அனைவரும் எதையோ மறைப்பது போலவே அவருக்கு பட்டது. நேராக இனியன் அறைக்கு சென்று கதவை தாழிட்டவர் அவனை பேச வைக்க அவர் பேச்சில் இருந்து தப்பிக்க முடியாமல் தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லி விட்டான்.

அதைக் கேட்டு மனுஷன் உண்மையிலே நடுங்கி தான் போனார். கூடவே இந்த விஷயம் தெரிந்தால் தன்னுடைய மனைவிக்கு என்ன வேண்டும் என்றாலும் ஆகும் என்று எண்ணியவர் அடுத்த நொடியே மனைவி முன்னே சென்று நின்றார்.

“என்னங்க மாமா? ஏதாவது வேணுமா?”

“என்னை உனக்கு பிடிக்குமா சவுந்து கண்ணா?”

“எதுக்கு இப்படிக் கேக்குறீங்க? உங்களுக்கு தெரியாதா நீங்க தான் என்னோட உயிர்ன்னு?”

“அப்படின்னா எனக்காக ஒரு விஷயம் நீ விட்டுக் கொடுக்கணும். செய்வியா?”

“கண்டிப்பா மாமா”

“நம்ம கல்யாணம் முடியுறப்ப மாமா என் கிட்ட நாம எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு கேட்டு கிட்டதுனால தான் நான் இங்க இருக்க சம்மதிச்சேன். ஆனா இப்ப மாமா இல்லை. இனியாவது உன்னையும் நம்ம பொண்ணையும் என் வீட்ல ராணி மாதிரி வச்சு அழகு பாக்கணும்னு நினைக்கிறேன். எனக்காக உன் பிறந்த வீட்டை விட்டுக் கொடுப்பியா?”

“இதை நீங்க கேக்கணுமா மாமா? எனக்காக எல்லாம் செஞ்ச உங்க ஆசை எனக்கு முக்கியம் இல்லாம போகுமா? கண்டிப்பா நாளைக்கே போகலாம். ஆனா அண்ணா என்ன நினைப்பார்?”

“அப்ப என் நினைப்பு பரவால்லயா? நான் வருத்தப் பட்டா உனக்கு ஓகே வா சவுந்து?”

“ஐயோ இல்லை மாமா, நாம இப்பவே போய் நம்ம வீட்டை சுத்தம் செஞ்சிட்டு வரலாம். வாங்க கிளம்பலாம். யாழி தூங்கட்டும்”

“இன்னைக்கு நீ டயர்டா இருக்க டா. நாளைக்கு போய்க் கிளீன் பண்ணலாம். அப்புறம் நல்ல நாள் பாத்து அங்க போகலாம்”, என்று சொல்ல சவுந்தும் மலர்ந்து சிரித்தார்.

இந்த கள்ள மில்லாதவளை போய் எப்படி அப்படி நினைக்க முடிந்தது சத்யாவால்? இப்படி ஒரு கேடு கெட்ட எண்ணம் கொண்டவர் நிழலில் கூட தன்னுடைய மனைவி இருக்கவே கூடாது என்று முடிவு எடுத்து விட்டு தான் உறங்கச் சென்றார்.

தன்னுடைய அறைக்கு வந்த யாழி அதிபனை தான் அழைத்தாள். “சொல்லுங்க பொண்டாட்டி”, என்று அவன் சிரிப்புடன் சொல்ல சிறு வெட்கத்துடன் சிரித்தவள் “என்ன மாமா இப்படி எல்லாம் பேசுற?”, என்றாள்.

“லவ்வர்ஸ் இப்படி பேசாம எப்படி பேசுவாங்களாம்?”, என்று அவன் கேட்கும் போதே “மாமா ஜான் கூப்பிடுறான். தூங்கிறாத. பேசிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு ஜானின் அழைப்பை ஏற்றாள்.

“சொல்லு ஜா”

“ஏய் ழி பேபி, நான் என் ஆளைக் கண்டு பிடிச்சிட்டேன்”, என்று சந்தோஷமாக கூவினான்.

“எப்படி டா?”, என்று சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் கேட்டாள்.

“காலைல ஆபீஸ் வரும் போது யார் என்னை சைட் அடிக்கிறாங்கன்னு கண்டு பிடிக்க முடியலை. அதனால கேமரால பாத்தேன். டாக்டர் ஜூலி தானே?”

“ஆமா டா, சூப்பர் சூப்பர்”

“என்னையே வச்ச கண்ணு எடுக்காம பாத்துட்டு இருந்தா”

“அப்புறம் என்ன? அவ கிட்ட போய் பேசு. உனக்கும் பிடிச்சிருக்குன்னு சொல்லு”

“அதெல்லாம் சொல்லியாச்சு. உடனே ரூமுக்கு கூப்பிட்டு என்னை எதுக்கு அப்படி பாக்குற? இனி உனக்கு இங்க வேலை இல்லைன்னு சொன்னேன். ஒரே அழுகை. அப்புறம் கெஞ்சி சமாதானப் படுத்தினேன். மேடம் அவங்க காதலை ஒத்துகிட்டாங்க. அழகா இருக்கா டி. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. யாருக்கு யாருன்னு அந்த கடவுள் தான் முடிவு பண்ணுவார் போல”

“ஆமா டா, அது தான் நிஜம். உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே? நீ ஓகே தானே?”

