புதுப்புது அர்த்தங்கள்…..  நாள் – 18

அத்தியாயம் 51

சந்தியா……

தூத்துக்குடியிலும்  சந்தியா பெரிதாக யாருடனும் பேசவில்லை . அமைதியாகவே இருந்தாள் . முதல் வாரங்களில் சாப்பிடவே மிகவும் சிரமப்பட்டாள் .

ரத்த சோகையால் மிகவும் சோர்வாகவே இருந்தாள் . பெரும்பாலும் ஆகாஷை அம்பிகாவும் விந்தியாவும் பார்த்துக் கொண்டார்கள் .

நலம் விசாரிக்க வரும் உறவினர்களோடு கூட  அளவாகத் தான் பேசினாள் .  கேள்வி கேட்டுக்  குடைந்தால் , சோர்வாக இருப்பது போல் கண்ணை மூடிக் கொண்டாள் .

சந்தியாவின் அப்பாவும் பிள்ளைகளுடன் உட்கார்ந்து பேசும் ரகம் கிடையாது . அதனால் மகளை  அழைத்து வந்தபின் , அம்பிகாவிடம் சத்துள்ள உணவாக கொடுத்து உடம்பை தேற்று , ஆசைப்படுவதை வாங்கிக் கொடு என்றதுடன் பொறுப்பு முடிந்ததாக அவர் ஒதுங்கிக் கொண்டார் .

அம்பிகா தான், சாப்பிட மறுத்தால் அவ்வப்போது புலம்புவார் இல்லை அழுவார் .

இதைப் பார்த்து சந்தியா டென்ஷனாவதை உணர்ந்த விந்தியா, பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டாள் . கல்லூரி விடுமுறையாக இருக்க , சந்தியா கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள் .

விந்தியா கல்லூரியில் சைக்காலஜி எடுத்திருந்தாள்  . நடக்கும் விசயங்களைப் பல்வேறு கோணத்தில் அணுகுவதும் அவளுக்கு இயல்பாகவே வந்தது . அதனால் சற்றுப் பக்குவமாகவே இருந்தாள் . சந்தியாவை அணுகுவதும் அவளுக்கு எளிதாக வந்தது .

விந்தியாவும் அவள் கல்லூரி கதை , சுற்றத்தில் நடக்கும் விசயங்கள் , குழந்தை வளர்ப்பு முறை  என்று  முடிந்தவரை அவள் குடும்பத்தைப் பற்றி யோசிக்க விடாமல் , வேறு விசயங்களில் மனதைத் திருப்ப முயன்றாள் .

பத்து நாட்களுக்குப் பின் ஒரே முன்னேற்றமாக ஒரளவு உணவு உட்கொள்ள தொடங்கினாள் .

விஸ்வா போனில் அழைத்தால் , “ஆம், இல்லை” என்பதோடு நிறுத்திக் கொண்டாள் . அவனும் பேச்சை வளர்க்க முயல , சந்தியா அதற்கு இடம் கொடுக்கவில்லை . பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற எண்ணமே அவளை பேசவிடாமல் செய்தது . மேலும் சந்தியா விஸ்வாவை அழைத்து பேசவே இல்லை .

இரண்டு வாரங்கள் போக , உணவு மேஜையில் சங்கரன் விஸ்வாவிடம் , “தூத்துக்குடி போகவில்லை யா?”

விஸ்வா திருதிருவென முழிக்க ,  “உனக்கு அந்த எண்ணமே இல்லையா?” என்று கோபமாகக் கேட்டார் .

விஸ்வா  அமைதியாக இருக்க , அப்போது ராஜி வர ,

 சங்கரன் பேச்சை நிறுத்திக் கொண்டு, சாப்பிட ஆரம்பித்தார் .

விஸ்வாவிற்கு சந்தியாவின் விலகல் மற்றும் மௌனம் சங்கடத்தையும் குழப்பத்தையும்  ஏற்படுத்தியிருந்தது . அதற்கான காரணம் தெரியாமல் தூத்துக்குடி  செல்வதற்குத் தயக்கமாக இருந்தது .

