அத்தியாயம் 05

ஷக்தியைக் காணவும் உறைந்து போன சௌந்தர் என்னும் ஆறடி ஆண்மகனின் உயிர், சில நொடிகளில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கி திரும்பி வந்தது.

‘இது உண்மையா? சாத்தியமா? அப்படியும் இருக்கக்கூடுமா?’ என்று மனம் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம், விடையில்லாமல் சௌந்தர் தவித்தார்.

ஆனால், அவர் உள்ளுணர்வோ, ‘அப்படித்தான்’ என்று அடித்துக் கூற, உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித்தவித்த மனிதரை, “வா சௌந்தர்” என்று வரவேற்ற மகாலிங்கம் ஐயாவின் குரல் தரையிறக்கியது.

பெரியவருக்கும், அவரோடு வந்த அவரின் சரிபாதிக்கும் வணக்கம் சொல்லி, மரியாதை செய்த சௌந்தர், “நாளை மறுநாள் பொங்கல் இல்லியா ஐயா. அதுதான் தங்கச்சிக்கு சீர் செய்துட்டு போகலாம்னு வந்தோம்” என்றார் பவ்யமாக.

“இந்த வருஷமாவது தங்கச்சிக்கு சீர், நேர்ல செய்யணும்னு தோணிச்சே உனக்கு” தன் கணவரோடு அங்கிருந்த விலையுயர்ந்த இருக்கையில் அமர்ந்தவாறே சலித்துக் கொண்டார் கல்யாணி அம்மா.

பதிலுக்கு எதுவும் சொல்லாமல் மரியாதையான பார்வையோடு, லேசாக சிரித்தபடி நின்ற சௌந்தர் தம்பதியரை, அமரச் சொன்ன பெரியவர் மகாலிங்கம், “என்ன பேச்சு கல்யாணி இது? திருமங்கலத்துல இருந்தா, சௌந்தர் வந்துரமாட்டானா?” என்று லேசாக கண்டித்தார்.

“ஹைத்ராபாத் மட்டும் என்ன தொள்ளாயிரம் மைல் தூரத்துலயா இருக்கு? நினைச்சா ஒரு ப்ளைட்டை பிடிச்சு காலைல வந்துட்டு சாயங்காலம் போயிடலாமே.”

நொடித்துக் கொண்ட கல்யாணி அம்மா ஒன்றும் கொடுமைக்கார மாமியார் எல்லாம் இல்லை‌. ஆனால், செய்முறைகள், பழக்கவழக்கங்கள் எல்லாம் சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று நினைக்கும் அந்த காலத்து மனுஷி.

மருமக்கள் வீட்டினரிடமிருந்து சீர் வாங்கி தான் இங்கு நிறைய வேண்டும் என்றில்லை. ஆனால், உறவுமுறைகளுக்குள் தங்களுக்கான கௌரவத்தை நிலைநாட்டும் ஒரு நிகழ்வாக தோன்றும் அவருக்கு.

சீர்வரிசைகள், இப்படி தான் செய்ய வேண்டும் என்ற சட்டதிட்டம் எதுவும் அவரிடம் கிடையாது. அவரவர் மனதுக்கு தோன்றியது போல செய்து கொள்ளலாம். ஆனால், அதை நேரடியாக வந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.

அதனாலேயே ஹைதராபாத்தில் இருக்கும் சௌந்தர், தன்னால் ஊருக்கு வரமுடியாத வருடங்களில், தங்கைக்கு சீர் பணத்தை வங்கிமூலம் அனுப்புவதை குறை சொல்கிறார்.

“இனிமேல் நேர்ல வந்தே செய்யுறதுக்கு முயற்சி செய்யுறோம் அத்தம்மா, இப்போ இதை வாங்கிக்கோங்க.”

