ஆனந்த போர்க்களம் – 5

எல்லாரையும் ஓடவிட்டு விட்டு சோபாவில் நடுநாயகமாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் வீரேந்திரன்.

கொஞ்சம் தள்ளி கையை பிசைந்தபடி சந்தியா நின்றிருந்தாள். பயத்தில் அவளின் இதயம் தடதடத்துக் கொண்டிருந்தது.

“எனக்கு ஒரு டீ…” என்றான் அதிகாரமாக.

‘என்னது?’ என அதிர்ந்து விழித்து விட்டாள். ஏற்கனவே அவன் சொன்ன மிசஸ். வீரேந்திரனிலேயே சரியாகச் சுவாசிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, இவன் இப்படி அதிகாரம் செய்தால்?

அவள் விழிப்பதைப் பார்த்துவிட்டு, “டீ கேட்டேன்” என்றான் மீண்டும் ஒருமுறை.

“அ… அது… அது… அப்பா வீட்டுல இல்லை…” சந்தியா ரொம்பவும் தடுமாறினாள். அவளுக்குக் குரலே எழவில்லை.

அவன் அதே அழுத்தப் பார்வையுடன், “அவங்க வரும்போதும் உங்க அப்பா வீட்டுல இல்லை தான்…” என்றான் இறுகிய குரலில்.

‘அவங்களும் இவரும் ஒன்னா?’ அவள் மனம் திணறியது. “அது… அவங்க வரதா சொல்லவே இல்லை. இதுவரை அவங்க எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததும் இல்லை. திடீர்ன்னு வந்துட்டாங்க…” என்றாள் குரலே எழாமல்.

அவனுக்குத் தான் எல்லாம் தெரியுமே! “ஓ…” என்றான் அசுவாரஸ்யமாக. அவளின் நம்ம வீடு என்ற வாக்கியம் கற்கண்டாய் உள்ளுக்குள் இனித்துக் கொண்டிருந்ததில் கொஞ்சமே கொஞ்சம் தணிந்தான்.

கையை பிசைந்தபடி அவன் எதுவும் சொல்வான் என்று சந்தியா ஏறிட்டுப் பார்க்க அவனோ மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை. இவளாகவே, “வீடு தேடி வந்தவங்களை எப்படி வெளிய போக சொல்லறதுன்னு தெரியலை…” என்றாள் தயங்கிய குரலில்.

அவர்கள் செய்துவிட்டு போன கலாட்டாவினால், அவர்களை உள்ளே விட்டிருக்கக் கூடாதோ என்று இப்பொழுது அவளுக்குத் தோன்றியது.

“ஹ்ம்ம் விருந்தோம்பல்…” என்று நக்கலாகச் சொன்ன வீரேந்திரன், “ஆனா அந்த விருந்தோம்பல் எனக்கு இல்லை. என்னை வெளிய போகச் சொல்லலாம்?” என்றான் இடக்காக.

இவனுக்கு புரிகிறதா இல்லையா? திருமணம் உறுதியானவர்கள் எப்படி ஒரே வீட்டில் தனியாக இருப்பது? பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வேண்டாமா? அவளுக்கு எப்படி இதை விளக்கிச் சொல்வது என்று புரியவில்லை.

“இன்னும் எவ்வளவு தடவை கேட்டா டீ கிடைக்கும்?” அவன் குரலில் கோபம் எட்டிப்பார்த்தது.

தயங்கித் தயங்கி டீ வைக்க உள்ளே போனாள். “இஞ்சி, ஏலக்காய் எல்லாம் போட்டு ஸ்பெஷலா…” என்று இங்கிருந்தே கத்தினான்.

‘ஐயோ! ஏன் இப்படி கத்தறாங்க. இவரு வந்ததை ஊருக்கே சொல்லணுமா?’ என புலம்பியபடியே தேநீர் தயாரித்தாள். எங்கே சமையலறை வரை வந்து விடுவானோ என்று படப்படப்பாக வேறு இருந்தது.

அவள் எண்ணிப் பயந்தது போல அப்படி ஒன்றும் அவன் வரவில்லை. ஆசுவாசம் எழுந்ததோடு காரணமே இல்லாமல் மனம் ஏமாற்றமாகவும் உணர்ந்து தொலைத்தது.

நடுங்கிய கரங்களால் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அதைப் பார்த்தபடியே, “உனக்கு?” என்றான்.

“நா… நான் குடிக்க மாட்டேன்…”

“அப்பறம் எப்படி எல்லாம் சரியா இருக்கான்னு டேஸ்ட் பார்த்த?”

