புது வீடு மாடியில் இருந்தது. சின்ன வீடு தான், ஆனால் கச்சிதமாக இருந்தது. ஒரு பெரிய அறை மட்டும் தான். பாத்ரூம் வெளியில் இருந்தது. தனியே அடுப்படி, பெட்ரூம் எதுவும் கிடையாது. வாடகை ரொம்பவும் கம்மி என்பதால் செலவு சரண்யா கைக்குள் நிற்கும். பிள்ளைகள் வயதுக்கு வந்தால் பெட்ரூம் இருப்பது போல வீடு பார்த்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணமும் உண்டு.
அவள் வீட்டில் இருந்து பெரிய அளவிலான பொருட்கள் எதையும் எடுத்து வரவில்லை. தற்போது புழங்கும் பாத்திரங்கள் மட்டும் தான். இவளுக்கு கொடுத்த சீதனம் எல்லாம் திவ்யா புழங்கி விட்டாள். அதையெல்லாம் கேட்டாள் முழுதாக வெட்டி கொள்ளும் நிலை வரும் என்பதால் பிள்ளைகள் பெரிதான பின்பு அவளுக்கு உரிய சீர், நகையை புதிதாக வாங்கி கொள்ளும் எண்ணம் இருந்தது. ஆனால், விட்டுவிட மட்டும் நினைக்க வில்லை.
நாளை முதல் பிள்ளைகள் பள்ளிக்கும், இவள் வேலைக்கும் ஓட வேண்டும். தனியாக இந்த சமூகத்தை இரு பெண் பிள்ளைகளின் தாய் என்ற ரீதியில் அணுக வேண்டும். கொஞ்சம் பயம் தான். ஆனால், துணிந்து தான் நின்றாள்.
திங்கள் கிழமை காலை பரபரப்பு கூடியது. தனக்கு வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் முதல் நாள். நான்கு தெரு தள்ளி தான் பள்ளி, நடந்து தான் கூட்டி சென்றாள். பள்ளி வேன் வரும் தான். ஆனால், அதற்கு தனியாக பணம் வேண்டுமே…
அந்த தெருவில் மற்ற பிள்ளைகளும் நடந்து செல்லுவதால் பெரிய வேறுபாடு இல்லாது பிள்ளைகளை நடந்தே கூட்டி வந்து விட்டாள்.
ஆசையாக வந்த பிள்ளைகள், தாய் தங்களை தனி அறையில் விட்டு செல்கிறாள் எனவும் அழுது ஆர்பாட்டம் செய்ய தொடங்கியது. அஜி கழுத்தை கட்டி கொண்டு விடவே இல்லை. பிள்ளைகள் இருவரின் அழுகை, சரண்யாக்கு அங்கமெல்லாம் பதறியது. பள்ளியின் முதல் நாள் எல்லா குழந்தைகளும் அப்படி தான் என்றாலும் அவர்களின் அழுகை இவளுக்கும் தொற்றி கொண்டது.
காலையில் விஜி பாத்ரூம் போகவில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு தூங்கி, எழுந்து விளையாடும் பிள்ளைகளுக்கு, நேர ஒழுங்கு இன்னும் வரவில்லை.
அஜிதாக்கு ரொம்ப பயம் வந்தாள் துணியை ஈரம் செய்து விடுவாள். அதனால், இருவருக்கும் ஒரு மாற்று உடை எடுத்து வைத்திருந்தாள். அதையும் அவர்கள் வகுப்பு ஆசிரியர், ஆயம்மாவிடம் சொல்லி, பிள்ளைகளை கதற விட்டு தான் வந்தாள்.
பிள்ளைகளுக்கு புது இடம் என்பதால் பெற்றோர்கள் ஒரு வாரத்திற்கு மதியம் வரை உடன் இருக்கலாம். சரண்யாக்கும் ஆசை. அப்புறம் அவள் வேலையை யார் பார்ப்பது?
ஓட்டமும், நடையுமாக கடைக்கு வந்தாள். நான்கு பெண்களுடன், தேவி அக்கா இருந்தார். நல்ல விதமாகவே நடத்தி வேலையில் சேர்த்து கொண்டார். அவளுக்கு அது ஒன்று தான் கொஞ்சும் நிம்மதி. அவளையே பார்த்து நின்ற அகி, மெல்ல நெருங்கி வந்து,
“அடியே சரண்!… எப்ப உனக்கு கல்யாணம் ஆச்சு?. பார்த்தியா என்கிட்ட கூட சொல்லலை…” அவள் முகத்தில் கேலி இருந்தது.
