“எப்படி குளிப்பீங்க ஆச்சி?” எனக் கேட்டுக் கொண்டே அவளிடம் வந்து நின்றான் பார்த்தி.
“எப்படின்னா?”
“என்ன ட்ரெஸ் போட்டுட்டு குளிப்பீங்க?”
“ஹையோ ஆமாம்ல… ஷார்ட்ஸ் கூட எடுத்திட்டு வரலை பார்த்தி, உங்க ஷார்ட்ஸ் ஏதும் போட்டுக்கலாமா?” எனக் கேட்டு அவனை நெளிய வைத்தாள்.
“ஏதாவது சொல்லுங்க பார்த்தி!”
“குறுக்கு மாராப்பு கட்டிக்கிட்டு குளிங்க”
“என்ன பூ?”
“ஷ்ஷ்ஷ்… பழைய படத்துல பார்த்திருப்பீங்களே…”
“எந்த படம்?”
“சரிதான்! ஹ்ம்ம்…” என்றவன் தனது லுங்கியை எடுத்து குறுக்கு மாராப்பு எப்படி கட்டிக் கொள்வது என சொல்லிக் கொடுத்தான்.
கவனமாக பார்த்துக் கொண்டவள், “இதுல எப்படி ஃப்ரீயா குளிக்க முடியும்?” என சந்தேகமாக கேட்டாள்.
“ஆச்சி… என்னை ஆள விடுங்க ஆச்சி, எப்படியோ குளிங்க” என சொல்லி ஓடப் போனவனை பிடித்து வைத்துக்கொண்டவள், “ஓகே ஓகே, இந்த பூ… என்ன சொன்னீங்க… என்னவோ… இதையே கட்டிக்கிறேன்” என சொல்லி கை நீட்டினாள்.
“என்ன?”
“அந்த லுங்கி தாங்க”
“ஆண்டவா!” என முணு முணுத்தவன், “உங்க இன் ஸ்கர்ட் ஏதும் எடுத்துக்கோங்க ஆச்சி, கைலி சும்மா உங்களுக்கு டெமோ காட்ட எடுத்தேன்” என்றான்.
“நாளைக்கு சேரி கட்டும் போது வேணும்னு ஒரே ஒரு இன் ஸ்கர்ட்தான் எடுத்திட்டு வந்தேன் பார்த்தி, இதையே கொடுங்க” என அவள் சொல்ல, தயக்கமும் சங்கடமுமாக தன்னுடைய கைலியை அவளிடம் கொடுத்தான்.
மருது தன் வீட்டின் பின் பக்கத்துக்கு மிகவும் அருகிலேயே பச்சை நிற நெட் கட்டி பாதுகாப்பாக குளிக்க வசதி ஏற்படுத்தியிருந்தான். மற்ற பக்கமெல்லாம் திறந்த வெளியாக இருக்கும். ஆகவே நண்பனுக்கு அழைத்து சொல்லி விட்டு அவன் வீட்டுக்கு அருகிலேயே மனைவியை அழைத்து சென்றான்.
மருதுவின் மனைவி எப்போதோ தன் பிள்ளைகளுடன் கரை ஏறியிருந்தாள். இவர்கள் வரப் போவதாக கணவன் சொல்லியிருந்ததால் அங்குதான் நின்றிருந்தாள்.
கரையில் பல வண்ணங்களில் பூத்திருந்தது மணி வாழை. மஞ்சள் செடிகளும் கரைக்கும் சற்று மேலே நிறைய அன்னாசி செடிகளில் பழங்கள். இறங்கிச் செல்லும் பாதையை காண்பித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டாள் மருதுவின் மனைவி.
ஆள் நடமாட்டம் அறவே இல்லை. வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்ட பார்த்தி தன் பின் தொடர்ந்து வரும்படி அவளிடம் சொல்லி முன்னே நடந்தான். இரண்டு ஆட்கள் சேர்ந்து நடப்பது போல படிகள் அமைக்க பட்டிருந்தன. ஆனால் நல்ல உயரம், அவனது கையை பிடித்துக்கொண்டே இறங்கினாள்.
தண்ணீரில் கால் வைத்தவளுக்கு ஒரே உற்சாகம். அவளது மாற்று ஆடை இருந்த பையை மேல் படியில் வைத்து விடுவதாக சொன்னவன், “கரையிலதான் இருப்பேன் ஆச்சி, ரொம்ப உள்ள போயிடாம குளிக்கணும் சரியா?” என அவளிடம் கண்டிப்போடு சொல்லியே படியேறினான்.
பச்சை நிறத்தில் இருந்தது குளம், எதிர் பக்கமெல்லாம் அடர்த்தியாக மரங்கள். இன்னும் வெயில் ஏறாத காரணத்தால் பறவைகளின் நடமாட்டம் இருந்தது. தெளிந்த வானத்தில் வெண்மையான மேக கூட்டம் சோம்பலாக நகர்ந்து கொண்டிருந்தது.
பத்து வயதிலேயே நீச்சல் கற்று தேர்ந்திருந்தவள், ஆனால் இன்று போல் என்றுமே குளியலை இத்தனை ஆனந்தமாக அனுபவித்தது இல்லை அவள்.
மனைவிக்கு காவல் காத்துக் கொண்டிருந்தவன் அவளின் “பார்த்தி…” என்ற பயந்த அழைப்பில் பதற்றம் கொண்டு வேகமாக சென்றான். நீருக்குள் இருந்தவள் மூச்சு வாங்குவது போலிருக்கவும் எதையும் யோசிக்காமல் குளத்தில் பாய்ந்து விட்டான்.