சமாதானமாகச் சொன்ன சௌந்தர், மனைவி கையில் தயாராக வைத்திருந்த வெள்ளி தாம்பாளத்தில், தன் தங்கை குடும்பத்துக்கு எடுத்திருந்த புது துணிமணிகளோடு லட்ச ரூபாயையும் வைத்து, பெரியவர்களிடம் நீட்ட, “வாங்கிக்க மீனாட்சி” என்று மருமகளை அழைத்தார் கல்யாணி.

தங்கையிடமே நேரடியாக சௌந்தர் குடுத்திருக்கலாம். ஆனால் இப்படி செய்வதன் மூலம், அந்த வீட்டு பெரியவர்களை மரியாதை செய்தது போலவும், மகிழ்வித்தது போலவும் இருக்குமே.

அண்ணனிடமிருந்து தாம்பாளத்தை கைகளில் வாங்கிக்கொண்ட மீனாட்சியின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

இது அண்ணன் தந்த பணத்தாலும், பரிசு பொருட்களாலும் வந்ததல்ல. எந்த சூழ்நிலையிலும் உனக்கு துணையாக, உன் உடன்பிறந்தவன் நான் இருப்பேன் என்று அண்ணன் தந்த நம்பிக்கையால் வந்தது.

“அப்புறம் மாப்ள, தொழிலெல்லாம் எப்படி போகுது?”

“எங்க… முன்னமாதிரி எல்லாம் இப்போ இல்ல மச்சான். பணத்தை கொடுத்தவன்கிட்ட இருந்து திரும்ப வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது. அதனால, இனிமேல் கொடுக்கல் வாங்கல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கலாம்னு நினைக்கிறேன்.”

தங்கை கணவனின் கேள்விக்கு பதில் சொன்ன சௌந்தர், ஹைதராபாத்தில் இருந்து கொண்டு, பெரிய அளவில் ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

சொந்த ஊர், இங்கே மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் திருமங்கலம் தான். அப்பா காலத்திலிருந்தே கொடுக்கல் வாங்கல் தான் இவர்களது தொழில்.

அப்பாவின் காலத்துக்கு பிறகு அதை பெரிய அளவில் முன்னெடுத்து செய்யும் சௌந்தர், தற்போது இருப்பது ஹைதராபாத்தில்.

பெரிய அளவில் என்றால், திரைப்படங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஃபைனான்ஸ் செய்யும் அளவிற்கு நடந்து கொண்டிருந்தது அவரின் தொழில்.

“நீ சொல்லுறதும் சரிதான் சௌந்தர். உனக்கு பின்னாடி எடுத்து செய்ய ஒரு வாரிசு இல்லைங்குறப்போ, கொஞ்சம் நிதானமா செய்யுறது தான் நல்லது.”

சௌந்தரின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த கல்யாணி அம்மா, பளிச்சென்று வார்த்தைகளை விட்டார்.

“இன்னைக்கு உனக்கு என்னாச்சு கல்யாணி? தேவையில்லாமல் வார்த்தைகளை விடுற?” மனைவியை அதட்டிய பெரியவர் மகாலிங்கம்,

“நீங்க இருங்க சௌந்தர், நாங்க துர்கா வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடறோம்” என்று அருகிலிருக்கும் மகள் வீட்டுக்கு மனைவியோடு கிளம்பி விட்டார்.

கல்யாணி அம்மாவின் வார்த்தைகளில் சௌந்தரின் பார்வை ஷக்தியை தொட்டு மீண்டு வந்தது. கௌரியின் முகமோ வேதனையில் சுருங்கியது.

ஆம்… இத்தனை வருட தாம்பத்யத்தில் இந்த தம்பதியினருக்கு இதுவரை குழந்தை இல்லை.

 அங்கே சட்டென்று ஒரு கனத்த மௌனம் உண்டாக, சூழ்நிலையின் கனத்தை கலைப்பது போல, விஸ்வஜித்தின் சட்டை பாக்கெட்டிலிருந்து ஷக்தியின் அலைபேசி அழைப்பு விடுத்தது.

