புதுப்புது அர்த்தங்கள்….   நாள்-16

அத்தியாயம் 46

ரஞ்சனி……

ரஞ்சனி என்னதான் தைரியமான பெண்ணென்றாலும் , மாலை வீட்டுக்கு போய் கால்களை கலட்டும் போது ஏற்படும் வலி , வீட்டில் ஸிடிக்கின் துணையோடு உலா வரும்போது , தூங்கி இழுந்த பின் கழிப்பறைக்குப் போக ஸிடிக்கின் துணையை நாடும் போது துவண்டு தான் போனாள்.

சில நேரங்களில் வெளியே செல்லும் போது அங்கே கிடைக்கும் இரக்கம் மற்றும் கிண்டல் பார்வைகள் , அவளைச் சோர்வடையத்தான் செய்தன  . 

பல நேரங்களில், ரஞ்சனி தைரியமாக இருப்பது போல நடந்து கொள்வதை  அவள் பெற்றோர்கள் உணர்ந்தே இருந்தார்கள் . கடவுள் சீக்கிரம் கண் திறக்கவேண்டும் . அவள் முழுமையாக மாற வேண்டும் என்ற வேண்டுதலோடு காத்திருந்தனர் .  

நாட்கள் ஓடியது. கிட்டதட்ட இந்த அலுவலகத்திற்கு வந்து இரண்டு வருட காலம் ஆக, ரஞ்சனிக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது . இப்போது ரஞ்சனி மற்றும் ஹரிணிக்கு கீழ் புதிய ஊழியர்கள் இணைந்தனர் . அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டனர் . இப்போது ரஞ்சனி ரகுவிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யத் தொடங்கியிருந்தாள் .

ரஞ்சனிக்கு, அருகில் இருந்த ரகுவைப் பார்க்கப் பார்க்க , அவன் அறிவு , திறமை , வேலை வாங்கும் விதம் , ஊழியர்களை நடத்தும் விதம் , பெண்களைப் பார்க்கும் பார்வை , அவன் கண்ணியம் என்று அனைத்தும் அவளைக் கவர்ந்தது. ஒரு நாளும் அவள் குறையைச் சுட்டிக் காட்டாமல் ,  குறைவாக நடத்தாமல் , சமமாகப் பேசுவது என்று அனைத்தையும் மிகவும் பிரமிப்பாகப் பார்த்தாள் . வீட்டில் எப்போதும் இவன் புகழே பாடினாள் .

இந்த அலுவலகம் அவளுக்குள் அந்த மாற்றத்தை விதைக்க ,  ரஞ்சனியின் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ந்தனர் . நிச்சயமாக சுவாமிநாதனுக்கும், ரகுவிற்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டனர்.

அந்த வாரம் ரஞ்சனி, தன் தோழி  திருமணத்திற்காக, மதுரை வந்திருந்தாள்.

ரஞ்சனியின் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு , இது தான் சரியான தருணம் என்று எண்ணி , மெதுவாக  ராமநாதன் ரஞ்சனியிடம் திருமணத்தைப் பற்றி பேச ,

 ரஞ்சனி  தீர்மானமாக மறுத்துவிட்டாள் .

“ஏன் ரஞ்சிம்மா ?” என்று கண்ணில் ஏக்கத்துடன் கோகிலா கேட்க,

“எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் அம்மா . நான் திருமணத்திற்குத் தயாராக இல்லை . அந்த நடைமுறையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் நான் தயாராக இல்லை . இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன் . அதைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை….” என்றாள் கண்ணில் வலியோடு.

இருவருக்கும் அவளுடைய பயம் , வலி புரிந்தது . அவளுக்கு விழுந்த அடி அப்படி என்பதும் புரிந்தது . அதற்காக அப்படியே விட முடியாதே… . அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கவலை அவர்களுக்கு இருந்தது . அதனால் அவளிடம் ஏதாவது உறுதி வாங்க வேண்டும் என்று நினைத்தனர் .

“உனக்கு முடித்தால் தானே ராகவ்விற்கு பார்க்க முடியும் ரஞ்சிம்மா…”  என்று கோகிலா தயங்க ,

“முதலில் அண்ணாவிற்குப் பார்க்கலாம்…..”

“நாங்களும்  சொல்லிப் பார்த்து விட்டோம் . அவன் உனக்கு ஒரு நல்வாழ்வு அமையாமல் , தனக்கு வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிறான்…” என்று ராமநாதன் வருத்தப்பட ,

“அண்ணன் வரட்டும் அப்பா , நான் பேசுகிறேன்… .”

மறுநாள் ராகவ் இருக்கும் பொழுது , ரஞ்சனியே பேச்சை ஆரம்பிக்க , ராகவ் மறுத்தான் . 

