பிறந்த குழந்தையை பொத்தி வைப்பது போல், தன் பிள்ளைகளை பொத்தி வைத்திருந்தாள் சரண்யா. அந்த நேரத்தில், அந்த இடத்தில் பிள்ளைகளை அவளால் சமாளிக்கவே முடியவில்லை. இதுவரை விஜியிடம் இவ்வளவு பிடிவாதத்தை பார்த்ததே இல்லை. அஜி அளவுக்கு சமத்து இல்லை, கொஞ்சம் பிடிவாதம், அடம் எல்லாம் சின்ன குட்டியிடம் உண்டு தான். ஆனால், இன்று அளவு மீறி விட்டதாக தோன்றியது.
பொதுவாக நடுத்தர வர்க்கத்துக்கு கீழ உள்ள மக்கள் இந்த நிலையை கடந்தே வந்து இருப்பார்கள். அந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு, தங்கள் வறுமை நிலை புரியும் முதல் படி இது தான்… கேட்டது எல்லாம் கிடைக்காது என்று உணர முடியாமல், முதலில் அழுது, அடம் பண்ணி… பின்பு வலியுடன் தான் சூழ்நிலையை எதிர் கொள்ளும்.
வெளியில் வளரும் குழந்தைகளுக்கே வலி அதிகம் எனும் போது, ஒரே வீட்டில் வளரும் குழந்தை தினம் ஒரு சூழலை எதிர்கொள்ள தான் வேண்டும்.
தற்போது குழந்தைகள் இருவரும் தங்கள் சூழலை குழந்தை மனதுக்கே உரிய பக்கவத்துடன் எதிர்கொள்ள தொடங்கினர். அவ்வாறு தான் சரண்யாவும் உணர்ந்தாள். அதில் முதல் நிலை… கேட்டது எல்லாம் கிடைக்காது, அழுது அடம் பண்ணினால் அடி கிடைக்கும் என்பதை தான். தங்களின் வறுமையை ஏக்கம் என்ற முகமூடி கொண்டு அறிய தொடங்கினர்.
எது ஒன்று என்றாலும் தாயின் முகம் பார்க்க தொடங்கினாள் அஜிதா. தாயின் கோபத்தை கற்க தொடங்கினாள் போல… விஜியிடம் பிடிவாதம், அழுகை, அடம் எல்லாம் முன் போல தான் என்ற போதும் அதன் வீரியம் குறைந்து தான் இருந்தது. தாய் அடிப்பாள் என்ற பயம் அவளை அடங்கி போக செய்தது.
இங்கு பிள்ளைகளை பொறுத்த வரை… தாய் என்ற ஒருத்தியை தாண்டி ஒன்றுமே இல்லை. தூக்குவதும், கொஞ்சுவதும் அவள் ஒருவள் தான். அதனால் தான், தாயின் கோபத்தை கண்ட பொழுதில் இருந்து ஒரு பயம் தாய் மீது பிள்ளைகளுக்கு. அது நல்லதுக்கா, இல்லை கெட்டதுக்கா என்று சரண்யாக்கு தான் தெரியவில்லை…
தான் இரு பிள்ளைக்கு தாய், தனித்து நில் என்று மனம் சொன்னாலும்… அதன் வழி மட்டும் தென்படவில்லை. ஆனால், காலம் அமைதியாக இல்லை. அவள் வாழ்வில் எப்போதும் முடிவு எடுக்கும் அவள் வீட்டினர் தற்போதும் ஒரு முடிவு எடுத்து விட்டார்கள். அதை சொல்ல தான் நேரம் பார்த்து கொண்டிருந்தார்கள்.
அன்று பிள்ளைகள் உடன் சேர்ந்து விளையாட விட்டவள், அக்கா மகளை பார்த்து கொள்ள சொல்லி தான் சென்றாள். ஒரு மணி நேரம் கடந்து இருக்கும் விஜி அழுகை சத்தம் கேட்டு பதறி ஓடினாள் சரண்யா. அடித்தது சுகந்தி தான், அதிர்ந்து போய் தாயை பார்த்தாள் பெண்.
சாத்விக்கை தள்ளி விட்டாள் என்று திவ்யா ஒரு பக்கம் கத்த, சாத்விக் ஒரு பக்கம் அழுக. யார் பக்கம் சரி, தப்பு என்று சுகந்தி யோசிக்க வில்லை. குழந்தை தானே என்று மருமகளை சமாதானம் செய்யவும் இல்லை. காரணம் யார்?… விஜிதா.
அவள் முதுகில் இரண்டு அடி போட, பேரன் வாயை மூடி கொண்டான், மருமகள் உள்ளே சென்று விட்டாள். மெளனமாக சின்ன மகளை பார்த்தார். அழும் பிள்ளையை இடுப்பில் வைத்து, அஜியை கையில் பிடித்து உள்ளே சென்று விட்டாள் சரண்யா.
