வேறு வழியில்லாமல் தான் பெண் பார்க்கும் நிகழ்விற்கு வீரேந்திரன் கிளம்பி வந்தான். இங்கு வந்த பிறகும் ஏதாவது ஒரு வாய்ப்பில் இந்த திருமணம் தடைபடுமாயின் அதிகம் மகிழப்போவது அவனாகத்தான் இருக்கும்.
இவனை விட அதிகமாக மகிழ மணப்பெண் இருக்கிறாள் என அவனுக்கு எங்கே தெரியப் போகிறது?
நாராயணன் வீட்டிற்கு உறவுகள் சூழ வந்திறங்கியவனுக்கு வண்டியை விட்டு இறங்கியதும் கைப்பேசியில் அழைப்பு வந்துவிட, அழைப்பை ஏற்றபடி பக்கவாட்டில் நடந்து கொண்டே பேசினான்.
அதற்குச் சற்று முன்னர்தான் சந்தியாவுக்கும் அலங்காரம் முடித்திருக்க, “ஹே ரொம்ப சூடா இருக்கு. கொஞ்சம் ஜன்னல் எல்லாம் திறந்து வையுங்க” எனக் கூட்டத்தில் ஓரிருவர் சொல்ல ஜன்னல் கதவை எல்லாம் திறந்து வைத்திருந்தார்கள்.
வீரேந்திரன் கைப்பேசியில் பேசிக்கொண்டு அந்த ஜன்னலருகே தான் வந்துவிட்டிருந்தான். அவன் வந்த நேரம், “வாவ்… ரொம்ப அழகா இருக்க…” என்றொரு பெண்ணின் குரல், அதில் தன்னைப்போல அவன் கவனம் எதிரில் இருந்த பெண்ணின் மீது பதிய, அவளோ கண்களை எட்டாத புன்னகையுடன் நின்றிருந்தாள்.
நீ அழகு என்று சொல்வதற்கான எதிர்வினையா இது என்பது போலத்தான் இருந்தது அவளது முகபாவனை.
அவளது அலங்காரமே கட்டியம் கூறியது அவள் தான் தாங்கள் பார்க்க வந்திருக்கும் பெண் என்று. இன்று பெண் பார்க்க வருகிறார்களே என்ற பரபரப்போ எதிர்பார்ப்போ கூட அவள் முகத்தில் தென்படவில்லை.
ஆர்வமற்ற அவள் முகத்தை யோசனையோடு பார்த்தபடி நின்றிருந்தான் வீரேந்திரன். அவனின் கூர் விழிகள் அவள் முகத்திலிருந்து எதையோ அறிய முற்பட்டது.
அப்பொழுது அவ்விடம் கொஞ்சம் பரபரப்பானது. “மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துட்டாங்க…” என்று ஒரு பெண் ஓடி வந்து தகவல் சொல்லிவிட்டுப் போனாள்.
உடனே சந்தியாவின் முகம் வெளிறிப்போனது. சற்று முன்பு கொண்டிருந்த மில்லிமீட்டர் புன்னகை காணாமல் போய் பயத்தில் முகமெல்லாம் வியர்க்கத் தொடங்கி விட்டது. உள்ளங்கைகளின் பரபரப்பைக் கட்டுப்படுத்த தெரியாமல், கையிலிருந்த கைக்குட்டையை பாடு படுத்தினாள்.
பயத்தில் மேனியும் நடுங்கியிருக்கும் போல, “பொண்ணு பார்க்கத் தானே வராங்க. அதுக்கு எதுக்கு இத்தனை பயம். சாதாரணமா இரு சந்தியா. நீ படிச்ச புள்ள… இதெல்லாம் சாதாரண சம்பிரதாயம்” என எதிரிலிருந்த பெண் ஆறுதல் சொல்லித் தேற்ற, அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் விறுவிறுவென வந்த வழியிலேயே திரும்பி நடந்திருந்தான் வீரேந்திரன்.
‘பொண்ணு பாக்க வந்ததுக்கெல்லாம் அவளுக்குப் பயமில்லை. என்னை பாக்க தான் பயம்… என்னை கல்யாணம் பண்ணிக்க தான் பயமா இருக்கும். சரியான தொடைநடுங்கியா இருப்பா போல…’ என அவளைச் சரியாகக் கணித்தவனுக்கு, அவளின் பயத்தைப் பார்த்து கோபமாக வந்தது.
