அத்தியாயம் 06
“நீ இல்லாமல் நல்லாவே இல்லை ஷக்தி…”
“என்னடா… இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட?”
“அது… எவ்வளவு தான் இந்த அப்பத்தா கூட சண்டை போட்டாலும், உங்கூட சண்டைபோட்ட மஜா வரமாட்டேங்குது ஷக்தி.”
சற்றுமுன் ஃபோன் செய்து, கலாட்டாவாக பேசி, சத்தமாகச் சிரித்திருந்த தம்பியின் நினைவில் இதழ்களில் மென்னகை பூத்தது ஷக்திக்கு.
‘ஒல்லிபில்லிக்கு எம்மேல பாசம் தான். ஆனா, அதை நேரா எங்கிட்ட சொல்லிட்டா, சாரோட கௌரவம் குறைஞ்சு போயிடுமே.’ சந்தோஷமாக அலுத்துக் கொண்டபடியே, அஸ்வினியின் வீட்டின் பின்கட்டில் தனியே உலாத்திக் கொண்டிருந்தாள் ஷக்தி.
“காலையிலிருந்து வீட்டைச் சுற்றிச் சுற்றி நடந்ததில் கால் வலிக்குது” என்று சொல்லி ஊர்மிளா, மதிய உணவுக்குப் பிறகு அறையில் ஒரு குட்டி தூக்கத்துக்கு தயாராகிவிட்டாள். இவளோடு இதுவரையில் இருந்த அஸ்வினியும், அம்மா அழைத்தார்கள் என்று வீட்டினுள் சென்றிருக்கிறாள்.
எந்த கோணத்தில் அந்த வீட்டைப் பார்த்தாலும், அதன் பிரம்மாண்டம், ஷக்தியை அசரவைத்திருந்தது.
தன் வியப்பை மறைக்காமல் தோழியிடம் பகிர்ந்து கொண்டபோது, “இதுக்கே இப்படி அசந்து போறியே. அப்போ ஒரிஜினல் பீஸைப் பார்த்தா என்ன செய்வ?” என்று சிரித்தாள் அஸ்வினி.
‘எங்க… அதைத்தான் சீக்கிரம் கண்ணுல காட்ட மாட்டேங்குறியே.”
‘அது… பொங்கல் முடிஞ்சா தான் அப்பத்தா வெளிய விடுவாங்க ஷக்தி. பொங்கலுக்கு மறுநாள் கண்டிப்பா போயிடலாம்” என்று, இப்போது தான் சொல்லிவிட்டு சென்றிருந்தாள் அஸ்வினி.
கல்லூரி வெள்ளிக்கிழமை முடிய, சனிக்கிழமை அஸ்வினியோடு கிளம்பி வந்திருந்த ஷக்திக்கு, இப்போது அந்த பெரிய வீட்டையும் பார்த்து விட்டால், தன் வீட்டுக்கு சீக்கிரம் போய் சேர்ந்து விடலாம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்திருந்தது.
அதற்கு முதல் காரணம், சௌந்தர் தம்பதியரின் வருகை. ஆமாம்…அவர்களின் வருகைக்குப் பின்னர், ஏனோ அந்த இடத்தில் இருப்பதற்கே மூச்சு முட்டியது போல ஒரு உணர்வு ஷக்திக்கு.
அதனாலேயே அவர்கள் நடமாடும் முன்னறைகளைத் தவிர்த்து, வீட்டின் பின்கட்டில், மாடியில் என்று நேரத்தை போக்கி கொண்டிருக்கிறாள் ஷக்தி.
அடுத்து, தன்னைக் காணும் போதெல்லாம், ஒரு அழுத்தமான பார்வையோடும், பொருள் விளங்கா புன்னகையோடும் கடந்து சென்ற விஸ்வஜித்தின் நடவடிக்கைகள் இன்னொரு காரணம்.
அவனின் அந்த பார்வையும், புன்னகையும் ஷக்தியின் மனதை என்னவோ செய்ய, இங்கிருந்து சீக்கிரம் கிளம்பி சென்றுவிட வேண்டும் என்றே எண்ணத் தோன்றியது அவளுக்கு.
“என்ன? யோசனை எல்லாம் பலமா இருக்கு?”
யாருடைய புன்னகை தன் மனதை அசைத்துப் பார்க்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ, அவனே கேள்வியோடு அவள் முன் வந்து நின்றான்.
