தாத்தா ஈஸ்வரின் கல்யாணம் பற்றி பேசியதை சுஜாவின் அம்மா ஈஸ்வரிடமும், சுகனிடமும் சொல்ல இருவரும் “அப்படியா? சரிங்கம்மா” என ஒன்றுபோல சொல்ல தலையை பிடித்தனர் அம்மாக்கள் இருவரும்.
சுஜாவை அழைத்து சொல்ல,
“அம்மா, பெரியம்மா கவனிங்க. உங்க வாழ்க்கையை பணயம் வச்சிங்க ஓகே.”
“ஊருக்கு நியாயம் சொல்ற நான், நியாயவாதியா இருந்திருந்தா முதல்ல நம்ம வீட்டை கவனிச்சிருக்கனும்.”
“நான் தப்பு பண்ணிட்டேன். என்னை நீங்க எல்லாம் மன்னிச்சிடுங்க. நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். தயவுசெஞ்சி சண்டை போடவாவது செய்யி பாப்பா.”
“உன் குரலை கேக்காம எனக்கு உசுர புடுங்குறமாறி வலியா இருக்கு. என்னோட சந்தோசமே நீதான பாப்பா. நீயே என்னை இப்படி தண்டிக்கலாமா? சொல்லு பாப்பா” என கெஞ்ச அசரவில்லை சுஜா.
“இப்ப என்ன? உங்கண்ணனுக்கு நீ ஆசைபட்ட பொண்ணை கல்யாணம் கட்டனும் அதானே? நீ பாத்த பொண்ணுதான் என் மருமக. நான் உனக்கு வாக்கு குடுக்கிறேன். கல்யாணம் முடிச்சிட்டே உன்னோட நான் பேசிக்கிறேன்.” என்றவர் தன் மனைவி சாந்தாமணியிடம்
“சாந்தா என்னை மன்னிச்சுடு. பாப்பாகிட்ட பேசும்போது கூப்பிடு. நான் தள்ளி நின்னு குரலை மட்டுமாவது கேட்டுக்கிறேன்.” ஏக்கத்துடன் சொல்லி நகர்ந்தார்.
“பாப்பா இப்பதான் சொல்லுச்சி. அவங்களும் நான் இவங்க பொண்ணை எங்கண்ணன் மகனுக்கு கட்டி வைக்கிறேன்னு வாக்கு குடுத்துட்டேன்னு வந்தா என்ன செய்ய போறிங்கன்னு யோசிச்சு வைங்க. கண்டிப்பா பதில் தேவைப்படும். ஒன்னு உங்க தங்கைய சமாளிக்க இல்லன்னா உங்க மகள சமாளிக்க” என்று கோபமாக சொல்ல ஒன்னும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார்.
“கண்ணு விளையாட்டில்ல இது. புரியுதா உனக்கு? உங்கண்ணன் வாழ்க்கைடா. வளரு வந்தா எல்லாம் தலைகீழா மாறிடும். தனியா இருக்கும்போது நமக்கு சாதகமா பேசற உங்க பதிப்பா.. அவங்க அம்மா, தங்கை முன்னாடி பால்வாடி குழந்தை போல திருதிருன்னு முழிச்சிட்டு நிப்பாரு” என ஈஸ்வர் அம்மா சாந்தா பேச
“அப்படி மட்டும் நடக்கட்டும், அதுக்குமேல அவரை என்கிட்ட இருந்து அந்த கடவுளாலகூட காப்பாத்த முடியாது. எங்கண்ணன் என்ன இவங்க வச்சி விளையாடுற பொம்மையா?” என்றவள்
“விஜிமா அங்கத்திய நிலவரம் எப்படி? உங்க கண்கண்ட தெய்வம் என்ன சொல்றாரு? தங்கச்சிய தாலாட்ட ரெடி ஆயிட்டாரா உங்க கணவர்ர்ர்….?” என இழுக்க
“கண்ணு விஜி உங்கிட்ட சொல்லலியா? ஒரு வாரமா ஒரே கெஞ்சல்தான், உங்கிட்ட சமாதானம் பேச சொல்லி. எங்கொழுந்தன் கல்யாணம் ஆன புதுசுல கூட புது பொண்டாட்டிய இப்படி சுத்தல, கொஞ்சல தெரியுமா? நல்லா டைம் பாஸாகுது எனக்கு. நீதான் இதெல்லாம் மிஸ் பண்ணிட்ட போடா.” என சாந்தா கலாய்க்க
