பதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 17

அத்தியாயம் 48

ரஞ்சனி……

ராகவ்விற்குச் சீக்கரமே பெண் அமைய , மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவாகியது . திருமண வேலை வேகம எடுத்தது .

 ரஞ்சனி, ராகவ்வைச் சீண்ட , ராகவ் வெட்கப்பட  என்று 

பிள்ளைகளின் கேலி கிண்டல்களை,  ராமநாதனும் , கோகிலாவும் ரசித்தனர்.. வீட்டிற்குப் பழைய கலை வந்திருந்தது . 

ராகவ்வின் மாமனார் குடும்பம் நல்ல மாதிரி இருக்க , அனைத்தும் நல்லபடியாக நடந்தது . 

ரஞ்சனியும் எந்தத் தயக்கமும் இல்லாமல் அண்ணனின் கல்யாண வேலைகளில் பங்கேற்றாள் . ராகவ்வின் வருங்கால மனைவி  வான்மதியும் ரஞ்சனியும் தோழிகளானார்கள் .

கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கும் வேலை ஆரம்பிக்க , ராமநாதன், ரகுவின் குடும்பத்திற்கு  நேரில் சென்று கொடுக்க பிரியப்பட , ரஞ்சனி ரகுவிடம் கேட்க ,

“அலுவலகத்தில் வேண்டாம் , இந்த ஞாயிறு வீட்டுக்குக் கூட்டி வா ரஞ்சனி….” 

ஞாயிறு மாலை,  அனைவரும் செல்ல , ரகு வீட்டினர் அன்புடன் வரவேற்றனர். 

“கண்டிப்பாக திருமணத்திற்கு குடும்பத்துடன் வரவேண்டும்….”  என்று ராமநாதன் பத்திரிகை வைக்க,

சுவாமிநாதன், கட்டாயம் வருவதாக ஒத்துக் கொண்டார் . 

காபி , பலகாரம் சுந்தரி எடுத்து வர  , அனைவரும் பேசியபடியே  உண்டனர் . 

“உங்கள் அலுவலகம் வந்தபிறகு தான் , ரஞ்சனி உண்மையான மகிழ்ச்சியுடன் இருக்கிறாள் . பழைய ரஞ்சனியைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்தோம் . அவளை மீட்டு , திருப்பிக் கொடுத்தற்கு நன்றி….” என்று குரல் உடையச் சொன்னார் ராமநாதன்.

“என்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு….,  நாங்கள் ஒன்றுமே செய்ய வில்லை . அவள் மன வலிமை தான் அவளை மீட்டது .இந்தப் பேச்சை , இத்தோடு விடுங்கள்…” என்றார் சுவாமிநாதன் .

“இல்லை  . அவளை வெளியே அனுப்புவதற்கு அவ்வளவு பயந்தோம் . அவளை யாரும் காயப்படுத்தி விடக் கூடாதே , அவள் நம்பிக்கையை மீண்டும் உடைத்து விடக்கூடாதே …” என்று தவித்திருந்தோம் . 

“ஆனால் கடவுள் எங்களுக்கு நல்ல வழியை காட்டிவிட்டார் . அவளுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்த, உங்கள் அனைவரையும் நேரில் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக தான் முக்கியமாக நாங்கள் வந்ததே , ரொம்ப நன்றி….” என்று மீண்டும் ராமநாதன் நெகிழ, மற்றவர்களும் அதை ஆமோதிக்க ,

சுந்தரி பேச்சை மாற்றும் விதமாக , திருமணத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்க , பேச்சு வேறு தளத்திற்கு விரிந்தது . அனைவருக்கும் அலைவரிசை ஒன்றாக இருக்க , வெகு நேரம் பல விஷயங்களைக்  பேசிக் கொண்டிருந்தனர் .

மீண்டும் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து விட்டுக் கிளம்பினர் . இரு குடும்பத்தினருக்கும் நல்ல மனிதர்களைச் சந்தித்த திருப்தி இருந்தது .

அத்தியாயம் 49

கல்யாண நாளும் வர, ரஞ்சனி  சிவப்பு நிற பட்டுச் சேலையில் . அதற்கெற்ப பொருத்தமான நகைகளை அணிந்து , மேடையில் நின்று கொண்டிருந்தாள் . 