அழைப்போசையிலேயே அது தன்னுடையது அல்ல என்று தெரிந்து கொண்ட விஸ்வாவுக்கு, ஷக்தியின் கைபேசி தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. சுற்றிவர இருந்த அனைவரையும் பார்த்தபடி, ஒரு சங்கடத்தோடே, ஃபோனை கையில் எடுத்து பார்த்தான்.

தொடுதிரையில் கலைவாணியின் முகம், மம்மிஜி காலிங் என்ற வார்த்தைகளின் பின்னணியில் சிரித்தபடி இருந்தது.

‘ஷக்தியின் கைபேசி, உன்னிடம் எப்படி வந்தது? என்ற கேள்வி தன் பெற்றவர்களிடமிருந்து வந்தால் என்ன செய்வது?’ அப்போது யோசிக்காமல் ஃபோனை தன் கைவசம் வைத்திருந்தவன், இப்போது யோசித்தான்.

“ஃபோன் அடிச்சுகிட்டே இருக்கு, எடுத்து பேச வேண்டியது தானே விஸ்வா” என்றார் அவனின் அப்பா சதாசிவம்.

“இல்லப்பா, இது அஸ்வியோட ஃப்ரெண்டோடது, குரூப்பா அவங்களை ஃபோட்டோ எடுத்து குடுக்குறதுக்காக வாங்குனேன்.”

வாய்க்கு வந்ததைச் சொன்னவன், ஷக்தியை நோக்கி ஃபோனை நீட்டியபடியே, “உங்க அம்மா தான்” என்று கூடுதலாக தகவல் சொன்னான். இருந்த இடத்திலிருந்து நகர்ந்து, சற்றே அருகில் வந்த ஷக்தியை, ஆர்வத்தோடு பார்த்தார் சௌந்தர்.

 ஷக்தியோ, ஃபோனைக் கைபற்றிக்கொண்டு, அங்கிருந்து நகர்வதிலேயே வேகம் காட்டினாள்.

வந்த நேரத்திலிருந்து யோசனையோடு தன்னை அடிக்கடி தொட்டுத் தொட்டு மீண்ட, சௌந்தரின் பார்வைகள், ஷக்திக்கு எரிச்சல் மூட்டியிருந்தது.

கூடுதலாக, நேற்று அவர்மீது வளர்த்து வைத்திருந்த கோபமும், அவளை இங்கிருந்து கிளம்பி போகச் சொல்லிக் கொண்டிருக்க, சந்தர்ப்பம் கிடைக்கவும், ஃபோனை சாக்கிட்டு ஷக்தி வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள். ஊர்மிளாவும் அவளோடு இணைந்து கொண்டாள்.

ஷக்தி கண்ணை விட்டு அகலவும், ஒரு நிமிடம் கண்மூடி அமர்ந்திருந்த சௌந்தர், ஏதோ முடிவு செய்தது போல தங்கை மகளிடம்,

“அஸ்வினி, நம்ம விஸ்வாகிட்ட இருந்து ஃபோனை வாங்குனாளே உன் ஃப்ரெண்ட், அந்த பொண்ணோட முகம் எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க முகம் மாதிரியே இருக்குது, அவங்க பேரண்ட்ஸ் பத்தி ஏதாவது உனக்கு தெரியுமா?” என்று மெதுவாக கேட்க ஆரம்பித்தார்.

“யாரு? ப்ரியாவையா மாமா சொல்லுறீங்க? நான் வேணும்னா அவளை கூப்பிடட்டுமா? நீங்களே கேளுங்க” என்றாள் அஸ்வினி.

“ஐயையோ… வேண்டாம் மா, உனக்கு தெரிஞ்சதை நீ சொல்லு.”