“ஒன்னும் இல்லையே.”
“ஒன்னுமே இல்லையா?” கண்களைச் சுருக்கி ஆளை மயக்கும் குரலில் விஸ்வா கேட்டான்.
“இந்த விபரீத விளையாட்டு வேண்டாம், இங்கிருந்து கிளம்பி விடு ஷக்தி” என்ற ஆழ்மனதின் ஆணைக்கு கட்டுப்பட்டு, பதிலேதும் சொல்லாமல் ஷக்தி நடையைக் கட்ட ஆரம்பித்தாள்.
“ஆனா, எனக்கு உங்கிட்ட பேச விஷயம் இருக்கே… அதான் வந்தேன்” என்றான் விஸ்வா பூடகமாக.
அவனின் வார்த்தைகளில் நின்ற இடத்திலிருந்தே திரும்பி பார்த்தவளிடம், தன் கையிலிருந்த கவரை உயர்த்தி காட்டி, “ஃபோட்டோஸ்… வேண்டாமா?” என்றான் சிரித்தபடி.
“இவ்வளவு சீக்கிரமாவா ரெடியாகிடிச்சி!” ஆச்சர்யத்தோடு முணுமுணுத்தபடியே, ஆழ்மனதின் கட்டளையை ஒதுக்கி வைத்து, அவன் அருகில் வந்து புகைப்படத்தை வாங்கி ஆர்வத்தோடு பார்த்தவளின் கண்கள், சந்தோஷத்தில் விரிந்தது.
இதழ்களோ, “எல்லா ஃபோட்டோஸும் சூப்பரா வந்துருக்கு” என்று விஸ்வாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது.
அந்த வீட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட தன் புகைப்படங்களை, ஆர்வம் தாளாமல் மறுபடியும் மறுபடியும் பார்த்த ஷக்தி, ரசனையோடு தன்னையேப் பார்த்தபடி நின்ற விஸ்வாவை,
“எல்லாத்துக்கும் சார்ஜ் எவ்வளவுன்னு சொன்னா பே பண்ணிடுவேன்” என்று கேட்டு தள்ளி நிறுத்தினாள்.
“ஓ… பே பண்ணிடுவீங்களோ?” குரலில் லேசாக அதிருப்தியை காட்டிய விஸ்வா, உடனே தெளிந்து, “சார்ஜ் என்ன கேட்டாலும் தருவியா?” என்றான் பெண்ணவளின் கண்களை ஊடுருவி பார்த்தபடி.
அந்த பார்வையில் உள்ளுக்குள் லேசாக சிலிர்த்தாலும், “அதெப்படி? உங்க வேலைக்கு என்ன சார்ஜ்ஜோ, அதை மட்டும் தான் என்னால தரமுடியும்.” கறாராகச் சொல்லியவள்,
“ஆமா… நேற்று என்னவோ அந்த ஆளோட ஃபோட்டோவை நாளைக்கே ஆல்ட்டர் பண்ணி கொண்டு வந்து மாட்டுவேன்னு சொன்னீங்க. ஆனா, இதுவரைக்கும் அப்படி ஒன்னு இங்க வரவே இல்லை. ஏன்… அந்த ஐடியாவையே ட்ராப் பண்ணிட்டீங்களா என்ன?” எதற்கென்றே தெரியாமல் ஷக்தி நையாண்டி பேச, தலைமுதல் கால்வரை சினம் பூசி நின்றான் விஸ்வா.
“என்ன சொன்ன? என்ன சொன்ன? அந்தாளா? மரியாதையா பேசலைன்னா, பல்லு முப்பத்தி ரெண்டையும் தட்டி கைல தந்துடுவேன் ராஸ்கல்.” ஷக்தியை நெருங்கி நின்று அடிக்குரலில் மிரட்டியவன், “அவர் யார்னு உனக்கு தெரியுமா டி? அவர் தான் உன்…”
சொல்லிவிட முயற்சி செய்தவனின் காதுகளில், “கண்டிப்பா உண்மை ஷக்திக்கு தெரியணும் மாப்ள. ஆனா, அது இப்போ இல்லை, உங்க கல்யாணத்துக்கு பிறகு” என்ற மாமனின் வார்த்தைகள் ரீங்காரமிட்டது.