“அண்ணா பிளீஸ் ….”

“இல்லை ரஞ்சு , இதில் என்னை வற்புறுத்தாதே , உன் வாழ்வு சரியாகாமல் ,  என் வாழ்வைப் பார்த்து கொண்டு போவதற்கு  நான் ஒன்றும் சுயநலவாதி கிடையாது .”

“பைத்தியகாரத்தனமாகப் பேசாதே , இப்போதே உனக்கு இருபத்தி ஒன்பது வயதாகிவிட்டது . மேலும் தள்ளினால் நன்றாக இருக்காது . அப்புறம் உன்னை கிழவன் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள்…” என்று கேலியாக தன் கருத்தை ரஞ்சனி வலியுறுத்த ,

“அதெல்லாம் பரவாயில்லை . எனக்கு ஒரு கிழவி கிடைப்பாள் . அவளை கட்டிக் கொள்கிறேன்…” என்று முடித்தான் .

“அண்ணா பிளீஸ்….” என்று மீண்டும் ஆரம்பிக்க ,

“நீ என் நிலையில் இருந்து யோசி , உனக்கு என் நியாயம் புரியும்….”

“ஏற்கனவே என்னால், உனக்கு இரண்டு வருடங்கள் தள்ளிப் போய் விட்டது . இன்னும் தள்ளினால்….. எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக உள்ளது அண்ணா . கொஞ்சம் யோசி பிளீஸ் …”

“புரியுது ரஞ்சு , ஆனால் உன் வாழ்வு சிறக்காமல் நான் என் வாழ்க்கையைப்  பார்த்து கொண்டேன் என்றால் என்னை குற்ற உணர்ச்சி கொன்றுவிடும்.  என்னால் நிம்மதியாக வாழ முடியாது….” என்றான் அவனும் பிடிவாதமாக .

எப்போதும் தங்கை  கேட்டாலே விட்டுக் கொடுப்பவன் . அவளின் நல்வாழ்விற்காக இறங்காமல் நின்றான் .

இடைபுகுந்த ராமநாதன் , “நான் ஒன்று சொன்னால் இருவரும் கேட்பீர்களா?”

‘இருவரும் சரி’ என்று தலையாட்ட , “குறைந்தபட்சம் ஒரு வருடத்தில் உன்னைத் திருமணத்திற்குத் தயார்படுத்திக் கொள்வேன் என்று வாக்கு கொடும்மா . அடுத்த வருடத்தில் பார்க்க ஆரம்பிக்கலாம் என்றும் , நல்ல வரன் வந்தால் உடனே சம்மதிப்பேன் என்று எங்களுக்கு உறுதி கொடு ரஞ்சிம்ம….” 

 அதே போல், “நீயும் தங்கை உறுதி  கொடுத்தால் உடனே உன் திருமணத்திற்குச் சம்மதிக்க வேணடும் ராகவ்…” என்று ராமநாதன் இருவரையும் லாக் செய்ய ,

வேறு வழியின்றி, இருவரும் சம்மதிக்க , பெற்றவர்கள் நிம்மதியானார்கள் . பெண் தேடும் படலம் தொடங்கியது .

அத்தியாயம் 47

சந்தியா……

இங்கே வாழ்க்கை எந்த மாறுதலும் இல்லாமல் போய் கொண்டிருக்க, குழந்தைக்குப்  பத்து மாதங்களாக, அவன் எட்டு வைத்து நடக்கத் தொடங்கியிருந்தான் .  நடக்கப் பழகிய ஆர்வத்தில் எதையாவது பிடித்து எழுவது , பிடித்துக் கொண்டே நடப்பது என்று துறுதறுவென ஏதாவது செய்து கொண்டே இருந்தான் . 

சந்தியா அவன் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள் .

வீட்டில் தோட்டம் என்று எதுவும் இல்லாத போதும் கார் நிறுத்தும் இடத்தை ஒட்டிக் கொஞ்சம் காலி இடம் இருந்தது  . மேலும் மாலையில்அங்கு கார்களும் இருக்காது . அந்த நேரம் குழந்தையுடன் அங்கே விளையாடுவதை வழக்கமாக்கி இருந்தாள் . 

அப்படி ஒரு நாள் விளையாடிக் கொண்டிருக்கும் போது , சுதா கடைக்குப் போக கிளம்பி வர , அவளிடம் வாங்க வேண்டியவற்றைச் சொல்ல ஆரம்பித்தாள். 

அப்போது மகனின் மீது இருந்த கவனம் சற்று குறைய , அவன் தடுக்கி விழ , கார் பார்க்கிங்கில் இருந்த தூண் முனையில் அவன் தலை இடித்தது . வலது புருவத்திற்குச் சற்று மேலாக நெற்றியில் அடிபட்டு , ரத்தம் வழிய தொடங்கியது , சந்தியா பதறினாள் .