“ம்ம்… அவங்க அப்பா பெயர் அரசு. ஹாங்… தமிழரசு, அம்மா கலைவாணி, தம்பி சஞ்சீவ், ஒரு பாட்டியும் இருக்காங்க, அப்பா பேங்க்ல ஆஃபீஸரா இருக்காங்க.”

 ஷக்தியைப் பற்றி அவளுக்கு தெரிந்த விபரங்களை அஸ்வினி உற்சாகமாக சொல்லிக் கொண்டே வர, இருக்கையில் நிமிர்ந்தமர்ந்த சௌந்தரின் உடல் மெதுவாக பரபரப்பை தத்தெடுக்க ஆரம்பித்தது‌.

“எந்த ஊர்ல இருக்காங்க?”

“சென்னை தான் மாமா.”

“சொந்த ஊரே சென்னை தானா?” மருமகள், இல்லை என்று பதில் சொல்லிவிட வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கேட்டார் மனிதர்.

“ஹ்ம்ம்… அவங்க இப்போ ஆறு மாசமா தான் சென்னைல இருக்குறாங்க, இதுக்கு முன்னாடி ஃபுல் அண்ட் ஃபுல் நார்த்ல தான் இருந்தாங்களாம்” என்ற தகவல் சொல்லி,

.”அவங்க சொந்த ஊர்… திருநெல்வேலி பக்கத்துல, ஏதோ ஒரு ஊர் சொல்லுவாளே? கோவில்னு கூட தொடங்கும்” என்று யோசனையோடு அஸ்வினி நெற்றியைத் தடவினாள்.

“கோவில்பட்டியா?” உடம்பின் அத்தனை அணுக்களிலும் சுறுசுறுப்பு ஒட்டிக்கொள்ள வேகமாக கேட்டார் சௌந்தர்.

அஸ்வினி, சௌந்தர் உரையாடலை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தவர்களில், விஸ்வா தவிர்த்து அனைவருக்கும், சௌந்தர் ‘கோவில்பட்டி’ என்று ஊரின் பெயரைச் சொல்லவுமே, அவரின் தேடல் எதை நோக்கி என்பது புரிய ஆரம்பித்திருந்தது.

ஒருவரையொருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக் கொண்டவர்கள், ஒரு பரபரப்போடு, அஸ்வினியின் பதிலை எதிர்பார்த்தார்கள்.

“ஹாங்… அதே ஊர் தான் மாமா. அப்போ, ஷக்தி ப்ரியாவோட ஃபேமிலி தான், நீங்க தேடுற ஃபேமிலியா?”

நான் சொல்வதை சொல்லிவிட்டேன், புதிரின் விடையை நீங்கள் சொல்லுங்கள் என்னும் விதமாக அஸ்வினி கேட்க, அந்த ‘ஷக்தி’ என்ற பெயர் அடித்து சாய்த்தது சௌந்தரை.

“ஷக்தி…” மென்மையிலும் மென்மையாக அந்த பெயரை முணுமுணுத்த சௌந்தர், தொய்ந்து போய் இருக்கையில் சாய்ந்தார். கணவனின் தோள்களை லேசாக தடவிக் கொடுத்தார் கௌரி.

 “சென்னையில இருக்கும் போது, அந்த பொண்ணு வீட்டுக்கு நீ போயிருக்கல்ல அஸ்வி, அதவச்சு அவங்க வீட்டு அட்ரஸ் சொல்லமுடியுமா உன்னால?”

மைத்துனனின் நிலைமை புரிந்து, சூழ்நிலையை கையிலெடுத்துக் கொண்ட சதாசிவம் மகளிடம் கேட்டார்.