 மண்டபத்தில் நுழைந்தவுடன், ரகு கண்ணில் மேடையில் இருந்த ரஞ்சனி பட , பார்வையைத்  திருப்ப முடியாது தவித்தான் .

ராமநாதனும் கோகிலாவும் வந்து அனைவரையும் வரவேற்று அமர வைத்தனர் .

 ரகு சுற்றி வேடிக்கைப் பார்க்க , பழைய கல்யாண ஞாபகம் வர , மெல்ல சிரித்துக் கொண்டான் . 

 இவர்களைக் கண்டவுடன் , ரஞ்சனி இறங்கி வந்தாள். அவர்கள் அருகில் அமர்ந்து சற்று நேரம் பேச , அப்போது ரகு, சென்னை திருமணத்தை ஞாபகப்படுத்த , 

“அது நீங்கள் தானா ?” என்று கண்கள் இரண்டும் விரிய , வியக்க ,

 ரகு மெல்ல புன்னகைத்தான்.

ஒரு நிமிடம்… அந்தப் புன்னகையைக் கண்ணெடுக்காது  பார்த்தாள் ரஞ்சனி .

இந்த மூன்று வருடத்தில் , “உனக்கு ஞாபகம் வந்துவிடாதா ? உன் கண்ணில் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து விட மாட்டோமா? என்று பலமுறை  ஏங்கியிருக்கிறேன்  . ஆனால் வெட்கம் , அவமானம் , இந்த அழகிய பெண்ணின் ஞாபகத்தில் நான் இல்லவே இல்லை…” என்று வசனம் பேசி , கண்களைத் துடைப்பது போல் நடிக்க , ரஞ்சனி கலகலத்தாள் .

“அன்று நீ நீல நிற லெஹங்கா அணிந்திருந்தாய் என்பது வரை எனக்கு ஞாபகம் இருக்கிறது….” என்று சிரிக்க ,

ரஞ்சனி வியப்பின் எல்லைக்கே சென்று விட்டாள் . “இன்ப அதிர்ச்சி போதும் ஸார் , இனி நான் தாங்க மாட்டேன்…” என்றபடி ஒரு தலையசைப்புடன் நகர்ந்தாள்.

இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சுந்தரியும் , சுவாமிநாதனும் ரகுவைக் கூர்ந்து  பார்க்க , ரகு தலையைக் கோதியபடி வேறு பக்கம் பார்க்க , இருவரும் சிரித்தனர் .

இதுவரை ரஞ்சனியும் ரகுவும் அலுவலக விசயங்களைத் தவிர வேறு எதுவும் பேசியதே இல்லை . ஆனால் இன்று திருமண விழாவில் சந்தித்ததால் , ரகுவை உற்சாகம் தொற்றிக் கொள்ள , பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் , அனைத்தையும் பேசிவிட்டான் .

அதே நேரம் ரஞ்சனியும்  ரகுவின் பேச்சை யோசித்தபடியே வளம் வந்தாள் . மனதில் ஒரு இனம் புரியாத பூரிப்பை உணர்ந்தாள் . அது அவள் முகத்தில் தெரிய , இன்னும் அழகாக மிளிர்ந்தாள் .

திருமண முடிந்து , ரகுவின் குடும்பத்தினர் கிளம்ப , “மீனாட்சி தாயைப் பார்த்து விட்டு கிளம்புங்கள்…” என்றார் கோகிலா .

“நிச்சயமாக , நாங்களும் போக வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறோம் .”

உடனே ராமநாதன் , “எனக்கு தெரிந்த நபர் டிரஸ்டியில் இருக்கிறார் . அவரை அழைத்து சொல்லிவிடுகிறேன் . உங்கள் தரிசனத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்துவிடுவார்….” என்று போன் நம்பரைக் கொடுத்தார் . 

அப்படியே ரகுவைப் பார்த்து , “தம்பி, நினைத்ததை நடத்தி கொடுப்பவள் , உங்களுக்கும் சீக்கிரம் கல்யாணம் வரட்டும்” என்று ராமநாதன் சொல்ல ,

“கட்டாயமாக….” என்று ரஞ்சனியை தீர்க்கமாகப் பார்க்க , ரஞ்சனி பார்வையின் அர்த்தம் புரியாது  குழம்பினாள் .