“ஏய் வாலு! ரெண்டு பேரும் சேர்ந்து என்ன கிண்டல் பண்றிங்களா? இருங்க என் பசங்ககிட்ட சொல்றேன்” என சுஜாவின் அம்மா விஜயலக்ஷ்மி மிரட்ட
“அம்மா கொஞ்சம் கோபமா இருக்கறது போலவே இருங்க. ஒரு ஆள அவுட் பண்ணிட்டோம். இன்னும் ரெண்டு பேரை நம்ம பக்கம் இழுத்துட்டா ஈஸ்வர் அண்ணா கல்யாணம் முடிஞ்சதுபோல தான். சக்தி மாமாவை சப்போர்ட்க்கு சேர்த்து இருக்கேன். பார்ப்போம் வளரு இனியாவது வளருதான்னு,” என்ற சுஜா
“அம்மாக்களே உங்க மாமி-யார் எப்படி இருக்காங்க? வாய் இப்பவாச்சும் ஓய்வு எடுக்குதா? காடு போனாலும் போறப்போ பேசிக்கிட்டே தான் போகுமுன்னு நினைக்கிறேன். எதுக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத இடமா பாத்து வைக்க சொல்லனும். பேயா வந்தாலும் பேசியே கொல்லும்.” என நக்கலாக சொல்ல
“பாப்பா பெரியவங்கல அப்படி பேசகூடாது. இது தப்பு.” என்று சாந்தாவும்
“இத கேட்டா என்ன படிமானம் பழக்கி வச்சிருக்கன்னு எங்களுக்குதான் திட்டு விழும்.” என விஜியும் பதற
“தைரியம் இருந்தா உங்க மாமி-யாரையும், நாத்தனாரையும் எங்கிட்ட நேரா இதை சொல்லச் சொல்லுங்க பாக்கலாம்? யாருக்கு படிமானம் இல்லன்னு நான் ப்ரூ பண்றேன். முதுகுக்கு பின்னால பேசறது ஈசி. முன்னாடி வந்து பேச சொல்லுங்க.” என்ற சுஜா
“தாத்தாவை சமாளிக்க மகளுக்கு அழைப்பு வச்சிருக்கும் உங்க மாமி. வந்தா நீங்க எனக்கு தகவல் சொல்லுங்க நாங்க மூணு பேரும் ஊருக்கு வரோம் பேயோட்ட… பயப்படாம நல்லா சாப்பிட்டுட்டு தூங்குங்க.” எனவும் சொல்லி முடித்தாள் சுஜா.
~~~~~~~~~~~~~
தாத்தா தன் மகன்களிடம் கலந்தாலோசித்து, ரகசியமாக நீலாவின் ஜாதகத்தை வாங்க ஏற்பாடு செய்தார்.
ஏன் இப்படி என கேட்ட மகன்களிடம், “எதிர்ப்பு எந்த வழியில வரும் அப்படின்னு யோசிச்சு அந்தந்த வழிகளை சரி பண்றது நல்லது. முதல்ல ஜாதகத்துல ஆரம்பிப்பா உங்கம்மா.”
“வலுகட்டாயமா குடிக்க வைக்கும் பாப்பா. ஒருசில சமயம் பாப்பாகிட்ட எங்கம்மா சாயல பாக்குறேன்.” என்றார் தாத்தா.
பாட்டியோ மகளிடம் தங்களுக்கு சாதகமாக அமையும் குடும்பத்தில் இருந்து பெண் ஜாதகங்களை வாங்கி வரும்படி தகவல் அனுப்பினார்.
வளர் கேட்ட இடங்களில் எல்லாம் நாங்க இப்போ கல்யாணம் செய்யல. படிக்க வைக்கிறோம் என பதில் வந்தது. இருவரும் திகைத்தனர். போனில்
“இது எப்படிம்மா சாத்தியம்? எல்லாரும் ஒரே பதிலை சொல்றாங்க. இப்ப என்ன செய்யறது? உங்க சம்பந்தி வீட்டு வகையறாவுல பொண்ணு எடுத்தாங்க நாம செல்லா காசு ஆயிடுவோம். இப்பவே என்னை வந்த வா, வரலன்னா போ- ன்னு சொல்லறாளுங்க உன் மருமவளுங்க.”
