“அவங்களை விட்டு நான் தனியா எப்படி இருப்பேன்…” நிதானமாக வந்தது வார்த்தைகள்.  இதற்கு பதில் அவள் அண்ணன் இடம் இருந்து வந்தது.

   “உனக்கு சின்ன வயசு தான் சரண். இந்த பிள்ளைகளோடு உன் வாழ்க்கை  முடிய போறது இல்லை. நீ எங்க தங்கச்சி, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை எங்க பொறுப்பு. அதுக்காக பிள்ளைகளை அப்படியே விட சொல்லலை. நாம எல்லாரும் இருக்கோம், நல்லது செய்வோம். அப்பப்ப போய் பார்த்து, தேவையானத வாங்கி கொடுப்போம். நாம எல்லாம் பக்கத்தில தான இருக்கோம்…” என்ற அண்ணனின் வார்த்தை பல விசயங்களை  அவளுக்கு தெளிவு படுத்தியது.

   “எனக்குன்னு  தனிப்பட்டு எந்த வாழ்க்கையும் இல்லை அண்ணா… எம் வாழ்க்கையே எம் பிள்ளைக தான்…” என்றவள் நிற்காமல் உள்ளே செல்ல போக…

       “உன் வாழ்க்கை உம் பிள்ளைக தான். அவங்களுக்கு நீ என்ன வாழ்க்கைய அமைச்சு கொடுக்க முடியும்.  உனக்கே ஒன்னும் தெரியாது, ரெண்டு பிள்ளை பெத்தும் எல்லாத்துக்கும் அம்மா, அப்பா தான் வேணும். உன்னால அவங்களுக்கு என்ன நல்லது நடக்கும். அந்த ஆசிரமத்தில வெளிநாட்டுகாரங்க உதவி செய்றாங்க… நல்லா இருக்கு. உங்க வீட்டு ஆளுக சொல்றதுக்கு பேசாம சரின்னு சொல்லு…” நிதர்சனமாக பேசினாள் திவ்யா.

       பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள் சரண்யா. தவிப்பாக பார்த்த பெற்றோரை கண்ட சுரேந்தர்,

    “ விடுங்கப்பா, சரண் கொஞ்சம் யோசிக்கட்டும்.  காலத்துக்கும் நாம வச்சு பார்க்க முடியாது. சரண்க்கும் ஒரு நல்ல வாழ்க்கை வேணும்.  அழுகட்டும் விடுங்க, பெத்தவ  இல்லையா வலிக்க தான் செய்யும். அழுதாலும் நம்ம பேச்சுக்கு சரின்னு சொல்லட்டும்…”

     இரவு உணவுக்கு கூட வெளியில் வரவில்லை சரண்யா. அவள் யோசிக்கட்டும் என்று எல்லோரும் தள்ளி தான் நின்றார்கள். பிள்ளைக்கு மட்டும் தான் உணவு கொடுத்தாள். 

    யார் மீதும் அவளுக்கு கோபமில்லை. கோபப்பட என்ன தகுதி இருக்கு… பெற்றவள் தான் பிள்ளைகளை பார்க்க வேண்டும். அடுத்தவர் மீது தன் பொறுப்பை கடத்தினால், அவர்கள் எவ்வாறு சுமப்பார்கள். முட்டாள் சரண்யா நீ… உன் பிள்ளையை நீ தான் வளர்க்க வேண்டும். 

        வேற ஒருவரின் துணையை, உதவியை நாடினால். அவர்கள் பழுக்க கொடுக்க தான் செய்வார்கள். வலிக்குதே என்று அழுவதால் பயன் இல்லை. இரு பெண் குழந்தைகள் பொறுப்பு என்பது சாதாரணம் இல்லை. அதனால் தான் அவள் சொந்தமே முன் வர வில்லை. தங்களின் நிலை தெளிவாக புரிந்தது. 

     இரு பெண் குழந்தையோடு மறுமணம் என்பது சாத்திமில்லாத ஒன்று. தனியாக நிற்கும் அளவுக்கு படிப்போ, பொருளாதார திடமோ அவளிடம் இல்லை. அவள் காலத்திற்கும் அவர்கள் கை பிடியில் தான்.  அதனால் தான் அவள் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள். அவளின் பிள்ளைகள் பொறுப்பை ஏற்க முன் வர வில்லை. எப்படி வருவார்கள்?… 

           தற்போது இருக்கும் போட்டி நிறைந்த உலகில் தங்களின் பிள்ளையை வளர்த்து படிக்க வைப்பதே சிரமமாக இருக்கும் காலத்தில் உடன் பிறந்தவளின் பிள்ளையை யார் பார்ப்பது?… பெண் பிள்ளை வளர்ப்பு சாதாரணம் இல்லையே. 

