தேன் சாரல் நீ 13

    சம்பள பண கணக்கை ஏன்தான் கேட்டோமேன்னு பாட்டி தர்மசங்கடத்தில் வாயடைத்து நிற்க, அதெதுவும் புரியாத, தெரியாத வளரு, “அம்மா கொண்டு வந்து அவ மூஞ்சில விட்டெறிங்க. பொறுக்கிக்கிட்டு போகட்டும்” என கொக்கறிக்க

     “அத செய்ய உங்கம்மாவால முடியாது வளரு. அதை அவங்க மூஞ்ச பாத்தா தெரியலயா? இது அவங்க குடும்ப விசயம், அவங்க பாத்துப்பாங்க. நீ அமைதியா இரு” என சக்திவேல் வளருக்கு சமாதானம் சொல்ல

     “எங்கம்மாவால ஏன் முடியாது? அதுக்கிட்ட இல்லாத பணமா? சுபாஷு சென்னை படிக்க போனதுல இருந்து செலவுக்கு எனக்கே மாசாமாசம்  பத்தாயிரம் தரும். சம்பாரிச்சி தர மகன்களும், பேரனும் இருக்க மவராசிக்கு என்ன குறை இருக்க போவது?” என வளர் பேசிக்கிட்டே போக

     “அப்ப எங்கண்ணன் சம்பள பணத்துலதான் நீ சென்னையில குடித்தனம் பண்ணுனியா? தாத்தா நீங்க மாசாமாசம் எவ்வளவு குடுத்திங்க?” என சுஜா கேக்க

     “அஞ்சாயிரத்துக்கு குறைஞ்சா வளரு என்னை உண்டில்லன்னு பண்ணிடும். அதனால வரும்போதெல்லாம் அஞ்சாயிரமாவது குடுப்பேன்.” என தாத்தா மெதுவாக ஆனா தெளிவாக சொல்ல, சிரித்தபடி

     “நீங்க மன்த்லி செலவுக்கு உங்க வீட்டம்மாவுக்கு எவ்வளவு குடுத்திங்க மாமா?” என சக்திவேலை கேக்க

     “நானும் மாசம் பத்தாயிரம் கொடுத்தேன் பாப்பா” அவர் சொல்ல

     “ஹலோ மிஸ்டர் சுபாஷ்ஷ்.. நீங்க ஐபிஎஸ் படிச்சி வாங்கினிங்களா? இல்லை உங்கம்மா வாங்கி குடுத்தாங்களா? எனக்கென்னமோ பணங்குடுத்து வாங்கினது போல தோணுது. மாசம் இருபத்தஞ்சாயிரம் வரவு. இப்படின்னா நானுங்கூட ஐபிஎஸ் கோச்சிங் போறேண்ணா.” சுபாஷில் ஆரம்பித்து ஈஸ்வரில் முடிக்க, பாட்டி பதில் சொல்லும் முன் வளர்,

     “ஏய் என்னடி ஓவரா போசற? உங்கம்மாவுக்கு வச்ச சூட்டை மறந்துட்டியா?” என கேக்க

    “மாம்ஸ் அந்த காவாய குளோஸ் பண்ணிடட்டா?” என தன் மாமனை கேட்ட சுஜா, வளரிடம் “சூடு வச்சதுதான் தெரியும் உனக்கு. உன்னை பத்து வருசம் வனவாசம் போல ஊர விட்டு தொரத்தி அடிச்சேனே அது உனக்கு தெரியாதில்ல?”

    “ எங்க ரூம்ஸ்ல திருட்டுத்தனமா நுழையவிடாம செஞ்சேனே அது உனக்கு தெரியாதில்ல?”

     “கணக்கு வழக்க தாத்தாவை தனித்தனியா எழுத வச்சி உனக்கும் உங்கம்மாவுக்கும் ஆப்பு வச்சேனே அது உனக்கு தெரியாதில்ல?”