மனம் கொதித்தது. சொந்த பாட்டி… தப்பு செய்தால் அடிக்கட்டும் வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால், அது ஏன் என் பிள்ளை மட்டும் அடி கொடுக்க வேண்டும். வேற யாரையும் கை வைக்க யோசிக்கும் தாய், என் பிள்ளைகள் என்றால் எளிதாக கை ஓங்கி விடுகிறார்கள். திவ்யா இரு முறை அடித்து இருக்கிறாள். அப்போது எல்லாம் சரண்யா சண்டைக்கு சென்றால், ஒரே வீடு, அவள் அத்தை தானே அவளுக்கு உரிமை இல்லையா என்று தாயே சரண்யாவை தட்டி விடுவார்.
சிறு பிள்ளைகளுக்கு விரோதம் தெரியாது இல்லையா… அன்று மாலையே சேர்ந்து விளையாட தொடங்கி விட்டது. ஆனால் நடந்தது வேறு… இந்த முறை தவறு செய்தது சாத்விக் தான். ஏதோ தரவில்லை என்று அஜியின் கன்னத்தை நன்றாக கடித்து வைத்து விட்டான்.
பிள்ளை துடித்தது போய் கதறி அழ, தூக்கி சமாதானம் செய்தும் அழுகை நிக்க வில்லை. கடித்த இடம் சிவந்து போய் கிடந்தது. அஜியை தொடர்ந்து விஜி அழுக, சரண்யாக்கு ஒன்றும் முடியவில்லை. யாரை தூக்கி, யாரை இறக்கி, யாரை மடியில் வைத்து சமாதானம் செய்ய, சோர்ந்து போனாள். பிள்ளைகள் இருவரும் யாரிடமும் செல்ல வில்லை.
யார் தூக்கியும் தாய் முந்தியை விடாமல் பிடித்து கொண்டு மேலும் தான் அழுதார்கள். தினமும் தூக்கி பழகினால் தான் பிள்ளைகள் ஒட்டும், என்றோ தூக்கும் போது தாயை விட்டு நகரவில்லை. அதுவும் அழுகையில் இருக்கும் போது தாயை தாண்டி யாரை தேடும் பிள்ளைகள்.
சரண்யாக்கு, தான் பெற்ற பிள்ளைகளோடு சேர்ந்து, தானும் ஒரு ஆளாக அழுக தான் தோன்றியது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாதே… மடிந்து அமர்ந்தவள் ஒரு பிள்ளையை மடியிலும், ஒரு பிள்ளையை தோலிலும் போட்டு தான் சமாதானம் செய்தாள். இரட்டை பிள்ளை என்பதால் எல்லாவற்றையும் ஒன்றாக தான் செய்ய வேண்டி இருந்தது.
“சின்ன பிள்ளைக ஒரு நேரம் சிரிச்சு விளையாடும், ஒரு நேரம் அடிச்சுக்கும். இது எல்லாம் பெரிய விஷயமா… நாளைக்கே ரெண்டும் சேர்ந்து போகும் , இதை பெரிசாக்காதீங்க…” என்றார் தந்தை. மூச்சு விடவில்லை சரண்யா…
சுகந்தி மகள் அருகே வந்தார், “ எம் மேல கோபமா சரண். நான் என்னடி செய்ய… உங்கக்காவ எதுவும் சொல்ல முடியாது. வருசத்துல ஒரு நாள் தான் வாரேன். எம் பிள்ளைகளை குத்தம் சொல்றீங்கன்னு சண்டைக்கு நிப்பா. மக கிட்டவே என் வாய் எடுபடாது, மருமககிட்ட பேச முடியுமா… உங்கண்ணன் வரைக்கும் கொண்டு போய் பெரிய பிரச்சனையாக்குவா… அவனும், உன்னை எதாவது சொன்ன?… அதான் நான் எம் பேத்திக்கு ஒரு அடிய போட்டேன். எம் பேத்திக தான, எனக்கு உரிமை இல்லையா…” என்ற தாயின் விளக்கம் அவளுக்கு ஏறவே இல்லை. தங்களின் இழி நிலை தான் கருத்தில் நின்றது.
அடுத்த நாள் மதியம் பிள்ளைகளை உறங்க வைத்து அமர்ந்திருந்த சரண்யாவை அவள் அக்கா அழைத்தாள். வீட்டில் எல்லா உறுப்பினர்களும் இருக்க, விசயம் பெரிது என்று கண்டு கொண்டாள். அதுவும் தன்னை பற்றியது தான் என்று புரிந்தது. பிரியாவே வாய் திறந்தாள்,
“உன் நல்லதுக்குன்னு நாங்க ஒரு விசயத்தை யோசிச்சு இருக்கோம்…” என்று தயங்கி நிறுத்த
அப்போதும் சரண்யா வாய் திறந்தாள் இல்லை.
“தேனி போற ரோடு இருக்குல சரண். அங்க ஒரு ஹாஸ்டல் இருக்கு. சின்ன குழந்தைக்காக தான் நடத்துறாங்க. ஒரு வயசு பிள்ளைக கூட இருக்கு. நல்லா பார்த்துப்பாங்க, கொஞ்சம் தள்ளி அவங்க ஸ்கூல் இருக்கு. நல்ல ஸ்கூல் தான். அஜி, விஜி பத்தி எந்த கவலையும் வேண்டாம். நாங்க நல்லா விசாரிச்சுட்டோம். உம் பிள்ளைகளை அங்க கொண்டு போய் விடுவோம்…”