தோசைக்கு மொச்சைக்காய் குழம்பு வைத்துக்கொண்டு சாப்பிட்டான்.

“எங்களுக்கெல்லாம் சட்னி, உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா?” என வம்பு செய்தாள்.

“சில பேருக்கு நைட்ல மொச்சை சேராது ஆச்சி”

“டேஸ்ட் பண்ண கொஞ்சம் போல கொடுத்திருக்கலாம்ல?”

“அதுக்கென்ன இப்ப இன்னொரு தோசை குழம்பு வச்சு சாப்பிடுங்க”

“ஒரு வாய் கொடுங்க, போதும்” என அவள் சொல்ல, அவன் தயக்கமாக அவளை பார்த்தான்.

அவன் கையில் எடுத்து வைத்திருந்த உணவு அப்படியே இருந்தது. உணவிருந்த அவனது கையை அவளே எடுத்து தன் வாய்க்கு அருகில் எடுத்து செல்ல, அவனும் உடன் பட்டான்.

அவன் ஊட்டிய முதல் வாய் உணவை மனதிலும் உள் வாங்கிக் கொண்டே சுவைத்து சாப்பிட்டாள். அடுத்து அவனாகவே ஊட்டி விட்டான்.

மீண்டும் அவன் ஊட்ட வரும் போது, தோள்களை உயர்த்தி பெருமூச்சு விட்டவள், “இப்ப போய் வயிறு ஃபுல் ஆகிடுச்சே” என வருத்தமாக சொன்னாள்.

“அப்படியா இது மட்டும்?” என அவன் கேட்க, அவன் கையை அவனது வாய்க்கு எடுத்து சென்று அவனையே சாப்பிட வைத்தாள்.

இடது கையால் விறகை சரி செய்து கொண்டே சாப்பிட்டான். இன்னொரு தோசை அவள் ஊற்றி முடிக்கவும் போதுமென சொல்லி விறகை வெளியில் இழுத்து வைத்து விட்டான்.

குத்துக் காலில் முகத்தை சாய்த்துக் கொண்டு அவனை பார்த்திருந்தாள். காற்று வீசவும் அடுப்பிலிருந்து கரி பறந்து வந்து அவனது கன்னத்தில் ஒட்டிக் கொண்டது.

“முகத்துல கரி பார்த்தி, இருங்க இழுப்பிடாதீங்க, நான் சரி பண்றேன்” என்றவள், அவனது வேஷ்டி முனை கொண்டே அவனின் கன்னத்தை மென்மையாக துடைத்து விட்டாள்.  பின் விரல் கொண்டு துடைத்து விட்டாள். பேந்த பேந்த விழித்தான் அவன்.

“ஷ்ஷ்ஷ் பார்த்தி! ஈஸி” என அவள் சொல்லவும் சாப்பிடுவதை தொடர்ந்தான்.

குத்துக்காலில் முகத்தை நிமிர்த்தி அமர்ந்து, குதி கால்களை மட்டும் தரையில் பதித்து முன்னும் பின்னும் ஆடியசைந்து கொண்டே, “இந்த லைஃப் சென்னைல மிஸ் பண்ணிருப்பீங்கதானே பார்த்தி?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம்…  என்ன கேட்டீங்க ஆச்சி?” என்றான்.

“நான் கேட்டது கவனிக்காதபடி அப்படியென்ன நெனப்பு ஓடுது?” எனக் கேட்டாள்.

அவன் சொல்ல மறுக்க, அவள் விடாப் பிடியாக கேட்டாள்.

“உயிருள்ள மெழுகு பொம்மை இப்படி என் உயிரை வாங்குதேன்னு நெனச்சேன்” என நினைத்ததை அப்படியே சொல்லி விட்டவன், அவளை இயல்பாக சந்திக்க முடியாமல் கண்களை மூடி முகத்தையும் சுருக்கிக் கொண்டான்.