“இல்லை எனக்கு அளவெல்லாம் சரியா தெரியும். டேஸ்ட் பார்க்காமயே டீ போடுவேன்” பேச பயந்தவளை அவளையும் அறியாமல் இயல்பாகப் பேச வைத்துக் கொண்டிருந்தான்.

“இது ஸ்பெஷலா இஞ்சி, ஏலக்காய் எல்லாம் போட்டதாச்சே?” இதற்கு அளவு தெரியாதில்லையா என்ற பார்வை அவனிடம்.

“இப்படியும் எனக்கு டீ போடத் தெரியும்” என்றாள் ரோஷமாக.

“நான் நம்ப மாட்டேன். குடிச்சு பார்த்துட்டு சரியா இருந்தா கொடு…” என்றவன் கைகளை கட்டி அமர்ந்து கொண்டான். உண்மையில் பேச்சுவாக்கில் தான் கவனிக்காமல் சொல்லி விட்டிருந்தான்.

சந்தியாவோ, ‘இதெல்லாம் ஓல்டு ட்ரிக்’ என்பது போலப் பார்த்து வைத்தவள், உள்ளே மிச்சமாகியிருந்த சிறிது டீயை கொஞ்சமாக டம்ளரில் ஊற்றி எடுத்து வந்து, அவன் முன்பே குடித்துக் காட்டி விட்டு, “எனக்கு எல்லாம் சரியா தான் இருக்கு…” என்றாள்.

அவள் புத்தி போன போக்கையும், தான் யோசியாமல் பேசி வைத்ததையும் எண்ணிச் சிரிப்பு தான் வந்தது வீராவுக்கு. இருந்தாலும் அவள் முன் சிரிக்காமல் இருந்தான். ஆனால், அவனது இதழோரம் புன்னகையில் துடிப்பதைக் கண்டு கொண்டவளுக்கு வெட்கமாக போய் விட்டது.

வீரேந்திரனோ நிதானமாக அந்த டீயை பருகியபடி… “எல்லாம் சரியா இருக்கிற மாதிரி எனக்கு தோணலையே… அறிவு கொஞ்சம் தூக்கலாவும், தைரியம் ரொம்ப கம்மியாவும் இருக்கே…” என வம்பிழுத்தான்.

‘இவரை???’ என பல்லைக்கடிக்க நினைத்தாலும், வீரேந்திரன் சொன்ன தோரணையில் சிரிப்பு தான் பொங்கியது.

இருவருக்கும் அழகான சொந்தம் மனதளவில் உருவாகி இருந்தது. தங்களையறியாமல் கடவுள் போட்ட முடிச்சை ஏற்றுக் கொள்ளவும் செய்திருந்தார்கள். ஆனால், அதை அவர்களே உணர்ந்திருக்கவில்லை.

இத்தனை நேரமும் சுஸ்வரமாய் போய்க்கொண்டிருந்த பேச்சு வார்த்தையில், அபஸ்வரமாய் ஒலித்தது வீரேந்திரனின் அடுத்த பேச்சு.

“ஆமா… என்னைப் பார்த்து எதுக்கு எப்பவும் பயந்து நடுங்கற…” என்றதும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

‘அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது?’ என மலங்க விழித்தபடி, “அதெல்லாம் எதுவுமில்லை… நீங்க திடீர்ன்னு வரவும்…” எனத் தடுமாறினாள்.

“ஓஹோ… நீ பயந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏன்னா எனக்கு கல்யாணத்துல சுத்தமா இண்ட்ரெஸ்ட் இல்லை… உன் மேலயும் தான்!” என்றான் முகதாட்சண்யமின்றி.

சந்தியாவிற்கு கோபமும் எரிச்சலும் எரிமலையாகப் பொங்கியது. ‘இண்ட்ரெஸ்ட் இல்லையாமே!’ இவனுக்கு என்ன அந்த ஓவியா பெண்ணை போல எல்லா பெண்களும் இவனை கட்டிக்க கியூவில் காத்திருப்பார்கள் என்ற எண்ணமா? அப்பாவின் முடிவுக்கு கட்டுப்பட்டு திருமணத்திற்குச் சம்மதித்தால்… இவன் என்னவோ நாம் இவன் பின்னால் சுற்றி வந்து திருமணம் செய்து கொள்வது போல ரொம்பத்தான் அலட்டிக் கொள்கிறான் என்று பல்லைக் கடித்தாள்.

கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் அத்தனை நேரமிருந்த அச்சங்கள் கூட மறைந்து போயிருந்தது.

அதில் இத்தனை நேரமில்லாத தைரிய குரலில், “என்னைப் பார்த்தா மட்டும் இந்த கல்யாணத்துக்காக ஆர்வமா இருக்கிற மாதிரியா உங்களுக்கு தெரியுது?” என்றாள் படு நக்கலாக.