   “ எங்க சொத்த கொள்ளையடிக்க நீ போட்ட திட்டத்தையெல்லாம் நான் தவிடுபொடி ஆக்குனேனே அப்பவாச்சும் நீ முழிச்சிக்கிறதில்லையா வளரு?” என்றவள், சக்திவேலிடம்

     “மாமா உங்க வீட்டம்மா நகையெல்லாம் எங்க இருக்கு? உங்கம்மாகிட்டயா? இல்ல உங்க எஜமானி அம்மாகிட்டையா? டக்குனு பதில சொல்லுங்க. இன்னும் பல பஞ்சாயத்து இருக்கு.” என்றாள் சாதுவாக.

     “வளரு நகை வளருக்கிட்டதான் இருக்கும். எங்கம்மா என்னென்ன நகை போட்டாங்கன்னு பாக்குறேன்னு சொல்லி கேட்டு ஒரு பஞ்சாயத்தே நடந்தது உங்க பெரியப்பா கல்யாணத்துக்கு முன்னமே. இத யாரும் உனக்கு சொல்லலியா?” என பதமாக பாயின்ட் எடுத்து கொடுக்க

     “இங்க என்னென்ன கொடுமை எல்லாம் எங்கம்மாங்களுக்கு நடந்திருக்கு பாருங்க மாமா. நான் கேட்டேன்னு ஒரு தரம், நான் பாக்க, நல்லா கேளுங்க சுஜாதா பாக்குறதுக்கு எங்கம்மா நகையை கேட்டதுக்கு ஒரு வாரம் பொறந்த வீட்டுக்கு விஜிமாவ துரத்திவிட்டுட்டாங்க இந்த நியாயகாரங்க தெரியுமா உங்களுக்கு?” என்றவள்

    “தாத்தா சாந்திமா வீட்டுல நாற்பது ப்ளஸ் என்னோட பங்சனுக்கு பதினஞ்சு, விஜிமா வீட்ல ஐம்பது ப்ளஸ் எனக்கு பங்சனப்ப போட்ட இருபது பவுனு மொத்தம்  நூத்தி இருபத்தி அஞ்சு பவுன் உங்க பாதுகாப்புலதான இருக்கு”.

    “கொண்டு வாங்க நாளைக்கி எனக்கு குடுக்கதான் வாங்கினாங்களாம் உங்க வீட்டம்மா. இந்த கதை வேற ஊருக்குள்ள காத்துவாக்குல உலவுது.”

     “எதிர்காலத்துல எனக்கு குடுக்க போறதை இதுவரை யார் கண்ணுலயும் காட்டல. நான் இப்பவாச்சும் ஒரு தரம் பாத்துக்கிறேன்.” என்றாள் நக்கலாக.

     பாட்டி மெதுவாக தாத்தாவிடம் “பேரனுக்கு பொண்ணு பாக்க போற நேரத்துல இந்த சண்டை எதுக்குங்க? பொண்ணு யாரு? எவ்வளவு போடுவாங்க?ன்னு சொல்லுங்க மொதல்ல. நாளைக்கு கணக்கா வாங்கி பெட்டியில வச்சி காப்பாத்தனும் நானு.” என்க

      “தாத்தா நோ காம்பரமைஸ். முன் வச்ச கால பின் வைக்கமாட்டா இந்த வீரமங்கை சுஜா” என சுகன் நடுவில் புக

    “பாப்பா இப்ப இது…..” என தாத்தாவும் பாட்டிக்காக பேச

     “இப்போ வேண்டாம் சரி. எப்போது பேசன்னு சொல்லுங்க தாத்தா? பேசிதான் ஆகனும். அது இன்னைக்கா இல்ல நாளைக்கா? ஆனா நாளை வரை வளரு இருக்கும். மாமாவும், சுபாஷும் இருப்பாங்களா? சாய்ஸ் ஈஸ் யூவர்ஸ்.” என சுஜா சீற

     “பாப்பா உங்களுக்காகதான் பேசுது. நீங்க மரம்மாதிரி நிக்கிறீங்க.” என சக்திவேல் சுஜாவின் அண்ணன்களை திட்ட

     “ ஐய்யோ மாமா, பாப்பா சச்சின் மாதிரி. எந்த பக்கம் இருந்து பால் போட்டாலும் பவுண்டிரி, சிக்சர் அடிக்கும். பட் நாங்க அப்பாவிக. நாங்க சொதப்பிடுவோம்.  நாங்க இப்ப என்ட்ரி குடுத்தா பாப்பாவே அடப்பாவின்னு முறைக்கும். ஸோ நாங்க கப்சிப் கடையில உப்ப்.” என்றான் சுகன்.