“அப்போது உங்கள் வாக்கு பலிக்கட்டும்…” என்றார் சுவாமிநாதன் .

மதுரை பயணம் ரகுவிற்கு சில விசயங்களைப் புரிய வைத்தது , தனக்கு ரஞ்சனி மீது ஒரு ஈர்ப்பு , விருப்பம் இருப்பதை தெளிவாகப் புரிந்து கொண்டான் . 

ரஞ்சனி இருவாரங்கள் விடுப்பு எடுத்திருக்க ,  ரஞ்சனியை மிகவும் தேடினான் . 

அவனுக்கே இந்த ஏக்கம் ஆச்சரியத்தை கொடுத்தது . அலுவலக விடயத்தை விடுத்து எதுவும் பேசிக் கொள்ளாவிட்டாலும் , அவள் இருப்பே அவனுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருப்பதை உணர்ந்து கொண்டான் . 

இந்த பிரிவு ரகுவிற்கு , அவன் விருப்பத்தை , அன்பை உறுதிபடுத்த , சந்தோஷமானான் . ரஞ்சனியை ஆவலுடன் எதிர்பார்த்தான் . 

இனி இதை அடுத்து  எப்படி எடுத்து செல்வது? என்று யோசிக்க தொடங்கினான் .

அத்தியாயம் 50

சந்தியா…….

சந்தியாவின் வாழ்வு எந்த மாற்றமும் இல்லாமல் ராஜியின் அதிகாரத்திற்குக் கீழ் அப்படியே போக , சந்தியா  நம்பிக்கையற்று , எந்த ஒரு ஆர்வமும் உற்சாகமும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள் .

சந்தியாவின் மனச்சோர்வு அனைத்து வேலைகளிலும் பிரதிபலிக்க , சாப்பிடுவதில் கூட ஆர்வம் குறைந்தது . மூன்று நேரமும் சாப்பிட்டேன் என்று  உணவு மேஜையில் உட்கார்ந்து எழுந்து கொண்டிருந்தாள் . 

இவள் நன்றாக சாப்பிடுகிறாளா ? சந்தோஷமாக இருக்கிறாளா? என்று  கவனிக்கும் எண்ணம் கூட அங்கிருக்கும் யாருக்கும் இல்லை . அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . 

 சுதா கவனித்து ராஜியிடம் சொல்ல , “அவள் என்ன சின்ன குழந்தையா ? பசித்தால் சாப்பிடுவாள்…” என்று முடித்து விட்டார் .

சந்தியாவின் மௌனத்தை விஸ்வாவும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை . அது தனக்கு வசதி என்றும் நினைத்தான் . வீடு பிரச்சனை இல்லாமல் இருக்கிறதே என்று  நிம்மதியாக இருந்தான் .

ஆகாஷ் ஒரு வயதை நெருங்க , பிறந்த நாளை பெரிதாக கொண்டாட  முடிவு செய்தனர் . 

எப்படியிருந்தாலும் தன் சொல்லோ , ஆசையோ சபை ஏறப் போவதில்லை என்பதை பட்ட வர்த்தனமாக புரிந்த பின் , கடமையாக அனைத்து திட்டமிடுதல்களிலும்  சந்தியா  கலந்து கொண்டாள் .

பிறந்தநாள் விழாவில் மூன்று பேரும் ஒரே மாதிரி உடை அணியலாம் என்று விஸ்வா ஆர்வமாக தெரிவிக்க , 

முகத்தில் எந்த மலர்ச்சியும் இல்லாமல், சரி என்று முடித்துக் கொண்டாள் . 

பிறந்த நாள் ஸாப்பிங்கிற்கு அழைக்கும் போது , பல நேரங்களில், “எனக்குச் சோர்வாக இருக்கிறது . நீங்களே பார்த்து முடிவெடுங்கள்” என்று ஒதுங்கிக் கொண்டாள் .  

இப்போது தான் சந்தியாவின் விலகல் , விஸ்வாவிற்கு லேசாக நெருட ஆரம்பித்தது . ஆனால் விழா ஏற்பாடுகளில் அதிக கவனம் இருக்க , இதைப் பின்னர் பார்ப்போம் என்று ஒதுக்கி வைத்தான் .