ஆகவே, எதுவும் சொல்லாமல், “டோண்ட் க்ராஸ் யுவர் ஸிமிட்ஸ், காட் இட்” என்று உறுமியபடி அந்த இடத்தை காலி செய்தான் விஸ்வா.
அவனின் ஒற்றை மிரட்டலுக்கே புயலில் அகப்பட்ட மரமாக, உருக்குலைந்து போனவளின் மனம், மானாவாரியாக ஷக்தியின் செயலைக் கண்டித்தது.
வேறு எதையும் பார்வையிடவோ, யாருடனும் பேசவோ மனமில்லாத ஷக்தி, வீட்டின் மொட்டைமாடியை தஞ்சமடைந்திருந்தாள்.
வெயில் தாழ்ந்து, வீச ஆரம்பித்திருந்த மாலை நேரத்து குளிர்ந்த காற்று, பெண்ணவளைத் தழுவிச் சென்று அமைதிப்படுத்த முயன்றது.
மாடியில் அங்குமிங்கும் வேகமாக நடைபோட ஆரம்பித்தவளுக்கு, அந்த மனிதரைப் புகைப்படத்தில் கண்ட நேரத்திலிருந்து, இயல்பு திரிந்து தான் நிற்பது புரிந்து, தன் மீதே கோபம் ஏற்பட்டது.
‘அவர் யாரோ, எவரோ? அப்படி இருக்கையில் எனக்கெதற்கு அவர்மீது காழ்ப்புணர்ச்சி? அவரவர் வாழ்க்கை, அவரவர் விருப்பம். இதில் அவரை விமர்சிப்பதற்கு நான் யார்?’
தெளிவாக முடிவெடுத்து கொண்டவள், விஸ்வஜித்தை காணும் போது, தன் வார்த்தைகளுக்காக ஒரு மன்னிப்பையும் கேட்டுவிட வேண்டும், என்று சேர்த்தே முடிவெடுத்து கொண்டாள்.
அடுத்து, விஸ்வஜித்தின் பார்வைக்கான அர்த்தத்தையும், அவனைக் காணும் போதெல்லாம் தன் உள்ளத்தில் ஏற்படும் படபடப்பிற்கான காரணத்தையும் ஷக்தி அலச முற்பட, ஒருவர் மீது ஒருவருக்கு குறையாத ஈர்ப்பு இருக்கிறது என்று தெளிவாக புரிந்தது ஷக்திக்கு.
‘ஹஹ…ஈர்ப்பு, அதுவும் பார்த்து முழுதாக ஒருநாளே முடிந்திருந்த, அந்த சண்டைக்காரன் மீது தனக்கு ஈர்ப்பா?’ என்று அவள் மனம் முணுமுணுத்தது.
‘ஒருநாளில்லை, ஒருமணி நேரம்… ஏன், அதைவிட குறைவான பொழுதுகள் கூட போதும் ஷக்தி, ஒருவர் மீது ஈடில்லா ஈர்ப்பு தோன்ற.’ அவள் மனதை அலசி ஆராய்ந்திருந்த, அவளின் ஆறாம் அறிவு தத்துவம் பேசியது.
“ஈர்ப்போ, வெறுப்போ, எதுவென்றாலும், இங்கிருக்கும் நாள்வரை அதை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.” இந்த முடிவுக்கு வந்த பின்னர் மனம் கொஞ்சம் லேசாக ஆனது போல தோன்றியது ஷக்திக்கு.
ஆனால், அப்படி எல்லாம் உன்னை எளிதில் விட்டு விட முடியாது என்று கங்கணம் கட்டிக் கொண்டது போல, கைபேசியில் ஷக்தியை அழைத்த அஸ்வினி, தன் அப்பத்தா அழைப்பதாக கூறி அவளை வீட்டின் ஹாலுக்கு வரச்சொன்னாள்.
யாருடைய இருப்பும், தன்னைப் பாதிக்க கூடாது, என்று உறுதியாக முடிவெடுத்து கொண்ட ஷக்தி, இயல்பாக மாடியிலிருந்து இறங்கி ஹாலுக்கு சென்றாள்.
அங்கே அளவில் பெரிய மேஜையில் பட்டுகள் அடுக்கப்பட்டிருத்தது. அதைச் சுற்றி நாற்காலியில் உட்கார்ந்திருந்த அஸ்வினி, ஊர்மிளா, யாழினி மூவரும், “ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து, தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.