சரண்யா தன் கழுத்தை பார்த்து கொண்டாள். அதில் ஒரு புது மஞ்சள் கயிறு மின்னி கொண்டு இருந்தது.
பெருமூச்சு விட்டவள், “வேற என்னத்த பண்ண சொல்ற, இருந்த ஒத்தை சங்கிலியும் வித்து தான் வீட்டு அட்வான்ஸ், பிள்ளைகள் ஃபீஸ், பண்டபாத்திரம் வாங்கிட்டேன். மிச்சம் இருக்குறது பிள்ளைக படிப்புக்கு, அடுத்த டேர்ம்க்கு ஃபீஸ் கட்டனும். சம்பளம் எப்படின்னு தெரியலை, அதான் கொஞ்சம் எடுத்து வச்சேன். அத்தோட இந்த கயிறு பதினஞ்சு ரூபாய் தான். நம்ம பட்ஜெட்க்கு ஏத்தது. விலை கம்மினாலும், அதுக்கு மதிப்பு அதிகம் தான. கொஞ்சம் பாதுகாப்புக்கு, ஒரு மரியாதைக்கு… வெறும் கழுத்தா இருந்தா, எல்லாரும் உத்து பாக்குறாங்க…” என்ற அவள் விளக்கம் சரிதான்.
மதியம் பன்னிரண்டு மணிக்கு பிள்ளைகள் உணவு வேளை என்பதால், தேவியே அவளை போக சொல்லி விட்டார். இரு பிள்ளைகளோடு சரண்யா தனித்து நிற்பதை பார்த்து, அவளுக்கு சில சலுகையை கொடுத்தார்.
அதுதான் மதியமும், மாலையும் ஒரு மணி நேர இடை வேளை… அந்த நேரத்தில் பிள்ளைகளையும் கவனித்து, அவளும் உண்டு வேலைக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும். மதிய நேரம் என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் எதுவுமில்லை என்ற பின் எடுத்தாள் ஒரு ஓட்டம், பள்ளியின் முன் தெருவில் தான் வந்து நின்றாள்.
பலமாக மூச்சு வாங்கியது, அது பொருட்டல்ல… பிள்ளைகளுக்கு உணவு வேளை தொடங்கும் முன் வர வேண்டுமே. மற்ற பிள்ளைகளுக்கு தாய்மார் உணவு ஊட்டும் போது தன் பிள்ளைகள் வாய் பார்த்து நிற்க கூடாதே.
அழுது ஓய்ந்து, சோர்ந்து போய் கிடந்தார்கள் பிள்ளைகள். இவளை பார்த்ததும் தாவி அனைத்து கொண்டார்கள். அழுகை மட்டும் குறையவே இல்லை. பிள்ளைகளை சமாதானம் செய்து உணவை கொடுத்து, திரும்பவும் அழுக விட்டு தான் கடைக்கு ஓடி வந்தாள். ஒரு பாட்டில் தண்ணியை காலி செய்த பின் தான் சோர்ந்து போய் அமர்ந்தாள் சரண்யா. பார்க்கையில் அகிலாவுக்கே பாவமாக தான் தோன்றியது.
திரும்பவும் மாலை நான்கு மணிக்கு ஒரு அவசர ஓட்டம். மாலையில் பிள்ளைகள் ஓரளவு சமாதானம் ஆனது போல தான் தோன்றியது. அது கொஞ்சம் நிம்மதி. அவசரமாக வீட்டுக்கு வந்து பால் ஆத்தி பிஸ்கட் வைத்து கொடுத்து, உடம்பு கழுவி விட்டு, அவள் வீட்டின் பக்கத்து மாடியில் குடியிருக்கும் அமுதா அக்காவிடம் டியுசனுக்கு விட்டு வந்தாள்.
ராத்திரி ஒன்பது மணிக்கு தான் வந்தாள். முதல் நாள் என்பதால் கால் வலி உயிர் போனது. முட்டி, தொடை எல்லாம் இரத்தம் கட்டி கொண்டது போல் நல்ல வலி. மனம் பேசாமல் முடங்க சொல்ல, பிள்ளைகள் பசியை யார் பார்ப்பது.
மாவு வாங்கி ஆளுக்கு இரண்டு தோசையை உள்ளே தள்ளி விட்டு, சுடு தண்ணீரில் உடம்பு கழுவியவல் பிள்ளைகளோடு முடங்கி கொண்டாள்.
