த்தியாயம்7

உனக்காக காத்திருப்பதே காதல்….

“அம்மா…. எனக்கு ரெண்டு தோசை போதும்…”

என்ற குணாவின் குரலில் கிச்சனில் இருந்து அமிர்தம் அதிர்ந்து போய் அவள் அருகே வந்து அவள் நெற்றியை தொட்டு பார்த்து

“என்னடி குணா உடம்பு ஏதாவது முடியலயா? ஜுரம் அடிக்குதா என்ன? உடம்பு ஒன்னும் சுடலையே…“

என்று அமிர்தம் கவலையாக பேசவும் குணா நெற்றியில் இருந்த கையை எடுத்து விட்டபடி

“ஜுரம்லாம் இல்ல ம்மா. நாளைக்கு அக்கா கம்பெனிக்கு போறோம்ல, அங்க நிறைய சாப்பாடு வித விதமா இருக்குமாம். அதுக்காக தான் இப்போவே கம்மியா சாப்பிட்டு வயிற ஃப்ரீ ஆக்குகிறேன் “

என்று சொன்னவள் தலையில் அமிர்தம் கொட்டி வைக்க, அப்போது முகத்தில் மஞ்சள் நிறத்தில் எதையோ பூசிக்கொண்டு வந்த சுபா

“மகா…. இதை முகத்துல போட்டுக்கோ ….” என்று நீட்ட

அமிர்தம் “ ஏ… சுபா முதல்ல அவ சாப்பிட்டு முடிக்கட்டும் அப்பறம் என்னத்தை யாவது  பூசு “ என்ற போதே

அங்கு கையில் துணிகளுடன் வந்த ஜெயா

“மகா… நாளைக்கு நம்ம எல்லாரும் ஒரே கலர்ல ட்ரெஸ் போடுவோம். இங்க பாரு இந்த சுடிதார் ஓகேவா? இல்ல சாரி கட்ட போறியா…”

என்று கையில் அத்தனை உடைகளுடன் நின்றவளை பார்த்து முறைத்த அமிர்தம் மகா பக்கம் திரும்பி

“மகா இப்போவே யோசிச்சிக்கோ இந்த வாழுங்கல அங்க கூட்டிட்டு போக போறியான்னு…”

என்று அமிர்தம் சொன்னதை கேட்டு மூவரும் ஒன்று போல “ அம்மா….” என்று கத்தி இருந்தார்கள்.

“என்னங்கடி  இப்போ…. நாளைக்கு போக போறதுக்கு இப்படி வீட்டையே இரண்டாக்கினா கடுப்பாகுமா ஆகாத… எனக்கு.” என்று கோபத்தில் வீட்டை சுத்தி காட்டினார்.

சமையல் அறையில் கின்னங்களில் கலர் கலராக கலவை ஒவ்வொன்றாக வரிசையாக இருக்க, அது கீழே பாதி மேலே பாதி என்று சிதறிய நிலையில் இருக்க.

உள்ளே அறையோ கட்டில் முழுவதும் துணியால் நிறைத்து இருந்தது.

அதை பார்த்து தான் அமிர்தம் இப்படி சொல்லியிருந்தார். அமிர்தம் காட்டிய இடத்தை பார்த்து விட்டு ஜெயா மற்றும் சுபா சுத்தம் செய்ய நல்ல பிள்ளையாக கிளம்பி விடவும் குணா

“ அம்மா…. இன்னும் ஒரே ஒரு தோசை ம்மா …” என்று சுரண்டவும் , கோபத்தில் அமிர்தம்

“ தோசையும் கிடையாது ஒன்னும் கிடையாது போ….” என்று சென்று விட்டார்.

இப்படி மகாவின் வீடே கோலகலமாக அடுத்த நாள் கம்பெனி அனிவர்சரி என்ற சந்தோஷத்தில் இருக்க ஒருத்தி மட்டும் நடப்பதை எதையும் உணராமல் அன்று பஸ்ஸில் நடந்ததையே திருப்பி திருப்பி தலைக்குள் படம் போல ஓட்டிக்கொண்டிருந்தாள்.

“நீ அனிவர்சரிக்கு கண்டிப்பா வரணும் மகா…ஓகே…” என்று கட்டளையாக சொன்னவனை முறைத்த மகா

 “நான் ஏன் நீங்க சொல்றத கேக்கணும்? என்னாலலாம் வர முடியாது “ என்று உதட்டை சுளுத்தவல் மீது கோபத்துக்கு பதிலாக கிறக்கம் தான் வந்தது.