பிறந்தநாள் விழா பெரிய ஹோட்டலில் ஏற்பாடாகியிருக்க , சந்தியாவின் பெற்றோர்கள் மற்றும் அவளின் அத்தை சித்தப்பா குடும்பங்களும் அழைக்கப்பட்டிருந்தனர் . அதே போல் விஸ்ஸாவின் அத்தை குடும்பங்களும் விழாவிற்கு வந்திருந்தனர் . 

சந்தியா முகத்தில் ஒரு பிளாஸ்டிக் புன்னகையை ஒட்டிக்கொண்டு , அனைவரையும் வரவேற்று , சுற்றிக் கொண்டிருந்தாள் .

ஆகாஷ் துறுதுறுவென அங்கேயும் இங்கேயும் ஒடிக்கொண்டிருந்தான் . எல்லோரையும் சிரித்தே மயக்கினான்  . உற்றார் உறவினர் , நண்பர்கள் சூழ விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது . 

இத்தனை சொந்த பந்தங்கள் சுற்றியிருந்த போதும், தனக்காக யாருமில்லை என்றே தோன்றியது . தன் எண்ணத்தை , குரலை  கேட்க யாருமில்லை என்ற எண்ணம் , விரக்தியை உருவாக்கியது . 

சுற்றம் , நட்பெல்லாம் பொய்யாகத் தோன்ற,  விழாவையே ஒரு நாடகம் போல் எதிலும் ஒட்டாமல் சந்தியா பார்த்துக்கொண்டு இருந்தாள் .

ஈடுபாடு இல்லாததால் , கவனம் இல்லாது இருந்தாள் .

 விஸ்வா அடிக்கடி அவளை லேசாக இடித்தோ இல்லை மெதுவாகக் கூப்பிட்டோ கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான் .  

இதைக் கவனித்த ராஜி , குறை பாடத் தொடங்க ,

உடனே விந்தியா  , சந்தியாவின் அருகில் போய் நின்று உதவத் தொடங்க , நிலைமை சீரானது .

விழா முடிந்து அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பியிருக்க , சந்தியா குடும்பத்தினர் மற்றும் விஸ்வா குடும்பத்தினர் மட்டுமே மிஞ்சியிருந்தனர் . 

குழந்தையை அம்பிகா வைத்திருக்க , சந்தியாவும் விந்தியாவும்  பரிசுப் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென்று சந்தியா மயங்கி கீழே விழுந்தாள்.  அனைவரும் பதறினர் .

சங்கரன் வேகமாக தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்தார். 

சந்தியா மயக்கம் தெளியாமல் இருக்க , விஸ்வா தட்டி எழுப்ப முயன்றான் . அதற்கும் சந்தியா முழிக்காமல் இருந்தாள்.

அத்தியாயம் 51

சங்கரன் விஸ்வாவை மருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படி சொல்ல , விஸ்வா தூக்கிக் கொண்டு ஓடினான் . 

விந்தியா அவர்களுடன்  ஏறி , சந்தியாவை மடியில் வைத்துக் கொண்டாள் . மற்றவர்கள் பின் தொடர்ந்தனர் .

விந்தியா எழுப்ப முயற்சி செய்து கொண்டே வர ,கொஞ்ச நேரத்தில் சந்தியா லேசாகக் கண் திறக்க , அதே நேரம் மருத்துவமனை வரவும் சரியாக இருந்தது. அங்கு முதல் உதவிகள் கொடுக்கப்பட , சந்தியா நன்றாக  முழித்தாள் . 

 “இன்று இரவு இங்கே கண்காணிப்பிலே  இருக்கட்டும் , நாளை சில பரிசோதனைகள் செய்து விட்டு முடிவு செய்வோம்…” என்றார் மருத்துவர்.

விஸ்வா மட்டும் துணைக்கு இருக்க , அனைவரும் கிளம்பினர் .

மறுநாள் பரிசோதனைகளை தொடங்கினர் , மாலை முடிவு வர , ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக உள்ளது . அதனால் தான் இந்த மயக்கம் , ரத்தசோகை என்று உறுதிப்படுத்தினர் .  

பின் இரத்தம் ஏற்றப்பட்டது . மருத்துவமனை வாசம்  நான்கு நாட்களுக்கு நீடித்தது .