முழுதாக ஒரு வாரம் ஆனது. அந்த இடம், சூழல், பள்ளி என்று எல்லாம் ஒரு ஒழுங்கமைப்புக்கு வர, வெளி ஆர்வம் கொண்ட விஜி தெளிந்து விட, இந்த அஜிக்கு மட்டும் அழுகை குறையவில்லை. அன்று சரண்யாவின் அக்கா ஊருக்கு செல்கிறாள். ஒரு பார்வை தங்கையை பார்க்க வந்திருந்தாள். சரண்யாவை பார்த்ததும் பிரியாவுக்கு கண்கள் கலங்கியது.
அந்த ஒற்றை அறையில் இரு பிள்ளைகளை வைத்து கொண்டு, எந்த பொருளும் இல்லாமல், வறுமையான வாழ்க்கை வாழும் தங்கை மேல் கோபம் கூட வந்தது. ஊர், உலகத்தில் விவாகரத்து ஆனா யாரும் திருமணம் செய்து கொள்வது இல்லையா… இவளுக்கு ஏன் இந்த பிடிவாதம். பெத்தவன் ஒதுங்கி கொண்டான். இவள் ஏன் தூக்கி சுமக்கிறாள்.
பிள்ளைகளை பார்த்தவள், இருவருக்கும் தனித்தனியே ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க… தடுத்து நிறுத்தினாள் சரண்யா.
“இவ்வளவு பணம் வச்சு செலவு செய்ற வயசு அவங்களுக்கு இல்லை…”
“பழச யோசிக்கிறையா சரண்?…” என்றாள் பிரியா.
“என்ன பழசு, நான் எதை யோசிக்கிறேன். பொதுவா தான் சொன்னேன். மூன்றை வயசு பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் ரொம்ப அதிகமான பணம். அதோட மதிப்பு அவங்களுக்கு என்ன தெரியும்…” நிர்மலமான முகத்தோடு தான் சொன்னாள். ஆனால், பார்த்திருந்த பிரியா, அவள் கணவன் இருவருக்கும் உள்ளே ஒன்றை வைத்து தான் பேசுகிறாள் என்று தோன்றியது.
“திவ்யா எப்படின்னு உனக்கு தெரியாதா சரண். எங்கேயும் தான் மட்டும் தான் உசத்தியா இருக்கணும்ன்னு நினைப்பா… அவளை மீறி ஏதாவது செஞ்சா குடும்பத்தை உள்ளுக்குள்ள இருந்தே பிரிச்சு விடுவா… நம்ம கூட பொறந்தவன் அவன் ஒருத்தன் தான். அவனை விட்டு ஒதுங்கி நிக்க முடியுமா சொல்லு…” என்று தன் பக்க விளக்கத்தை கொடுத்தாள் பிரியா.
மறுப்பு சொல்லாமல் அமைதியாகி கொண்டாள் சரண்யா. பெரும் தயக்கத்துடன் தான் விடை பெற்று சென்றாள் பிரியா.
அதிகாலை நான்கு மணிக்கே ஆளம் கரைத்து தயாராக வைத்திருந்தார் தனம். கிட்டத்தட்ட நான்கு கழித்து வீட்டிற்க்கு வரும் தலை மகனை வரவேற்ற தயராகியது அந்த குடும்பம். வாசலில் கார் வந்து நிற்க, எல்லோருக்கும் பரபரப்பு தொற்றி கொண்டது எல்லோர் கண்களும் ஆவலாக காரை பார்க்க, இறங்கினான் வெற்றி வேல்.
வெளிநாட்டு வாசம் நன்றாக தெரிந்தது அவன் முகத்தில். முன்பே சிவந்த நிறம் கொண்டவன், தற்போது இன்னும் மெருகேறி இருந்தான். கொஞ்சம் தாடி, மீசை வைத்து வெள்ளை சட்டை ஜீனில் வந்து இறங்கிய மகனை கண்டு முகம் கொள்ள புன்னகையும், கண்ணில் நீருமாக வரவேற்றார் தனம்.
நீண்ட வருடம் சென்று தன் குடும்பத்தை பார்த்த மகிழ்ச்சி அவன் முகத்திலும் தொற்றி கொண்டது. அவன் வெளிநாடு செல்லும் போது தங்கைக்கு வரன் மட்டுமே பேசி முடித்து இருந்தார்கள். மூன்று வயது பையனுடன் தங்கையும், ஒரு வயது மகனுடன் தம்மி சக்தியும், தம் ஜோடிகளுடன் சேர்ந்து நின்றார்கள். எல்லோரையும் நலம் விசாரித்து முடிந்த பின் தன் அறையில் சென்று அடைந்து கொண்டான்.