‘நான் என்னடி செஞ்சேன் உன்னை? என்கிட்ட என்ன பயம் உனக்கு? நான் என்ன சிங்கமா புலியா?’ என அவளை உலுக்கிக் கேட்கும் வேகம் அவனிடம். தன் அடங்காத ஆக்ரோஷத்தைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தி நின்றான். அவன் முகமே கருத்து போனது.
“வாங்க மாப்பிள்ளை… போன் பேசிட்டு இருந்தீங்கன்னு சொன்னாங்க. உள்ளே வாங்க… உள்ளே வாங்க” நாராயணன் மாப்பிள்ளை என்ற சொல்லை மகிழ்ச்சியோடு சொல்லி வரவேற்க, முகத்தை இயல்புபோல வைத்துக் கொண்டு வீட்டிற்குள் வருகை தந்தான்.
மாப்பிள்ளையைப் பார்க்கும் ஆர்வத்தில் மணப்பெண் அறையிலிருந்து எல்லாரும் வெளியேறி இருக்க, “மாப்பிள்ளை ராஜா மாதிரி இருக்காரு சந்தியா… டவுன்ல இருக்க சண்முகம் ஸ்டோர்ஸ் துணிக்கடை இருக்கல்ல… அது மாப்பிள்ளையோடது தான். யாரும் கேட்டா என்கிட்ட சொன்ன மாதிரி என்னவோ கடை வெச்சிருக்காருன்னு சொல்லி வைக்காத. எவ்வளவு பெரிய கடை எவ்வளவு பெரிய ஆளுங்க… இது கூட தெரியாம தான் கல்யாணத்துக்குத் தயாரா இருக்கியா நீ” என அவளின் அத்தை புவனா வந்து தகவல் சொன்னார்.
‘நான் கல்யாணத்துக்கு தயாரா இருக்கேனா? விளங்கிடும் போங்க… ஏன் அத்தை என் நிலைமை புரியாம நீங்க வேற…’ என மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.
அதற்குள், “பொண்ணை கூட்டிட்டு வர சொன்னாங்க…” என அவளின் உறவுப் பெண்கள் இருவர் உள்ளே வர, அவளுக்கு இன்னும் தடதடத்தது.
“பரவாயில்லை மாமா பெரிய இடத்துல தான் மாப்பிள்ளை பார்த்திருக்காரு… மாப்பிள்ளையும் சூப்பர்” என உடன் வந்தவர்கள் தகவல் தந்தபடியே சந்தியாவை அழைத்துச் செல்ல, அதெல்லாம் அவள் செவியில் விழுந்தால் தானே?
“எல்லாருக்கும் இந்த காபியை கொடும்மா” என அவளிடம் தட்டை தந்து தனியாக வேறு விட்டுவிட, இன்னும் சுத்தம். அவளின் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவளின் மேனி நடுக்கத்தையும் தயங்கிய நடையையும் அவதானித்த வீரேந்திரன் முகத்தை சுருக்கினான். இவள் தனக்குத் துளியும் பொருத்தம் இல்லை என்று அந்த நொடியே அவனின் மனதில் உறுதியாகத் தோன்றிற்று.
அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் காபியைத் தந்துவிட்டுச் சென்றவள் மீது அவனுக்கு எரிச்சலாக வந்தது. ‘என்னவோ நான் இவளை கட்டிக்க தவம் கிடக்கிற மாதிரி தான் இவளுக்கு நினைப்பு…’ என்று எண்ணியவன், “எனக்கும் தான் இந்த கல்யாணம் பிடிக்கலை. அதுலயும் பயந்து பம்புற உன்னைச் சுத்தமா பிடிக்கலை…” என அவளை இழுத்து நிறுத்தி சொல்லியே ஆக வேண்டும் போல ஒரு வேகம், ஆவேசம்.
ஆழ்ந்த பெருமூச்சை விட்டு தன்னை கட்டுப்படுத்தியபடி திரும்பி தன் பெரியப்பா வேதநாயகத்தைப் பார்த்தான். எதையோ பெரிதாகச் சாதித்துவிட்ட பெருமிதம் அவரிடம். நாராயணனின் மகிழ்ச்சியும் அதற்குத் துளியும் குறைவில்லை.
