அவள் மன உணர்வுகள் புரிந்த இனியன் “டி நிலைமை இப்ப சரி இல்லை. மாமா எங்க அப்பாக்கு நல்லா உரைக்கிற மாதிரி புத்தி புகட்டிக்கிட்டு இருக்கார். நல்ல புளோல போய்க்கிட்டு இருக்கு. வேடிக்கை மட்டும் பாரு செல்லம்”, என்றான்.
“இருந்தாலும் என் அப்பா செம ஷார்ப் டா. என் மனசுல இருந்த பாரமே இறங்கிருச்சு. அன்னைக்கு புவி அத்தை கிட்ட அவங்க காதலை, அவங்க குணத்தை கேவலமா பேசினப்ப எவ்வளவு துடிச்சிருப்பாங்க?”, என்று கேட்டவளின் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.
அவளை நெகிழ்வாக பார்த்தவன் தன்னுடைய தந்தையை பார்த்தான். தண்டாயுதபாணி விஷ்ணு பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் கூனி கூறுகிப் போய் நின்றார். அதை கண்ட இனியன் இவருக்கு இது தேவை தான் என்று எண்ணிக் கொண்டான்.
இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு ஒரு ஓரமாக கூனி குறுகி அமர்ந்திருந்தார் சத்யாவதி. அவரால் அந்த வீட்டில் எதுவுமே பேச முடிய வில்லை. ஒரு காலத்தில் சவுந்தர்யா இந்த வீட்டை விட்டு ஒழிய மாட்டாளா என்று எண்ணியவர் தான். ஆனால் இன்று அது நடக்கும் போது அவரால் துளி அளவு கூட சந்தோஷப் பட முடியவில்லை.
“உங்களைக் கஷ்ட படுத்தணும்னு நான் எதுவும் பேசலை மச்சான். பேசணும்னா நான் இன்னும் பேசுவேன். உங்களை திருத்துறது என் வேலை இல்லை. எனக்கு என் தன்மானம் முக்கியம். இந்த வீட்டு மாப்பிள்ளையா என் பொண்டாட்டிக்காக மாமனார் வீட்ல தங்கி இருந்தாலும் என்னை மரியாதை குறைவா மாமா நடத்தினது இல்லை. என்னோட தன்மானத்துக்கு எதிரா இது வரை யாரும் எதுவும் செய்யலை. ஆனா இனி அப்படி நடக்குமான்னு என்னால யோசிச்சிட்டு இங்க நிம்மதியா இருக்க முடியாது. மாமியார் வீட்ல மதிப்பா இருந்திறலாம். ஆனா மச்சான் வீட்ல விருந்துக்கு மட்டும் தான் மச்சான் போக முடியும்? என் பொண்ணுக்கும் கல்யாணம் வச்சிருக்கோம். அதுக்கு எங்களுக்கு தனி வீடு இருந்தா தான் சரி வரும். ரெண்டு நாள் பொறுத்துக்கோங்க, நாங்க போயிருவோம். இன்னைக்கு நானும் என் பொண்டாட்டியும் போய் வீட்டை கிளீன் பண்ணிட்டு வரப் போறோம்”, என்றார் விஷ்ணு.
“வேண்டாம் விஷ்ணு தம்பி. உங்களை நான் என் கூட பிறந்த தம்பியா தான் பாக்குறேன். எங்களை விட்டுட்டு போகாதீங்க”, என்றார் சரஸ்வதி.
