“ஏன் பார்த்தி உங்களுக்கு ஒரு ரிப் கூட இருக்குதானே? எந்த இடம்?” என நிஜமாகவே சந்தேகம் கேட்டாள்.
தன் தோள் பகுதியை கையால் தொட்டு காண்பித்தவன், “இங்கதான் இருக்கும்” என்றான். அவளும் இயல்பாக அங்கே தொட, நேராக படுத்திருந்தவன் முகத்தை மட்டும் அவள் பக்கம் திருப்பினான்.
தோள் வளைவை அவள் அழுத்தி பார்க்க, “ஆச்சி…” வேண்டாம் எனும் குறிப்பு தாங்கி அழைத்தான்.
“ஓகே ஓகே, எனக்கு உங்க ரிப் ஏதும் ஃபீல் ஆகல” என சொல்லி கையை விலக்கிக் கொண்டாள்.
“அதை ஃபீல் பண்ணி என்ன கிடைக்க போகுது உங்களுக்கு?”
“தூக்கம் வரலையா, அதான் உங்க ரிப்ஸ் எண்ணிகிட்டே தூங்கிடலாம்னு நெனச்சேன்” என அவள் சொல்ல, “இந்த வாலுத்தனத்தை எல்லாம் இப்பதான்… கல்யாணத்துக்கு அப்புறம்தான் உங்ககிட்ட பார்க்கிறேன் ஆச்சி” என்றான்.
“விளையாட்டுக்கு சொல்லல பார்த்தி, நேத்து கூட உங்க ஹார்ட் பீட் கவுண்ட் பண்ணிட்டேதான் தூங்கினேன்”
“என்ன?” என அவன் அதிர, எப்படி என செயல்முறை விளக்கம் காண்பித்தாள்.
எந்த உள் நோக்கமும் இல்லாமல் சாதாரணமாகத்தான் பேசினாள், நடந்து கொண்டாள். அவனுக்குத்தான் கிளர்ச்சியை தூண்டி விடுவது போலிருந்தது.
“சரி சரி…” என்றவன் நாசூக்காக அவளின் கையை தன்னிடமிருந்து எடுத்து விட்டு, “ரிப்ஸ் எல்லாம் எண்ண முடியாது, கண்ண மூடுங்க, தூக்கம் தன்னால வரும்” என்றான்.
“ஏன் முடியாது?” எனக் கேட்டவள் அவனது தோள் பட்டையில் கை வைத்து, காறை எலும்பை தொட்டவள், “இதுதான் காலர் போன்” என்றாள். அப்படியே கையை கீழே நகர்த்தி விலா எலும்புகளை தோராயமாக எண்ணி சொல்ல ஆரம்பிக்கவும், “ஆச்சி…” என முணகியவன் அவளின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.
அவனது முக மாற்றத்தை கண்டவளுக்கு அவனது நிலை புரிந்தும் புரியாமல் இருக்க, “நீங்க ஓகேதானே பார்த்தி?” எனக் கேட்டாள்.
சில நொடிகள் அவளை ஆழ்ந்து பார்த்தவன், “நான் ஓகேவா இருக்கிறது உங்க கைலதான் இருக்கு ஆச்சி இப்போ” என மறைமுக செய்தி ஏதோ தாங்கி சொன்னான்.
“ஓகே ஓகே, நான் டச் பண்ணல உங்களை” என வெட்கத்தோடு சொன்னவள் அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பி படுத்துக் கொண்டாள்.
சற்று முன் அவள் பேசிய போது ஏற்பட்டிருந்த தெளிவெல்லாம் காணாமல் போனது.
தன்னிடம் ஆச்சிக்கு எல்லா உரிமைகளும் இருக்கும் போது தனக்கும் அவளின் செய்கைகள் பிடிக்கும் போது ஏன் ஏற்றுக் கொள்ள போராடுகிறேன், என்னதான் தடை எனக்கு? மதிப்புக்குரியவள் மனைவியாக நிற்கும் போது அவனுள் தள்ளாட்டம்.
இயல்புக்கு மீண்டிருந்தவள் அவனைப் பார்க்க படுத்தாள். தூங்காமல் என்ன யோசனை என கேட்டவளிடம், “கோவமா ஆச்சி எம்மேல?” எனக் கேட்டான்.
“எதுக்கு!”
அவன் தயக்கமாக பார்க்க, “உங்க ரிப்ஸ் கவுண்ட் பண்ண விடாததுக்கா? பல வருஷமா என்னை பத்தி உங்களுக்கு இருக்க கண்ணோட்டம் உடனே மாறிடும்னு நான் நினைக்கவே இல்லை, ஆனா என்னை ஆச்சர்ய படுத்துற மாதிரியான மாற்றங்கள் ரொம்ப சீக்கிரமா… ரொம்ப வேகமா உங்களுக்குள்ள வர ஆரம்பிச்சிடுச்சு, உங்க மேல கோவம், வருத்தம்னு எதுவும் இல்லை பார்த்தி, குழந்தைங்க டாட்லர் ஸ்டேஜ்ல தன்னை சுத்தி இருக்க எல்லாத்தையும் எக்ஸ்ப்ளோர் பண்ணுவாங்க, அப்படி நம்ம மேரேஜ் லைஃப்ல இது ஒரு ஸ்டேஜ், நான் உங்கள இன்னும் நல்லா தெரிஞ்சுகிட்டு இருக்கேன், நீங்களும் என்னை தெரிஞ்சுக்கோங்க” என்றாள்.