ரத்தசோகைக்கான  காரணத்தை  விஸ்வா விசாரிக்க , “சரியாக உணவு எடுத்துக் கொள்ளாதது மற்றும் ரத்தபோக்கு  ஏற்பட்டிருக்கலாம்”  என்றனர் மருத்துவர்கள் . 

வீட்டில் ஆளாளுக்கு புலம்பிக் கொண்டும் , வருத்தப்பட்டு கொண்டும் இருந்தார்கள் .  சொந்த பந்தங்களிடம் விழா வேலையினால் ஒழுங்காகச் சாப்பிடவில்லை. அதான் மயங்கிவிட்டாள் என்று சமாளித்தனர் .

 “மனைவி சாப்பிடுகிறாளா?என்று கூட பார்க்க மாட்டாயா….?  என்ன குடும்பம் நடத்துகிறாய்….?” என்று சங்கரன் கோபப்பட ,

விஸ்வா சங்கடமாக  நிற்க , உள்ளே புகுந்த ராஜி , “அவள் என்ன சின்ன குழந்தையா? என் மகனே ஆயிரம் வேலையோடு ஓடுகிறான்…” என்று சலிக்க ,

“ஆயிரம் வேலையோடு ஆயிரத்து ஒன்றாக இதையும் செய்யட்டும்” என்றார் கடுப்புடன் . 

“மேலும், இதை நீ அவனுக்கு கவனித்து சொல்லியிருக்க வேண்டும்” என்று சாடினார் .

ராஜி மறுத்து பேச வர , “ஒரு நிமிடம்….” என்று நிறுத்தியவர் , “உன்னிடம் மூன்று வேளையும் சாப்பிட்டாயா என்று கேட்பேனா? ”

“கேட்பீர்கள்….” என்று  ராஜி தயக்கத்துடன் இழுக்க ,

“உஷ்….  , இனி இதற்கு மேல் பேசாதே…” என்று விரல்களை வாயில் வைத்தார் . , “நமக்காக ஒவ்வொரு விசயத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் மனைவியிடம் சாப்பிட்டாயா? என்று உன்னால் ஒரு வார்த்தை கேட்க முடியாதா விஸ்வா?”

“இல்லை அப்பா . அவள் சாப்பிட்டு விடுவாள் என்று நினைத்தேன். ஸாரி அப்பா …”

“உன் ஸாரியை எதிர்பார்த்து , இதைச் சொல்லவில்லை விஸ்வா . எத்தனையோ முறை கோடிட்டு காட்டினேன். நீயே புரிந்து , உன் வாழ்க்கையைச் சரி செய்து விடுவாய் என்று நினைத்தேன் , ஆனால் நீ….” என்று ஒரு வருத்தத்துடன்  நிறுத்த ,

விஸ்வா மௌனமாக தலை குனிந்து நின்றான்.

“என் அனுபவத்தில் சொல்கிறேன், ஏதோ சரியில்லை . எங்கோ பெரிய தப்பு நடக்கிறது விஸ்வா.  சந்தியாவிடம் மனம் விட்டு பேசு . அவளுக்கு நேரம் ஒதுக்கு . காரணத்தைக் கண்டு பிடி , அதைச் சரி செய் . அவளை நன்றாக வைத்துக் கொள். இதைத்தான் உன்னிடம் எதிர் பார்க்கிறேன்…” என்று விட்டு நகர்ந்தார் . 

விஸ்வா மிகவும் வருத்தப்பட , அதை தாங்காது ராஜி , “அப்பா ரொம்ப யோசிக்கிறார் விஸ்வா . கைப்பிள்ளையை வைத்திருப்பவளுக்குச் சாப்பிட எங்கே நேரம் கிடைக்கும் . தாய் தட்டில் கை வைக்கும் பொழுது தான் குழந்தை அழும் இல்லையென்றால் ஒன்னுக்கு இரண்டுக்கு போகும் . அதைப் பார்த்து விட்டு வந்தால் , சாப்பிடும் ஆசையே போய்விடும் . அதான் சந்தியா சரியாகச் சாப்பிடவில்லை . மேலும் நம் ஆகாஷ் வேறு துறுதுறுவென  இருப்பான் அவனைச் சமாளிப்பதிலே இவள் சாப்பிட்ட ஆகாரமெல்லாம் செமித்துவிடும் . நீ கவலையை விடு .இனி நான் அவள் மீது ஒரு கண் வைத்துக் கொள்கிறேன்” என்று சொல்ல , 

ஏற்கனவே சந்தியா புலம்பிய புலம்பல் ஞாபகத்திற்கு வர , “அவசரமாக வேண்டாம்…” என்று மறுத்தான் .