“மாதிரி எப்பவும் ஒரிஜினல் ஆகிறாது இல்லையாக்கா. நான் மாதிரி தான். உங்க கூட பிறக்கலை”, என்றவர் அங்கு இருந்த சத்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு “கூட பிறந்தவங்களே இப்ப கேவலமா தான் இருக்காங்க. ஒரு வீட்டுல ஒற்றுமை குடும்ப பொம்பளைங்க கிட்ட இருக்குறதா தான் நான் நினைக்கிறேன். அதுக்கு சிறந்த உதாரணம் என் பொண்டாட்டி. யாரையும் அவளால ஒரு சுடு சொல் கூட சொல்ல முடியாது. ஆனா பெரிய மச்சானையும் புவனா அக்காவையும் உங்க புருஷன் பேசும் போது நீங்க தடுக்காம தானே வேடிக்கை பார்த்தீங்க? இல்லைன்னு உங்களால சொல்ல முடியுமா? புவனா அக்காவும் நம்ம கூட பிறந்தவங்க மாதிரி தானே? அவங்களை உங்களால பேச முடியும்னா என்னையும் நீங்க கண்டிப்பா பேச தான் செய்வீங்க. நீங்களும் விஷ்வா அம்மாவும் சேந்து புவனா அக்காவை மட்டம் தட்டினதை எல்லாம் நான் பாத்துட்டு தான் இருந்துருக்கேன். அப்ப எல்லாம் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் ஒண்ணு மாமா பாத்துக்குவார், இன்னொரு காரணம் நான் இந்த வீட்டு மாப்பிள்ளை தான் மகன் இல்லையேன்னு தான். அதனால தான் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். இப்ப அப்படி இல்லை. அப்புறம் என் மகளுக்கும் கல்யாணம் வச்சிருக்கோம். சொந்த பந்தங்கள் எங்க வீட்டுக்கு வரும் போது என்னோட மச்சினன் வீட்டுக்கு வந்தா எனக்கு என்ன மரியாதை? அதனால எங்களை தடுக்காதீங்க. வா சவுந்து போகலாம்”, என்றவர் யாழி புறம் திரும்பி “அம்மு, உன் மேடத்தை பாக்கணும்னு சொன்னியே. பாத்து பத்திரமா போய்ட்டு வா டா. அம்மாவும் அப்பாவும் சாயங்காலம் வந்துருவோம்”, என்ற விஷ்ணுவின் குரலில் அவ்வளவு அன்பு சொட்டியது.
“சரி டி வாயாடி, உனக்கும் அதி குட்டிக்கும் முதலிரவு அதே ரூம்ல வச்சிருவோமா?”, என்று கேட்டு மகளை வெட்கப் பட வைத்தார் சவுந்தர்யா.
அப்பா, அம்மா, மகள் என உயிரோட்டமாக இருந்த அவர்களின் பாசக் காட்சியைக் கண்ட யாருக்குமே அது நடிப்பாகவோ வெறுப்பாகவோ தோன்ற வில்லை. இப்படி தாங்கள் இல்லையோ என்ற ஏக்கத்தை மட்டுமே கொடுத்தது.
அந்த வீட்டில் அதிபன் எப்படி தாய் தந்தையிடம் ஒட்டுவானோ அது போல யாழியும் அப்படி தான். மற்ற யாருமே பெற்றோருடன் அவ்வளவு ஒட்டுதல் இல்லை.
இனியன், இலக்கியா, விஷ்வா, வெண்ணிலா நால்வருமே தேவைக்கு பெற்றோரிடம் பேசுவார்கள். இதே போல செல்லம் கொஞ்சவோ ஒட்டுதலாகவோ இருக்க மாட்டார்கள்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும் யாழி இனியனிடம் பேசிய படியே அறைக்குள் சென்று விட்டாள். விஷ்வா கூனி குறுகி அமர்ந்திருந்த தாயையும், அத்தை மாமாவையும் பார்த்து விட்டு சென்று விட்டான்.
மூவர் மனதிலும் ஓடிய எண்ணங்கள் தாங்கள் தங்களுடைய பிள்ளைகளை நிறைவான பாசம் காட்டி வளர்க்க வில்லையோ என்பது தான். காலம் கடந்த பின்னர் வருந்தினால் பயன் எதுவும் இருக்குமா என்ன?
அவர்களுடைய பிள்ளைகள் கடமைக்காக அவர்களை பார்ப்பார்கள் அவ்வளவே. அனைத்து சொத்தும் இப்போது கையில் இருந்தாலும் எதுவுமே இல்லாதது போல உணர்ந்தார் தண்டாயுதபாணி.