இன்பாவின் முகத்தில் இருந்த கடுமை புன்னகைக்கு மாறுவதை உணர்ந்த மகா

“ஹாலோ சார்….” என்று அவனை நினைவுக்கு கொண்டு வரவும் இன்பா

“இதோ பாரு மகா இது உன்னோட ஃபர்ஸ்ட் டைம் அனிவர்சரி ஃபங்ஷன் அட்டென்ட் பண்றது.

அங்க நம்ம கம்பெனி ஹெட் மத்த டீம் மெம்பர்ஸ்னு நிறைய பேரை மீட் பண்ணலாம். அண்ட் ஃபங்ஷன் கூட ஃபேமிலி மெம்பர்ஸ்கு ஏத்த மாதிரி டீசன்டா தான் இருக்கும் “

“எப்படி இருந்து என்ன ரெண்டு பேரை தான் கூட்டிட்டு வரனும் சொல்லிடாங்களே…” என்று மகா வாடி போன முகத்துடன் முனங்கவும் இன்பா

“அட மகா…. அதை பத்தி தான் உன் கூட பேச வந்தேன். அதுக்குள்ள நீ தான் வேகமா பஸ்ல ஏறிட்ட”

“அத பத்தி என்ன பேச இருக்கு சார்..” என்று

 இன்பாவின் முகத்தை இவள் நிமிர்ந்து பார்க்கவும் அவன் அவள் கண்ணை உற்று பார்த்து அதில் துளைய இருந்த மனதை தலையை திருப்பி, தலை கோதி கட்டு படுத்தியவன்.

“அது…. எப்பவும்…. நான் என் அத்தைய தான் கூட்டிட்டு வருவேன். இந்த வாட்டியும் அத்தை மட்டும் தான் வருவாங்க அதான் ஒரு பாஸ்ஸ நீ எடுத்துக்கோன்னு சொல்ல வந்தேன்”

என்று மகாவின் கால் விரல்களை பார்த்து பேசியவனை முதலில்

“தரையில என்ன தேடுறான்..” என்பது போல தான் பார்த்திருந்தாள் அதன் பின் அவன் சொன்ன செய்தியை கேட்டு

“என்ன சார் சொன்னீங்க உண்மையாவா ஒரு பாஸ் தர்றீங்களா..” என்று அதிர்ந்து போய் அவனை பார்க்க

“உண்மையா தான் அப்படியே… என் அத்தை வருவாங்க உங்க நாலு பேர்க்கும் துணையா இருப்பாங்க .

உங்க வீட்டுல பெர்மிஷன் கேக்கும் போது எங்க அத்தை வருவாங்கன்னு சேர்த்து சொல்லு” என்று ஐடியா வேறு அவன் தரவும்

“இதை சொல்லவா ரன்னிங்ல ஏறுனீங்க..”

 என்று அவன் முகத்தை பார்த்து கேட்டவளை நிமிர்ந்து பார்த்த இன்பாவுக்கு அவனையே அவனால் அடக்க முடியாமல் போனது.

எப்போதும் அவன் முகத்தை கூட பார்த்து பேசாமல் தள்ளி நிற்பவள் இன்று அத்தனை அருகில் என்றதும் தடுமாறிய இன்பா.

அவள் கண்களை காதலுடன் பார்த்தவன் மெல்ல கைகளை உயர்த்தி அவள் கன்னம் அருகே எடுத்து வந்தான்.

இன்பா கண்களில் இருந்த காதலில் கட்டுண்டு போன மகா அவன் செய்ய போவது மூளைக்கு புரிந்தாலும் அது தவறு அவனை தடு என்று மூளை கட்டளை போட்டாலும்.

 இதயம் என்னமோ கொஞ்ச நேரம் அசையாது இருந்து விடேன் என்று அவளுக்காக அவளிடமே கெஞ்சவும் அவள் அசையாது இதயத்தின் பேச்சை கேட்க தொடங்கினாள்.

பல இடங்களில் மூளை சொல்வதை மட்டும் கேட்டு நடந்தாள் இங்கு பல பிரச்சனைகள் வரவே செய்யாது. ஆனால் அப்படி நடக்க நாம் என்ன இயந்திரமா என்ன? சாதாரண மனிதர்கள் தானே தவறு செய்வது தான இயல்பு.

அது போல மகாவும் இதயத்தின் ஓசை கேட்டு அதற்கு இணங்க அசையாது இன்பாவை பார்த்தபடி அவள் இருக்க திடீரென்று கேட்ட விசில் சத்தத்தில் தான் இருவரும் இருக்கும் இடம் உணர்ந்தனர்.