இவளைக் காணவுமே, “வாம்மா… வா, வந்து உனக்கு பிடிச்ச மாதிரி பட்டு பாவாடையை எடுத்துக்கோ” என்று கல்யாணி அம்மா சொல்ல, பின்வாங்கினாள் ஷக்தி.
“அட… ஒன்னும் பிரச்சினை இல்ல ம்மா, பொங்கல் அன்னைக்கு உடுத்திக்க தான். உனக்கு பிடிச்சதா எடுத்துக்கோ.” ஷக்தியின் கையைப் பற்றி தன்னருகே அமர்த்திக்கொண்ட கல்யாணி அம்மா மறுபடியும் கூறினார்.
இல்ல பாட்டி ம்மா… அம்மா எனக்கு புது சுடிதார் குடுத்து தான் விட்டுருக்காங்க.”
“ஹஹ… பொங்கல் அன்னைக்கு போடுற ட்ரெஸ்ஸாம்மா அது?” லேசாக சிரித்த கல்யாணி அம்மா,
“பொண்ணுங்க பட்டு பாவாடை, தாவணி போட்டு, கால்ல கொலுசோடு, வீட்டுக்குள்ள சுத்தி சுத்தி வரும்போது, அந்த மஹாலட்சுமியே இறங்கி வந்தது மாதிரி இருக்கும். எங்க வீட்டுக்கு, உங்க தயவுல அந்த பாக்யம் கிடைக்கட்டுமே. அவங்க எல்லாம் எடுக்குறாங்க பாரு, நீயும் எடுத்துக்கோ” என்றார்.
வயதில் பெரியவர் இத்தனை சொன்னபின் மறுக்க வழியில்லாமல், பட்டுப் பாவாடைகளை பார்வையிட்ட ஷக்தி, அந்த உடைத்தேர்வில் அனுபவம் இல்லாத காரணத்தால் தடுமாறினாள்.
அவள் தடுமாற்றம் புரிந்தோ, இல்லை, கணவன் மூலம் தெரிய வந்திருந்த உண்மை தந்த உரிமையாலோ, ஷக்தி பக்கத்தில் வந்தமர்ந்த கௌரி, “அந்த கிளிபச்சையில் குங்கும கலர் பார்டர் போட்ட பாவாடையை எடுத்துக்கோ ஷக்தி, உன் கலருக்கு அருமையா இருக்கும்” என்று சொல்ல,
அதை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஷக்திக்கே இருந்த போதும் கூட, வேண்டுமென்றே, லெமன் யெல்லோவில் குங்குமக்கலர் பார்டர் வைத்த பாவாடை தாவணியை தேர்வு செய்தாள்.
இவள் தவிர அத்தனை பேரிடமும் தைப்பதற்கு அளவு ஜாக்கட் இருக்க, தையல் தைக்கும் பெண்மணியை வீட்டுக்கே வரவழைத்து ஷக்திக்கு அளவு எடுக்க வைத்து, “நாளைக்கு சாயங்காலத்திற்குள் தைத்து தரவேண்டும்” என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள்.
அன்று இரவு, தன் அண்ணன் மகளையும், அவளின் தோழிகளையும் பார்க்க வந்திருந்த, அந்த வீட்டு பெண், அதாவது அஸ்வினியின் அத்தை துர்கா கூட பழகுவதற்கு இனிமையானவராகவே இருந்தார்.
மறுநாள் காலையிலிருந்தே வீடு பொங்கலை முன்னிட்டு பரபரப்பாக இயங்க ஆரம்பித்தது.
இம்முறை பொங்கலை கொண்டாட தங்கை வீட்டில் தன் மனைவியோடு தங்கியிருந்த சௌந்தரைப் பார்த்து, அத்தனை ஆச்சர்யமாக இருந்தது அனைவருக்கும்.
அதிலும், கல்யாணி அம்மா, “வந்த காலுல திரும்பி போகணும்னு நிக்குற மனுஷனுக்கு, இன்னைக்காவது தங்கச்சி வீட்டுல தங்கணும்னு தோணிச்சே” என்று சொல்லி சொல்லி மகிழ்ந்து போனார்.
ஹஹ… அவருக்கு தெரியவில்லை, அது தங்கைக்கான தங்கல் இல்லையென்று. ஆமாம்… இன்னமும் அவர்களுக்கு ஷக்தியைக் குறித்த விஷயம் சொல்லப்படவில்லை.
