சரண்யா அலட்டி கொள்ளவே இல்லை. வெற்றியை, அவள் குறைந்த பட்சம் பார்வையால் கூட தொடர வில்லை. முழுதாக நான்கு வருடம் கடந்தும், கோபத்தில் கூட அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க வில்லை. அவள் வீடு ஒரு கிளி கூடு, அதில் அவளோடு பிள்ளைகளுக்கு மட்டுமே இடம்.
வெற்றி என்ற ஒருவன் அவர்களின் நினைவில் கூட இல்லை. அவனோடு, அவள் வாழ்ந்த வாழ்வை வெறுப்பாக, கோபமாக கூட திரும்பி பார்க்க மனம் வரவில்லை.
ஆயிரம் நடைமுறை கொண்ட நிகழ்காலம் கண் முன் நிற்க, இறந்து போன நினைவுகளை தூசி தட்டி இவனை மீட்டெடுக்க அவசியமே இல்லை. ஏனென்றால் வெற்றி வேல் என்ற ஒருவன் அவள் வாழ்வில் எங்கும் இல்லை. இனி, எப்போதும் இல்லை…
ரகம், ரகமாக பட்டு சேலையை கடை பரப்பிய போதும், எதுவும் எடுக்க தோன்றாமல், என்ன செய்வது என்றும் புரியாமல் முழித்து நின்றாள் அபிராமி. வெண்ணெய் திரண்டு வரும் நேரம் பானை உடைந்த கதையாகி போனது…
சரண்யா என்ற ஒருத்தி அவளுக்கு யாருமே இல்லை. அவள் மீது கோபம், விரோதம், பயம் என்று எதுவுமில்லை. அவளின் நேர் கொண்டு எண்ணம் எல்லாம் வெற்றியை கொண்டது. அவனின் அங்கீகாரம் தான். காதலிப்பது பெரிய விசயமே இல்லை. ஆனால், காதலுக்கான அங்கீகாரம், அது பெரிய விசயம் தானே… அந்த அங்கீகாரம் தனக்கு கொடுக்க பட வில்லையென்றால், தனது காதல் பொருள் அற்றது, நியாயமற்றது, அத்தோடு தகாதது. வெற்றியின் முகம் பார்த்தாள் அபி…
வெற்றி முகம் செத்து கிடந்தான். அவனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. அவன் மனநிலை அவனுக்கே விசித்திரம் தான். மனம் அறிந்து காதல் என்ற உணர்வு வந்தது அபிராமி மீது தான்.
சரண்யா உடனான அவன் வாழ்க்கை திணிக்க பட்டது. நிச்சயம், அவன் அறிவான். அபி மீது கொண்ட அவன் ஈடுபாடு, சரண்யா மீது துளி வந்தது இல்லை. ஆனால், சரண்யா அவன் மனைவி. அந்த எண்ணம் தான் அவனை கூறு போட்டது. என்ன தடுத்தும் சரண்யாவை ஒதுக்கி வைக்க முடியவில்லை.
ஊர் முன் அத்து விட்ட உறவை பார்த்து அஞ்சி ஒதுங்குவது ஏன்?… அது தான் அபியின் எண்ணமும், ஊரறிய ஒத்து வராது என்று ஒதுங்கி கொண்டாச்சு. இருவருக்கும் தொடர்பு இல்லை என்று அவரவர் வழியில் சென்ற பின்னும், எந்த நினைப்பு இவனை உறுத்துகிறது. கள்ள காதல் செய்து மனைவியிடம் மாட்டி கொண்ட கணவன் மாதிரி பயந்து, பம்மி கொண்டு நிற்பது ஏன்?…
இதே எண்ணம் தான் சரண்யாக்கும். மூன்று மாத பிள்ளை வயிற்றோடு மனைவி நிற்கையில், என் மனதில் அபிராமி மட்டும் தான் என்று நெஞ்சில் தீ வைத்தவன். இன்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நிற்பான் என்று எதிர்பார்க்க, கூனி குறுகி கொண்டு நின்றான்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்த அகிலா, கொஞ்ச நேரத்திற்கு பின்பு தான் வெற்றியை கண்டு கொண்டாள். அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து சரண்யாவை பார்க்க, அங்கு ஒரு ரியாக்சனும் இல்லை. எப்பவும் போல தான் இருந்தாள். அபிராமி ஏதோ ஒரு சிந்தனையில் இருக்க, வெற்றி தலை நிமிரவே இல்லை. அத்தோடு, அவன் நின்று இருந்தது சரண்யா பக்கம். அது மேலும் ஒரு அதிர்ச்சி அகிலாக்கு,
“அக்கா, சேலை பாக்குறீங்களா இல்லை வேற எதுவும் காட்டடுமா…” என்று அபியை பார்த்து அகிலா கேட்க. நிமிர்ந்து சரண்யாவை பார்த்த அபி, ஒன்றும் சொல்லாமல் வெளியேறி விட்டாள். என்ன அர்த்தத்தில் பார்த்தாள் என்றே சரண்யாக்கு புரியவில்லை.
“அண்ணா, சேலை இங்க இருக்கு…” என்றாள். சரண்யா, அவன் பார்வையை ஒரு பொருட்டாக கூட பார்க்க வில்லை. ஆரம்பத்தில் அவனை கவனித்து முகம் பார்க்க வில்லை. உண்மையில் அடையாளமும் தெரியவில்லை. இவளை பார்த்து பேச்சு வராமல் அரண்டு போய் நின்றவனின் முகத்தை உற்று பார்த்த பின் தான் கணவன் என்று கண்டு கொண்டாள்.