மாமனார் வீட்டு மனிதர்களைப் பற்றி யோசித்து , “ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ …?” என்று பயந்து தயங்கினான் . எப்போதும் போல் பிரச்சனையை தவிர்க்கப் பார்த்தான் . எப்படியும் இருவாரத்தில் வரத்தானே போகிறாள் . அப்போது பேசிக் கொள்ளலாம் என்று வழக்கம் போல் எதிர்த்து போராடாமல் ஒளிந்து கொண்டான் .

விஸ்வா போக ஆர்வம் காட்டி , ராஜி மறுத்திருந்தால் , போராடியாவது அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்து சங்கரன்  பேச்சை ஆரம்பித்திருக்க ,

விஸ்வாவே தயங்க ,

“மீன் பிடிக்க கற்றுத் தான் கொடுக்க முடியும் , அதைப் புரிந்து பிடிக்கவில்லை என்றால் நட்டம் அவனுக்குத் தான் . சிலருக்குப் பட்டால் தான் புத்தி வரும்  . தன் மகனும் அந்த வகைதான்…” என்பதை அறிந்து வருந்தினார் .

இந்த மூன்று வாரங்களில் சந்தியாவும் சற்று தேறியிருந்தாள் . சூழல் மாற்றமும் அவளுக்கு உதவ , குழந்தையோடு சந்தோஷமாக இருந்தாள் .

ஒரு மாதமாக , அவளைச் சென்னை கொண்டு போய் விடுவதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்க , சந்தியா  கவலையானாள் .

அக்காவைக் கவனித்த விந்தியா , அக்கா போக பிரியப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் . அக்காவிற்கு ஆதரவாக பேசி , பயணத்தை பத்து நாட்கள் தள்ளிப் போட்டாள் .

சந்தியா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

விந்தியா மெதுவாக அவள் மனதைத் தயார் செய்யத் தொடங்கினாள் .

 “ஆகாஷ் அப்பாவைத் தேடுவான் இல்லையா? தாய் தந்தையோடு  வளர்வதுதானே குழந்தைகளுக்கு நல்லது….” என்று மெதுவாக தொடங்க,

அதே வேளையில் சுற்றி இருக்கும் உறவினர்களும்  இன்னும் என்னபோகவில்லையா? என்று கேள்வி எழுப்ப ஆரம்பிக்க ,

இன்னும் தாமதித்தால் தேவையில்லாத பேச்சுக்களைச் சந்திக்க வேண்டும் என்பதை சந்தியா புரிந்து கொண்டாள் .

எப்படி இருந்தாலும் ஒரு நாள் அங்கு போகத் தானே வேண்டும் , அங்கிருக்கும் சூழ்நிலையைச் சந்தித்துத் தானே ஆக வேண்டும் என்பது புரிய , சென்னை கிளம்பத் தயாரானாள் .

அத்தியாயம் 54

ரஞ்சனி…..

திருமணம் முடிந்து ரஞ்சனி வர, இரண்டு நாட்களில், ரகுவின் வெற்றி பயணத்தைக் கொண்டாடும் விதமாக, அப்படியே ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ,

 அந்த ஞாயிறு காலை உணவு முதல் மாலை காபி டிபன் வரை, கிழக்கு கடற்கரை சாலையில்  உள்ள பீச் ரிசார்ட்டில் கொண்டாட திட்டமிட்டு,  ரகு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.. இதைக் குடும்ப விழாவாக திட்டமிட்டிருந்தார்கள் .

ஊழியர்களை அழைத்து வர மூன்று வேன்கள் ஏற்பாடு செய்யபட்டிருந்தது .

 ரஞ்சனி இருக்கும் பகுதிக்கு காலை  5.30மணிக்கு வண்டி வரும் என்று சொன்னார்கள் . அப்போது ஆரம்பித்தால் தான் அந்த பகுதியில் இருக்கும் மற்ற இடங்களுக்கும் போய்  பிக்கப் செய்து கொண்டு காலை உணவிற்கு ரிசார்ட்டிற்கு வர சரியாக இருக்கும் என்று திட்டமிட்டிருந்தார்கள் .