உதடுகள் மடித்து சிரிப்பை அடக்கினாள்.  ஒரு கண்ணை மட்டும் திறந்து அவளை பார்த்தவன் அங்கிருக்க முடியாமல் எழப் போனான்.

“பார்த்தி!” என அதட்டி அழைத்து அவனை தன்னருகிலேயே இருக்க வைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் பேசி அவனை இயல்பு நிலைக்கு மாற்றி விட்டுத்தான் விட்டாள்.

தாத்தா பாட்டி ஹாலில் உறங்க ஏற்பாடு செய்து கொடுத்தான். துரைக்கண்ணு வரவும் அவரோடு திண்ணையில் அமர்ந்து இரவு உணவை முடித்தார் சரஸ்வதி.

சரஸ்வதி ஒரு பக்க திண்ணையில் படுத்துக் கொள்ள, வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டார் துரைக்கண்ணு.

பார்த்தி அறைக்கு வந்து போது இரவு உடைக்கு மாறியிருந்தாள் சுஹானா. அது கிராமம், அதற்கு தக்க உடைகள் எடுத்து வைத்துக் கொள் என சென்னையிலிருந்து கிளம்பும் போதே சொல்லியிருந்தார் பாட்டி. பருத்தியிலான பேண்ட் சட்டைதான் போட்டிருந்தாள்.

“என்ன ஆச்சி இப்படி கூட ட்ரெஸ்லாம் நைட்ல போடுவீங்களா? ஏதும் எடுத்து வைக்க மறந்திட்டு இப்படி போட்டு சமாளிச்சிக்கிறீங்களா?” எனக் கிண்டலாக கேட்டான்.

“நீங்க என்கிட்டருந்து வேற ஏதும் எதிர் பார்க்குறீங்களா பார்த்தி? ஓபனா சொல்லுங்க” என சொல்லி அவனை சற்றே அதிர விட்டாள்.

“உங்களுக்கு வசதியா உள்ளது போட்டுக்கோங்க, காலைல மாத்திக்கலாம், அதைத்தான் சொல்ல வந்தேன்” என அவன் விளக்கம் சொல்ல, “உங்களோட ரொம்ப கஷ்டம் பார்த்தி!” என்றாள்.

அவளின் கிண்டலை கண்டு கொள்ளாதது போல பாய் விரித்து அதன் மேல் இரண்டு மூன்று போர்வைகளை விரித்துப் போட்டவன், “படுத்து பாருங்க ஆச்சி, இல்லைனா இன்னும் துணி விரிக்கிறேன்” என்றான்.

“இது போதும், இது இல்லைனா கூட அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்” என்றாள்.

அவன் ஆடை மாற்றாமல் அப்படியே படுக்க போனான். சென்னையிலிருந்த போதும் சரி, சட்டை போட்டுக் கொண்டுதான் உறங்குவான். இன்று தயக்கம் உடைத்து கேட்டு விட்டாள்.

“அது…” என இழுத்தான்.

“எப்பவும் இப்படித்தான் தூங்குவீங்கன்னா பரவாயில்லை, என்கிட்ட கூச்சம்னா எவ்ளோ நாளைக்கு? கமான் பார்த்தி நானே உங்கள்ட்ட ஃப்ரீயா இருக்கையில உங்களுக்கு என்ன?” எனக் கேட்டாள்.

“போக போக சரியாகும் ஆச்சி”

“நாமதான் சரி செய்யணும் பார்த்தி, எப்பவும் எப்படி தூங்குவீங்களா  அப்படி ரெடி ஆவீங்களாம்” என்றாள்.

“படுத்தாதீங்க ஆச்சி”

“வாயால சொன்னாலாம் கேட்க மாட்டீங்க, உங்களை…” என்றவள் நெருங்கி வந்து அவன் சட்டைப் பொத்தானில் கை வைத்தாள்.

“ஆச்சி ஆச்சி…” என பதறி விலகினான்.