அதில் எந்த சலனமும் இல்லாமல், “ஹ்ம்ம் கெஸ் பண்ணினேன். கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமே…” என்றான் ஆராய்ச்சியாக.

“ஹான்… ஊருக்கே ரௌடி. உங்களாலேயே பிடிக்காத கல்யாணத்தை நிறுத்த முடியலை. என்னால மட்டும் முடியுமா?” யோசனையின்றி மனதில் பட்டதை நக்கலாகச் சொல்லி முடித்தவள், வீராவின் அனல் பார்வையில் திகைத்தாள்.

‘என்ன சொல்லி தொலைத்தோம்?’ அத்தனை நேரமும் தன் பயத்தை மறந்து வம்பு சண்டை வளர்த்து கொண்டிருந்தவளுக்குக் குளிர் பரப்பியது வீராவின் பார்வை. சட்டென்று அமைதியாகி விட்டாள்.

தன் பார்வையில் அவள் அச்சம் கொள்வதையும், அவளின் முகம் சுருங்குவதையும் உணர்ந்தவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியபடி, “என் சூழல்ல இந்த கல்யாணத்தை நிறுத்த முடியலை…” என்றான் சலிப்பாக.

‘என்னை கட்டிக்க இந்தளவு சலிச்சுக்கறவன் எனக்கு புருஷனா?’ என அவள் மூக்கை சுருக்கினாள். உதடும் மூக்கும் ஒரு சேர சுருங்கி மேல் நோக்கிப் போக, அந்த பாவனையே அழகாக இருந்தது.

‘இவ கொஞ்சமே கொஞ்சம் வொர்த் தான் போலவே!’ தன்னையறியாமல் வீராவின் மனம் சலனப்பட்டது

சந்தியாவோ “என்னாலயும் முடியாது… காலையிலேயே அப்பாவுக்கு கூட பயங்கர சங்கடம். நான் கல்யாணத்துக்கு மறுத்து அடம் பிடிச்சதை நினைச்சு. என்னால அவரை மீற முடியாது” என்றாள் உறுதியான குரலில்.

“வாட் எவர்…” என அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவன், “சோ எனக்கு லவ் டார்ச்சல் எல்லாம் இருக்காதுன்னு நம்பலாம்…” என்றான் கைகளை பின்னால் நீட்டிச் சோம்பல் முறித்தபடி.

மீண்டும் முகத்தைச் சுருக்கியவள் கழுத்தை வெட்டி அவன் முகத்தை பார்க்காமல் திருப்பிக் கொண்டு, தன் பாவனையிலேயே இருக்காது என்று தெரியப்படுத்தினாள்.

‘ஹ்ம்ம்…” என்று சலிப்போடு எழுந்தவன், திடீரென என்ன தோன்றியதோ, “என்கிட்ட வாயடிக்கிறதெல்லாம் சரிதான்… அவன் அவ்வளவு பக்கத்துல வரான். அவனை அடிச்சு தள்ளாம நீ அழுதிட்டு பின்னாடி போற…” என்றான் அதிருப்தியான குரலில்.

சாதாரணமாகக் கேட்க நினைத்தாலும் அவனையும் அறியாமல் வருணின் நினைவில் கோபம் வந்துவிட்டிருந்தது. திடீரென்று காய்ச்சிய கம்பி போல நெருப்பாகத் தகித்தவனை சந்தியா மீண்டும் மிரண்டு பார்த்தாள்.

அவளின் பார்வையில் சுதாரித்தவனோ, “ம்ப்ச்… எனி ஹௌ இட்ஸ் நன் ஆஃப் மை பிசினஸ்…” என்று தோளை அலட்சியமாகக் குலுக்கிவிட்டுச் சொன்னவன் எந்தவித விடைபெறுதலும் இல்லாமல் விறுவிறுவென வேகமாக வெளியே போய்விட்டான்.

மழை பேய்ந்து ஓய்ந்தது போல இருந்தது சந்தியாவிற்கு. அவன் போனதும் தொப்பென்று சோபாவில் அமர்ந்தவள் ஆசுவாசமாய் கண்களை மூடிக் கொண்டாள்.

‘இவனை எப்படி தினமும் சமாளிப்பேன்?’ என்ற மனப்போராட்டம் அவளுக்குள்.

ஒருநாள் அவன்மீது பித்தாகி நிற்கப் போகிறாள் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பித்தை, தன் பிடித்தத்தைச் சொல்ல முடியாமல் தடுமாறி நிற்க போவதையும்!