     “பாப்பா மொதல்ல…” தாத்தா ஏதோ சொல்ல வர

     “நாளைக்கு வெளியாளுங்க இருக்கும் போதும் சம்பளம் பத்தி மறுபடியும் கேள்வி வரும். நானும் கணக்கு கேப்பேன். அது இன்னும் அசிங்கம். இப்போ போய் எடுத்துட்டு வாங்க. உங்க கணக்கு நோட்டையும் சேர்த்து கொண்டு வாங்க.” என்றாள் முறைத்தபடி.

    தாத்தா கொண்டு வர பாதிக்கு பாதி நகைகளை காணோம். தாத்தாவோ, “குட்டிமா நான் இதை வாங்கி வச்சதோட சரி. அதுக்கு பிறகு இப்பதான் தொடறேன்.” என்றார்.

    “வேற யாருக்கு உங்க தண்டவாள பெட்டிய திறக்கத் தெரியும்?” என சுஜா கேக்க

     “யேன் பொண்டாட்டிக்கும், யேன் மவளுக்கும் தெரியும்.” என்றார் தலை குனிந்தபடி.

     “எங்க போச்சி நகை? உங்களுக்கு செஞ்ச நகையெல்லாம் பத்திரமா இருக்கு. எங்கம்மாங்க நகை எங்கே?” என பாட்டியை கேக்க

     “பொறந்த பொண்ணுக்கு செய்யறது புண்ணியம். அதான் நான் அதை எடுத்து….” என சொல்ல, வேகமாக எழுந்த தாத்தா, பாட்டியின் முடியை பிடித்திழுத்து   “போராசை பிடிச்ச பிசாசுங்களே! அதுக்கு நாங்க மூணு பேரும் சம்பாரிச்சத தான எடுத்திருக்கனும். இல்ல உன் நகைகளை குடுத்திருக்கனும்.”

    “மருமவளுங்கள பெத்தவங்க அவங்க பொண்ணுக்குன்னு ஆசையா செஞ்சத எடுப்பிங்களா? அடுத்தவங்க நகைய தருவியா? நீ தந்ததை விட உன் பொண்ணே எடுத்துட்டு போயிருப்பா. ஏன்டீ இப்படி பண்ணுன?” என கன்னம் கன்னமாக அறைய, வளரு நடுங்கியபடி

     “அப்பா…. அந்த சின்ன கழுதைய எப்படியும் எம் பையனுக்குதான் கட்ட போறோம்னு நம்பிக்கையில முன்னாடியே நகைய குடுத்தாங்க.” என சொல்ல

     “என்ன போயும்போயும் உன் மருமகளா? அதுக்கு நான் இடுப்புல கல்லக்கட்டிக்கிட்டு கிணத்துல குதிச்சிடலாம். ஒரே நாளுல விடுதலை கிடைச்சிடும்.” என்ற சுஜா,

     “இப்ப நடக்காத விசயத்தை பத்தி எதுக்கு பேசனும்? தாத்தா எங்கம்மா ரெண்டு பேரோட நகையும் இப்பவே இங்க வரனும்” என்று சொல்லி கால்மேல் கால்போட்டு உட்கார, பாட்டி உடனே

     “பொம்பள புள்ள இப்படி கால் மேல கால் போட்டு உட்கார்ந்தா பாக்கறவங்க என்ன சொல்வாங்க? ஒழுங்க வளக்கலன்னு சொல்லி எங்கள தான் பேசுவாங்க” என திட்ட

     “நகைய திருடுனேன்னு சொல்லமாட்டாங்க இல்ல? அடுத்தவங்க உழைப்பை சுரண்டி பொழைக்கறேன்னு சொல்ல மாட்டாங்கதானே? சொந்த வீட்டுலயே பெத்த மகனுங்களையே ஏமாத்துற வேலை செஞ்சேன்னு சொல்ல மாட்டாங்கதானே?” என்றபடி நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கால்களை ஆட்ட,