வெற்றியிடம் ஒரு கேள்வி இருந்தது. அது என்னவென்று சரண்யா அறிவாள். யார் என்று தெரியாது போல் காட்டி கொண்டாலும், அவள் வெற்றியின் மனைவி என்ற அடையாளத்தை தான் சுமந்து கொண்டு இருக்கிறாள். அவள் கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கயிறை நூல் பிடித்தால், வரும் முடிவு வெற்றி வேல் தான்.
இவள் ஆதர் அட்டை முதல் பிள்ளைகள் ஆதார் அட்டை வரை வெற்றி வேல் தான் முதன்மை, நான் சிங்க பெண் என்றால் யார் மதிக்கிறா!…
திருமணம் ஆகி விட்டதா? கணவன் பெயர் சொல் என்று தான் கேட்கிறார்கள். விவாகரத்து ஆகி விட்டதா என்று யார் கேட்கிறார்கள். சேர்ந்து வாழ்வதும், வாழாமல் போவதும் கணவன், மனைவி பிரச்சனை தானே தவிர அரசாங்க பிரச்சனை அல்லவே…
பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது, பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு என்று எதுக்கும் குடும்ப தலைவன் பெயர் தான் முன் நிற்கிறது. நான் கணவன் உடன் வாழ வில்லை என்று எத்தனை இடத்தில் சொல்ல முடியும். அப்படி தைரியமாக சொல்லும் நவீன நாகரீக சமூகத்தில் இவள் இல்லை. ஒன்றை வயதில் அஜி,விஜிக்கு ஆதார் எடுக்கும் போது, அங்கு கண்ணாடி போட்ட ஒரு நடுத்தர வயது ஆள்…
“பிள்ளைக பேரு, அப்பா பேரு, ஊர், அட்ரஸ், பிறப்பு சான்றிதழ், ரெண்டு பேரோட ஆதார் எண் கொடுங்க…” என்று கேட்க.
தனியா வந்த சரண்யா, “நாங்க பிரிஞ்சு இருக்கோம்…” என்றாள் தயங்கியவாறே.
அவர் எந்த கடுப்பில் இருந்தாரோ, கண்ணாடியை துணியால் துடைத்து கொண்டே, “நீங்க சேர்ந்து இருங்க, பிரிஞ்சு இருங்க, அது உங்க பஞ்சாயத்து… பிள்ளைகளுக்கு அப்பன்னு ஒருத்தன் இருப்பான் தான, அவன் பேர் சொல்லுங்க…”
கொஞ்சம் தயங்கி, தயங்கி தான் வெற்றி வேல் என்ற பெயரை சொன்னாள் சரண்யா. அன்று தொடங்கியது, அவன் பெயரை முன் நிறுத்தி தன்னை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம்.
நாம் வாழும் சமூகத்தில் குடும்பம் என்ற சொல்லுக்கு பெரிய மதிப்பு உண்டு, மரியாதை உண்டு. குடும்பம் என்ற கூட்டுக்குள் வாழும், வளரும் பிள்ளைகள் எளிதாக நன்மதிப்பை பெற்று விடுவார்கள். நம் சமுதாயமும் குடும்பத்தை அடிப்படையாக கொண்டது தான். அந்த குடும்ப கூட்டில் முதன்மை பெறும் ஒரு ஆள் யார் என்றால் தந்தை தான். அவரை கொண்டே அவரின் குடும்பத்தை மற்றவர்கள் எடை போடுவார்கள்.
தனி ஒருத்தியாக பிள்ளைகளை வளர்க்கும் சரண்யாவும், அவள் பிள்ளைகளும் ரொம்ப எளிதாக விமர்சனம் செய்ய பட்டு விடுகிறார்கள்.
தாயின் பெயரை முன் எழுத்தாக கொண்டு வர சட்டத்தில் இடம் உண்டு என்ற போதும் பழக்கத்தில் வரவில்லையே… தந்தையின் பெயரை தன் பெயரோடு இணைப்பதையே ஒரு மதிப்பாக, பெருமையாக, கர்வமாக கூட நினைக்கிறார்கள்.
உண்மை தான். ஒரு பெண் பிள்ளையின் பெயரோடு தந்தையின் பெயரை சேர்த்து சொல்வது கௌரவம், அந்தஸ்து என்பதை விட அது ஒரு பாதுகாப்பு, துணிச்சல், தைரியம், நாம் தனி இல்லை என்ற உணர்வு. அதனால் எப்போதும் அஜிதா வெற்றி வேல், விஜிதா வெற்றி வேல் தான். எங்கேயும் மாற்றம் செய்ய வில்லை சரண்யா. அந்த ஒன்று தான் நமக்கு அப்பா இல்லை என்று முழுதாக உணராமல் பிள்ளைகள் இருந்தார்கள்.
ராத்திரி நேரத்தில் தனியாக இருக்கும் பிள்ளைகளை நினைத்து வேகமாக ஓடி வந்தாள். வெளி வாயிலில் வீட்டு ஓனரின் அம்மா அமர்ந்து இருக்க, அவரை பார்த்து நியாபகம் வந்தவளாக தன் பையில் இருந்த சட்டை துணியை எடுத்து கொடுத்தாள்.
“இந்த கலர் தான். சரியா தான் எடுத்து வந்து இருக்க சரண்யா. இவ்வளவும் நேரம் மாடியில் இருந்துட்டு இப்ப தான் வந்தேன்…” என்றார் தில்லையம்மாள்.
புரிந்து கொண்டு தன் வீட்டின் மாடி ஏறினாள் சரண்யா. மனது சுணங்கி போனது. இப்படி எப்போதாவது சட்டைக்கு பிட்டு துணி, பேத்திக்கு துப்பட்டா என்று ஏதேனும் எடுத்து வர சொல்வார். ஆனால், காசு தர மாட்டார். தன் வீட்டில் தான் குடி இருக்கிறார்கள் என்று எண்ணம்.