குழந்தை அழும் சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜி , “கண்ணே ராசா…. “என்று படபடக்க , 

சந்தியா மேலும் பதட்டமடைந்தாள்.  பின், மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்,  வேகமாகக் குழந்தையை  சுதாவிடம் கொடுத்து , அவள் துப்பட்டாவைக் கொடுத்து நெற்றியை அழுத்திப் பிடிக்கச் சொல்லி விட்டு ,  காவலரை  ஆட்டோ பிடிக்க பணித்து விட்டு , உள்ளே ஓடிப்போய் பணமும் , இரண்டு மூன்று கை குட்டைகளையும் எடுத்து வந்தாள் . 

‘ராஜியிடம் ஏதாவது உதவி கிடைக்குமா?’ என்று பார்க்க , அடுத்து செய்ய வேண்டியவற்றைப் பற்றி யோசிக்கும் நிலையில் இல்லாமல், பதறி புலம்பிக் கொண்டிருந்தார் .

ஆட்டோ வர , சுதாவும் , குழந்தையின் நெற்றியை துணி கொண்டு அழுத்திப் பிடித்தபடி, சந்தியாவும் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குப் போனார்கள். 

இரண்டு தெரு தள்ளி இருக்கும் மருத்துவமனைக்குப் போக , அங்கு மருத்துவர் காயம் சற்று ஆழமாக இருக்கிறது . அதனால் இரண்டு தையல் போட வேண்டியது இருக்கும் என்று சொல்லி விட்டு , அதற்கான வேலைகளில் இறங்கினார் .

 குழந்தையின் கை கால்களை  ஒருவர் பிடித்து கொள்ள , மற்றொருவர் தலையை அசையாமல் பிடிக்க , மருத்துவர் வேலையை முடித்தார் .

வெளியே குழந்தையின் அழு குரல் கேட்டு, சந்தியா  கண்ணீர் வடித்தாள். தன் கவனக் குறைவை நினைத்து வருந்தினாள் . 

 வெளியே வந்த மருத்துவர், இவள் நிலை கண்டு, “ பயப்பட ஒன்றுமில்லை. சீக்கிரம் சரியாகி விடும். வலி நிவாரணியும் , தூக்கத்திற்கு மருந்து கொடுத்திருக்கிறேன். இந்த மருந்துகளை மூன்று நாட்கள் கொடுத்து விட்டு வாருங்கள்..” என்று அனுப்பி வைத்தார்.

ஆட்டோவில் மீண்டும் வர , அப்போது விஸ்வா பதட்டத்தோடு சந்தியாவை அழைத்து, “ என்னாச்சு சந்தியா… ?”

அவள் அழுதபடி , அனைத்தையும் கூற,

“கடையில் இருந்து கிளம்பி விட்டேன் . நான் கூப்பிட வருகிறேன் சந்தியா…”

“வேண்டாம் வீட்டுக்குத் தான் போய்க் கொண்டிருக்கிறேன் .”

“சரி , நேராக வீட்டுக்கு வருகிறேன்….” என்று போனை வைத்தான் .

அத்தியாயம் 48

சந்தியா வீட்டுக்கு வர ,  குழந்தையின் கட்டைப் பார்த்து அரற்ற தொடங்கினாள் ராஜி .

 சந்தியா எதுவும் பதில் பேசாமல் , குழந்தையை தங்கள் அறையில்  படுக்க வைத்தாள் .

விஸ்வாவும் சங்கரனும் வரும் சத்தம் கேட்க , சந்தியா வெளியே வந்தாள் .

சந்தியா கலங்கிய கண்களுடன் கணவனைப் பார்க்க , அவன் முழு கவனத்தையும் ராஜி பிடித்துக்கொண்டு  புலம்ப  , 

சங்கரன் சந்தியாவிடம் விசாரிக்க , “பயப்பட ஒன்றுமில்லை மாமா…” என்று ஆரம்பிக்க ,  

இடை புகுந்த ராஜி , “என்ன ஒன்றும் இல்லை , நெற்றியில் தையல் போட்டிருக்கிறார்கள் ,ஒன்றும் இல்லையாம்….” என்று பொங்க ,

“ராஜி கொஞ்சம் பொறுமை ……” என்று சங்கரன் சொல்ல ,

“எப்படிங்க பொறுமையாக இருப்பது ? பிள்ளையைக் கவனிப்பதை விட , வேறு என்ன வேலையிருக்கிறது , அதைக் கூட சரியாக செய்யவில்லை . எதற்கும் லாயக்கு இல்லை , கொஞ்சம் கீழே அடிபட்டிருந்தால் கண் போயிருக்கும் . ஏதோ நான் செய்த புண்ணியம் , என் பேரன் தப்பிவிட்டான்…” என்று கத்த,