ரஞ்சனி அவ்வளவு சீக்கிரமாகக் கிளம்பவதும் , வேனில் ஏறுவது இறங்குவது மட்டுமில்லாமல் வேனில் ரொம்ப நேரம் பயணப்படுவதும் சிரமமாக இருக்கும் என்பதை உணர்ந்து தன் காரிலே வருவதாகச் சொல்லிவிட்டாள் .

காலை ஏழு மணிவாக்கில் கிளம்பி எட்டரை மணிக்கு ரிசார்ட்டை அடைந்தாள் .

ரகுவின் குடும்பம் மட்டுமே வந்திருக்க , மற்றவர்களெல்லாம் இன்னும் கால் மணி நேரத்தில் வந்திடுவார்கள் என்றான் ரகு . அப்படியே அமர்ந்து சுந்தரியுடன் பேசத் தொடங்கினாள் .

எல்லா ஏற்பாட்டையும் சரி பார்த்துக் கொண்டிருந்த ரகுவிற்கு , இவர்கள் இருவரும் அமர்ந்து பேசுவதைப் பார்க்க  அவ்வளவு பாந்தமாக இருந்தது .

அவன் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க , ஹோட்டல் மேலாளர் கவனத்தைக் களைத்தார் .

அனைவரும் வர , முதலில் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டினர் , பின் அப்படியே கடற்கரையில், விசிராந்தையாக அமர்ந்து கதை பேசி கொண்டிருந்தார்கள் .  மேஜிக் ஷோ  , ஜாலியான விளையாட்டு போட்டிகள் என்று குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

மேலும் ரிசார்ட்டில் விளையாடுவதற்காக நிறைய இடம் இருக்க, சில பேர் கிரிக்கெட் , கைப்பந்து  விளையாடினார்கள் . பிரமாண்டமான நீச்சல் குளம் சிலரை கவர , ஊறிக் கொண்டிருந்தார்கள் .

குழந்தைகளுக்கான நீச்சல் குளமும் இருக்க , பெரியவர்கள் மேற்பார்வையில் சில குழந்தைகள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள் . எல்லோரும் சந்தோஷமாக கொண்டாடினார்கள் .

சுவாமிநாதன் மற்றும் சுந்தரியும் அனைவருடனும் பேசி கொண்டிருந்தார்கள் . ரகுவும் அனைவரையும் வரவேற்று , ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுடனும் பேசி  , அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து என்று பம்பரமாகச் சுற்றி கொண்டிருந்தான் .

முதலாளி என்று ஒதுங்கிக் கொள்ளாமல் , பணத்தைக்  கொடுத்து விட்டோம் என்று இல்லாமல் ஒவ்வொருத்தருடைய நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க , ரஞ்சனிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது . அவன் பண்பு அவளைக் கவர , நல்ல மனிதன் என்று மனதார நினைத்தாள் .

ரஞ்சனியும் ஹரிணியும் கொஞ்ச நேரம் ஒன்றாக சுற்றினார்கள் . பின் அவள் விளையாட சென்று விட , ரஞ்சனி மட்டும் தனியாக அமர்ந்து அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தாள் .

சில பேர் அவளிடம் வந்து பேசி சென்றார்கள் . இவள் தனியாக இருப்பதைக் கவனித்து ரகுவும் வந்து பேசினான் . ஆனால் நீண்ட நேரமெல்லாம் எல்லாம் பேசவில்லை , அப்படி செய்தால் அது சரியாக இருக்காது என்பதை உணர்ந்தே இருந்தான் . மேலும் அவனுக்கு வேலைகளும் இழுத்தன .