அவளருகில் சென்று விட்டவன், “ஆச்சி என்ன… என்ன?” என பதறினான்.
“ஸ்னேக் பார்த்தி” என மருண்ட பார்வையோடு சொன்னாள்.
எங்கே என கேட்டவனுக்கு ஓரிடத்தை சுட்டிக் காண்பித்தாள், ஆனால் அங்கே எதுவுமில்லை. இவன் வேகமாக குளத்தில் விழுந்த சலனத்தில் எங்கேயோ மறைந்து விட்டது போல.
“தண்ணி பாம்பாதான் இருக்கும் ஆச்சி, போதும் குளிச்சது வாங்க” என்றான்.
“என்ன அதுக்குள்ளயா? அதான் தண்ணி பாம்புன்னு சொல்லிட்டீங்களே, இன்னும் கொஞ்ச நேரம்”
“அது ஊகத்துல சொன்னேன்” என்றவன் கண்ணுக்கும் தண்ணீர் பாம்பு தென்பட, பயத்தை விட்டான். ஆனாலும் அவளை மேலேற சொல்லி வற்புறுத்தினான். நாளைக்கெல்லாம் இங்கு வருவது சாத்தியப் படாது, ஆசையாக வந்து விட்டு ஐந்து நிமிடங்களில் செல்வதா என வாதிட்டவள் அவனை படியிலேயே அமர சொன்னாள்.
அவன் அதிர, செல்லமாக அவனது தலையில் கொட்டியவள், “கரைய பார்க்க உட்கார்ந்துகோங்க” என்றாள்.
“ஏன் உங்களோட சேர்ந்து குளிக்கவே சொல்லுங்களேன்” என்றான்.
“அது உங்க இஷ்டம் பார்த்தி!” என்றாளே பார்க்கலாம்.
“யாராவது வந்தா இன்னும் இருபது வருஷத்துக்கு சொல்லி காட்டி கிண்டல் பண்ணுவாங்க ஆச்சி, பாம்பு வந்தா தண்ணிய அள்ளி ஊத்துங்க, ஓடி போயிடும். கால் மணி நேரம்தான் டைம், அதுக்குள்ள குளிச்சிட்டு வர்றீங்க” என மிரட்டலாக சொல்லி திரும்பி நடந்தான்.
இரு கைகளிலும் தண்ணீரை அள்ளி அவன் மீதே இரைத்தாள். செல்ல கண்டிப்போடு அவள் பக்கம் திரும்பியவன், “நான் பாம்பு இல்லை ஆச்சி” என்றான்.
“தெரியுமே பார்த்தி” என்றவளுக்கு எதுவோ உரசுவது போலிருக்கவும் பாம்புதான் என நினைத்து பயந்து போய் அவனை அணைத்துக் கொண்டாள்.
அவர்களின் முதல் அணைப்பு, அவனுக்கு சர்வமும் ஸ்தம்பித்து போனது.
ஏதோ சருகு காற்றில் பறந்து வந்து நீரில் விழுந்திருக்கிறது. அவனுக்கு புரிந்தாலும் அவளிடம் விளக்கம் சொல்ல முடியாத அவஸ்தையில் இருந்தான்.
குறையாத பயத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “போயிடுச்சா பார்த்தி, என்னை கடிச்சுதான்னு தெரியலை” என்றாள். கண்களில் வேறு நீர் கோர்த்திருந்தது.
“சருகு ஆச்சி, அங்க பாருங்க” என சின்ன குரலில் சொன்னான். அவனிடமிருந்து விலகாமலே திரும்பிப் பார்த்து அவனை இனிமையாக இம்சித்தாள். சருகு மிதந்து கொண்டிருக்கவும், “ச்சே எப்படி பயந்திட்டேன்” என சொல்லி அவனை பார்த்தாள்.
அவனது பார்வையை கவனித்து விட்டுத்தான் மெதுவாக அவனிடமிருந்து விலகி சோப் எடுப்பதற்காக படிக்கு சென்றாள்.
தன்னிலை மீளாதவன் கண்களை மூடி நெற்றியில் கை வைத்துக்கொண்டான். சோப்பின் உரையை பிரித்தவள், “சோப் எதுல வைக்கிறது பார்த்தி?” எனக் கேட்க, விழிகளை திறந்தான்.
“பார்த்தி… உங்களைதான், சோப் டிஷ் எடுத்து வைக்கலையா? இங்க வாங்க நீங்களே கைல புடிச்சுக்கோங்க” என்றாள்.
அவள் பக்கம் திரும்பாமலே பக்கவாட்டு பகுதியில் நகர்ந்து காட்டாமணி செடியிலிருந்து இலை பறித்து அவளுக்கு முதுகு காண்பித்து கொண்டே அவளிடம் வந்து சேர்ந்தான். இலையை பின் பக்கமாக நீட்டி, “இதுல வைங்க” என்றான்.
தன்னை பார்க்க மறுத்து இப்படி நிற்கும் இவனது செயலில் கல கலவென சிரித்தாள். அதில் சீண்டப் பட்டவனாக வேகமாக திரும்பினான். ஈரம் மினு மினுக்க சிரித்துக் கொண்டிருந்தவள் அவனுள் தீ பற்ற வைத்தாள், தனக்கு உரிமைப் பட்டவள் என்ற சிந்தனை மேலெழ வேகமாக அவளை நெருங்கியவன், அவளது சிரிப்பு நிற்கவும் அதை விட வேகமாக விலகினான்.