தந்தை வேல் முருகன் தான், “அம்புட்டு தூரம் இருந்து வந்து இருக்கான், அழுப்பா இருக்கும். ஏய்! தனம், கோழி கவுத்து வச்சையே, வா அதை புடிப்போம். காலையில எழுந்தா தம்பிக்கு எண்ணெய் விட்டு குடுக்கணும்…” என்று சொல்லி தனத்தை கூட்டி சென்றார்.
காலை உணவு, சொந்தங்களின் நல விசாரிப்பு எல்லாம் முடிந்த பின், வெளியே காற்றாட அமர்ந்தவன் கவனத்தை கலைத்தார்கள் மாயா, சக்தியின் பிள்ளைகள். இருவரும் அங்கிருந்த பாயில் அமர்ந்து விளையாட, அவனுக்கு நினைவு சரண்யாவின் பின் சென்றது.
“தன் குழந்தையை வைத்து இருப்பாளா… நிச்சயம் பெத்து இருக்க மாட்டாள். என் மீது அவ்வளவு கோபத்தில் சென்றவள் ஆயிற்றே!… அவள் அண்ணனும் விட்டு இருக்க மாட்டான். அவள் வீட்டவர்கள் சொல்லி தானே சென்றார்கள்…” என்ற நினைப்பு ஓடும் போதே உள் மனம் குத்தியது.
ஆகாய வண்ண பட்டு புடவையில், ஒரு தூக்கு நிறைய பால் பாயசம், அதிரசம், கை முறுக்கு என்று வெற்றிக்கு பிடித்த மாதிரி அடுக்கி கொண்டு தயங்கி தயங்கி வந்த அபியை, அவன் கவனிக்கவே இல்லை.
அவன் எண்ணம் முழுக்க தொலைத்த பிள்ளை மீது தான் மையம் கொண்டு இருந்தது. தனம் தான் பார்த்து, “ வா வா அபி… உன் மாமனை பார்க்க வந்தியாக்கும்?…” என்று கேள்வி எழுப்ப.
அதில் நினைவு கலைந்தவன் நிமிர்ந்து அபியை பார்த்து அறிமுக சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு அறைக்கு உள்ளே சென்று விட்டான்.
அபிக்கு பெருத்த ஏமாற்றம். முகமே சுண்டி போனது. அவனுக்காக எல்லாரையும் எதிர்த்து எட்டு வருடம் தவம் கிடக்க, நொடியில் தள்ளி நிறுத்தி விட்டான். முழுதாக நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும் மனம் தெளிய வில்லையா?…
வெற்றி கட்டிலில் முடங்கி கொண்டான். அவன் மனம் என்ன எதிர்பார்க்கிறது என்றே அவனுக்கு தெரியவில்லை. அபியின் காதல் நிச்சயம் அவனை அசைக்கிறது தான். ஆனால், காதலிக்கும் போது அவனில் இருந்த ஒன்று தற்போது இல்லை. தனக்காக காத்திருக்கும் பெண்ணை கை பற்றவும் முடியவில்லை, விலகி ஓடவும் தெரியவில்லை.
காதலித்தவளுக்கு துரோகம் செய்து, வேற பெண்ணை மணம் முடித்தவன் என்ற குற்ற உணர்வில் சுத்தியவன். இன்று கட்டிய மனைவியை ஒதுக்கி, கை தூக்க வேண்டிய பிள்ளையை கருவிலே இழந்து என்று முழு குற்றவாளியாக வாழ்கிறான். அவன் நேர்மையே அவனை குற்றம் சுமத்த, அபியை போன்று காதல் கை கூடி விட்டது என்று மகிழ முடியவில்லை.
சரண்யாக்கு அன்று வார விடுமுறை. பத்து மணி வரை பிள்ளைகளை அனைத்து கொண்டு படுத்து கிடப்பவள். பின் கறி எடுத்து சமைத்து, பிள்ளைகள் உடன் சேர்ந்து விளையாடி என்று அந்த பொழுதை நன்றாக கழிப்பார்கள். அவள் நினைவில் கூட வெற்றி வேல் என்ற ஒருவன் கிடையாது.