மதிய உணவுக்கு பின் சுஹானாவுக்கு அடித்துப் போட்டது போல அப்படியொரு உறக்கம். பயந்து போன பாட்டிக்கு ‘குளத்தில் நன்றாக ஆடி குளித்ததில் உடல் தளர்ந்து போயிருக்க இப்படி உறங்குகிறாள்’ என சமாதானம் சொன்னான் பார்த்திபன்.
மாலையில் எழுந்த சுஹானா அதீத உற்சாகத்தோடு காணப் பட்டாள். மனைவிக்கு தான் முத்தமிட்ட நினைவு திரும்ப திரும்ப மனக் கண்ணில் ஒளி பரப்பாகி கொண்டிருந்ததில் பார்த்திக்குதான் அவளை எதிர்கொள்ள சற்றே சங்கடம். கணவனை புரிந்தவளாக அவனை கிண்டல் ஏதும் செய்யாமல் இயல்பாகவே இருந்து கொண்டாள் அவள்.
நாளை வரவேற்பு நிகழ்வுக்காக விருந்து சமைக்கும் பாத்திரங்கள் எல்லாம் வந்திறங்கின. அதை மேற்பார்வையிட்ட பின் பார்த்திக்கு வேறு வேலை எதுவும் இல்லாமல் இருக்க, ஆற்றுக்கு போகலாமா எனக் கேட்டாள் சுஹானா.
மாட்டேன் என சொன்னாலும் விட மாட்டாள் என்பதால் சரியென சொல்லி விட்டான் பார்த்தி.
ஐந்து நிமிட நடையில் ஆற்றுப் படுகைக்கு வந்து விட்டனர். அவனது சிறு வயது நிகழ்வுகளையெல்லாம் அவள் பேசினாள். அவன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டான்.
தலைமுடியை கட்டாமல் வந்திருந்தாள். வேகமாக வீசிய காற்றில் பறந்து கொண்டேயிருந்த முடி அவளை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. ஒதுக்கி விட்டு ஒதுக்கி விட்டு சலித்து போனாள்.
“அதெல்லாம் எனக்கு போட வராது பார்த்தி, க்ளிப் பண்ணிட்டு வந்திருக்கலாம்” என சலித்தவள் பேச்சை தொடர, மீண்டும் கண்களை மறைத்தது புரண்டு விழுந்த முடிகள்.
அவளை திரும்பி நிற்க சொல்லி அவனே அவளுக்கு கொண்டையிட முயன்றான். சமமாக நறுக்கி விடப் பட்ட கூந்தல் கொண்டையாக அடங்குவேனா என அடம் செய்தது.
சுற்றியுள்ள செடிகளை பார்த்தவன் மெல்லிய கொடி ஒன்றை நறுக்கி எடுத்து வந்தான். அதைக் கொண்டே அவளது கூந்தலை இறுக கட்டி விட்டான். தலையை ஆட்டி, முடியை அசைத்து, “நைஸ்!” என்றாள்.
பேசிக் கொண்டே படுகையிலிருந்து மேலேறி வந்தனர். வீடு செல்லாமல் ஆளில்லா சாலை வழி நடக்க ஆரம்பித்தனர். மாந்தோப்பு, புளியந்தோப்பு என எல்லாம் காண்பித்தான்.
வாகனம் ஏதோ வரும் சத்தம் உணர்ந்து அவளின் கை பிடித்து சாலையின் ஓரத்திற்கு சென்றான் பார்த்திபன். இரு சக்கர வாகனம் ஒன்றில் இரு ஆடவர்கள், அவனுக்கு யாரென தெரியவில்லை, பக்கத்து ஊர்க்காரர்கள் போல என்றெண்ணிக் கொண்டான்.
தூரத்திலிருந்த போதே வாகனத்தில் இருந்தவர்கள் இவர்களை பார்த்து விட்டனர். அந்த ஆடவர்களுக்கு சுஹானா புதியவளாக தெரிந்தாள். இவர்களை நெருங்கும் போது வாகனத்தின் வேகம் குறையவுமே பார்த்திக்கு ஏதோ தவறாக பட, சட்டென சுஹானாவை இழுத்து தனக்கும் பின்னால் நிறுத்திக் கொண்டான்.
வாகனத்தின் பின்னால் இருந்தவன் பார்த்தியின் இடுப்பில் தட்டியிருந்தான். சுஹானாவை தான் இழுத்திருக்கா விட்டால் அவளிடம் தவறாக நடந்திருக்க கூடும் என தெரியவும் பார்த்திக்கு நல்ல கோவம்.
வாகனம் முன்னே சென்று கொண்டிருக்க, அதை துரத்திக் கொண்டு வேகமாக ஓடிச் சென்றான் பார்த்தி.
அவனது பெயரை சத்தமாக அழைத்து அவனை திரும்பி வரச் செய்தாள் சுஹானா.
“வீட்டுக்கு போலாம் வாங்க” என்ற பார்த்தி கோவமாக இருந்தான்.
“யாரோ பொறுக்கி பசங்க, விட்டு தள்ளுங்க பார்த்தி” என சமாதானமாக சொன்னாள்.
ஒன்றும் சொல்லாதவன் அவளின் கையை பிடித்துக்கொண்டு வீடிருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அந்த வாகனம் மீண்டும் திரும்ப வருவதை காணவும் பயந்து போனாள் சுஹானா. தென்னை மட்டை ஒன்று ஓரமாக கிடப்பதை பார்த்த பார்த்தி அதை கையில் எடுத்துக் கொண்டான்.
“என்ன செய்ய போறீங்க பார்த்தி, வீட்டுக்கு போயிடலாமே” என பதறினாள் சுஹானா.