“தப்பு செஞ்சிட்ட மாதிரி தோணுதுங்க”, என்றார் சரஸ்வதி.
“கொஞ்சம் இல்லை, நிறையவே தப்பு பண்ணிட்டோம். சரி பண்ண முடியுமானு தெரியலை. பாப்போம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார் அவர்.
காரில் சென்று கொண்டிருந்த சவுந்தர்யா “உங்க மனசுல இவ்வளவு வேதனை இருக்கும்னு எனக்கு தெரியாதுங்க மாமா. உங்களை நான் கஷ்ட படுத்திட்டேனா?”, என்று அவ்வளவு மென்மையாக அதே நேரம் ஆதங்கமாக கேட்டார்.
“நீ என்னோட தேவதை சவுந்து மா. உன்னால நான் சந்தோஷம் மட்டும் தான் பட்டுருக்கேன். ஆனா ஒரே விஷயம் தான் டி மனசை அறுக்குது”
“என்ன ஆச்சு மாமா?”, என்று அவர் பதறி கேக்க “ஒரே பொண்ணை அவ்வளவு பாசத்தையும் கொட்டி வளக்கணும்னு அடுத்த பிள்ளை வேண்டாம்னு சொன்ன உன் பேச்சை கேட்டு சும்மா இருந்தது தான் தப்புன்னு தோணுது. அடம் பிடிச்சாவது ஒரு பையனையும் பெத்துருக்கணும். தப்பு பண்ணிட்டேன்”, என்று சொல்ல அவர் முகம் சிவந்தது.
“மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கோம். பேச்சைப் பாரு. அதான் ஒண்ணுக்கு மூணு மகன்கள் இருக்காங்களே”, என்று சொன்ன சவுந்தர்யா உண்மையிலே விஷ்ணுவின் கண்களுக்கு இறக்கை வைத்த தேவதையாக தான் தெரிந்தார்.
“ஐ லவ் யு சவுந்து குட்டி”, என்று அவர் காதலுடன் உரைக்க அதில் குளிர்ந்து போனாலும் “இன்னைக்கு நீங்க சரியே இல்லை. நம்ம வீட்டுக்கு போறோம்ன்னு கிழவனுக்கு ஆசை துள்ளி விளையாடுதோ? ஆனா ஒண்ணுங்க. நீங்க இவ்வளவு சந்தோஷமா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா கல்யாணம் நடந்த அடுத்த நாளே உங்களை தனி குடித்தனம் கூட்டிட்டு வந்துருப்பேன்”, என்றார்.
“வந்துருக்கலாம், நல்லா இருந்துருக்கும். நிறைய பேர் சந்தோஷமா இருந்துருப்பாங்க”, என்று அவர் சேகர் நினைவில் சொல்ல “என்ன சந்தோஷம்?”, என்று கேட்டார் சவுந்தர்யா.
“தனியா இருந்துருந்தா கண்டிப்பா இன்னும் ரெண்டு பிள்ளை பெத்துருப்பேன். அப்ப சந்தோஷமா இருந்துருக்கும்ல அதைச் சொன்னேன்?”, என்று சமாளித்தார்.
“ஐயோ போங்க, இன்னைக்கு உங்க பேச்சு தாறு மாறா போகுது”
“உண்மைலே செம லவ்வா இருக்கு டி உன் மேல. மாமாவை நைட் கொஞ்சம் கவனிக்கிறது. ரொம்ப நாள் ஆச்சு”
“விவஸ்தை கெட்ட மாமா, என்னமோ எதுவுமே தராதது மாதிரி தான். ஒரு வருஷத்துல பேரனோ பேத்தியோ வரப் போகுது. உங்க அழும்பல் தாங்கலை. நைட் பெருசா கவனிக்கிறேன். இப்ப ரோட்டைப் பாத்து வண்டி ஓட்டுங்க”, என்று வெட்கத்துடன் முணுமுணுக்க அவரும் நிறைவாக சிரித்தார்.