மதிய உணவை முடித்தவுடன் சுவாமிநாதன் மற்றும் சுந்தரி விடைபெற்று கிளம்பினர் .  மதிய உணவிற்குப் பிறகு அனைவரும் சற்று சோம்பலாக , விழா பொறுப்பை ஈவண்ட் மேனேஜமென்ட் குழு கையில் எடுத்தது . சின்ன சின்ன  போட்டிகள்  வைக்க , ஆட்டம் சூடு பிடிக்க , ஒரே கலாட்டவாக பொழுது போனது .

மாலை அனைவரும் கிளம்பத் தொடங்க , இன்ப அதிர்ச்சியாக  அனைவருக்கும் பரிசுப் பொருளும் , இரவு உணவுப் பார்சலும் தரப்பட்டது .

பரிசுகளை விட இரவு உணவு ஐடியா ஹிட் அடித்தது . வீட்டு பெண்கள் மிகவும் ஆசுவாசமானார்கள் . இத்தனை ஆட்டத்திற்குப் பிறகு வீட்டில் போய் சமைக்க வேண்டுமே என்ற கவலை இருக்க , இப்போது சாப்பிட்டு அக்கடா  என்று படுத்துவிடலாம் என்று நிம்மதியானார்கள் .

ஒவ்வொரு வண்டியாக கிளம்ப , ரஞ்சனியும் கிளம்ப பார்க்கிங் ஏரியாவிற்கு வர , ரகுவின் கார் இல்லாததைக் கண்டு கொண்டாள் .

சுவாமிநாதன் எடுத்துக்கொண்டு போயிருப்பார் என்று ஊகித்து கொண்டாள் . அவனை விட்டுப் போக மனமில்லாமல் , மீண்டும் ஹோட்டலுக்குள் வந்து அவனைத் தேடினாள் .

அவன் மேலாளருடன் பேசிக்கொண்டிருக்க , அவனை தொந்தரவு செய்ய யோசித்தவள் , அவன் பார்வையில் படும்படி அமர்ந்தாள் .

கொஞ்ச நேரத்தில் ரகு அவளைக் கவனிக்க , வேகமாக வந்தான் . என்னாச்சு ரஞ்சனி …? உடம்பு முடியவில்லையா…? கார் எதுவும் பிரச்சனையா? ஏதாவது உதவி வேண்டுமா? என்று பதற ,

“கூல்…கூல்…” என்றவள் , “உங்கள் கார் இல்லாததைப் பார்த்தேன் . அதான்..” என்று இழுக்க ,

ரகுவின் கண்ணில்  மின்னல் வெட்டியது . மனம் துள்ளிக் குதித்தது . ஒரு குத்தாட்டம் போட வேண்டும் என்று தோன்றியது. இப்படி மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஆர்ப்பரிக்க , வெளியில் சின் புன்னகையோடு , “நன்றி ரஞ்சனி…” என்றான் .

“எனக்கு இன்னும் அரைமணி நேர வேலை இருக்கிறது . கணக்கெல்லாம் முடிக்க வேண்டும் . நீங்கள் கிளம்புங்கள் . நான் வாடகை காரில் வந்து கொள்வேன்…” என்று மென்மையாக மறுக்க,

“பரவாயில்லை  ஸார் , நான் காத்திருக்கிறேன்…”

“உங்களுக்கு நேரமாகிவிடும் . மேலும் நீங்கள் காலையில் இருந்து சுற்றி கொண்டிருக்கிறீர்கள்….” என்று தயங்க ,

“பிலீஸ் ஸார்… , ஒரு அரைமணி நேரம் தானே….” என்று கண்ணால் கெஞ்ச ,

அதற்கு மேல் மறுக்க முடியாதவன் , “சரி” என்று வேலையைப் பார்க்கச் சென்றான் .

ரஞ்சனி சென்றிருக்கலாம் தான் , ஆனால் காலையில் இருந்து தங்களுக்காக அனைத்தையும் செய்தவனை விட்டு போக மனசில்லாமல் காத்திருந்தாள் .

“முக்கியமான விசயங்களை மட்டும் முடித்துக் கொண்டு , மற்றவைகளை போனில் பேசி கொள்ளலாம்…” என்று பதினைந்து நிமிடத்தில்  ஓடி வந்தான் .