    வாய்பேச முடியாத பாட்டி “ஏங்க அதுக்கு தான் இவள நம்ம பேரனுக்கு கட்டி வைக்கலாமுன்னு படாதபாடு பட்டேன். யாரு எம்பேச்சை கேட்டிங்க?” தாத்தாவிடம் முறையிட

    “ நீங்க பணமும், நகையும் திருட்டுத்தனமா தருவிங்க. அதை சரி பண்ண இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்கனுமா? அவங்களுக்கு பிடிச்சி கல்யாணம் செஞ்சா பரவாயில்ல. உங்க பணகணக்கை தீர்க்க சுபாஷை விக்கிறிங்களா?” என கத்திய ஈஸ்வர்

     “பாப்பா அந்த வீட்டுக்குதான் போகவே போகாதே? அப்புறம் கல்யாணம் எப்படி செஞ்சிக்குமுன்னு எதிர்பார்த்திங்க? சொல்லுங்க இன்னும் என்ன செஞ்சி வச்சிங்க?” என பாட்டியின் முன் வந்து கேட்க

      “சொத்தெல்லாம் அவ பேருல மாத்தினது போல பத்திரம் ஏற்பாடு செஞ்சி வச்சோம். அப்படி செஞ்சா அவ பேரனை கல்யாணம் பண்ண சம்மதிப்பான்னு நெனச்சோம்.”

    “தாத்தாக்கும் தெரியும். அவரும் வந்து கையெழுத்தெல்லாம் போட்டாரு.ஆனா அவ வளர போட்டு தள்ளிடுவேன்னு சொல்லவும் பயந்துகிட்டு அத, அந்த பொய் பத்திர விசயத்தை சொல்லாம விட்டுட்டோம்.” என பாட்டி தயங்கியபடி சொன்னார்.

     “அது பொய்யா பண்ணல. எல்லாமே பாப்பா பேருல தான செட்டில்மென்ட் செஞ்சாச்சி. அதுக்குதான் அப்போ ரெஜிஸ்டர் ஆபீஸ் போனோம்” என்று நிமிர்ந்து பார்த்தபடி சொல்ல, பாட்டி திகைத்து பார்க்க, வளர் கொந்தளித்தபடி

     “எனக்கு தெரியாம எப்படி எழுதுவீங்க? எனக்கும் அதுல பங்கிருக்குல்ல? அப்ப நிலத்தை எழுதி வாங்கிட்டு தான் எம்பையன எதுக்கு கட்டனுமுன்னு திமிரா நின்னாளா?” கேட்டார்.

    “ச்சே உன் சாக்கடை புத்திய பாயாம நிப்பாட்டு. நீ தலைகீழ நின்னிருந்தாலும் அது நடந்திருக்காது.” என்று சுபாஷ் கத்தினான்.

     “உனக்கு நானும், அண்ணன்களும் சீர்வரிசை நிறைய செஞ்சோம். தனியா உங்கம்மா அவ சிறுவாட்டு பணத்தை நகையை தந்தா. இதெல்லாம் திருப்பி கொடு சொத்தை மூணா பங்கு போடலாம்.” என்றார் தாத்தா.

    அதை கேட்டதும் கலகலவென சிரித்தபடி கைதட்டிய சக்திவேல், சுகன், ஈஸ்வர் மூவரும் ஒரே நேரத்தில், “பாப்பா என்ன வளர்மதியா பணமுன்னா அசிங்கத்துல கிடந்தாலும் பல்லகாட்டிக்கிட்டு எடுக்க? அவ சிங்கம். சில்லறை மாதிரி நடந்துக்குமா?” கேக்க

     “அதில்ல ஈஸ்வர்.. இவங்க ரெண்டு பேரும் இவங்கள போலவே மத்தவங்கள நினைக்கறவங்க. புரியலயா? பணமுன்னா இவங்க வாய ஆன்னு திறக்கறாங்க இல்ல, அதுபோல பாப்பாவும் இருக்குமுன்னு நெனச்சிருக்காங்க.” என வாய்விட்டு சிரித்து

    “பாப்பா நான் இப்படி சிரிச்சி பல வருசம் ஆச்சி. என்னைக்கு இந்தூட்டு மாப்பிளை ஆனேனோ அன்னைக்கே எனக்கு பிடிச்சது சனி. எனக்கும் ஏதாவது நல்லது பண்ணிவிடும்மா” என கையெடுத்து கும்பிட, பதறினார் வளர்.

