இருவரும் தென்காசியில் இருந்த ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருக்க, அங்கிருந்து பத்து நிமிட இடைவெளியில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு தான் வந்து சேர்ந்தனர் இருவரும். ஆளுக்கொரு தோசையை கையில் வாங்கி, வாயைத் திறக்கும் நேரம், வெற்றி அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து, அவனுக்கு முன்னே இருந்த மேசையின் மீது விழுந்திருந்தான்.
அவன் சாப்பிட வாங்கிய தோசை அவன் உடலில் பட்டு எங்கோ பறக்க, அவன் என்ன ஏதென்று உணரும் முன்னமே அடுத்தடுத்து அவனை புரட்டி எடுத்துவிட்டான் சக்திவேல்.
அத்தனைக்கும் வெற்றி ஒரு வார்த்தை கூட எதிர்ப்பு சொல்லாமல் அடி வாங்கி கொண்டிருக்க, தேனருவி தான், “ஐயோ விடுங்க. விட்டுடுங்க ப்ளீஸ்” என்று அவனிடம் கதறிக் கொண்டிருந்தாள்.
ஒருகட்டத்தில் அவள் சக்தியின் கையைப் பிடிக்க முற்பட, சக்தி இருந்த வேகத்தில் அவளை அடித்து விடுபவன் போல் கையை உயர்த்திவிட்டான். கடைசி நொடியில் சுதாரித்து, ஒரு விரலை நீட்டி அவளை எச்சரிக்க, “ப்ளீஸ் அவரை ஏதும் பண்ணிடாதீங்க. உங்களுக்கு நான் தானே வேணும். நான் வரேன். என்னை என் அப்பாகிட்ட விட்டுடுங்க. அவரை எதுவும் பண்ணிடாதீங்க அண்ணா ப்ளீஸ்.” என்று அவள் அழ,
“போய் அந்த வண்டியில ஏறு” என்றான் நிதானமாக.
அவள் வெற்றியைப் பார்த்து அழுதபடி நிற்க, “போ” என்று சக்தி அதட்டியதில், அழுதபடியே சென்று காரில் அமர்ந்துவிட்டாள். அவள் காரில் அமரும் வரை பொறுத்தவன், “இந்த நாயையும் தூக்கி வண்டியில போடுடா” என்று அருகில் நின்றிருந்த தன் நண்பன் குகனிடம் கூற,
அப்போதுதான் வெற்றியைப் பார்த்தான் குகன்.
“டேய். என்னடா பண்ணி தொலைச்சிருக்க” என்று குகன் பதற,
“ஏய். தூக்கி போடுடா” என்று அலட்சியமாக கூறிச் சென்றான் சக்திவேல்.
குகன், “தேவையாடா உனக்கு இதெல்லாம். ஏன்டா வேண்டாத வேலை பார்க்கிற?” என்று புலம்பியபடியே வெற்றியை கைத்தாங்கலாக அழைத்து வந்து காரில் அமர்த்த, அடுத்த நொடி சக்தியின் கைகளில் கார் சீறிப் பாய்ந்தது.
இரவு சரியாக இரண்டு மணி அளவில் மதுரையை அடைந்தவன் நேராக சென்று வண்டியை நிறுத்திய இடம் காவல் ஆணையாளர் அலுவலகம் தான். அவனுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் மீதோ, அவன் வகுப்பினர் மீதோ நம்பிக்கையில்லை. தம்பிக்காரனை கூட அந்த நேர ஆத்திரத்தில் வெளுத்துவிட்டானே தவிர, அவன் உயிருடன் மீண்டதில் நிம்மதி தான்.
இப்போதும் எப்படியாவது அவனுக்கு புரியவைத்து அழைத்துச் சென்று விடும் எண்ணத்தில் தான் இருந்தான். காலை லேசாக பொழுது புலரும்வரை இருவரையும் காரிலேயே வைத்திருந்தவன் காலையில் இருவரையும் காவல் ஆணையாளரிடம் ஒப்படைக்க, முறையாக பெண் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சக்தி ஏற்கனவே தகவல் கூறி இருந்ததால், சொக்கநாதரும், தங்க பாண்டியனும் முன்னதாகவே வந்து சேர்ந்திருக்க, தங்கபாண்டியன் ஆளுக்கு முன்னதாக மகனை அடிக்க பாய்ந்தார். அங்கிருந்த காவலர்களுக்கு அவரைப் பிடித்து நிறுத்துவதே பெரும் பாடாக இருக்க, சக்தி அமர்ந்த இடத்திலிருந்து அசையவும் இல்லை. தந்தையை தடுக்கவும் இல்லை.
