தங்கள் வீட்டை தேய்ப்பதற்கு எண்பது ரூபாய் பெரிய செலவு இல்லை என்பது அவரது எண்ணம். ஆனால் தனக்கு… மூன்று நாள் பிள்ளைகளின் மாலை உணவு செலவு. என்ன செய்ய?… ரேஷனில் கொடுத்த சுண்டல் இருக்கு, வேக வைத்து ஒரு நாள் கொடுக்கலாம். அரிசி வடாகம், கோதுமை இனிப்பு வடை என்று எப்படியாவது சமாளிப்போம். இந்த வாரம் பிள்ளைகள் அசை பட்ட முட்டை பேப்ஸ் இல்லை.

     எட்டரைக்கு மேல் வந்து சமையை முடித்து, பிள்ளைகள் உண்ண வைத்து, தான் உண்டு, பிள்ளைகள் தூங்க மணி பத்தை தொடும். அதன் பின் துணி துவைக்க உட்கார்ந்து விடுவாள். பிள்ளைகள் சீருடை இருப்பதால் தினமும் துணி துவைத்து விடுவாள். வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அவளுக்கு அவசியம் அல்லவா!…

    துணியை உதறி காயப்போட  அமுதாவின் கணவன் சுகுமார் போன் பேசுவது போல் அவளை நோட்டம் விட்டு கொண்டிருந்தான். வீட்டு ஓனர் கெடுபிடியாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க காரணம் உப்பு தண்ணி பிரச்சனை கிடையாது. குடி தண்ணீர் மட்டும் தான் தகராறு. அதை வெளியில் வாங்கி கொள்வாள்…

   “மச்சான் ஏதாவது வேணும்ன்னா சொல்லு உடனே வாங்கி தாரேன். உனக்கு இல்லாததா… ராத்திரி வேற தனியா இருக்க, எனவும் தேவை, அவசரம்ன்ன ஒரு சத்தம் போதும், ஓடி வந்துறேன். எம்புட்டு நாளைக்கு தனியா கிடப்பா, யாரும் இங்க யோக்கியம் கிடையாது மச்சான்…” சுகுமார் போனில் தொடர,

   இந்த வார்த்தை தனக்கானதது தான் என்று தெரியும். தூது விடுறான் பரதேசி நாய்… மத்த பெண்களிடம் இதே மாதிரி பேச முடியுமா… தனியாக இருந்தால் என்ன, இவன் வீட்டு வாசலிலா தாவு கிடந்தேன். தனியாக இருக்கும் பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா… யார் சொன்னது புருசன் கூட இருக்கும் பெண்கள் தான் குடும்ப பெண்கள் என்று… 

     ஆண் துணை இன்றி தனியாக இருக்கும்  பெண் பொது சொத்தா?… இஷ்டத்திற்கு பார்வையால் மேய்கிறான். கணவனை பிரிந்து தனியே இருக்கிறாள், இள வயது வேற, மடங்கி விடுவாள் என்று ஒரு எண்ணம். நான் தான் என் உணர்ச்சிகளுக்கு என்றோ தீ வைத்து விட்டேனே…

    காலில் பொத்தென்று ஏதோ விழுந்தது. அதிர்ந்து போய் குனிந்து பார்த்தால்… மல்லிகை பூவும், கொஞ்சம் பணமும் ஒரு கவரில் போட்டு தூக்கி போட்டிருக்கிறான். ஆக, வெறும் பேச்சோடு ஒதுங்கி கொள்பவன் இல்லை, துணிந்து விட்டான். 

       எப்படி தன்னை தற்காத்து கொள்ள, நெஞ்சில் பயம் கவ்வியது. வேகமாக அதை எடுத்தவள், அவன் வீட்டு மாடியை நோக்கி எரிந்து விட்டு உள்ளே சென்று கதவடைத்து கொண்டாள். வீட்டில் அமுதா அக்கா இருப்பதால், மேற்கொண்டு எதுவும் செய்ய மாட்டான். கொஞ்சம் நிம்மதி வர, உறங்க தொடங்கினாள்.

   அங்கு உறக்கம் என்பதையே மறந்து போய் இருந்தான் வெற்றி வேல். பேய் பிடித்த மாதிரி அமர்ந்து இருந்த மகனை பார்த்து தனத்திற்கு பயம் கவ்வியது. 

    அபியின் பெற்றோரும் அமர்ந்து இருக்க, தர்ம சங்கடமாக இருந்தது. கல்யாணத்துக்கு நாள் குறிக்கும் வரை சென்று இருக்க, எல்லாம் தலைகீழ் தான். முன்பே திருமணத்திற்கு பிடி கொடுக்க வில்லை. அவன் எண்ணம் என்னவென்று தெரியவும் இல்லை.