இனிமையான கனவு கலைந்து இன்பா அவன் தூக்கிய கையை இறக்காமல் மகாவை பார்க்க.

சற்று நேரம் முன் வரை மயக்கத்துடன் பார்த்த அதே கண்கள் இப்போது அவனை தவறு செய்த குழந்தையாக வெளிறிய முகத்துடன் பார்த்தது.

அந்த பார்வையில் மனதை இறுக்கிய இன்பா மகாவை பார்த்து “ஒன்னும் இல்லை” என்பது போல தலையசைத்து விட்டு எழுந்து நின்றவன்.

“இதுக்கு மேல அவ பக்கத்துல உக்காந்த எதவது பண்ணி வச்சிருவன்” என்று முனங்கியவன்

“உன்ன நாளைக்கு பார்க்கிறேன் தங்கமே…” என்று இறங்கி சென்று விட்டான்.

அவனின் தங்கமே என்ற அழைப்பில் இதயத்தில் பூத்த மலரை பறித்து எறிய இயலாமல் கண்களை மூடி அமர்ந்து விட்டாள்.

“என்ன செய்ய பார்த்தான். அவனை பஸ் ன்னு பாக்காம ஒரு பையன இப்படி பாத்துருக்கேன்.

யாராவது தெரிஞ்சவங்க பார்த்திருந்தா என்ன ஆகியிருக்கும் அப்படி என்ன மயக்கம் எனக்கு.”

என்று அவளையே திட்டி தீர்த்த படி தான் வீடு சென்றாள்.

இப்போதும் பஸ்ஸில் நடந்தவற்றை யோசித்தவளில் உதட்டில் புன்னகை உறைந்து இருக்க அப்போது அவள் அருகே அமிர்தம் வந்து அமர்ந்தவர்.

“மகா….” என்று அழைக்கவும் திடுக்கிட்டு மகா பார்க்க

“என்ன மகா… ஒரு மாதிரி இருக்க என்ன ஆச்சு” என்று கேட்டு அவள் முகம் பார்க்கவும்

“ஒன்னும் இல்லம்மா வேலை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்” என்று அவள் மனதை மறைத்து எப்போதும் போல பேசியவள்

“நீங்க சொல்லுங்க ம்மா ” என்று அமிர்தம் முகம் பார்க்க, அவர்

“அதுவா மகா…, நாளைக்கு என்ன தான் சித்திரா கூட வந்தாலும் நீ தான் உன் தங்கச்சிங்கள பாத்துக்கனும்.

எல்லார் முன்னாடியும் பொறுப்பா இருந்துட்டு வரனும். தெரியாதவங்க கூட நீ பேசாத மகா, சித்திர சித்தி கூடவே இரு.

நீ என்ன செய்றியோ அதை தான் அந்த மூணு வாலும் செய்யும் மகா. அதுனால பாத்து… சரியா ” என்று பேசிவிட்டு சென்றவரை முகம் சிவக்க பார்த்தவள்.

வேகமாக எழுந்து வெளியே ஓடி சென்று செடிகளுக்கு அருகே நின்றவளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய தேம்பிய படி கண்கள் மூடி நின்று விட்டாள்.

“என்ன மகா பண்ணிட்டு இருக்க இது தப்பு. நீ ஏன் அவன பத்தியே யோசிச்சிட்டு இருக்க அப்படி யோசிக்காத.

நல்லா தான இருந்த என்ன அவன் பாஸ் கொடுத்ததும் தடுமாறுறியா மகா.

அப்படி இல்லயே…. அதுக்கு முன்னாடியே எனக்கு பிடிக்குமே இன்பாவ….. ” என்று அழுதவளை தேற்ற தான் ஆள் இல்லை.

சிறு வயதில் இருந்தே மகா எப்படி என்ன செய்கிறாளோ அதையே செய்து தான் மூன்று பெண்களும் வளர்ந்தனர்.

மகா எதற்காகவாது அடம் பிடித்தாள் மூவரும் அதற்கு அடம் பிடித்தனர். மகா ஒன்றை வேண்டாம் என்றாள் அது அவர்களுக்கும் வேண்டாம். இப்படி இவர்கள் வளர்வதை பார்த்த அமிர்தம் மகாவிடம் சென்று

“இதோ பாரு மகா… தங்கச்சிங்க நீ எதை பண்றியோ அதை தான் செய்றாங்க.