“முடியும் ப்பா” என்ற அஸ்வினி யோசித்து யோசித்து சரியான விலாசத்தையும், தமிழரசு வேலை செய்யும் வங்கியையும் தந்தைக்கு சொல்ல, குறித்துக் கொண்டவர்,

“உன் ஃப்ரெண்ட்டோட ஃபேமிலி தான், மாமா தேடுறதா என்னன்னு தெரியாது அஸ்வி. அதனால நீ இதப்பத்தி இப்போதைக்கு அந்த பொண்ணு கிட்ட எதுவும் சொல்லாதடா. அவங்க தானான்னு விஷயத்தை கன்ஃபார்ம் பண்ணிட்டு, அவகிட்ட சொல்லலாம். ஓகே யா” என்று சொல்ல, தலையாட்டியபடியே எழுந்து சென்றாள் அஸ்வினி.

மகள் செல்லவும், தன்னுடன் இராணுவத்தில் பணியாற்றிவிட்டு திரும்பி வந்து, சென்னையில் டிடக்டிவ் ஏஜன்சி வைத்து நடத்தும் நண்பனுக்கு அழைத்து, குறித்து வைத்திருந்த விபரங்களைச் சொல்லிய சதாசிவம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த விலாசத்தில் குடியிருக்கும் நபர்களைப் பற்றிய விபரங்கள் வேண்டும் என்று கேட்டார்.

நடக்கும் யாவும், ஏதோ ஒரு புதையலைத் தேடி நடக்கும் புலன்விசாரணை போல இருக்க, ஒரு சுவாஸ்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்த விஸ்வாவுக்கு, இது வெறும் ஒரு நபரைப் பற்றி அறிந்து கொள்வதற்கான முயற்சி மட்டுமல்ல என்று தெளிவாக புரிந்தது.

இருந்தாலும், யாரும் என்னவென்று சொல்லாமல் விஷயத்தை அறிந்து கொள்ள முடியாதே. எனவே அமைதியாக அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

சதாசிவத்தின் தம்பி பசுபதி, காலை உணவிற்குப் பிறகு குடும்பத்தோடு வெளியே சென்றிருக்க, இவர்கள் மட்டுமே வீட்டில்.

“நேற்றே ஷக்தி இங்க வந்திருக்கா, உனக்கு அவளை அடையாளம் தெரியலையா மீனு?”

ஆதங்கத்தோடு வந்த சௌந்தரின் குரல், ஷக்தி என்று உச்சரிக்கும் போது லேசாக உணர்ச்சிவசப்பட, கேள்வி கேட்கப்பட்ட தங்கையின் நிலையோ பரிதாபமாக இருந்தது.

“ஐயோ… அண்ணா, அவ பிறந்ததுல இருந்து இந்த பாவி ஒருநாள் கூட அவளைப் பாத்ததில்லையே, அப்புறம் எப்படி?” லேசாக உணர்ச்சிவசப்பட்ட மீனாட்சி,

“ஆனா, அந்த பிள்ளையை பாக்கும் போதெல்லாம் நெஞ்சுக்குள்ள ஏதோ பண்ணிச்சு ண்ணா…” என்று பரிதவித்தார்.

இன்னமும் அறுதியிட்டு விஷயம் தெரியும் முன்னே, இதுதானென்று உடன்பிறப்புகள் இருவரும் உறுதிபட பேசிக்கொள்ள, அவர்களின் துணைகளின் கண்களிலும் அவர்களுக்கான வருத்தம் மிதமிஞ்சிய அளவில் இருந்தது.

விஸ்வா தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை என்று சொல்வார்களே, அந்த நிலையில் உட்கார்ந்திருந்தாலும், நடப்பவை அனைத்தும் ஷக்தியை முன்னிட்டு என்று யூகம் செய்யமுடியாத அவளிற்கு அவன் முட்டாள் ஒன்றுமில்லையே. எனவே கூடுதல் ஆர்வத்தோடு உட்கார்ந்திருந்தார் நம் நாயகன்.

இப்படியே ஏதேதோ பேசி அண்ணனும் தங்கையும் பிதற்றியபடி ஒருமணி நேரத்தை கழித்திருக்க, உண்மை நிலவரத்தை கூறுவதற்காக அழைத்த கைபேசியின் அழைப்பொலி, சபாமண்டபத்திற்கு மன்னர்பிரான் எழுந்தருள்வதற்கு முன் ஒலிக்கும் கட்டியம் போலவே தோன்றியது.