   “அக்கா, நாங்க மாப்பிள்ளை கிட்ட ஒன்னும் கேட்க முடியாது. அந்த பையன் என்னைக்கும் அபிய காட்டுகிறேன்னு  சொல்லலை. ஆனா, நீ சொன்ன… எம் பிள்ளை தான் உம் மருமகன்னு சொன்ன, இப்ப நடக்குறது எல்லாம் வேற மாதிரி இருக்கு. எம் பிள்ளையோட பிடிவாதம் தான் எங்களை கட்டி போட்டுச்சு. இப்ப தப்பு பண்ணிடமோன்னு தோனுதுக்க…” என்று அபியின் தந்தை சொல்ல.

   சாந்தாவும், “ அந்த தம்பியும் எம் மக மேல ஆசை படுறாங்கன்னு நினைச்சா, நாலு வருஷம் செண்டும் பொண்டாட்டிய பார்த்து பொட்டி பாம்பா அடங்கி வந்திருக்கான்… என்னத்தை சொல்ல, எம் பிள்ளை வாழ்க்கை என்ன அவ்வளவு லேசா… எம் மகளுக்கு ஒரு பதில சொல்லுங்க, இல்லைன்னா மந்தைக்கு பஞ்சாயத்துக்கு வாங்க…” என்று ஒரு பிடி பிடிக்க, பதில் சொல்ல தெரியாமல் விழித்தார் தனம். 

  வெற்றியின் தந்தைக்கும் ஒன்றும் புரியவில்லை. மகன் போக்கு சுத்தமாக சரியில்லை. பொண்டாட்டி கூட வாழ சொன்ன போது கா வீட்டுக்கு மூத்தவனா, பொறுப்பா கடமையா செய்றான்னு நினைக்க, எப்படி ஒரு குழப்பவாதியா  இருக்கான்…

   இப்படி நிலையில்லாத ஒருவனை வைத்து கொண்டு திருமண காரியத்தில் இறங்க பயமாக இருந்தது. சூழ்நிலையை தனம் கையில் எடுத்தார்.

   “எதுக்கு எல்லாம் இடிஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்கிறீங்க… ஒரே ஊரு என்னைக்காவது ஒரு நாள் பார்க்க தான் வேணும். அவ கல்யாணம் காட்டாம ஒத்த குரங்க நின்ன, நாமளா பொறுப்பு. அவளை பார்த்து இவன் ஏன் சுணங்குறான். அப்படி ஒன்னும் நல்ல புருசன், பொண்டாட்டியா வாழலையே… எம் மகன போட்டு பாடா படுத்துனா…”

         “நாமல்லும் பார்த்து தான இருந்தோம், தினம் ஒரு சண்டைய போட்டு நாறி கிடந்துசுங்க… ரெண்டும் சேர்ந்து சிரிச்சா முகமா நாம பார்த்து இருப்போம்மா… அவளை கட்டி ஒரு நாளும் எம் மகன் நிம்மதியா இல்லை. அவ பவுசு தெரிஞ்சு தான் ஒருத்தனும் கிட்ட வரலை…”  ஆதங்கம், கோபம் எல்லாவற்றையும் சரண்யா மீது கட்டி கொண்டு இருந்தார்.

   “ஏய் தனம், அடக்கு… நாலு பேர் பார்க்க சண்டை போட்ட புருசன், பொண்டாட்டிய தான் பார்த்திருப்பா… நாலு சுவத்துகுள்ள என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா!… அதெல்லாம் புருசன், பொண்டாட்டி சமாச்சாரம். இத்தனை வருசம் செண்டும் பொண்டாட்டியை நினைக்கிறான்னா என்ன அர்த்தம். எல்லா புருசன், பொண்டாட்டியும் சண்டை போடுவாங்க தான். அதனால், அந்த பிள்ளை சரியில்லாத பிள்ளையாக போகுமா… வாசலுக்கு வெளிய நின்னு நீ பார்த்ததை வச்சு தப்பு சொல்லாத, வாசலுக்கு உள்ள என்ன நடந்துச்சு உனக்கு தெரியுமா!… அவனுக்கு தெரியும் அதான் மருகி நிக்குறான்…” என்று வெற்றியின் அத்தை கேட்க.

    யாராலும் பதில் பேச முடியவில்லை. அபிக்கு புரிந்தது… சரண்யா என்று சொல்லாமல் வெற்றியின் பொண்டாட்டி என்று தான் சொல்கிறார்கள். தாலி கட்டி கொண்டவள் உரிமைகாரியாகி போனாள்.

   அறையின் உள்ளே படுத்து கிடந்த வெற்றிக்கு வெளியில் பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தான். அவர் சொல்லியது உண்மைதான். பிடிக்காமல் செய்து கொண்ட கல்யாணம், கட்டாயத்தின் பேரில் வாழ்ந்த வாழ்க்கை தான்.