“வேலை முடிந்ததா. ஸார்?

“ம்ம்….” என்பதுடன்  நிறுத்தி கொண்டான் .

காரில் இருவரும் புறப்பட , உல்லாச மனநிலையில் இருந்தான் .

அத்தியாயம் 57

காரை கிளப்பிய  கொஞ்ச நேரத்தில் மழை பிடிக்க , அந்த மாலை பொழுது மிகவும் ரம்மியமாக மாறியது . மழை வேகமெடுக்க , வைப்பரை ஆன் செய்தாள் .

கார் மெதுவாக ஊர்ந்து செல்ல ,  ரகு அமைதியாக மழையை ரசித்தபடி வர ,

“ஸார் , இன்றைய நிகழ்ச்சி சூப்பர் . ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணினோம் . மிக்க நன்றி ஸார்.”

“விடுங்க ரஞ்சனி , இதெல்லாம் ஒரு விசயம் என்று சொல்லி கொண்டு..” என்று நெளிய ,

“இல்லை ஸார் , ஒவ்வொரு விசயத்திலும் நீங்கள் எடுத்துக்  கொண்ட அக்கறையும் , மெனக்கெடலும் , வாவ் !சான்ஸே இல்லை”

ரகு தர்மசங்கடத்துடன் புன்னகைத்தான்.

“அதிலும் உங்கள் டின்னர் பார்சல் ஐடியா , சூப்பரோ சூப்பர் . வீட்டுப் பெண்கள் மனதில் டென்ட் அடித்து உட்கார்ந்து விட்டீர்கள். ஆனால் இன்று வீட்டில் பல ஆண்களுக்கு உங்கள் புண்ணியத்தில் மண்டகப்படி உண்டு” என்று  குறும்பாக சிரிக்க ,

ரஞ்சனி கலகலப்பாகப் பேசியதை ரசித்தபடி புன்னகைக்க , “எப்படி ஸார் இந்த யோசனை வந்தது?”

“நாங்கள் சின்ன வயதில்  வெளியே போய் விட்டு வரும்போது, நாங்களெல்லாம் அக்கடா என்று ஸோபாவில் விழுந்து விடுவோம் . ஆனால் அம்மா பத்து நிமிடம் கூட அமர மாட்டார்கள் . அடுத்த வேளை உணவிற்காக அடுக்களையை  உருட்ட ஆரம்பித்து விடுவார்கள் . அதைப் பார்த்துத் தான் என்று மென்னகைப் புரிந்தான்.

 அந்த புன்னகையை ரஞ்சனி கண்ணெடுக்காமல்  பார்க்க , வண்டி ஓட்டுவதில் கவனம் சிதற ,

“ரஞ்சனி…” என்று ரகு அழைக்க , டக்கென்று சுதாரித்து காரை சரியான பாதைக்குத் திருப்பினாள் .

ரகு உல்லாசமாக சிரிப்பை உதிர்த்தபடி தலை கோத , ரஞ்சனி தன் செய்கையால் குழப்பமடைந்து , “காணாததைக் கண்ட மாதிரி  இப்படியா பார்த்து வைப்பாய் , அவர் உன்னை என்ன நினைப்பார்…” என்று அவள் மனதே இடித்துரைக்க ,

அவனைப் பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு , காரை மிகுந்த கவனத்துடன் ஓட்டுவது போல் சாலையையே பார்த்திருந்தாள் .

சில நிமிடங்கள் அமைதியே நிலவ ,  ரகுவிற்கு அவள் நிலைமை புரிய , “அப்புறம்…” என்று ரகுவே தொடங்க ,

“அப்புறம்….”என்று ரஞ்சனியும் சொல்ல, இருவரும் சிரித்தனர் .

“நிறைகளைச் சொல்லி விட்டீர்கள் , குறைகள் …..”

“மைக்ரோஸ்கோப் வைத்துத் தேடினாலும் குறைகள் தென்படவே இல்லை ஸார் ..”என்று அழகாக உதட்டை சுழிக்க ,

இப்போது கண்டெடுக்காமல் பார்ப்பது ரகுவின் முறையானது .