      “என்ன தேவையில்லாம பேசி நேரத்த வேஸ்ட் பண்றிங்க” என்ற சுபாஷ், “அப்பா உங்க வீட்டம்மாவை கூட்டிட்டு போய் நகைய எடுத்துட்டு வாங்க சீக்கிரம்” என கூற

    “ யூ டூ புரூட்டஸ்” என்பது போல பரிதாபமாக பார்த்த வளரை கண்டுக்காமல் ஈஸ்வரிடம் வந்து ரகசியம் பேச ஆரம்பித்தான்.

     “நீங்களுமா? ஏன் இந்த ஒளிதல்?” என ஈஸ்வர் கேக்க

     “கூட்டிட்டு போய்ட்டு வான்னு சொல்லிட்டா என்ன செய்ய?”

     “போயிட்டு வரும் வரைக்கும் யாரு தனியா மாட்டிக்கிறது? துப்பு இல்லாதவன். கூடவே வளந்தவள சம்மதிக்க வைக்க தெரியாத மரமண்டை. இப்படி இன்னும் சொல்ல முடியாத திட்டெல்லாம் வாங்கிக்கிட்டே போயிட்டு வரனும். அதெதுக்கு நமக்கு? அதான் பந்தை நைசா அங்க தள்ளிவிட்டுட்டேன்.” என்றான் சுபாஷ்.

     “நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் அண்ணா”  என்றான் சுகன் நக்கலாக,

    “திட்டு வாங்கிற எங்க கஷ்டம் உங்களுக்கெல்லாம் எப்படி தெரியும்? பொண்ண கட்டிக்குடுக்க சொன்னா ராட்சசிய கட்டி வச்சிட்டார் உன் தாத்தா.” என புலம்பியபடி சக்திவேல் வளரை கூட்டிச் சென்றார்.

      சக்திவேலோடு வந்திருந்த அவரின் அண்ணன் வாயடைத்து, பேச வார்த்தைகளின்றி சுஜாவை பார்த்தபடி இருந்தார்.

     அன்று வந்த அவரின் உறவினர் சுஜா பார்த்துவிட்டு, பேசி பார்க்க அழைக்கையில் “நல்ல ராசியான பொண்ணு. உங்க வீட்டுக்கு குடுத்து வைக்கல. ஆனா எங்க பையனுக்கு புடிச்சா நாங்க சம்பந்தம் பேசவா?” என கேட்க

    “வந்த கொஞ்ச நேரத்துல என்ன தெரிஞ்சுது உங்களுக்கு?” என சுபாசின் பெரியப்பா கேட்க

    “கொஞ்ச நேரம் வளர்மதிய பாருங்க. எவ்வளவு துவேசம் அதும் கண்ணுல. அந்த பாப்பாவையும் கவனிங்க” எனும்போதே மாலினி மயங்கி விழ நடந்தது எல்லாம் நியாபகம் வந்தது.

     நகை வரவும் எல்லாவற்றையும் சரி பார்த்தனர் சாந்தாவும், விஜயாவும்.