   ஆனால், ஒரு பெண்ணோடு முழுமையாக வாழ்ந்து விட்டான். நாலு சுவத்துக்குள் யாரும் அறியா விட்டாலும், மற்றவர்கள் கட்டாய படுத்தினாலும்… ஒரு பெண்ணோடு வாழ்ந்து விட்டான். இன்று இவர்கள் சொல்லும் யாரோ ஒருத்தி, அன்று அவனோடு கலந்து, அவன் பிள்ளைக்கு தாயானவள். அதை தான்  தூக்கி எறிய முடியாமல் தவித்து நிக்குறான். 

       ஊர் பார்க்க தாலி கட்டி, தன் சரிபாதி ஆக்கி கொண்டு, அவளின் முழுமையை அறிந்து கொண்டு, ஒரு பிள்ளையையும் கொடுத்த பின்… ஒத்து வரவில்லை என்று ஒதுங்குவது எவ்வாறு நியாயம். வெற்றி வேல் மனைவி என்ற அடையாளத்தில் அவள் நிற்க, இவன் மட்டும் அபிராமியின் கணவனாக எவ்வாறு மாற முடியும்… காதலியாக இருந்த அபிராமியின் கையை கூட தொட தயங்கியவன். ஆனால், மனைவி என்று சரண்யாவை மொத்தமாக எடுத்து கொண்டான். 

      ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை, அவளின் ரகசியங்களை, பெண்மையை முழுமையாக சரண்யாவிடம் அறிந்து கொண்டான். தாய் முன்பு கூட ஆடை மாற்ற கூச்சபடும் பெண்ணின் அந்தரங்கத்தை அறிந்து கொண்டு, வளர்த்த தந்தையின் முன் வெளிப்படுத்தாத தன் அந்தரங்கத்தை, மனைவி என்ற ஒருத்திக்கு மட்டும் உணர்த்தி, அவளோடு கலந்து வாழ்ந்து விட்ட பின்னாடி, வருசம் போச்சு, ஊர் முன் அத்து விட்டாச்சு என்று ஒதுங்கி கொள்ள நியாய மனம் வரவில்லை. யாருக்கு எதுவும் புரியாவிட்டாலும் மனைவியை கணவன் அறிவான், கணவனை மனைவி அறிவாள். அது ஒன்று தான் இவர்களிடம் முட்டி கொண்டு நின்றது.

     பச்சையில் சின்ன கரை வைத்த சேலை அணிந்து, அகிலா உடன் சேர்ந்து வேகமாக நடந்த போய் கொண்டிருந்தாள் சரண்யா. பின் தொடர்ந்து வந்தது வெற்றி வேல் தான். சரண்யா கவனிக்கவில்லை. வெற்றி யாரிடமும் எதையும் அறிய நினைக்க வில்லை. எல்லாவற்றையும் மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்ளவே விரும்பினான். 

     பிள்ளைகளுக்கு ஆண்டு விழா, அதற்கு செல்ல தான் இத்தனை வேகம். பள்ளியின் உள் செல்லும் மனைவியை பார்த்து திகைத்து நின்றான் வெற்றி. பள்ளி செல்லும் பிள்ளையா தனக்கு இருக்கு?… 

    சிறிது நேரம் கழித்து சரண்யா வந்து அவனுக்கு நான்கு சேர் முன் அமர, அவளை கவனித்து கொண்டான். ஒரு பரபரப்பு தன் பிள்ளை யார் என்று… என்ன பிள்ளை, எதுவாக இருந்தாலும் சரி தான். படபடப்பை அடக்கி கொண்டு அவன் அமர்ந்திருக்க,

    சிறுவர்களுக்கான விழ தொடங்கியது. முதல் இறை வணக்க  பாடல் என்று ஆரம்பிக்கும் போதே அகிலா கை தட்ட தொடங்கினாள். இரட்டையர் என்பதால் இவர்கள் இருவரை தான் தேர்வு செய்து இருந்தார்கள். 

   அஜிதா வெற்றி வேல், விஜிதா வெற்றிவேல் என்று பெயர் அறிவிக்க, அதிர்ந்து போய் மேடையை பார்த்தான் வெற்றி. மஞ்சளில், தாமரை வண்ணம் கலந்த பட்டு பாவாடை சட்டையில் வெட்கம், தயக்கம் கலந்து கொஞ்சம் சிரித்த படி இருவரும் கை பிடித்து மேடை ஏற,

   அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தான் வெற்றி வேல். அஜிதா அவனின் மறுபதிப்பு, விஜிதா சரண்யாவின் அச்சு. யாரும் சொல்லாமலே தன் பிள்ளைகள் என்று புரிந்து கொண்டான்.