ரஞ்சனிக்கே ரகுவிடம் கலகலப்பது ஆச்சரியமாக இருந்தது .

“அலுவலகத்தில் இப்படி இருந்ததில்லையே ? இன்று மட்டும் எப்படி? “என்று மனம் யோசிக்க , பழக்கத்தில் கை பாட்டுக்குக் காரை இயக்கியது .

இன்று ஏனோ ரஞ்சனி ஓர் உற்சாக மனநிலையில் இருந்தாள்.  அவனுடன் வம்பு செய்ய வேண்டும் போல் தோன்றியது .

 ஒரு வேளை இன்றைய  கொண்டாட்டங்கள் மற்றும் அவனுடைய அக்கறை என்று ஏதேதோ காரணங்கள் சேர்ந்து அவர்களுக்கிடையே இருந்த கோட்டை அழித்திருந்தது . முதலாளி தொழிலாளி என்ற இடைவெளி மறைந்து நண்பன் போல , வீட்டு உறுப்பினர் போன்ற இலகு மனநிலையை உருவாக்கியிருந்தது .

ரகு அவளின் முக மாற்றங்களைக் கவனித்தபடியே இருந்தான் . அவளுடைய இந்த அதிரடியை ரசித்தான் .

“பின் மெதுவாக மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது , எங்காவது சாப்பிட்டுப் போவோமா ? “

“நீங்கள் கொடுத்த உணவு வீணாகி விடுமே….” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு ரஞ்சனி கேட்க ,

“அவன் கண்ணைப் பார்த்து , குறும்பைக் கண்டு கொண்டான் .

“நீ பார்சல் வாங்கவில்லை… என்று எனக்கு தெரியும்  ரஞ்சனி” என்று சிரித்தான் .

கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிய , “எப்படி…? எப்படி…?” என்று வியக்க ,

“அது கம்பெனி ரகசியம் , சொல்ல மாட்டேன்….” என்று வம்பு செய்தான்.

“பிளீஸ் ,பிளீஸ் ….” என்று கண்களைச் சுருக்கிக்  கெஞ்ச ,

அந்த அழகு அவனை கொள்ளை கொண்டது , அவளை ரசித்தபடி சொல்கிறேன்  , “டின்னர் ?” என்று புருவத்தை உயர்த்த ,

“ஓ.கே. டீல்” என்று கட்டை விரலை உயர்த்தினாள்.

ரகு சிரித்தபடி , “உன் வீட்டில் தான் சமையல் செய்ய ஆள் இருக்கிறதே…” என்று கண்சிமிட்ட ,

“எப்படித் தெரியும் ?”

“உன் அப்பா தான் , அன்று பேச்சுவாக்கில் சொன்னார்…” என்று புன்னகைத்தான் .

“இது போங்கு , நான் ஒத்துக் கொள்ளமாட்டேன் .”

“என்ன போங்கு ? எங்கேயோ எப்போதோ கேட்ட தகவலை சரியாக இணைத்திருக்கிறேன் அல்லவா? அது தான் திறமை… ”என்று காலரைத் தூக்க ,

“ஆமாம்… ஆமாம்…. , பயங்கர திறமை தான்  , ஒரு நோபல் பரிசு பார்சல்…” என்று கண்ணில் நீர் வரச்  சிரித்தாள்.

ரகு அதை ஆசையோடு பார்க்க , “ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படி சிரிக்கிறேன் .  இனிமேல் பழைய ரஞ்சனி வரவே மாட்டாள் என்று நினைத்திருந்தேன் . “தேங்கயூ , தேங்க் யூ சோ மச் ஸார் .”

அவன் சிரித்தபடி , ”தங்கள் நன்றியை ஏற்று கொண்டோம்” என்று அரசர் பாணியில் பேச ,

ரஞ்சனி சிரிப்பு மேலும் விரிந்தது .

தொடரும்….