நீ பண்றது தப்போ கரைட்டோ அதையே அவுங்களும் பண்றாங்க. அப்போ நீ தான அவுங்களுக்கு சரியானத சொல்லி தரனும் மகா…

எல்லார விட பெரிய பொண்ணுல ம்மா நீ…நீ தான் தங்கச்சிங்கள பத்திரமா பாத்துக்கனும் “

என்று சொல்லி சொல்லியே வளர்க்க அதன் விளைவே மகா இத்தனை இருக்கமாக அவள் வயதுக்கு ஏற்றபடி இல்லாமல் பெரிய பெண் போல நடந்து கொள்வது.

பலமுறை ஆசையாக இருக்கும் தப்பு செய்து அம்மா விடம் திட்டு வாங்க வேண்டும்.

குழந்தை போல குறும்பு செய்ய வேண்டும் என்று ஆனால் இது வரை அப்படி எதுவும் செய்தது இல்லை இனியும் செய்ய கூடாது என்று கண்களை துடைத்தவள்.

“மகா இன்பா நல்ல பையன் தான். ஆனா நீ இப்போ காதல்னு போனினா தப்பான உதாரணமா ஆகிடுவ மகா. தங்கச்சிங்களும் இது சரின்னு தப்பா யாரையாவது தேர்ந்தெடுத்துட்டா… இல்ல இது வேணாம் மகா…

இன்பா உனக்கு வேணாம்…” என்று ஒரு முடிவு எடுத்தவளாக கண்களை துடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.

இங்கு இன்பா அவன் அப்பார்ட்மெண்டில் இரவின் இருளின் குளிமையில் அவன் அவளை நினைத்து அந்த தனிமையை ரசித்தபடி நின்று கொண்டிருந்தான்.

அங்கு ஒருத்தி இவனை விட்டு தள்ளி போவதை பற்றி யோசிப்பதை உணராமல் அவள் விட்டு சென்ற நினைவுகளில் மூழ்கி கொண்டிருந்தவனை கதவு தட்டும் சத்தம் வந்து கலைத்தது.

நேரத்தை திரும்பி பார்த்தான் மணி பத்தரை என்று காட்டவும் யாருடா….என்பது போல கதவை திறக்க அங்கே மகேஷ் வாசலில் இருபக்கமும் கையை ஊன்றி தலையை கீழே தொங்க போட்ட படி இருந்தவனை பார்த்த இன்பா

“டேய்… மாமா… இங்க என்னடா பண்ற “ என்று இன்பா கேட்டதை கண்டு கொள்ளாத மகேஷ் அவனை இடித்து கொண்டு உள்ளே வந்தவன்.

தலை குனிந்த படியே காலில் இருந்த ஷூவை கழற்றி காற்றில் ஏதோ கதவை திறந்து ஷூவை காற்றிலேயே இல்லாத அலமாரியில் வைக்க அது தோப் என்று கீழே விழுந்தது.

கீழே விழுந்ததை கண்டு கொள்ளாதவன் காற்றிலேயே இல்லாத கதவை பூட்டி விட்டு இவன் கையில் இருந்த பைக் சாவியை காற்றில் இல்லாத ஆங்கரில் மாட்டுகிறேன் என்று அதையும் கீழே போட்டு விட்டு

“அம்மா….. நான் சாப்டேன்….. வெளியவே…..எனக்கு வேணாம்…. குட் நைட் ம்மா…..”

என்று தலையை குனிந்த படியே பேசி முடித்தவன் காற்றிலேயே கதவை திறந்து இல்லாத கதவை மூடி தாள்ளிட்டு நெஞ்சில் கை வைத்து

“அப்பாடா….” என்று பெருமூச்சி விட்டவன் மெல்ல நடந்து சென்று அவன் கட்டிலில் விழுவதாக நினைத்து சோபாவில் எடாகூடமாக விழுந்து விட மகேஷின் கால் மேலே இருக்க தலையோ கீழே இருந்தது.

“என்ன சரக்கு இது…. ஏதோ கால் அந்தரத்தில்ல இருக்க மாதிரியே ஃபீல் ஆகுதே….” என்று உளறியவனை தலையில் அடித்து கொண்டு பார்த்த இன்பா

“ டேய் மாமா என்னடா… இது ….” என்று அவனை நேராக எழுப்பி அமர வைத்து உலுக்க மகேஷோ

“அம்மா….. லைட்டா…..தாகமா……இருக்கு கொஞ்சம் குடிக்க இட்லி எடுத்துட்டு வாம்மா….”