எரிச்சலில் தலையை லேசாக இடவலமாக அசைத்துக் கொண்டான்.
ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு தன் தம்பி ஸ்ரீதரனை திரும்பிப் பார்த்தான். அவன் செம குஷி போல. அவனது முகபாவனையே சொன்னது. ஆக எல்லாருக்கும் பிடித்திருக்கிறது என்ற கடுப்பான பெருமூச்சு அவனிடம். இப்படியா தனக்கு எழுதியிருக்க வேண்டும் என்று தன்னையே நொந்து கொண்டான்.
இதுவரை விதியை எல்லாம் பெரிதாக நம்பாதவனுக்கு… இன்று விதி, சதி அனைத்தின் மீதும் அபரிமிதமான நம்பிக்கை பிறந்திருந்தது.
ஸ்ரீதரன் தனக்குள், ‘வாவ்… இதென்ன இவங்க இப்படி பயப்படறாங்க. நமக்கு நல்லா என்டேர்டைன்மெண்ட் இருக்கு… பைனலி நமக்கு ஒரு அடிமை சிக்கிடுச்சு..’ என பதின்வயது துருதுருப்பில் குதூகலமாக எண்ணிக் கொண்டிருந்தது தனிக் கதை.
அம்மா செல்லமும் இல்லாமல், அப்பா கண்டிப்பும் இல்லாமல் வளர்ந்த ஸ்ரீதரன் ரொம்பவுமே குறும்பு பிள்ளை. பதினாறு வயது தான். மேல்நிலைப்பள்ளியில் தான் படித்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால், நிறைய சேட்டை. தன் இஷ்டம் போல இருப்பவன். இதுவரை யாரும் எதற்கும் அவனுக்கு நோ சொன்னதில்லை. அப்படிச் சொல்லவும் ஒரு உறவு இருக்க வேண்டுமல்லவா? அப்படியே ஜாலியாக வளர்ந்து விட்டவனுக்கு இனியும் தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடுவதில் விருப்பமில்லை.
ஆனால், ஸ்ரீதரன் டம்மி பீஸாக நினைக்கும் சந்தியா அவனை அவன் போக்கில் விட மாட்டாள் என அப்போது அவனுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் இந்த திருமணத்திற்கு அழகாய் எண்ட் கார்ட் போட்டிருப்பானோ என்னவோ!
அங்கிருந்த தாத்தா ஒருவர், “பொண்ணு கிட்ட தனியா எதுவும் பேசறீங்களா மாப்பிள்ளை?” என்று வீரேந்திரனை பார்த்துக் கேட்க, ‘அது ஒன்னு தான் இப்ப குறைச்சல்’ என்றிருந்தது வீரேந்திரனுக்கு.
சந்தியாவோ, ‘ஐயோ! தாத்தா…’ என மனதிற்குள் அலறியிருந்தாள். ஏற்கனவே எப்பொழுதடா இந்த சம்பிரதாயம் முடியும் என முள் மேல் இருப்பது போலத் தவித்துக் கொண்டிருப்பவளை இந்த தாத்தா இப்படிக் கோர்த்து விட்டால்?
வீராவோ அந்த தாத்தாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதிரில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அழுத்தமாக ஒரு பார்வை பார்க்க, இவன் பார்வையை நிமிராமலேயே உணர்ந்தவளுக்கு இதயம் படபடத்து தொண்டைக்குழி வழியே வெளியிலேயே வந்து விழுந்து விடுமோ என்ற நிலைமை.
இந்த வைபவம் சீக்கிரம் முடியாதா என்று அனலில் இட்ட மெழுகு போல தவித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனை ஏறிட்டுப் பார்க்கும் மனதிடமோ, அவனைத் தனியாக எதிர்கொள்ளும் நெஞ்சுரமோ இம்மியும் இல்லை.
‘நம்மளை பார்க்கறாளா பாரேன்… என்னமோ இவளை ஆசைப்பட்டு நான் பார்க்கிற மாதிரி. உன்னை கட்டிக்க எனக்கும் தான்டி பிடிக்கலை’ என உள்ளுக்குள் கத்தினான்.