    “என்னோட வைர நெக்க்லஸ்  எங்க தாத்தா? நீங்க எனக்கு குடுத்தது அது” என சுஜா கேக்க

     “அது எங்கப்பா செஞ்சது. அதை கேக்க உனக்கு உரிமை இல்லை. இது உங்க பாட்டமுட்டுல உங்க அம்மாவுக்கு போட்டது. அதனால நீ கேட்ட நான் குடுத்துட்டேன். வைர நெக்லஸ் எங்கப்பா வாங்கினது” என வளர் எகிறிக் கொண்டு வர

    “இது எங்கப்பா போட்டது. இது எனக்குதான் சொந்தம். கழட்டி கொடுங்க.” என சுபாஷ் வளரின் தாலிக்கொடியை கேக்க

     “எங்கப்பாவோடது எனக்கு தான் உரிமையானது, உங்களுக்கில்ல. கழட்டிக்குடுங்க” என மீண்டும் கேக்க

    “சுபாஷு என்ன பேச்சி இது? அவ புருசன் போட்டது அது. அது அவளுக்குமட்டுமே உரிமையானது.” பாட்டி வர

     “ தாத்தா போட்டது பேத்திக்கு சொந்தமில்லன்னு உங்க பொண்ணு புடிங்கிக்கிட்டு போக, எங்கப்பா போட்டதுன்னு சொல்லும் போது உங்களுக்கு காது கேக்கலையா? இல்ல வார்த்தை வரலியா?”

     “இப்படி தப்பையும் பண்ணிட்டு, தயங்காம முன்னாடி வர எப்படி முடியுது உங்களாலயும், உங்க மகளாலயும்? எல்லோருக்கும் தெரிஞ்சி போயிடுச்சேன்னு வெட்கமா இல்ல?” வெடுக்கென சுபாஷ் கேக்க பாட்டி தலைகுனிந்தார்.

    சக்திவேல் முறைக்க சட்டென நெக்லஸை எடுத்து நீட்ட வாங்கிய தாத்தா,  பாட்டியுடைய நகையையும் சேர்த்து சுஜாவிடம் நீட்டி

    “பாப்பா நடக்கிறதை எல்லாம் பாக்கும்போது உன் கல்யாணம் வரை நானிருப்பேனோ தெரியாது. அதனால இந்தா இதை உனக்கு இப்பவே தரேன் வாங்கிக்கோ.” என்க

     “தாத்தா இதெல்லாம் அம்மாங்க நகைங்க. அவங்க யாருக்கு குடுக்கணுமுன்னு விருப்பப்படறாங்களோ, அவங்களுக்கே கொடுக்கட்டும்.” என்க

   “இல்ல பாப்பா. அம்மா நகைங்க எல்லாம் எப்பவும் பொண்ணுக்குதான் வழிவழியா குடுக்கறாங்க” என தாத்தா இடை சொறுக

     “நாளைக்கு ரெண்டு மருமகங்க வருவாங்க. அவங்களுக்கு போட்டு அழகு பாக்கட்டும். அவங்க பெறந்த வீட்டு நகைங்க அவங்க வாரிசுக போடணும் அவங்களுக்கும் ஆசை இருக்கும். நான் மட்டுமே அவங்க வாரிசு இல்லை. புரிஞ்சி நடந்துக்கங்க.”

    “இப்ப நீங்க எனக்கு வாங்கி குடுத்ததும், அப்பாஸ், அம்மாஸ் அண்டு அண்ணாஸ் வாங்கி குடுத்திருக்கிறதே எனக்கு போதும்.”

    “ இதெல்லாம் இவங்க ரெண்டு பேரும் வச்சி, போடட்டும். இனியாவது போட்டு பாக்கட்டும் மகனுங்க, மக கல்யாணத்துல. கொடுங்க அங்க.” என்றவள்,

    “உங்க வீட்டம்மா நகைய அவங்ககிட்டயே கொடுங்க தாத்தா. அத தொட்டாக்கூட பாவம். அதை அவங்க விருப்பபடி வச்சிருந்து அவங்க காலத்துக்கு பின்னாடி யாருக்கு குடுக்க ஆசைபடறாங்களோ அவங்களுக்கே குடுக்கட்டும்.”

    “அவங்களுக்கு மூனு பேரன்க இருக்காங்கன்னு நியாபகம் இருந்தா சரி.” என்றாள் சுஜா தீர்மானமாக.

   இனியாவது பெண்பார்க்கும் வைபவம் நடக்குமா? ஈஸ்வர், நீலாவுடன் பேசுவானா? காத்திருப்போம்.