“அம்மா….” என்று விஸ்வா அமைதிப்படுத்த முயல ,

“மனசே ஆறவில்லை விஸ்வா , தையல் போடும்படி ஆகிவிட்டதே , குழந்தை எப்படித் துடித்திருப்பான்…”என்று அதே பல்லவியை பாட ,

அம்மாவின் பேச்சால் உந்தப்பட்டு,“கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே சந்தியா…” என்று விஸ்வா  கண்டிக்க  ,

சந்தியாவிற்கு அழுகை வர , எதுவும் பேசாமல் அறைக்குள்  சென்று விட்டாள் .

“விஸ்வா…..” என்று கண்டிக்கும் தோணியில் சங்கரன் கூப்பிட ,

உடனே விஸ்வா , “குழந்தை எவ்வளவு கஷ்டபட்டிருப்பான் அப்பா..” என்று ராஜி சொன்னதையே திருப்பிச் சொல்ல ,

“எல்லோரும் மனிதர்கள் தானே , சில நேரம் கவனக்குறைவு ஏற்படுவது சகஜம் தான்  விஸ்வா .”

“அப்பா…” 

“மேலும் அவள் பதட்டப்படாமல் , நமக்காகக் காத்திருக்காமல், அடுத்த செய்ய வேண்டிய காரியங்களைச் சரியாகச் செய்திருக்கிறாள் . அது ரொம்ப  நல்ல விசயம்…” என்று கோடிட்டு சொல்லிவிட்டு, ஒரு அதிருப்தி பார்வையை வீசிவிட்டு ,  

“முதலில் குழந்தையைப் போய் பார்…” என்று நகர்ந்தார் .

அப்பா சொன்ன பிறகு , வேகமாக குழந்தையை காண, உள்ளே சென்றான் .

பிள்ளையைப் பார்த்தவுடன் விஸ்வாவிற்கு தனிந்திருந்த கோபம் ஏற , சந்தியாவை முறைத்து விட்டு, அமைதியாகப் பிள்ளையைப் பார்த்தபடி அமர்ந்து விட்டான் .

சந்தியா வழக்கம் போல், உள்ளே வந்த பின், பேசுவான் , சமாதானம் சொல்வான் என்று எதிர்பார்த்திருக்க , 

அவன் அமைதி , அவளை மேலும் வருத்த , எதுவும்  பேசாமல் சந்தியாவும் இருந்துவிட்டாள் . ஆனால் மனதிற்குள் குமறினாள்.

அவளே குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற பயம் , படபடப்பு , வருத்தம் என்று பல்வேறு உணர்ச்சியில் இருக்க , 

விஸ்வாவிடம் இருந்து , “விடும்மா… பார்த்துக் கொள்ளலாம், தைரியமாக இரு….” என்று ஆறுதலான வார்த்தைகளை எதிர்பார்த்திருக்க,

ஆனால்,அவனுடைய கத்தலும் , அதன் பின்னான மௌனமும் நம்பிக்கையை உடைத்திருக்க , மனதிற்குள் நொறுங்கிப் போனாள் .  

ராஜி அத்தோடு விடாமல் மறுநாள் தூத்துகுடிக்குப் போன் செய்து விவரத்தைச் சொல்ல ,

அதன்பின் அவர்களும் இவளுக்கு மாறி மாறி போன் அடித்து , சில பல திட்டுகளையும் , அறிவுரைகளையும் அரங்கேற்றினர்.

ராஜி அத்தோடு நிறுத்தாமல் , எப்போதும் குழந்தை மீதும்  , சந்தியா மீதும் பார்வையை வைத்துக் கொண்டே இருந்தார் . 

“இப்படிச் செய்யாதே…. , அப்படிச் செய்யாதே…” என்று உத்தரவுகள் வந்து கொண்டே இருந்தது . எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார் . 

‘சும்மாவே தன் பேச்சு எடுபடாது , மேலும் அந்த நிகழ்வுக்குப் பின் , வாய்ப்பே இல்லை…’ என்பது புரிந்தது. மேலும் கணவனிடம் சொல்லி எதுவும் ஆக போவதில்லை என்பதால், மனதிலே வைத்துப்  புழுங்கத் தொடங்கினாள்.

கணவன் மேல் இருந்த அன்பு, பாசம் , பற்று மட்டுமே , அவளை இந்தக் குடும்பத்தோடு இணைத்திருக்க , நாட்கள் போகப்போக, இப்போது அதிலும் பெரிய ஓட்டை விழ ,  சந்தியா மொத்தமாக மௌனமானாள் .

தொடரும்…..