இடுப்பில் கைகள் வைத்துக்கொண்டு அவள் முறைப்பாக பார்க்க, அவளை பாவமாக பார்த்துக் கொண்டே சட்டையை கழற்றி வைத்தான்.

‘அவ்ளோதானா?’ என்பது போல அவள் புருவங்களை உயர்த்த, “ரொம்ப மோசம் ஆச்சி நீங்க” என்றான்.

“ஹெல்ப் பண்ணவா?” என அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.

எழுந்த சிரிப்போடு பனியனையும் நீக்கி வெறும் வேஷ்டியுடன் படுக்க வந்தான். அவள் வேண்டுமென்றே அவனது வெற்றுடம்பை குறுகுறுவென பார்த்தாள்.

தன் கை கொண்டு அவளின் கண்களை மூடியவன், “போதும் குறும்பு, வாலை சுருட்டி வச்சிட்டு சமத்தா படுப்பீங்களாம்” என்றான்.

அவனது கையை விலக்கி விட்டவள், “என்கிட்ட எப்பவும் ஃப்ரீயா இருங்க பார்த்தி, படுங்க” என சொல்லி படுத்து விட்டாள்.

அவனும் படுத்தவன் போர்வையை எடுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டான்.

“ஹப்பா டூ மச் பார்த்தி, இது எதுக்கு? என்கிட்டருந்து உங்களை காப்பாத்திக்கவா? என்ன செஞ்சிடுவேன்னு இப்படி?” எனக் கேட்டாள்.

போர்வையை தள்ளி வைத்தவன் இரண்டு கைகளையும் உயர்த்தி, “போதுமா ஆச்சி?” என வாய் கொள்ளா சிரிப்போடு கேட்டான்.

இருவரும் உறங்க முற்பட்டனர். அவளுக்கு புதிய இடம் என்பதாலோ என்னவோ கண்கள் அசருவேனா என சண்டித் தனம் செய்தன.

இடையில் விழித்தவன், “ஏதும் தொந்தரவா ஆச்சி?” எனக் கேட்டுக் கொண்டே எழப் போனான்.

“படுங்க படுங்க, தொந்தரவெல்லாம் இல்லை, என்னவோ தூக்கம்தான் வர மாட்டேங்குது” என்றாள்.

“ஓ என்ன பண்ணலாம்?”

“ஏதாவது பேசிட்டு இருங்க, தூக்கம் வருதான்னு பார்க்கிறேன்” என்றாள்.

அவனுக்கு நல்ல தூக்க கலக்கம். கொட்டாவி விட்டுக் கொண்டே, “என்ன பேச ஆச்சி?” எனக் கேட்டான். பின் அவனே கதை சொல்கிறேன் என நாட்டுப்புற கதை ஏதோ சொல்ல ஆரம்பித்தான். முழுதாக இரண்டு நிமிடங்கள் கூட அவன் சொல்லியிருக்கவில்லை, அவனை மீறி உறக்கத்திற்கு சென்று விட்டான்.

விழிகளை நன்றாக திறந்து வைத்துக் கொண்டு அவனையே பார்த்திருந்தாள். ஒரு கட்டத்தில், “ஸாரி பார்த்தி, என்னால ரெஸிஸ்ட் பண்ண முடியலை” என்றவள் மெல்ல தன் கை எடுத்துச் சென்று அவன் மார்பில் பதித்துக் கொண்டாள்.

அவனது உறக்கம் கலையுமோ என அவனை உணர்ந்திருந்த தன் கையை அசைக்க கூட அவளுக்கு பயமாக இருந்தது. சில நிமிடங்கள் சென்றுதான் மெதுவாக தன் கையை அவனது இடப்பக்கமாக நகர்த்தினாள். அவனது சீரான இதயத் துடிப்பை உணர்ந்தாள். அங்கேயே கையை நிலை நிறுத்தி கண்களை மூடிக் கொண்டாள்.

அவனது லப் டப்’பை எண்ணிக் கொண்டே உறங்கிப் போனாள்.