அலைபேசி வழி வந்த தகவலின் மூலம், தமிழரசு குடும்பத்தின் ஜாதகமே இவர்கள் கைக்கு வந்திருந்தது.

சரியான விலாசத்தை கொடுத்து இவர்கள் விசாரிக்க சொன்னதால், எல்லாம் எளிதாக முடிந்திருந்தது.

அண்ணனும் தங்கையும் எதிர்பார்த்த முடிவையே உறுதி செய்திருந்தார்கள், அந்த டிடெக்டிவ் நிறுவனத்தினர்.

நெஞ்சம் சந்தோஷத்தால் விம்மி தணிய, அமைதியாக உட்கார்ந்திருந்த மைத்துனரிடம், “இப்போ என்ன செய்ய போறீங்க சௌந்தர்? விஷயத்தை இப்பவே பொண்ணு கிட்ட சொல்லிடுவமா? என்றார் சதாசிவம்.

“ஐயையோ… வேண்டாம்… அவசரப்பட வேண்டாம்” எதையோ நினைத்து பதறினார் சௌந்தர்.

“அப்போ என்ன பண்ணனும்னு சொல்லுங்க, நீங்க சொல்லுறபடி செய்துடலாம்” என்றார் சதாசிவம் சௌந்தருக்கு தோள் கொடுக்கும் முடிவில்.

“மை காட்… உங்க ரகசியம் என்னன்னு எனக்கும் சொல்லிட்டு, உங்க டிஸ்கஸனை கன்டினியூ பண்ணுறீங்களா அப்பா?” பொறுத்துப் பொறுத்து பார்த்த விஸ்வா நேரடியாக கேட்டேவிட்டான்.

மகனின் வார்த்தைகளில் சதாசிவம், சொல்லி விடுவோமா? என்பது போல மைத்துனரின் முகம் பார்க்க, நொடியில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்துகொண்ட சௌந்தர், எல்லா விஷயங்களையும் மருமகனிடம் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் சொல்லச்சொல்ல, அத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்த விஸ்வாவின் விழிகள் வியப்பால் விரிந்து கொண்டே சென்றது.

அவனுக்கும் தெரிந்திருந்த விஷயம் தான். ஆனால், அது இன்று ஷக்தியின் உருக்கொண்டு கண்முன்னே வந்து நிற்க, இன்ப அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

அந்த மகிழ்ச்சியை வெளிப்படையாக முகத்தில் பிரதிபலித்த மருமகனிடம், “நீ ஷக்தியைக் கல்யாணம் செய்து, அவளை நம்ம குடும்பத்துக்குள்ள கொண்டு வந்துடுறியா விஸ்வா?” யாசிக்கும் குரலில் கேட்ட சௌந்தரின் கண்களில் எதிர்பார்ப்பு மின்னியது.

நேற்று ஷக்தியைப் பார்த்த நேரத்திலிருந்து அவளிடம் வெயிலெனக் காய்ந்தும், பனியெனக் குளிர்ந்தும் தடுமாறி நின்ற விஸ்வாவுக்கு, மாமனின் வார்த்தைகள் தேவவாக்காக தோன்றியது.

“எங்க கல்யாணம் நடக்குறது தான் உங்களுக்கு சந்தோஷம்னா, நான் ஷக்தியை கல்யாணம் செய்துக்குறேன் மாமா” என்றான் உறுதியான குரலில்.

தன்னைப் பற்றியும், தன் திருமணத்தைப் பற்றியும், கீழே ஒரு கூட்டம் பேசிக்கொண்டிருப்பது தெரியாமல், அதே வீட்டின் மாடி அறையிலிருந்து தன் தாயோடு சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் ஷக்தி ப்ரியா…