.
“என்ன ம்மா?” என்று தமிழரசோடு சேர்ந்து சௌந்தரும் பதில் தந்தார்.
சௌந்தரின் என்னம்மா வைக் கண்டுகொள்ளாத ஷக்தி, தமிழரசுவிடம், “ப்பா…பசிக்குது, சாப்பிட கூட்டிட்டு போங்க” என்று சொல்லி, தன் வயிற்றைத் தடவினாள்.
நடந்திருந்த களேபரத்தில் நேரம் மதியத்தையும் தாண்டியிருந்தது. கல்யாண பரபரப்பில் காலையில் சாப்பிடவே இல்லை ஷக்தி.
அதுவும் இல்லாமல், தன்னையே உற்று உற்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியிலிருந்து, கொஞ்சம் விலகி இருக்க வேண்டும் போல அவளுக்கு தோன்ற, அதற்கு உடனடித் தீர்வு பசியாகத் தான் இருந்தது.
அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம், சாப்பிட்டு விட்டு வருவதாகச் சொல்லி, தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வெளியேறினார் தமிழரசு.
திரும்பி வரவும், அவர்களுக்கென மருத்துவமனை நிர்வாகம் தனி அறையை கொடுத்து விட, அதற்குள் சென்று முடங்கிக் கொண்டாள் ஷக்தி. தன்னை சந்திக்க முயன்ற விஸ்வா உள்ளிட்ட யாரையுமே தன்னிடம் நெருங்க விடவேயில்லை.
ஷக்தியின் செயலில் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் திகைத்து போனார்கள்.
அவர்களும் வீட்டுக்கு திரும்பி போகாமல் அங்கேயே பழியாக தவம் கிடந்தார்கள். விஸ்வாவின் அப்பா சதாசிவம் தான், “இன்னைக்கு ஒரே நாள்ல அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா அந்த பொண்ணு பாத்தாச்சு. எல்லாத்தையும் டைஜஸ்ட் பண்ண அவளுக்கு கொஞ்சம் நேரம் வேண்டாமா? நாம எல்லாரும் இங்கயே சுத்தி சுத்தி வந்தா அவளுக்கு டென்ஷன் தான் அதிகம் ஆகும். அதனால வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வரலாம்” என்று சொல்லி எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தார்.
தமிழரசுவும் நேரம் பார்த்து தாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்க்கு சென்று, பில் செட்டில் செய்து தங்கள் பொருட்கள் எல்லாவற்றையும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்துவிட்டார்.
உடுத்தியிருந்த பட்டுப் புடவையை களைந்துவிட்டு, இலகுவாக சுடிதாருக்கு மாறிக்கொண்ட ஷக்தியின் மனது, இன்று காலை இந்த புடவை அணியும் போது இருந்த மனநிலையும், இப்போது இருக்கும் மனநிலையையும் ஒப்பிட்டு பார்க்க, தானாகவே விரக்தி சிரிப்பொன்று இதழில் தோன்றியது.
அடுத்ததாக, கல்யாணத்துக்கென்று அணிந்திருந்த நகைகள் ஒவ்வொன்றையும் கழற்ற ஆரம்பித்தவளின் கைகளில், அவள் அனுமதியின்றி விஸ்வா அவள் கழுத்தில் அணிவித்திருந்த தங்கத்திலான கனத்த தாலிச்சரடு சிக்கியது.
தன் உள்ளங்கையில் ஏந்தி ஒரு நிமிடம் அதைப் பார்த்தவள், வேகமாக அதை கழற்ற முற்பட, அவள் அருகில் இருந்த பஞ்சவர்ணம், “ஆத்தாடி ஆத்தா… என்னம்மா செய்யுற நீ?” என்று அலறியே விட்டார்.
“ஏன் அப்பத்தா? என்னோட பெர்மிஷன் இல்லாமல், எங்கழுத்துல போட்டதை நான் எதுக்கு சுமக்கணும்?” கண்களில் கோபம் மின்ன கேட்டாள் ஷக்தி.
“அதை கழுத்துல வாங்க சம்மதிச்சு தானே ம்மா, நீ மதுரைக்கு வந்த?” என்றார் பஞ்சவர்ணம்.
சௌந்தர் தன்னை, தன் பிள்ளை என்று சொல்லவுமே, இந்த அவசரக் கல்யாணம் எதற்கென்று புரிந்து போயிற்று ஷக்திக்கு. அந்த இடத்தில் விஸ்வாவின் காதல், காரியக்காதல் என்பது ஷக்திக்கு தெளிவாக, தன் காதல் தோற்றுப் போன விஷயத்தை வெளியே சொல்ல மனமின்றி,
“வந்தேன் தான். ஆனா மனுஷத்தன்மையே இல்லாம, எங்க வச்சு, எந்த சூழ்நிலையில எங்கழுத்துல இதைப் போட்டாங்கன்னு நீங்க பாக்கத்தானே செய்தீங்க அப்பத்தா” என்றாள் கோபமாக.
“எங்க வச்சு, எப்படி நடந்திருந்தாலும், நடந்தது கல்யாணம். அதை நீ நினைக்குற மாதிரி எல்லாம் ஈசியா தூக்கி எறிஞ்சிட முடியாது ஷக்தி.” அமைதியாக கூறினார் பஞ்சவர்ணம்.
“இந்த ஆம்பிள்ளைங்களுக்கு தாலின்னு ஒன்னைக் கட்டிட்டா, பொண்ணுங்க நம்ம காலுக்கு கீழ அடிமையா கிடப்பாங்க ங்குற எண்ணம். கண்டிப்பா உங்களை மாதிரி யாராவது ஒரு ஆளாவது, இதை கழற்ற விடாம, இதை கட்டியவன் காலடியில பொண்ணைக் கொண்டு தள்ளிடுவீங்க ங்குற திண்ணக்கம். அந்த திமிரு தான் காலங்காலமா இவங்களை எல்லாம் இப்படி செய்யச் சொல்லுது. அதுக்கெல்லாம் நான் ஆளில்லைன்னு இதை கட்டின ஆளுக்கு நான் காட்டுறேன் அப்பத்தா.”
ஆங்காரமாகச் சொல்லியபடி மறுபடியும் ஷக்தி தாலிச்சரடை கழற்ற முயல, “சொல்லிட்டே இருக்குறேன்ல , அப்படி என்ன பிடிவாதம் ஷக்தி உனக்கு?” என்று சொல்லி, பளாரென்று பேத்தியின் கன்னத்தில் பஞ்சவர்ணம் அறை ஒன்றை வைத்தார்.
தன் வாழ்நாளில் முதல்முறையாக வாங்கிய அடியில், அதிர்ந்து போய் பஞ்சவர்ணத்தை பார்த்துக்கொண்டு நின்ற ஷக்தி, திடீரென்று அவரைக் கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
எதற்காக அழுகிறோம்? யாருக்காக அழுகிறோம்? எதை நினைத்து அழுகிறோம்? என்று விடை தெரியாத இலக்கில்லாத அழுகை அது…