“டேய் எருமை நான் இன்பா டா….” என்று அவனை உலுக்க, அவனோ அதே டோனில்

“அம்மா…. லைட்டா…… பசிக்குது…. சாப்பிட…. ரசம் எடுத்துட்டு வாம்மா…” என்று உளறியவனை பார்த்து

“உனக்கு ரசம் இல்லை விஷத்தை தான் ஊத்தனும் இதோ வரேன் “

என்று கிச்சனுக்கு சென்றவன் பிரிட்ஜில் இருந்த லெமனை எடுத்து பிழிந்து ஜூஸ் போட்டு எடுத்து வந்து மகேஷ் வாயில் ஊற்ற, அதை குடித்து பார்த்த மகேஷ்

“அம்மா…. ரசத்துல…. புளி… அதிகமா இருக்கு ம்மா… புளிய …..கம்மி பண்ணு இல்ல பீ.பி வந்துடும் “ என்று இன்பா மீது சாய்து கொள்ளவும்

“ஆமாடா… இப்படி டெய்லியும் குடி ன்னா பீ.பி யை தவிர எல்லாம்…. வரும் “ என்று அவன் முகத்தை நிமிர்த்தி மூக்கை பிடித்த படி ஜூசை வாயில் ஊற்ற

“ஆய்யோ….. என்ன காப்பாத்துங்க…. எங்க அம்மா எனக்கு விஷம் தர்றாங்க….” என்று கத்தியவன்

“அந்த விஷம் வேற…. நல்லா டேஸ்டா இருக்கு… ம்மா உன் கையால குடிச்சா விஷம்…. கூட ஜூஸ்…. மாதிரி இருக்கு ம்மா…..”

என்ற உளறல் எல்லாத்தையும் கேட்டு ஜூசை அவனை குடிக்க வைக்க. அரை மணி நேரம் கழித்து மகேஷ் சற்று தெளிவாக

“மாமா…. என் வீட்டுல நீ என்ன பண்ற…” என்று குழம்பி போய் இருந்தவன் மண்டையில் கொட்டியவன்

“டேய் மங்கூஸ் மண்டை…. நல்லா பாருடா இது என் வீடு “

“என்னது உன் வீடா…” என்று கண்களை கசக்கி விட்டு பார்த்தவன்

 “ஆமா… உன் வீடு…. சாரி மாமா லெஃப்ட்க்கு பதிலா ரைட் திரும்பிட்டேன் டா…”

என்று இளித்தவனை பார்த்து பல்லை கடித்தவன்

“இப்படியே பண்ணிட்டு இரு ஒரு நாள் லெப்ட் ரைட்னு இல்லாம ஸ்ட்ரைட்டா போயிட போற ….”

“ அதெல்லாம் போக மாட்டேன் மாமா…” என்று “ஈ….” என்று இழித்து வைத்தவனை என்ன தான் செய்ய என்று இன்பா அமைதியாகி விட

“ மாமா உன் கையால ஒரு காப்பி “ என்று மகேஷ் கேட்கவும்

 “ குடிச்சா ரசம், தெளிஞ்சா காப்பியா உன்ன…. இதோ வரேன் “ என்று எழுந்து சென்றவன்.

இரண்டு கப்பில் காப்பியோடு வந்து அமர்ந்தான். காப்பியை வாங்கி ரசித்து குடித்த படியே மகேஷ் இன்பாவை பார்க்க அவன் முகம் பளிச்சென்று பரவசமாக இருப்பதை பார்த்து விட்டு

“என்ன மாமா ஃபேஸ் பல்ப் போட்ட மாதிரி இருக்கு “

“அது வந்து மாமா… மகா பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் டா…. இப்போலாம் அவ என்ன பார்க்குறதே வேற மாதிரி இருக்கு டா..” என்று இன்பா வெட்க பட, மகேஷ்

“வேற மாதிரினா எப்படி லூசாடா நீ…ன்ற மாதிரி யா பாக்குறா “

“டேய் மாமா….” என்று இன்பா முறைக்கவும்

 “சும்மா ஃபன் டா மாமா…” என்று சிரித்தவனை விட்டு விட்டு இன்பா அவள் நினைவில் சிரித்த படியே இருக்க அதை பார்த்த மகேஷ்

“அந்த லிட்டில் கேர்ள் கிட்ட என்ன இருக்கு மாமா? ஏன் உனக்கு அவளை அவ்ளோ பிடிக்குது “ என்று புரியாமல் பார்த்தவனை கண்ணில் காதல் மின்ன பார்த்தான் இன்பா.