அதே நேரம், மறைக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. சொல்வதற்கு உரிய நேரத்திற்காக காத்திருக்கிறார்கள், அவ்வளவு தான்.
அன்று பகல் முழுவதும் வீட்டு ஆண்கள் கண்ணிலே படவேயில்லை. அவரவர் வேலைக்காக எல்லோரும் வெளியே சென்றிருந்தார்கள்.
சௌந்தர் கூட தங்களுக்கு தேவையான துணிமணிகள், இன்னபிற பொருட்களைக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி திருமங்கலத்தில் இருக்கும் தங்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அது அஸ்வினி மூலம் தெரியவரவும், வீட்டை இயல்பாக சுற்றி வந்தாள் ஷக்தி.
ஆனால், பலாப்பழத்தை மொய்க்கும் ஈ போல, எங்கு சென்றாலும் தன்னையே சுற்றி வந்த கௌரியின் பார்வைகள் பெரும் அவஸ்தையாக இருந்தது அவளுக்கு.
‘என்னடா இது, ஷக்திக்கு வந்த சோதனை. அந்தாளு தான் அப்படி பார்த்தாருன்னா, இந்தம்மா எதுக்கு என்னை இப்படி பாக்குறாங்க? ஒருவேளை குழந்தை இல்லாததால, அந்த ஃபீலிங்ல நம்மளை இப்படி உத்து உத்து பாக்குறாங்களோ?’
‘அப்படித்தான்னா, என்னைப்போல இந்த வீட்டுல எத்தனையோ பேர் இருக்காங்களே, அவங்களை பார்க்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு, என்னை ஏன் டென்ஷன் பண்ணுறாங்க?’ இப்படித்தான் எண்ணத் தோன்றியது ஷக்திக்கு.
அன்று மாலை ஆறு மணிக்கு, தைக்க கொடுத்திருந்த துணிகள் எல்லாம் வந்து சேர்ந்திருந்தது.
“ஜாக்கெட் எல்லாம் அளவு சரியா இருக்கான்னு போட்டு பாத்துக்கோங்க அஸ்வி. அப்புறம் விடியக்காலம் கோவிலுக்கு கிளம்பும் போது, அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லக்கூடாது” என்றார் மீனாட்சி.
அதுவும் சரிதான் என்று, உற்சாகமாகவே பெண்கள் உடையை அணிந்து பார்த்தார்கள். ஷக்தியைத் தவிர எல்லாருக்கும் அவர்கள் கொடுத்த அளவிலேயே அழகாக தைக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஷக்திக்கு அளவு எடுத்து தைத்ததாலோ என்னவோ மிகவும் இறுக்கமாக இருந்தது ஜாக்கட்.
எப்போதுமே சட்டை, தப்பித்தவறி சுடிதார் போன்றே அணிந்து பழகியவளுக்கு, இறுக்கமான ஜாக்கெட் பயங்கரமாக மூச்சுமுட்ட “நோ… நோ… என்னால இதை போடமுடியாது ப்பா” என்று சுணங்கினாள் ஷக்தி.
“டைட்டா தானே இருக்கு, இதோ, நான் லூஸ் பண்ணி தரேன் பாரு” என்றபடியே ஒரு சேஃப்டி பின்னை எடுத்து கை ஓரமாக தையலை அஸ்வினி பிரிக்க ஆரம்பிக்க, தவறுதலாக பிரித்ததால் மொத்தமும் பிரிந்து வந்தது.
“ஐயையோ… இதென்னடி இப்படி ஆகிப்போச்சு?” அழாத குறையாக அஸ்வினி கேட்க, “ஹை… அப்போ நான் அதை போடவேண்டாம்ல” என்று ஆர்ப்பரித்தாள் ஷக்தி.
“அப்படி எல்லாம் உன்னை விட்டுடுவேன்னு நினைக்காத, இப்பவே டெய்லர் அக்காட்ட என்ன செய்யலாம்னு கேக்குறேன்.” சொன்னபடியே அஸ்வினி டெய்லருக்கு ஃபோன் செய்தாள்.
“நான் கொஞ்சம் பிஸியா இருக்குறேன். யாராவது கொண்டு வந்தா, தைச்சு குடுத்து விடுறேன்” என்று அவர் சொல்லவும், பாஸ்கருக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் அஸ்வினி.
தங்கைகளுக்காக எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் செய்வான் பாஸ்கர். அதே விஸ்வஜித்திடம் அவ்வளவு எளிதாக எதுவும் கேட்டுவிட முடியாது.