 “அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் .  நீங்கள் கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா .”

“சரி விஸ்வா  , அப்படியே செய்வோம் . நீ கவலைப்படாதே , எல்லாம் சரியாகிவிடும்” என்று நகர்ந்தார் .

‘இனி பொறுப்பைச் சரியாக கையாள வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்.

ஆகாஷை சமாளிப்பது தான் பெரும்பாடாக இருந்தது . இத்தனை பேர் இருந்தும் சந்தியாவை மிகவும் தேடினான் .

சந்தியா பெரிதாக யாரிடமும் எதுவும் பேசவில்லை , அமைதியையே கடைபிடித்தாள் . அம்பிகாவும் விந்தியாவும் காலையும் இரவும் மாற்றி மாற்றி மருத்துவமனையில் இருந்து கொண்டார்கள் . 

விஸ்வா தினமும் மாலை வந்தான் .  ஆகாஷைப் பற்றி கேட்க , 

“வீட்டில் பார்த்துக் கொள்கிறார்கள் . உன்னை இப்படிப் பார்த்தால் பயந்து விடுவான் . அதனால் தான் அழைத்து வரவில்லை சந்தியா.  மேலும் இப்போதே நீயில்லாமல் அவனைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது . உன்னைப் பார்த்து விட்டு வரமாட்டேன் என்று அடம் செய்தால் மிகவும் கஷ்டம் . அதான். இரண்டு நாள் தானே சமாளித்துக் கொள்.”

“சரி” என்பது போல் தலையாட்டிவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள் . அவனும் சோர்வாக உணருகிறாள் என்று அமைதியாக இருந்தான் .

மறுநாளும் ஆகாஷின் நலம் விசாரித்தவள் , பின் வேறு எதுவும் பேசாமல் கண்ணை மூட , விஸ்வாவே இழுத்து பிடித்துப் பேச , கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள் .

மறுநாள் சந்தியா தெளிவாக இருப்பது போல் தெரிய , “ஏன் சாப்பிடவில்லை ? என்ன பிரச்சனை? “என்று கேட்க ,

சந்தியா பதில் ஏதும் சொல்லாமல் கண்களை மூட , கண்ணீர் வழிந்தது .

விஸ்வா பயந்து போனான் . என்னவென்று புரியாமல் தடுமாறினான் . விஸ்வா பேச முயல , மருத்துவர்கள் வர , பேச்சு நின்று போனது .

விஸ்வா மனதிலும் அலாரம் அடித்தது . அப்பா சொல்வது போல் ஏதோ இருக்கிறது . பக்குவமாக கையாள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் .

மறுநாள் டிஸ்சார்ஜ் வேலைகள் இருக்க , விஸ்வாவால் சந்தியாவுடன் தனித்துப்  பேச முடியவில்லை . வீட்டில் தனிமையில் பேசலாம் என்று நினைத்தான் .

வீட்டுக்கு வந்தவுடன் அம்பிகா , “சந்தியாவை ஊருக்கு அனுப்புங்கள் , கொஞ்சம் தேற்றி அனுப்புகிறோம்” என்று கேட்க , 

ராஜியும் , “சரி” என்று சொல்ல , மறுநாள் காலை ஊருக்குப் புறப்படத் திட்டமிட்டனர் .

“இரவு பேசலாம்…” என்று அறைக்குள் நுழைய , மாத்திரை மருந்துகளால், சந்தியா  முன்னமே குழந்தையைக் கட்டி அணைத்தபடி உறங்கியிருந்தாள் .

நீண்ட பெருமூச்சை விட்டவன் , தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அருகில் படுத்தான் . 

மறுநாள் தனியாக பேச நேரம் கிடைக்காமல் போக , சந்தியா தூத்துக்குடிப் புறப்பட்டாள் .

தொடரும்……