பார்த்தி நின்றிருந்த தோரணையை கண்டே பயந்து போனவர்கள் வாகனத்தை வேகமாக திருப்பிக் கொண்டு சென்றனர். இந்த முறை அதி வேகமாக அவர்களின் பின்னால் ஓடிச் சென்ற பார்த்திபன், கையிலிருந்த மட்டையை விட்டெறிந்தான். பின்னால் அமர்ந்திருந்தவனின் முதுகை பதம் பார்த்து விட்டே சாலையில் விழுந்தது மட்டை.
கையை தட்டி உதறிக் கொண்ட பார்த்தி, நெகிழ்ந்து போயிருந்த வேஷ்டியை சரியாக கட்டிக் கொள்ள, அவனருகில் மூச்சு வாங்க வந்து நின்றாள் சுஹானா.
“நீங்க கூட இருக்கீங்க ஆச்சி, இல்லைனா நிக்காம போய் பிடிச்சி நாலு போட்ருப்பேன்” என்றவனை கண்டனமாக பார்த்தாள்.
“அது… அவங்க செஞ்சது தப்புல்ல ஆச்சி?” எனக் கேட்டான்.
“உங்களுக்கு பிடிக்காம போனாலும் பரவாயில்லை, அவன் எந்த பொண்ணுகிட்ட இப்படி நடந்தாலும் விட்ருக்க மாட்டேன், அவன் தப்பா நடக்க நினைச்சது என் பொண்டாட்டிகிட்ட, கூலா இருக்கணுமா நான்?”
“என்ன ட்டீ?” என கிண்டலாக கேட்டாள்.
“ம்ம்… பொண்டாட்டீ” என்ற பார்த்திபன் லேசாக நகைத்தான்.
“ஹ்ம்ம்… பார்த்தியோட பொண்டாட்டி!” என புருவங்களை உயர்த்தி கண்களை பெரிதாக்கி அவள் சொல்ல, அவன் வெட்கமாக பார்த்தான்.
“உங்களுக்குள்ள ஒரு கிராமத்து ஆள் ஒளிஞ்சிருக்கான் பார்த்தி, கொஞ்சம் டெரர், ஆனா அந்த வெர்ஷன்லதான் என்கிட்ட உரிமை காட்டுறீங்க”
“நான் பக்கா கிராமத்துகாரன்தான் ஆச்சி, நீங்க பார்த்த சிட்டி வெர்ஷன் பார்த்தி நிஜமில்ல”
“எப்படி பார்த்தாலும் பார்த்தி மேல வெறுப்பு வர மாட்டேங்குதே”
“ஏத்தி விடுறதுக்கு எல்லாம் கோவம் வராது, ஆனா தேவையான இடத்துல கோவம் தானா வரும்”
“ரொம்ப நல்லது, போனவங்க திரும்ப வந்தா ஆபத்து”
“நல்லா வருவானுங்க, வந்தா அவனுங்க இரத்தத்தால பூமி நனைஞ்சு போவுதா இல்லையா பாருங்க”
“பார்த்தி! நோ அடல்ட் கன்டெண்ட்”
“வயலன்ஸ் பேச வேணாம்னு மட்டும் சொல்லுங்க”
“பேச்செல்லாம் ஒரு மாதிரியாதான் போகுது”
“கோச்சுக்கிட்டீங்களா?”
“போங்க பார்த்தி, எதுக்கு கோச்சுக்குறாங்களாம்! சூரியன் ரெஸ்ட் எடுக்க போறார், வீடு போய் சேரலாம்”
“அவருக்கு ரெஸ்ட்டே இல்லை”
“ஆமாம்ல?”
இப்படி பேசிக் கொண்டே, தார் சாலையின் நடுவே சாவகாசமாக நடை போட்டுக் கொண்டே சூரியன் அஸ்தமிக்கும் வானத்தை கண்டு களித்து விட்டு வீடு திரும்பி விட்டனர்.
மதியத்தில் அசைவ சாப்பாடு என்பதால் இரவுக்கும் சாதம்தான், பெரியவர்களுக்கு மட்டும் இட்லி அவித்து வைத்தார் சரஸ்வதி. சுஹானா பார்த்தியோடு வெளித் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டாள்.
பெரிய வீட்டுப் பெண் இங்கு எப்படி இருப்பாளோ என்னவோ என சரஸ்வதிக்கு நிறைய பயம் இருந்தது, இப்போது நிம்மதியாக உணர்ந்தார்.
இரவு படுக்கைக்கு செல்லும் போது பார்த்திக்கு குறு குறுப்பாக இருந்தது. காலையில் முத்தமிட்ட தன் செய்கையை அவனாலேயே நம்ப முடியவில்லை. இப்படியா உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவன் என தன்னை பல முறை கடிந்து கொண்டு விட்டான்.
அவள் ஆசையாக ஏற்றுக்கொண்டாள் என்பது மட்டும் அவனுக்கு சாதகமாக இருந்தது. ஆச்சி தன் கணவனிடம் எதிர் பார்க்க கூடிய காதலை இயல்பாக தரத்தானே வேண்டும், அதில் தவறென்ன, எனக்கு ஏன் தயக்கம் என பலவாறாக குழம்பிக் கொண்டிருந்தான்.
அவன் படுத்த பிறகுதான் அவள் படுத்தாள். அவன் மனம் புரிந்தவாறு, “நிறைய யோசிக்காதீங்க பார்த்தி, காலைல நடந்தது இயல்பா நமக்குள்ள நடந்த விஷயம், இன்னும் உங்களுக்குள்ள தடைகள் இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும், அதுவும் தானா சரியாகிடும். நமக்குள்ள என்ன நடந்தாலும் அதை அந்த ஃப்ளோ’ல ஏத்துக்குவேன், நீங்களும் அப்படியே இருங்க” என்றாள்.