வெற்றி இத்தனைக்கும் அமைதியாகவே இருக்க, சொக்கநாதர் தான் நிதானமாக பேரனை நெருங்கினார்.
“எதுக்குடா இப்படி செஞ்ச? என்ன தேவை இதுக்கு? உன் அண்ணன், அப்பன், ஆத்தா யாரையும் யோசிக்காம இது என்ன வெற்றி. உன்னை இப்படியா வளர்த்தோம்.” என்று அமைதியாக கேள்வி கேட்டவருக்கும் அவன் பதில் கொடுக்காமல் அமைதி காக்க, அவன் அமைதியில் கோபமுற்றவர், “வாயைத் திறந்து பேசுடா. இல்ல தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன்” என்று மிரட்ட, அதற்கும் பதிலில்லை.
அவனிடம் பேசித் தோற்றுப் போனவர், “அவன் கூப்பிட்டா குடும்ப கௌரவத்தைக் கூட யோசிக்காம அவன் கூட கிளம்பி வருவியா நீ. உன் அப்பனும், ஆத்தாளும் உன்னை எப்படியெல்லாம் வளர்த்தி இருப்பாங்க. ஒரு நொடி யோசிக்கலையாம்மா. என்ன பிள்ளைங்க நீங்க” என்று தேனருவியையும் அவர் சாட, அவரது காலில் விழுந்துவிட்டாள் தேனருவி.
வெற்றி அவளை எழுப்பி நிறுத்த, “அவர் என்னை கூட்டிட்டு போகல. நாந்தான் அவரை கட்டாயப்படுத்தி ஓடி வந்தேன். தப்புதான். எனக்கு வேற வழி தெரியல ஐயா. மன்னிச்சிடுங்க” என்று அழுதாள் அவள்.
“நீ மன்னிப்புக் கேட்டா எல்லாம் சரியாகிடுமா. அவன் அண்ணன் கல்யாணம் நின்னு போச்சு. உன் மன்னிப்பு அதை நடத்திக் கொடுக்குமா?” என்று சொக்கநாதர் கேட்கவும் தான், சக்தி வெற்றியின் அண்ணன் என்பதே தெரியும் தேனருவிக்கு.
இதுவரை வெற்றிக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் என்று தெரியுமே தவிர, அவனைப் பார்த்ததே கிடையாது. இப்போது வெற்றியின் அண்ணன் எனவும், அவனை நிமிர்ந்து பார்த்தவள், அடுத்த நொடி குற்றவுணர்வில் தலையை குனிந்து கொண்டாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சபாபதியும், வாசுவும் ஒருங்கே அந்த இடத்திற்கு வர, இருக்குமிடம் மறந்து தங்கையின் முடியைப் பிடிக்க பாய்ந்தான் வாசு.
“ஓடுகாலி நாயே. தினவெடுத்து திரியுறியா. உன்னை இங்கேயே வெட்டி போட்டுட்டு நான் உள்ளே போறேண்டி” என்று குதிக்க, சபாபதி மகனைப் பிடிக்க முயற்சி செய்வதற்குள், தேனருவிக்கு அரணாக அவளுக்கு முன்னே வந்து நின்றான் வெற்றி.
வாசு, “ஒழுங்கா அவளை விட்டுட்டு ஓடிடு. உயிராவது மிஞ்சும்” என்று அவனை எச்சரிக்க, அதுவரை அமைதியாக நின்றிருந்தவன், இப்போது நக்கலாக ஒரு புன்னகையை பதிலாக கொடுத்தான்.
“என்னடா சிரிக்கிற?” என்று வாசு பாய, சொக்கநாதர் ஒரே எட்டில் அவனைப் பிடித்து தூர நிறுத்தி இருந்தார்.
“இருக்கிற இடம் மனசுல இருக்கட்டும். நேத்து வாங்கினது மறக்கல இல்ல.” என்று அவரும் அவனை அதட்ட, கையைப் முறுக்கியபடியே தள்ளி நின்றான் வாசு.