“நான் சுபாஷுகூட சென்னை போறதுக்கு முன்னாடி இருந்தே அவளுங்க ரூமை பூட்டி வைச்சிக்கிறாளுங்க. நானும் வேலைகாரங்களுக்கு பயந்துன்னு நினைச்சேன். ஆனா என்னைய உள்ள விடக்கூடாதுன்னு பூட்டியிருக்காளுங்க.”
“எங்கம்மா வீட்டுல என்னைய உள்ள வரவிடாம பூட்டி வைக்க அவளுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்?”
“எனக்கு தோதான பொண்ணா பாத்து கட்டி வச்சி அவளுங்கள சோத்துக்கு சிங்கியடிக்க வைக்கல நான் கந்தசாமிக்கே பொறக்கல.” என சபதமிட்டாள் வளரு.
“சொத்து வேணுமுன்னா உங்க அண்ணனுங்க நான் சொல்லறதை கேக்கனும். உன் புருசனும் சொத்து வேண்டாமுன்னு சொன்னா கோவிலுக்கு எழுதி வச்சிட்டு போறேன். என்னைய யாரு கேள்வி கேக்க முடியும்” என பாட்டி படமெடுக்கும் நாகமாய் சீற
“ஐய்யோ அம்மா! என்னம்மா இப்படி பொசுக்குன்னு யேன் பொழப்புல மண்ணள்ளி போடற?அப்படி மட்டும் செஞ்சிடாத! என் புருசன் வேண்டாமுன்னு சொன்னாலும் என் மக பேருலதான் நான் எழுதுவேன்னு அடம்புடிச்சி எம்பேருல எழுதிடும்மா.”
“அம்மா பேருல இருக்க சொத்து மகளுக்குதான்னு சட்டமே சொல்லுதாமே. நீ அண்ணனுக்கு எழுதறேன், இல்ல கோவிலுக்கு எழுதறேன்னு சொல்லற.”
“ஏற்கனவே உன் பேத்தி, அந்த மவராசி பாதி வழிய மூடிட்டா. நீ மீதியும் மூட பாக்குற.”
“ அந்த சொத்த வச்சி நா நானூறு கனவு கண்டுகிட்டு இருக்கேன். என்னைய ஏமாத்திடாதம்மா. எனக்கு குடுக்காம மகனுங்களுக்கு குடுக்க நினைக்கிற பாத்தியா? உன்னைய நம்பிதான் நானிருக்கேன். என்னைய கைவிட்டுடாதம்மா.” என வளரும் வெக்கமின்றி கெஞ்ச
‘ச்சே’ என்றானது பாட்டிக்கு. “அதெப்படி கேக்காம போவாங்க? நாம சொல்லறத கேக்க மாட்டேன்னா விட்டுருவமா? கேக்க வைப்போம்! கவலைபடாம தைரியமா இருங்க” என்ற ஆறுதலை மகளிடம் எதிர்பார்த்த பாட்டிக்கு, அவளின் கெஞ்சல் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
இவளை நம்பியது சரியில்லையோ என்ற எண்ணம் பாட்டிக்கு தோன்றியது. “ச்சே என்ன இது? பயத்துல தப்பு தப்பா யோசிக்கிறோம். யேன் மவ சொத்து அண்ணனுங்களுக்கு போகாம தர்மத்துக்கு போகுதுன்னு கவலையில பொலம்புறத நான் தப்பா நினைக்கிறேன். யேன் புத்தியும் மழுங்கிப்போச்சி போல” என புலம்பிக்கொண்டே வயலில் இருந்து வீட்டுக்கு வந்தார் பாட்டி.
~~~~~~~~~~~~~~
சக்திவேல் சுஜாவுடன் கூட்டணி அமைத்து, வளருக்கு தண்ணிக்காட்டிக் கொண்டிருந்தார். சிலரிடம் நேரிலும், சிலரிடம் மறைமுகமாகவும் வளரிடம் மறுப்பு தெரிவிக்க செய்தது சக்திவேலும், சுஜாவும்தான்.