அவன் மனதில் நிம்மதி பரவுவது அவனது முகத்தில் தெரிந்தது.
“ஆமாம் இந்த வாத்திக்கே…” என்றவள் ஏதோ யோசித்து, “வாத்திக்கு ஆப்போசிட் ஜெண்டர்ல என்ன சொல்றது பார்த்தி?” என சந்தேகம் கேட்டாள்.
“நல்ல சந்தேகம் ஆச்சி” என சிரித்தவன், “வாத்திச்சின்னு வச்சுக்கலாம்” என்றான்.
“ம்ம்ம்… இந்த சமத்துக்கார வாத்திக்கே பாடம் எடுக்குற வாத்திச்சி நான்” என்றாள்.
அவன் வாய் விட்டு சிரிக்க, அவனது கையை பற்றிக் கொண்டவள், “நாந்தான் சொன்னேனே பார்த்தி… உங்க கை புடிச்சுகிட்டு கதை பேசிட்டு இருந்தா அது போதும் எனக்குன்னு, எல்லாத்தையும் ஸ்ட்ரெஸ் ஆக்கிக்காம இப்படி சிரிச்சிட்டே இருக்கணும், ஏதாவது பேசுங்க கேட்டுகிட்டே தூங்கிடுறேன்” என்றாள்.
அவனும் அவளின் கையை மென்மையாக பற்றிக் கொண்டு, “எனக்கு எதுவும் பேச தோணல, நீங்க பேசுங்க, நான் கேட்கிறேன்” என்றான்.
உடனே எழுந்தமர்ந்து கொண்டாள். படுத்துக் கொண்டே சொல்லலாமே என அவன் சொன்னதற்கு இப்படித்தான் வசதி என சொல்லி விட்டாள். அழகியும் மிருகமும் (beauty and the beast) கதையை அவளின் கற்பனை கலந்து குழந்தைக்கு சொல்வது போல சொன்னாள்.
“ஆச்சி…” என கிண்டலாக அழைத்தான்.
“என்ன… எனக்கு இப்படி கதைகள்தான் தெரியும், சொல்லவா வேணாமா?”
“சொல்லுங்க”
“கண்ண மூடி அப்படியே நான் சொல்றதை இமாஜின் பண்ணிட்டே கேளுங்க பார்த்தி, அது ஒரு தனி ஃபீல்”
“கண்ண தொறந்து சொல்றவங்க முக பாவனையை பார்த்திட்டே கூட கேட்கலாம்”
“உங்க இஷ்டம்” என்றவள் ஏற்கனவே அவனுக்கு தெரிந்த கதையை அவளின் வாய் மொழியாக, அவளது கோணத்தில் சொன்னாள். அப்படி கேட்கையில் அவனுக்கு அக்கதை புதிது போலவே தோன்றியது.
மிருகத்திடம் அழகி காதலை சொல்லும் இடத்தில் அதை உணர்ந்து, அனுபவித்து அவள் சொல்ல, அவனுக்கு என்னவோ அவள் அவன் மீது கொண்ட காதலை விவரிப்பது போலவேதான் இருந்தது.
“அழகியோடது எவ்ளோ உன்னதமான காதல் இல்ல?” என சிலாகித்தாள் சுஹானா.
“நீங்க எம்மேல வச்சிருக்க காதலை விடவா?” என அவன் கேட்க, அவனது தலையில் செல்லமாக கொட்டி, “உங்களை போல ஒருத்தர் மேல யாருக்கு வேணா லவ் வரும், பீஸ்ட்’டை யாரும் லவ் பண்ண மாட்டாங்க” என்றாள்.
“ம்ஹூம், உங்களுக்கு என்னை பிடிச்சது சாதாரணம் இல்லை ஆச்சி. நான் பீஸ்ட் இல்லை, ஆனா அந்த கதைல வர்ற அழகி கண்டிப்பா…” என சொல்லிக் கொண்டிருந்தவனின் வாயை பொத்தினாள்.
“நான் ஒன்னும் கதைல வர்ற அழகி இல்லை, என் காதல் பார்த்தி மேல மட்டும்தான்” என நீல வண்ணக் கண்கள் பள பளக்க சொன்னாள்.
தன் வாய் மூடியிருந்த அவளின் கையை பிடித்து மென்மையாக முத்தமிட்டவன், “நிஜமான அன்பு மிருகத்தை ராஜகுமாரனா மாத்தும்னா… நானும் ஒரு நாள்…” என வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினான்.