வழக்கமாக வரும் நேரம் தாண்டியும் பாஸ்கர் வரவில்லை எனவும், அஸ்வினி அவனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள்.
“நான் இன்னைக்கு வீட்டுக்கு வர நேரமாகும் அஸ்வி. வேணும்னா விஸ்வாகிட்ட சொல்லட்டுமா?” என்று பாஸ்கர் கேட்கவும், பதறிப்போனாள் அஸ்வினி.
“ஹேய்… பயப்படாத, அவங்கிட்ட நான் சொல்லுறேன். கண்டிப்பா செய்வான் பாரேன்.” ஒரு சின்ன கணிப்பில் சொன்னான் பாஸ்கர்.
அவன் சொல்லியது போலே, ஸ்டூடியோவிலிருந்து வீட்டுக்கு வந்த விஸ்வஜித், “ஏதோ டெய்லர் ஷாப் போகணும்னு சொன்னியாமே?” என்று அஸ்வினியின் அறைக்கு முன் வந்து நின்றான்.
வியந்து போன அஸ்வினி, ஷக்தியின் ஜாக்கெட்டை ஒரு கவரில் வைத்து, அவனிடம் நீட்டியபடி, “என்ன செய்யணும்னு டெய்லர்கிட்ட, சொல்லிட்டேன் ண்ணா, நீங்க கொண்டு குடுத்தா மட்டும் போதும்” என்றாள் உள்ளடங்கிய குரலில்.
“உன் ஃப்ரெண்ட்டை எங்கூட டெய்லர் ஷாப் வரச்சொல்லு. நேரா சொல்லியே தைச்சு வாங்கிட்டு வந்துடலாம். அப்புறம் எதுவும் சரியில்லைன்னா, திரும்பத் திரும்ப என்னால போகமுடியாது.”
அறைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த அண்ணன் தங்கையின் பேச்சு, தெளிவாக அறைக்குள் இருந்த ஷக்திக்கு கேட்க, அஸ்வினி உள்ளே வந்து சொல்லும் முன்னே, அறையை விட்டு வெளியே வந்தாள் ஷக்தி.
அவளுக்குமே விஸ்வாவிடம் மன்னிப்பு என்ற ஒன்றை கேட்க வேண்டுமே. அதற்கான தருணமாக இதைக் கருதி விஸ்வாவுடன் செல்ல தயாரானாள்.
ஷக்தி வெளியே வரவும், எதுவும் சொல்லாமல் விறுவிறுவென்று விஸ்வா முன்னே நடந்து, தான் வெளியே விட்டு வந்திருந்த தன் ட்டூ வீலரை ஸ்டார்ட் செய்தான்.
சிறிது தயங்கிய ஷக்தி, “எனக்கு சிங்கிள் சைட்ல கால் போட்டு உக்கார்ந்து பழக்கமில்லை” என்று சொல்லிக்கொண்டு, லேசாக விஸ்வாவின் தோள்களைப் பற்றியபடி இருபுறமும் கால்களைப் போட்டு அமர்ந்தாள்.
இரவுநேர மதுரை, ஒளிவெள்ளத்தில் இந்திரலோகமாக ஜொலித்தது. வாகனங்களோ சாலையில் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு பறந்தது.
அந்த போட்டியில் தானும் ஒருவனாக கலந்து, பறந்து கொண்டிருந்தவனின் மௌனம் ஏதோ செய்ய, சற்றே அவன் பக்கம் குனிந்து, “சாரி” என்றாள் ஷக்தி.
அவனோ, “எதுக்கு?” என்றான் சாலையில் கவனமாக இருந்தபடியே.
‘ஓ… எதுக்குன்னு இனி இடம் சுட்டி வேற ஐயாவுக்கு விளக்கணுமோ?’ நினைத்தவளுக்கு, பொசுக்கென்று கோபம் வந்தது. அதை மறைத்துக் கொண்டு, “என்னோட வேர்ட்ஸ் ஏதாவது உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா, அதுக்கு தான்.” பொறுமையை இழுத்து பிடித்தபடி சொன்னாள்.
“உன் சாரி எல்லாம் எனக்கு தேவையில்லை. ஆனா இனிமேலாவது அடுத்தவங்க மனசு நோகாமல் பேசிப்பழகு” என்றவன், ஒரு வீடோடு சேர்ந்திருந்த கடைக்கு முன் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான்.