நீலாவிடமும் ஈஸ்வரை பேச வைக்க சுகனும், சுஜாவும் முயற்சிக்க , கல்யாணம் முடிவாகாமல் பேச மறுத்தான் அந்த நல்லவன்.
“அண்ணா, நம்ம பெரியண்ணாவுக்கு ‘இராமனுக்கு பிறகு தந்தைக்கு தலைவணங்கியே இருக்கும் மகன்’னு மெடல் ஏதும் தர்றேன்னு அரசாங்கம் சொல்லியிருக்குமா? இம்புட்டு நல்லவனா இருக்காங்க” என சுஜாவும், காயுவும் ஈஸ்வரை கலாய்த்தனர்.
“நீலாண்ணி இப்பவே அடிக்கவெல்லாம் மாட்டாங்க. தைரியமா பேசுங்கண்ணா” என சுஜா கிண்டலடிக்க
“குட்டிமா இந்த கல்யாணம் நடக்காம இருக்க வளரத்தை உயிரகூட குடுப்பாங்க. ஸோ நீலா எனக்குன்னு முடிவாகட்டும், அதுக்கப்புறம் போன்ன கீழ வைங்க கொஞ்சமுன்னு நீ சொல்லற வரை பேசிக்கிட்டே இருக்கேன் போதுமா? இப்ப ஆள விடு.” என்ற ஈஸ்வர்
“பால்ஸ் ஹோப் குடுக்கறதும் தப்புதான் பாப்பா. ரெண்டு பெரிய சீனப்பெருஞ்சுவர் மாதிரியான முட்டுகட்டையை நம் முன்னாடி வச்சிக்கிட்டு நம்பிக்கையா எப்படி இருக்க முடியும்?” எனவும் சொன்னான். தனிமையில்
“அண்ணா உங்க வாழ்க்கையில விளக்கேத்த வேண்டியது சுஜாவோட பொறுப்பு. கவலைய விடுங்க. ஜமாய்ச்சிடலாம்.” என சுகன் சொன்னாலும்
“குட்டிமாவை பணயப் பொருளா வைக்க சொல்லும் வளரத்தை. என்ன புரியலயா? அது சொல்ற ஒரு யூஸ்லெஸ் பெல்லோவுக்கு சுஜாவை கட்டித்தர சொல்லி மிரட்டும்”.
“குட்டிமாவோட வரக்கூடிய சொத்துக்காக வாய பிளந்துகிட்டு காத்திருந்துச்சி. பாப்பா நோ சொல்லி அது ஆசையில மண்ணள்ளி போட்டதால பயங்கர வெறியில இருக்குது.”
“திஸ் ஆர் தட்? எது வசதின்னு எகிறும் பாரு.”
“உன்னைவிட எனக்கு அத்தையை நல்லா தெரியும். நம்ம மூணு பேருல ஒருத்தர் ஏதாவது பெரிய இழப்பை சந்திச்சுதான் ஆகனும்.”
“வாழப்போறது என்னோட சொல்லாத காதலா குட்டிமாவான்னு ஒரு கொசின் வரும்போது நான் குட்டிமாவதான் ச்சூஸ் பண்ணுவேன்.”
“இழக்கப்போறது உறுதி. அது இதுவா இருந்துட்டு போகுது. குட்டிமாகிட்ட அமைதியா இருக்க சொல்லு சுகன்” என ஈஸ்வர் வருத்தத்துடன் சொன்னான்.
“அண்ணா சுஜாங்கிற ப்ளைட் டேக் ஆப் ஆயி ரொம்ப நேரம் ஆச்சி. ரன் வே தாண்டி வானத்துல பறக்கபோற நேரத்துல மறுபடியும் லேன்டிங்கா? நோ வே. அதனால இனி நடக்கறத நல்லதா நடத்திக்க நாம முயற்சி பண்ணுவோம்.” என்ற சுகன் ஹாஸ்டல் கிளம்பினான்.