    ஆனால், பெற்றவள்… அவளுக்கு அல்லவா பதறி துடித்தது. இனி இவர்கள் விடமாட்டார்கள். தான் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.  அவர்கள் சொல்வது போல் பிள்ளைகளை ஆசிரமம் அனுப்புவது எல்லா ஒரு நாளும் நடக்காது. ஆம், அது ஆசிரமம் தான். சரண்யாக்கு அந்த ஆசிரமம் நன்கு தெரியும். தாய் இல்லா பிள்ளைகளை அங்கு கொண்டு வந்து விடுவார்கள். தந்தை இல்லை என்று வருபவர்கள் அரிது தான். தாய் இருந்தால் போதும் எப்படியும் பிள்ளையை வளர்த்து விடுவாள். 

      அன்று இவர்கள் சொல்லிய உடன் கணவனையே விட்டு வந்தவள், பெற்ற பிள்ளைகளையும் விட்டு விடுவாள் என்று எவ்வாறு நினைத்தார்கள். தான் பெற்ற பிள்ளைகளை விட்டு தனக்கென்று ஒரு வாழ்வா!… அதில் என்ன இருக்கும். என் பிள்ளை பசியில் வாட, தான் எவனோ ஒருவனோடு புது வாழ்வு வாழ்வேனா… நிச்சயம் முடியாது. பெற்றவள் நான் இருக்கும் போது யாருமில்லை என்று ஆசிரமத்தில் ஏன் விட வேண்டும்.

    ஒரு கணம் மனம் திடமாக நினைத்தாலும், மறுகணம் சோர்ந்து போனது. எவ்வாறு பிள்ளைகளை வளர்ப்பேன். தனக்கு சரியான படிப்பும் கிடையாது, எந்த வேலைக்கும் போக தெரியாது, யார் துணையும் இனி இருக்காது எனும் போது தன்னால் இரு பெண் பிள்ளைகளை வளர்க்க முடியுமா…

       பிள்ளைகளை பார்த்தாள் சரண்யா. பாதி தூக்கத்தில் கண்கள் சொருக விஜி இருக்க, தாயின் அரவணைப்பு இல்லாமல் தூங்க மாட்டேன் என்று அஜி இருந்தாள். மனதில் துக்கம் பொங்க…

   “நமக்கு இந்த வாழ்க்கை வேணாம். யாருக்கும் பாரம் இல்லாம நாம செத்து போவோமா?…” தான் பெற்ற பிள்ளைகளை பெரிய மனிதர்களாக கருதி  கேள்வி கேட்டாள் சரண்யா. மலங்க மலங்க விழித்து கொண்டு பிள்ளைகள் இருவரும் அழும் தாயைதான் பார்த்து இருந்தார்கள்.

        மறுநாள் எல்லோரும் அதிசியம் பார்க்க செல்ல தயாராக. சரண்யா மட்டும் வரவில்லை, குலதெய்வ கோவில் போவதாக சொல்லி விட்டாள். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து காட்டு பகுதியில் இருக்கும் அந்த கோவிலுக்கு வந்தடைந்தாள். 

        மணி மதியம் இரண்டு, ஆள் அரவம் ஒன்றும் இல்லை.  இந்த நேரத்தில் ஆள் இருக்காது என்று யோசித்து தான் வந்தாள். பிள்ளைகளுக்கு பிடித்த நெய் பருப்பை ஊட்டி விட்டு, கொஞ்ச நேரம் அங்கு விளையாட விட்டாள். மனம் நிர்மலமாக இருந்தது. எதையும், யாரையும் யோசிக்க வில்லை. அவளுக்கு பிடித்த வெங்காய கலர் சேலை அணிந்திருந்தாள். பிள்ளைகளை தூக்கி கொஞ்சினாள், மடியில் அமர்த்தி  மார்போடு அழுத்தி பிடித்தாள்.  பிள்ளைகள் இருவரின் வாசனையை ஆழ்ந்து  இழுத்தவள், பின் எழுந்து கொண்டாள்.