இப்போதும் அவன் தோள்களைப் பற்றி இறங்கியவள், “இந்த அட்வைஸ் உங்களுக்கும் ரொம்ப தேவை. அதனால, இதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கோங்க” என்றபடியே கடைக்குள் நுழைந்து கொண்டாள்.
இப்படி ஒரு பதிலை ஷக்தியிடமிருந்து எதிர்பார்க்காத விஸ்வாவின் முகம், புன்னகையில் விரிந்தது.
போன வேலையை முடித்துக்கொண்டு கடையை விட்டு வெளியே வந்த ஷக்தி, எதுவும் நடக்காதது போலவே விஸ்வாவிடம், “போலாமா?” என்று கேட்டாள்.
இப்போது விஸ்வா, “சாரி…” என்றான் ஷக்தியின் முகம் பார்த்து.
“எதுக்கு?” சற்றுமுன் அவன் கேட்டதையே திருப்பிப் படித்தாள் ஷக்தி.
“என்னோட வேர்ட்ஸ் ஏதாவது உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா… அதுக்குத்தான்.” மென்மையாக சொன்னவனின் பாவனையில் ஷக்தி சிரிக்க, உடன் சேர்ந்து கொண்டான் விஸ்வா.
*****
மறுநாள் காலை, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்.
அதிகாலையிலேயே அந்த வீட்டிலுள்ளவர்கள் பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
பக்கத்தில் இருக்கும் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட பிறகே, வீட்டில் பொங்கல் விடுவது அந்த குடும்பத்தின் வழக்கம் என்பதால், கோவிலுக்கு போக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவராக புறப்பட்டு ஹாலில் வந்து அமர்ந்து கொள்ள, பட்டு பாவாடை தாவணியில் தயாராகி வந்த பெண்கள் நால்வராலும், அந்த வீடே வண்ணமயமாக ஜொலித்தது.
அஸ்வினியும், யாழினியும் தங்கள் உடைக்கு பொருத்தமாக நகைகள் அணிந்திருக்க, ஊர்மிளாவும், ஷக்தியும் எப்போதும் போல சாதாரண நகையே அணிந்திருந்தார்கள்.
ஊர்மிளா கழுத்தில் கூட ஓரளவுக்கு பெரிய செயின் கிடந்தது. ஆனால் ஷக்தியோ, காதை ஒட்டி ஒரு காதணியும், கழுத்தில் முடியை விட மெலிதான தங்க சங்கிலியுமாக இருந்தாள்.
எப்போதும் அவள் அணியும் உடைக்கு பொருத்தமாக இருக்கும் அந்த அணிகலன்கள், இப்போது பாவாடை தாவணிக்கு பொருத்தமின்றி இருந்தது.
ஷக்தியின் கையைப்பிடித்து தங்கள் அறைக்குள் அழைத்துச் சென்ற மீனாட்சி, நல்ல பெரிய ஹாரமும், அதற்கு பொருத்தமான கழுத்தணியும், காதில் பெரிய குடை ஜிமிக்கியும் அவள் மறுக்க மறுக்க அணிவித்தவர், எந்த பாகுபாடுமின்றி, ஊர்மிளாவுக்கும் தன் நகைகள் கொடுத்து அவளையும் அணியச் செய்தார்.
‘பொன்னிடப் பொன்னிட, பெண் அழகு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
உடைக்கு பொருத்தமாக நகைகளும் அணிய, நான்கு பெண்களும் தேவதைகள் என ஜொலித்தார்கள்.
அதில் அஸ்வினி என்னும் தேவதை, தன் அம்மா தேவதையிடம், “ம்மா… நீங்க ஷக்திக்கு போட்டுவிட்ட ஜுவல்ஸ் எல்லாம் அம்மம்மாவோடது தானே. அதெல்லாம் அவங்க பேத்தியோட ஷேர்ன்னு சொல்லி எனக்கு கூட போட தரமாட்டீங்களே, ஷக்திக்கு மட்டும் எப்படி குடுத்தீங்க?” என்று சந்தேகமாக கிசுகிசுத்தாள்.
“எல்லாம் கொடுக்க வேண்டியவங்களுக்கு தான் கொடுத்திருக்கோம்” என்று முணுமுணுத்தது அந்த அம்மா தேவதை...