“நான் சந்தோஷமா இருக்கேன் ழி பேபி. உன் மேரேஜ் பிக்ஸ் ஆனா சொல்லு. ஜூலியோட வரேன். ஓகே அவ கால் பண்ணுறா. பாஸ் கிட்டயும் சொல்லிரு. பை”, என்று சொல்லி போனை வைத்தான். யாழியும் இந்த விஷயத்தை அதிபனிடம் சொல்ல அவனும் ஹேப்பி அண்ணாச்சி தான்.

அடுத்த நாள் காலையில் விஷ்ணு மற்றும் சவுந்தர்யா இருவரும் வெளியே கிளம்ப மற்ற அனைவரும் கேள்வியாக பார்த்தார்கள். “டேடி, காலைலே அம்மாவும் நீங்களும் கிளம்பி இருக்கீங்க?”, என்று கேட்டாள்  யாழி.

“நம்ம வீட்டுக்கு போறோம் டா குட்டி. நீ வரியா? வேண்டாம் வேண்டாம் தூசியா இருக்கும். நானும் அம்மாவும் போய்ட்டு வறோம்”, என்றார் விஷ்ணு.

“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? இப்ப அங்க எதுக்கு?”, என்று கேட்டார் தண்டாயுதபாணி.

“இன்னும் ரெண்டு நாள்ல நல்ல நாள் வருது சின்ன மச்சான். நான் என் குடும்பத்தோட அங்க போகலாம்னு இருக்கேன்”, என்று அவர் சாதரணமாக சொல்ல யாழி உட்பட அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள்.

“என்ன விளையாடுறீங்களா மாப்பிள்ளை?”, என்று கேட்டார் தண்டாயுதபாணி.

“இல்லை மச்சான் நான் உண்மையா தான் சொல்றேன்”

“இப்ப அதுக்கு அவசியம் என்ன வந்தது?”, என்று கேட்ட தண்டாயுதபாணிக்கு நிச்சயம் கஷ்டமாக தான் இருந்தது.

முதலில் செழியன் குடும்பத்துடன் வீட்டை விட்டு சென்ற போது மனைவியுடன் சேர்ந்து ஆனந்த பட்டவர் தான். ஆனால் அதன் பிறகு தந்தை வீட்டில் இருந்து சென்றது, சேகர் ஒரேடியாக ஒதுங்கியது, சத்யாவதியின் நிலை, இனியனின் முடிவு என அனைத்தும் அவரை ஒரு ஆட்டு ஆட்டி இருந்தது. கடைசியாக இவர்களும் கிளம்பினால். அவரால் அதை ஈஸியாக எடுத்துக் கொள்ள முடிய வில்லை.

“மாமா இருந்த வரைக்கும் தான் மச்சான் இது என் பொண்டாட்டி வீடுன்னு என்னால சொல்ல முடிஞ்சது. ஆனா நிலைமை இப்ப அப்படி இல்லையே. இப்ப இது உங்க வீடு. நான் உங்களை தப்பு சொல்லலை. ஒரு வேளை  நாளைக்கு நீங்களோ இல்லை சரஸ்வதி அக்காவோ கூட ஏதாவது சொல்லிறலாம். அப்புறம் ஒரு பெரிய பிரச்சனையை தவிர்க்க தான் இப்பவே கிளம்புறோம்னு சொல்லுறோம். ஏன்னா நானும் மனுஷன் தான். எனக்கும் சுய கவுரவம் இருக்கு”, என்ற தந்தையை அதிர்ந்து பார்த்தாள் யாழி.

அவர் சொல்லும் காரணம் சரியாக இருந்தாலும் “இந்த அப்பாவுக்கு சேகரப்பா விஷயம் எதுவோ தெரிஞ்சிருக்கு. அதனால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்”, என்று எண்ணிக் கொண்டாள்.

“மச்சான், அண்ணன் விஷயத்துல நான் செஞ்சது தப்பு தான். கொஞ்சம் நான், என் குடும்பம்னு சுயநலமா இருந்துட்டேன். இப்ப நான் அப்படி இல்லை. என்னை நம்புங்க. நானோ என் குடும்பமோ உங்களையோ தங்கச்சியையோ ஒரு நாளும் மரியாதை குறைவா நடத்த மாட்டோம்”, என்று மன்றாடினார் தண்டாயுதபாணி.

“அப்படி இருந்த நீங்க இப்படி மாறின மாதிரி எங்க விசயத்துலயும் நீங்க மாற ரொம்ப நேரம் ஆகாது சின்ன மச்சான். நான் உங்களை தப்பு சொல்லலை. மனுசங்க மனசு அப்படி தான் மாறிக்கிட்டே இருக்கும். எப்ப அம்மா ஸ்தானத்துல இருந்த அண்ணியையே தப்பா பேசுனீங்களோ அன்னைக்கே எனக்கு உங்க மேல இருந்த நல்ல எண்ணம் போயிருச்சு. இதைச் சொல்றேன்னு வருத்த பட்டுக்காதீங்க. எனக்கு முகத்துக்கு நேரா தான் சொல்லத் தெரியும். என் பொண்ணும் என்னை மாதிரி தான் இருக்கா. நாளைக்கு முகத்துல அடிக்கிற மாதிரி அவளே கூட பேச வாய்ப்பு இருக்கு”, என்று விஷ்ணு சொன்னதும் யாழிக்கு தன்னுடைய தந்தையை இறுக்கி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது.