அத்தியாயம் -5

வலியை சுகமாக மாற்றும் காதல்….

“ராதை மனதில் ராதை மனதில்

என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க

கண்ணா வா கண்டு பிடிக்க….”

என்று பாடல் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த பாடலுக்கு ஏற்ப கை கால்களை சுழற்றி குணா மற்றும் சுபா ஆடிக்கொண்டிருக்க அவர்களை வேடிக்கை பார்த்தபடி ஜெயா மகாவின் மடியில் படுத்துக்கொண்டிருந்தாள்.

“ஏ…. இப்படி ஆடுடி….” என்று சுபா குணாவிற்கு சொல்லிக்கொடுக்க

“அய்ய… என்ன ஸ்டெப் இது…. பாட்டி காலத்து ஸ்டெப்பு போடுற நான் ஆடுறத பாரு “ என்று அவள் ஒரு ஸ்டெப் ஆடிக்காட்ட

“இதுக்கு நான் போட்டதே பரவாயில்ல “ என்று சுபா முகத்தை சுளிக்கவும், ஜெயா

“பேசாம ரெண்டு பேரும் ஆடி காமிங்க யார் நல்லா ஆடுறிங்கன்னு நான் சொல்றேன் “

“ம்ஹூம், இவ பெரிய மானாட மயிலாட ஷோ ஜட்ஜ் மார்க் போட வந்துட்டா…உனக்கே ஆட தெரியாம தான படுத்துட்டு இருக்க “ என்று குணா குறை சொல்ல

“எனக்கு ஆட தெரியாது ன்னு நீ வந்து பாத்தியா டி ..”

“அப்போ வந்து ஆடி காட்டு சும்மா படுத்துட்டு இருந்தா எப்படி தெரியும்…. “ என்று சுபா அவளை உசுப்பேற்ற அவளும்

“இதோ வர்றேன்..” என்று எழுந்து சென்று விட்டாள்.

இவர்கள் மூவரும் சேர்ந்து போட்ட ஆட்டத்தில் ஹாலே போர் கள பூமி போல காட்சி அளித்தது.

இப்படி இங்கு ஒரு நடன போரே நடந்து கொண்டிருக்க மகாவோ கண் முன்னே நடப்பதை பார்த்தாலும் அது கருத்தில் பதியாமல் போக அப்படியே சிலையாக அமர்ந்து இருந்தாள்.

அந்நேரம் பார்த்து கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அமிர்தம் வீட்டின் கோலத்தை பார்த்து விட்டு கோபமாக

“ஏய்… என்னடி பண்ணி வச்சிருக்கீங்க…. இது வீடா இல்ல சத்திரமா… இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க…” என்ற அமிர்தத்தின் சத்தத்தில் வேக வேகமாக டிவியை அனைத்து விட்டு கீழே சிதறி இருந்த பொருட்களை எடுத்து வைத்தனர்.

அத்தனை நேரம் ஏதோ சிந்தனையில் இருந்த மகா அமிர்தம் போட்ட சத்தத்தில் சுயம் வந்தவளாக வீடு இருந்த நிலையை பார்த்தாள்.

சோபாவில் இருந்த துணி கீழே விழுந்திருக்க, சிப்ஸ் கவர்கள், கல்லூரி பைகள், ஒரு புறம் துப்பட்டாக்கள் ஒரு புறம் என்று வீடே அலங்கோலமாக இருந்தது.

“இவ்வளவு நேரம் வீடு இப்படியா இருந்துச்சி “ என்பது போல மகா பார்த்து வைக்க அவள் பார்வையில் மேலும் கோபம் கொண்ட அமிர்தம்

“நீயும் இவங்க கூட சேர்ந்து ஆட்டம் போட்டியா மகா? வர வர நீ இந்த வீட்டுல மூத்த பொண்ணுன்றதையே மறந்து எல்லாம் பண்ணிட்டு இருக்க மகா.

பொறுப்பா இருக்க வேண்டிய நீயே இப்படி இருந்த எப்படி மகா. இந்த பொறுப்பை வச்சிட்டு வேலைக்கு போகணும்னு வேற சொல்லிட்டு இருக்க அங்க போய் என்ன பண்ண போறியோ “ என்று திட்டிவிட்டு சென்றதை கேட்டவளுக்கு கோபம்.

“என்ன இது யாரோ ஒருத்தன் ஒரு மாதிரி பார்த்தான்னு பயந்து போய் இருப்பியா மகா. என்ன அந்த ஆபிஸ்ல அவன தவிர வேற யாரும் இல்லையா என்ன. நீ எவ்ளோ தைரியமானவ எல்லாத்தையும் எப்படி தைரியமா  ஃபேஸ் பண்ணுவ மகா “ என்று அவளுக்கு அவளே தைரியம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

மகாவுக்கு இது தான் பயம் எங்கே இன்பா ஆபிஸில் காதல் என்று பின்னாலேயே சுற்றிவிடுவானோ அவன் சுற்றுவது தெரிந்து வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி விடுவார்களோ என்பது தான் பயம்.

இன்பாவின் பார்வையிலேயே அவன் மனதில் இருப்பதை அறிந்து கொண்டு விட்டாள். இன்பாவின் மனதை படித்ததாலேயே இந்த தடுமாற்றம்.

இப்படி பலவாறு யோசித்த படி ஹாலை நால்வருமாக சுத்தம் செய்து அப்பாடா என்று அமர்ந்த மறு நிமிடம் அமிர்தம் கையில் சின்ன வெங்காயங்களுடன் வர

“அம்மா…..” என்று நால்வரும் ஒன்று போல கத்தியிருந்தனர்.

“என்னடி அம்மா….ருசியா சாப்பிடனும்னா இப்படி வேலை செஞ்சி தான் ஆகணும் எல்லாம் உக்காந்து உரிங்க “ என்று அனைவரையும் வெங்காயம் உரிக்க வைத்து விட்டார்.

நால்வரும் கண்கள் கலங்க மூக்கை உறிஞ்சியபடி வெங்காயத்தை உரித்துக் கொண்டிருக்க

“என்னடி வேலைக்குன்னு போனியே, என்ன ஆச்சு? நீ  ஒன்னுமே சொல்லல. வேலை கிடைச்சுதா இல்லையா?” என்று அமிர்தம் கேட்கவும் மகா,

“ம்ம்ம் கிடைச்ச மாதிரி தான்ம்மா. ஒரு வாரத்துல கால் பண்றேன்னு சொல்லிருக்காங்க.”

“எப்படியோ பக்கத்துலயே கிடைச்சிடுச்சு. நீ வேற வேலைக்கு போகணும்னு கேட்டதும் தனியா எப்படி அனுப்பன்னு பயந்து இருந்தேன். நல்ல வேலை கடவுளா பாத்து இன்பா தம்பிய காட்டி விட்டுருக்காரு.அந்த தம்பி பாத்துக்குவான்”

என்று அமிர்தம் சொன்னதை கேட்டு மகாவுக்கு கோபம் தான் வந்தது.

“அந்த பனை மரம் அங்க இருக்குறது தான் பிரச்சனையே….” என்று மனதில் நினைத்தவள் வெளியில் சிரித்து வைத்தாள்.

“அந்த தம்பி இருக்க எனக்கு என்ன பயம்?”

“எப்படி…. சக்கரைக்கு எறும்பு காவலா…” என்று எண்ணிக்கொண்டாள் மகா.

“நல்ல பையன் மகா. அத்தனை கஷ்டம் மத்தியில இப்படி நல்லா படிச்சு யார் உதவியும் இல்லாம இவ்ளோ பெரிய வேலையில சேர்ந்திருக்கான். நல்ல திறமையான பையன் ம்மா.”

“என்னம்மா உன் பொண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்ததும் நல்லா சாம்பிராணி போடுற போல.”

“அடியே…. உண்மையா டி…. அந்த சின்ன வயசுல எத்தனைய பாத்தான் தெரியுமா அந்த தம்பி.”

“என்னன்னு சொன்னா தான தெரியும் ம்மா” என்று மகா கேட்கவும் அமிர்தம்,

“அந்த இன்பா தம்பிக்கு ஏழு வயசு இருக்கும் போது ஒரு பெரிய விபத்துல அப்பா அம்மா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. இந்த தம்பிய மட்டும் தான் கஷ்டப்பட்டு காப்பாத்துனாங்க.”

“என்னம்மா சொல்ற…” என்று மெய்யாகவே கவலைப்பட்டாள் மகா.

நேற்று அத்தனை அழகாக புன்னகைத்தவன் பின்னே இப்படி ஒரு சோகமா? எவ்வளவு அழகாக சிரித்து பேசினான். ஏன் இவளே அந்த சிரிப்பில் தடுமாறியவள் தானே.

“அப்புறம் என்ன ஆச்சும்மா அவங்களுக்கு?” என்று மகா கேட்டதும்

“அப்புறம் என்ன இன்பாவ பாத்துக்க அவங்க சொந்தம் முன்னாடி காசுக்கு ஏலம் நடந்துச்சு. அவங்க அப்பா பேருல இருக்க வீடு கொடுத்த பாத்துக்குறோம்னு ஆள்..லாலுக்கு அவன பொம்மை மாதிரி அலக்கழிச்சிட்டாங்க.

பாவம் புள்ள ஏழு வயசுல தனியா யாரும் இல்லாம இருந்திருக்கான். அப்பறம் அவங்க அத்தை தான் என் அண்ணா பையன நானே பாத்துக்குறேன்னு கூட்டிட்டு போனா.”

“அப்பறம் அவுங்க அத்தை கூடையா வளர்ந்தாங்க?”

“அது தான் இல்ல, அங்க அவங்க மாமா அவனை வீட்டுல இருக்க ஒத்துக்கவே இல்லை. கடைசில ஹாஸ்டல்ல சேத்து விட்டுட்டாங்க.”

“ஹாஸ்டல்லயா வளர்ந்தாங்க?”

“ம்ம்ம் ஹாஸ்டல்ல வளர்ந்து தான் இப்போ இந்த இடத்துல இருக்கான். அவ அத்தைய விசேஷ வீட்டுல பாக்கும் போது சொல்லி வருத்தப்படுவா.

நல்ல அருமையான புள்ளன்னு. இத்தனை வருஷம் தனியா இருந்தும் ஒரு தப்பு சொல்லிட முடியாது மகா. “

என்று அவர் பாட்டுக்கு புகழ்ந்து கொண்டே செல்ல, மகாவுக்கு இப்போது தான் மனம் சற்று அமைதியாகவே ஆனது.

ஒரு நம்பிக்கையும் வந்தது, இன்பா மூலம் பெரிய பிரச்சனை எதுவும் வராது என்று. அந்த நம்பிக்கையோடு இயல்பு நிலைக்கு மாறியவள், மனம் அவனுக்காக வருந்த தான் செய்தது.

அதன் பின் தான் அனைவரிடமும் நார்மலாக பேச தொடங்கினாள் மகா.

இங்கு இன்பாவோ அவன் ஃப்ளாட் பால்கனியில் கண்களை மூடி நின்றிருந்தான்.

அவனின் ஏழு வயதில் கிடைத்த தனிமை இன்று வரை நிலைத்து கொண்டு தான் இருக்கிறது. என்ன தான் அத்தை துணையாக இருந்தாளும், இவன் கூடவே இப்போது வரை இருப்பது இந்த தனிமை ஒன்று தான்.

கல்லூரி முடிக்கும் வரை ஹாஸ்டலில் இருந்தவன், படிப்பு முடிந்து உடனே தந்தையின் சொத்து மூலம் வந்த பணத்தில் இந்த அப்பார்ட்மெண்டை தான் முதலில் வாங்கினான்.

அதுவரை வீடு என்று பெயருக்கு கூட சொல்ல ஒரு இடம் இல்லாமல் இருந்தவனுக்கு, அந்த அப்பார்ட்மெண்ட் வாங்கும் போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அப்போது எத்தனை மகிழ்ச்சியாக இருந்தானோ, அதே அளவு மகிழ்ச்சியை கொடுத்து சென்றிருந்தாள் மகா.

மகாவை நினைத்த நிமிடம் தானாக உதட்டில் புன்னகை ஒட்டிக்கொள்ள, “என்ன ஆச்சுடா உனக்கு?” என்று தலையை கோதி சிரித்தவன்,

“உன் ஆர்வம் புரியுது இன்பா, ஆனா எல்லாத்தையும் கொஞ்சம் அடக்கி வாசிடா, அப்பறம் தங்கம் பயந்துட போறா.” என்று அவனுக்கு அவனே சொல்லிகொண்டவன்

“தங்கமே தூங்க போலாமா?” என்று அவன் நெஞ்சை கை வைத்து அவனோடு கலந்திருந்தவளுடன் பேசியவன்,

“குட் நைட் தங்கமே…” என்று உறங்க சென்று விட்டான்.

இப்படியே ஒரு வாரம் சென்றது, இன்பாவுக்கு மகாவை பார்க்க வேண்டும் போல தோன்றிக்கொண்டே இருக்கும், அவள் அப்பா கடைக்கு சென்று பார்ப்போமா என்று கூட யோசித்து பார்த்து விட்டான்.

பின் மகா ஏதாவது நினைத்து பயந்து விடுவாளோ என்று எண்ணி அங்கே செல்லவில்லை. அப்படி இப்படி என்று மகா ஆபீஸ் சேரும் நாளும் வந்தது.

“மகா… இங்க இருக்கு உன் ஷால்…” என்று ஜெயா ஷாலை எடுத்து காட்ட,

“அச்சோ அந்த சுடி வேணாம் மகா பஸ்ட் டே ப்ளூ கலர் போடு…” என்று சுபா சொல்ல,

“அடச்சி எல்லாம் அமைதியா இருங்க, வேலைக்கு போக போறது மகா தான, அவளுக்கு தெரியாதா என்ன” என்று குணா குரலை கேட்க தான் அங்கு ஆள் இல்லை, இவர்கள் போடும் ஆட்டத்தை பார்த்து சிரித்த படி எழுந்த மகா,

“ஏ… மூனு பேருக்கும் காலேஜுக்கு டைம் ஆகலையா, போய் ரெடி ஆகுங்க” என்று மூவரையும் விரட்டி விட்டு கிளம்ப சென்றாள்.

வேலைக்கு கிளம்பி வந்தவள் அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்றாள்.

சந்தானம் மற்றும் சீனி பைக்கில் அழைத்து போவதாக கூறியும் மகா மறுத்து

“இங்க இருந்து மூனு ஸ்டாப் தானப்பா நான் பாத்துக்குறேன்”

என்று சொல்லி விட்டாள். இங்கு பஸ் ஸ்டாண்டில் மிக மகிழ்ச்சியோடு அவளின் கனவில் முதல் அடியை எடுத்து வைத்ததை நினைத்து அத்தனை சந்தோஷமாக இருந்தாள்.

மகா இப்போது வேலைக்கு சென்று கொண்டே  யூ.பி.எஸ்.சி க்கு பிரப்பர் செய்யலாம், படிப்புக்கு தேவைப்படும் புக்ஸ் மற்றும் எக்ஸாம் கட்டணம் அனைத்தையும் அவளின் சம்பளத்தின் மூலம் சமாளித்து விடலாம் என்று கற்பனை கோட்டை கட்டி வைத்து இருந்தாள்.

கற்பனை கோட்டை தான் அது. யூ.பி.எஸ்.ஸி தேர்வு இந்தியாவிலேயே மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்று. இந்தத் தேர்வுக்காக முறையாக வகுப்பு போய் படிப்பவர்களாலேயே இரண்டு மூன்று அட்டம்ட்-ல் தான் கிளியர் செய்ய முடிகிறது.

அப்படி இருக்க, மகா வேலைக்குச் சென்று கொண்டே படிக்கலாம் என்று எடுத்த முடிவு சரியாக இருக்குமா என்ன?

இப்படி இத்தனை பிரச்சனை இருந்தும் இவை அனைத்தையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்து வேலைக்கு செல்ல தயாராகி விட்டாள் மகா.

மகா வந்த சில நிமிடங்களிலேயே இவள் ஏறும் பஸ் வந்துவிட பஸ்ஸில் ஏறினாள். அனைவரும் வேலைக்குச் செல்லும் நேரம் என்பதால் பஸ் கூட்டமாகவே இருந்தது.

அந்த கூட்டத்தில் மகா வாயிலுக்கு எதிரேயே இறங்க வசதியாக கம்பியை பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

முதலில் வெளியே ஸ்டாப்பிங்கில் மட்டும் கவனமாக இருந்தவள் எதார்த்தமாக கீழே பார்க்க அங்கே சீட்டில் அமர்ந்திருந்த இன்பாவைப் பார்த்து அதிர்ந்து விட்டாள்.

அதுவும் அவனின் கையில் இருந்த பொருளைப் பார்த்து கோபம் தான் வந்தது. அப்படியே அவள் கையில் வைத்திருந்த பேக்கை கொண்டு அவன் மண்டையிலே அடித்து விடலாமா என்று கூட தோன்றியது.

ஆனால் இருக்கும் இடம் உணர்ந்து மூச்சை இழுத்து விட்டு அமைதியானவள், மீண்டும் அவன் கையில் வைத்திருந்த அந்த எம் வடிவ கீ செயினில் தான் கண் சென்றது.

இரும்பாலான அந்த கீ செயினின் எம் எழுத்தை அவனின் உள்ளங்கையில் ஏதோ பொக்கிஷத்தை வைத்து பார்ப்பது போல பார்த்திருந்தான்.

“என்ன இவன் இப்படி இருக்கான். நம்மல நினைச்சி தான் அந்த கீ சேயினா பாக்குறானோ? ஒன்னும் தெரியலயே, இது  எதுவும் சரியாவே படல எனக்கு” என்று அவனையே பார்த்திருக்க,

இன்பா அந்த கீ செயினை பத்திரமாக எடுத்து அவன் மேல் பாக்கெட்டில் போட்டு அங்கே கை வைத்து அப்படியே கண்களை மூடிக்கொண்டான்.

இவன் செயலில் மேலும் அதிர்ந்த மகா வேகமாக அவள் நின்ற இடத்தை விட்டு நகர முயன்றவள்.

அருகில் இருந்த பெண்ணை பார்க்காமல் அவர் மீது மோத அந்நேரம் பார்த்து பஸ் ஓட்டுனர் பிரேக் போட அப்படியே பின்னோக்கி விழ போனால் மகா.

மகா “அச்சோ…. கீழே விழப் போறேன்…” என்று பயத்தில் கண்களை மூடியபடி அருகில் இருந்த கம்பியை பிடிக்க முயல அதற்குள் யாரோ ஒருவர் மீது அப்படியே சாய்ந்திருந்தாள் மகா.

மகா சாய்ந்த வேகத்தில் அவர் அப்படியே பேலன்ஸ் இன்றி கீழே அமர்ந்துவிட மகா அவர் மடியிலேயே தொப் என்று அமர்ந்து விட்டாள்.

மகா கீழே விழுந்த வேகத்தில் வேகமாக எழுகிறேன் என்று அவர் தொடையில் கை வைத்து அமுக்கி எப்படியோ எழுந்து நின்று திரும்பி பார்த்து அதிர்ந்து விட்டாள்.

பின்ன வேற யாரு நம் இன்பாவே தான் அது. அவளை கீழே அமர்ந்தபடி குறும்பு நிறைந்த சிறு புன்னகையுடன் பார்த்திருந்தான்.

மகாவுக்கு ஒரே வெட்கமாக போய்விட்டது. இவன் மேலேயே விழுந்து எழுந்தோம் என்று அவளையே அவள் திட்டியபடி நின்றிருந்தாள்.

இன்பா மகா வை பார்த்து உதடு கடித்து சிரித்தபடியே எழுந்து நிற்க அந்த பஸ்ஸின் நடத்துனர்

“ஒழுங்கா கம்பிய பிடிச்சி நிக்க மாட்டியா ம்மா பாரு உன்னால அந்த தம்பியும் விழுந்துட்டாரு என்னென்னு பஸ்ல ஏறுறீங்களோ”

என்று அவர் பாட்டுக்கு திட்ட மகாவுக்கு அவர் திட்டியது கூட பெரிதாக தெரியவில்லை ஆனால் அவனின் பார்வை.

“டேய் அப்படி பார்த்து சிரிக்காதடா…” என்று அவன் மண்டையிலேயே கொட்டனும் போல அவளுக்கு கோபமாக வந்தது.

பின் அவனே எழுந்து அவள் அருகில் வந்தான். திடீரென்று இன்பா இவளை நோக்கி வரவும் ஒரு வித பதட்டத்தில் மகா பின்னோக்கி சென்று விழ போக இன்பா இம்முறை அவள் கையை பிடித்து விழாமல் பார்த்து கொண்டவன்.

“போலாமா தங்கமே….” என்று மிக மெல்லிய குரலில் அவள் அருகே சென்று இவன் சொல்லவும் மகா கண்கள் விரிய திகைத்து போய் அவனை “ என்ன போலாமா…” என்று அதிர்ந்து பார்த்தாள்.