சில நிமிடங்களில் இருவரும் ஆணையரின் முன்னே விசாரணைக்கு நிறுத்தப்பட, தான் வெற்றியை காதலிக்கும் விஷயம் தெரிந்து, சபாபதி வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், தான் மறுத்ததால் தன்னை கொன்று விட திட்டம் போட்டதாகவும் அழுதபடியே கூறினாள் தேனருவி.
மேலும், வெற்றியின் மீது எந்த தவறும் இல்லை என்றும், தனக்காக மட்டுமே இதைச் செய்தான் என்றும் அவள் தெளிவாக கூறிவிட, வெற்றியும் அவனுக்கு தெரிந்தவரை நடந்தவற்றை சுருக்கமாக கூறி முடித்தான்.
சபாபதி எத்தனையோ எடுத்துக் கூறியும், தேனருவி அவருடன் செல்ல மறுத்துவிட, அதற்குமேல் அவளை தொந்தரவு செய்தால், கொலைமுயற்சி என்று வழக்கு பதியப்படும் என்று ஆணையர் மிரட்டியதில் சபாபதியும், அவர் மகனும் இடத்தை காலி செய்திருந்தனர்.
சக்தி, “அந்த பொண்ணுக்கு அவங்க பாதுகாப்பா ஏதாவது ஏற்பாடு பண்ணுவாங்க. இன்னும் தாலி கட்டல இல்ல. நீ வீடு வந்து சேரு” என்று தம்பியிடம் கூற, அந்த நொடியில் தேனருவியின் கையை இறுகப் பற்றினான் வெற்றிவேலன்.
சக்தியின் முகத்தைப் பாராமல், ஆணையரிடம், “நாங்க ரெண்டு பேரும் மாலை மாத்தி ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டோம் சார். நீங்க ஒரு தாலி கொடுத்தா கட்டி கூட்டிட்டு போறேன். இல்லையா, இவ இப்படியே என்னோட வரட்டும். ஆனா, இனி இவளை விட முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாக கூற, ஆணையர் சக்தியைத் தான் பார்த்தார்.
சக்தி தம்பியை கொலை வெறியோடு முறைத்தவன், தன் தந்தையிடம், “இனி இவனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. கையெழுத்து வாங்குங்க” என்று குகனிடம் இருந்த பத்திரங்களை வாங்கி கொடுக்க, தங்கபாண்டியன் தான் அவனுக்கு மேல் இருந்தாரே.
“டேய் போடுடா. போட்டு கொடுடா. இன்னையோட உனக்கு காரியம் பண்ணிட்றேன்” என்று அவரும் கத்த,
“கையெழுத்துப் போட்டுட்டு… எங்க போக சொல்றிங்க? தங்குறதுக்கும், திங்கிறதுக்கும் என்ன செய்யுறது? அவன்கிட்ட சொல்லி என் அக்கவுண்ட்டை ரிலீஸ் பண்ணிவிட சொல்லுங்க. என் தாத்தா சொத்துல எனக்கும் பங்கு இருக்கு இல்ல. அதை கொடுத்திடுங்க” என்று சாவகாசமாக கூறினான் வெற்றி.
“அடேய்… உன்னை இங்கேயே புதைச்சுட்டு நான் ஜெயிலுக்கு போய்டறேண்டா” என்று தங்கபாண்டியன் முன்னே வர,
“நில்லுடா” என்று அவரைத் தடுத்த சொக்கநாதர், “உன் தாத்தன் பரம்பரை பணக்காரன் இல்லடா. என் அப்பன் எனக்கு வச்சுட்டுப் போனது அந்த அஞ்சு ஏக்கர் நிலமும், ஒட்டு வீடும் தான். மீதி எல்லாம் என் மகன் சம்பாதிச்சது. இருக்க இடம் கேட்ட இல்ல, அந்த வீட்டுல ஒண்டிக்கோ.”
“உன் அப்பனுக்கே நீ பொறந்தது நிஜமா இருந்தா, திங்கிறதுக்கு வழியை நீயே தேடிக்க. விட முடியாதுன்னு சொன்னவனுக்கு, வச்சு வாழவும் வழி தெரியணும்” என்று முடித்து, “வாங்கடா” என்று மகனையும், பேரனையும் அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டார் சொக்கநாதர்.