         இரு பிள்ளைகளையும் முன் பக்கம் நிறுத்தி கை கூப்பி தன் வீட்டு தெய்வத்தை வணங்கியவள். அந்த ஒத்தையடி பாதையில் மெல்ல நடந்தாள். பிள்ளைகள் இருவரும் அழகான பேபி வண்ண உடை அணிந்து, கை பிடித்து தளிர் நடை போட்டது. பார்க்கையில்  உள்ளம் பொங்கியது, வேண்டாம் மனமே எதையும் யோசிக்காதே…

       சற்று தள்ளி இருந்த கிணற்று அருகில் சென்று விட்டவள், மெதுவாக எட்டி பார்த்தாள். சுற்றியும் மஞ்சநத்தி, கருவேல மரம் சாய்ந்து கிடந்தது. தண்ணி பச்சை நிறமாக இருட்டு கட்டி இருக்க, நெஞ்சு முழுக்க பயம் தான்.  தன்னை திடப்படுத்தி கொண்டு திரும்பி பார்க்க, தாயை ஒட்டி வந்தாள் அஜிதா. நெஞ்சில் வேதனை தான். 

       தன்னிடம் இருந்து வெளி வந்த முதல் மகவு. வேதனை பொங்க பிள்ளையை தூக்கினாள், சாவின் விளிம்பில் நிற்கிறோம் என்ற உணராத குழந்தை தன் தாயை பார்த்து பல் தெரிய சிரித்தது.  

      சரண்யா திரும்பி சுற்றும், முற்றும் பார்த்தாள். எவ்வளவு தடவை டிவி, பேப்பரில் பார்த்திருக்கிறாள். தாய் பிள்ளைகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டாள் என்று… அப்போது எல்லாம் தோணும், பெற்ற தாயே எப்படி பிள்ளையை கொள்வாள் என்று… இன்று தெரிகிறது,  அவரவர் சூழல் எப்படியோ!…

    அஜி குட்டியை தூக்கி கிணற்றுக்கு மேல கொண்டு வந்தாள். இரு பிள்ளைகளையும் முதலில் தூக்கி போட்டு பின்னாடி தானும் குதித்து விட வேண்டும். நொடி யோசிக்க கூடாது. பிள்ளைகள் தனியாக கிடந்தது போகும். கீழ குனிந்து பார்க்க விஜி குட்டி தாயின் காலை கட்டி கொண்டு நின்றிருந்தாள்.  அஜிக்கு பயம் எல்லாம்  ஒன்றும் இல்லை, தூக்கியது தாய் அல்லவா…

       மெதுவாக கிணற்றை எட்டு பார்க்க, ஒரே இருட்டு. தன் கையை மெதுவாக தளர்த்த தொடங்க, அம்மா தூக்கி போட்டு விளையாட பார்க்கிறாள் என்று பிள்ளைக்கு சிரிப்பு பொங்கியது. அதை பார்த்து விஜி, “ அம்மா நானு…” என்க.

       நெஞ்சை பிளந்தது போல் வலி பரவியது. “ஐயோ! சரண்யா… இப்படி பாதியில் தூக்கி போடவா, இடுப்பு எலும்பு உடையும் வலியை பொறுத்து  கூட இவர்களை உலகிற்கு கொண்டு வந்தாய். உன் முன் துடித்து அடங்கவா, உன் உதிரம் கொடுத்து வளர்த்தாய். உன் மகவின் கடைசி மூச்சு அடங்குவதை, நீ கண் கொண்டு பார்க்க போகிறாயா!… உன்னை மட்டும் நம்பி வந்த இரு உயிர்களை அழிக்க போகிறாய்…”  மனம் குத்தி எடுக்க, கையை கீழ விடவே முடியவில்லை. கொஞ்சம் தளர்த்தினால் போதும் எல்லாம் முடிந்து விடும். தளர்த்த தான் முடியவில்லை. 

    பிள்ளையை கீழ இறக்கி விட்டவள், இருவரையும் மார்போடு அணைத்து கொண்டாள். அழுகை தான் அப்படி ஒரு அழுகை. வாழ்நாளில் இந்த மாதிரி என்றும் அழுதது இல்லை.  இருவரையும் சேர்த்து பிடித்தவள், திரும்ப நடக்க தொடங்கினாள். திரும்பி பார்க்கவே இல்லை.

      எனக்கு என் பிள்ளைகள் இருக்கு, என் பிள்ளைக்கு நான் இருக்கேன். வேற யார் துணை வேண்டும். எந்த வேலை செய்தும் பிள்ளையை வளர்த்து விடுவேன். என் கண் முன்னே மட்டும் சாக கொடுக்க மாட்டேன். என் வாழ்வு என் பிள்ளைகளோடு தான். இனி எல்லாவற்றையும் போராடி தாண்டி வருவோம்….