ஓரிரு நாளில் தாத்தா, மகள் வீட்டையும், பேரப்பிள்ளைகள் மூவரையும் ஊருக்கு வர சொன்னார். காரணம் ஈஸ்வருக்கு கல்யாணம் செய்வது பற்றி பேச எனவும் சொல்லியே கூப்பிட, வளரிடம் அவருக்கு பிடித்த வகையில் எந்த பெண் ஜாதகமும் கிடைக்காததால் எதையாவது பிடித்து கரையேற துடிக்கும் மூழ்குறவன் நிலையில் இருந்தார்.
வந்ததும் “அப்பா என்னைய கேக்காம எப்படி நீங்க ஈஸ்வருக்கு பொண்ணு பாக்கலாம்?” என ஆரம்பிக்க
“உங்ககிட்ட எதுக்கு கேக்கனும்? நீங்க எங்கண்ணனுக்கு செவிலித்தாயா வேலை பாத்திங்களா? அப்படியே இருந்தாலும் வேலைக்கு சம்பளம் குடுத்திருப்பாங்களே எங்கம்மா” என அழுத்தி சொன்னாள் சுஜா. அதை கவனிக்காதது போல
“எங்க அண்ணங்கிட்ட எனக்கில்லாத உரிமையா? என்னை கேக்காம எப்படி இதை ஆரம்பிச்சிங்க?” என வளர் எகிறிக் கொண்டு வர
“உங்க மகனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கும் போது எங்கப்பாங்களை கேட்டுத்தான் ஜாதகத்தை எடுத்திங்களா? இல்ல பொண்ணு பாக்க கூட்டிட்டு போனிங்களா? இல்லையில்ல அப்புறம் இங்க என்ன பண்ணாட்டு? அமைதியா உக்காருங்க” சுஜா அழுத்தமாக சொல்ல
“அம்மா இந்த சின்னகழுதை என்னைய எப்படி பேசறான்னு பாருமா. நீயாவது அவள அடக்கு.” என வளர் பாட்டியிடம் முறையிட
ஏற்கனவே பேத்தியிடம் பேச முயன்று முடியாத கோபத்தில் இருந்த பாட்டி, ஈஸ்வரிடம் திரும்பி, “எங்கடா சம்பளம்? ரெண்டு மாசமா ஏன் குடுக்கல? எடுத்துட்டு வா.” என்க, அவன் சுஜாவை பார்க்க, சுஜா “நான் பார்த்துக்கிறேன்” எனஜாடை காட்டி தாத்தாவிடம் திரும்ப
“தாத்தா எங்கண்ணன் வேலை செஞ்சி வாங்கின சம்பளம் என்னிடம் இருக்கு. எங்கண்ணன் வேலைக்கு போய் மூணு வருசமா குடுத்த சம்பளத்துக்கு கணக்கு எனக்கு இப்ப வேணும். நீங்க எல்லாத்தையும் தனித்தனியா தான எழுதி வைப்பிங்க. காட்டுங்க” என்றவள்
“ம் சீக்கிரம் முதல்ல இந்த பஞ்சாயத்தை முடிங்க” என்றாள்.
“பாப்பா எங்கிட்ட ஈஸ்வர் சம்பள பணம் ஏதும் இதுவரை வரல. அவன் அப்பங்கிட்ட குடுப்பானா இருக்கும். அதுக்கு எங்கிட்ட எதுக்கு கணக்கு கேக்கற? வராத பணத்துக்கு நான் எப்படி கணக்கு குடுக்க?” என்றார் தாத்தா.
“பசுப்பா கணக்கு இருக்கா உங்ககிட்ட?” வினயமாக கேக்க
“ஏன் பாப்பா உனக்கு தெரியாதா? இங்க எல்லாம் அப்பாவும், அம்மாவும்தான் கணக்கு வழக்கெல்லாம். அதனால நான் மொத மாசமே சம்பளத்தை எங்கம்மாகிட்ட குடுத்துட்டு செலவுக்கு வாங்கிக்க சொல்லிட்டேன். நீ உங்க பாட்டிக்கிட்டதான் கணக்கு கேக்கனும் கண்ணு” என பல நாட்களாக பேசாத மகள் தன்னிடம் பேசிய பரவசத்தில் வேகமாக கூறினார்.