வேதநாயகம் தான், “சந்தியா… வீராவை பின் பக்கமா கூட்டிட்டு போம்மா… ரெண்டு பேருக்கும் ஏதாவது பேசணும்ன்னு இருக்குமல்ல. எங்க முன்னாடி பேச தயக்கமா இருக்கும்… தனியா போயி பேசிட்டு வாங்க….” என்று சொல்ல, அவளுக்குத் தொண்டை தண்ணீர் வற்றி போனது.
அப்படி ஒரு ஆசுவாசம் சந்தியாவிற்கு. அவளையுமறியாமல் நன்றியோடு வீரேந்திரனை நோக்கியவள் திடுக்கிட்டாள். இன்னமும் வீரேந்திரனின் பார்வை அழுத்தமாக இவள்மீதே தான் இருந்தது. ‘ஏன் இப்படிப் பார்க்கிறான்?’ என உள்ளுக்குள் குளிர் பரப்புமளவு இருந்தது அவன் பார்வை. உடனேயே வேகமாக தன் பார்வையை தழைத்துக் கொண்டாள்.
“ஏன்டா மவனே?” வேதநாயகம் கேட்க, அவரின் காதிற்குள் எதையோ சொன்னான். ஓர விழிப் பார்வையில் அவர்களைக் கவனித்தவளுக்கு, ‘இப்பொழுது என்னவோ?’ என்ற பேரச்சம் தான்.
“அதெப்படி சரியா வரும்?” என அவர் தன் ஆட்சேபனையைத் தெரிவிக்க, “இதுல என்ன இருக்கு… மாமாகிட்ட சொல்லி வையுங்க” என்றான் அவன் தீர்மானமாக.
‘இவனும் இவன் முரட்டுப் பிடிவாதமும்! கொஞ்சம் கூடச் சொல் பேச்சு கேட்கிறதில்லை. கொஞ்சம் கூட சம்பிரதாயம் பார்க்கறதில்லை…’ என அவனை மனதிற்குள் வறுத்தெடுத்தவர், முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டார்.
நாராயணன் தனியாகச் சிக்கிய நேரம் மெதுவான குரலில் அவரிடம் எதுவோ சொல்ல, அவர் யோசனையாக வீரேந்திரனை பார்த்தார். அவனோ அழுத்தமாக அமர்ந்திருக்க, ஒரு பெருமூச்சுடன், “விடுங்க அண்ணே அவன் பிடிவாதம் நமக்கு தெரிஞ்சது தானே… சொன்னாலும் கேட்க போறதில்லை. நாளைக்கு வந்து சந்தியாவைப் பார்த்து பேசிக்கட்டும். சாயங்காலம் நாலு மணி போல வீட்டுக்கு வர சொல்லிடுங்க” என்றார் அவர் பெருமூச்சுடன்.
“நீயாவது வேண்டாம்ன்னு சொல்லேன்… அதென்ன எல்லாரும் அவன் இஷ்டத்துக்கு வளைஞ்சு கொடுக்கிறது…”
“அதுக்கில்லைண்ணா ஒன்னை கவனிச்சீங்களா… சந்தியாவுக்கு எல்லார் முன்னாடியும் தனியா பேச சங்கடமா இருக்கும்ன்னு யோசிச்சு நாளைக்குத் தனியா வந்து பேசிக்கிறேன்னு சொல்லறான். அப்ப சந்தியா மேல அக்கறை வந்ததால தானே…” என கொஞ்சம் பெருமையாகச் சொல்ல, தலையில் அடிக்காத குறையாகப் பார்த்தார் வேதநாயகம்.
“ஆமா ஆமா ரொம்ப அக்கறை தான்… அதுதான் அவகிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொல்லறான் பாரு…” வேதநாயகம் அங்கலாய்க்க, “விடுங்கண்ணா இப்பவே சொன்னா இந்த கழுதை பயந்தே சாவா… அப்படி என்னதான் அவனைப் பார்த்து பயமோ? அவன் பேரைக் கூடச் சொல்ல விட மாட்டீங்கறா… ஒருவேளை நாளைக்கு நேரில் பார்த்து பேசினா கொஞ்சம் தெளிவானாலும் ஆவா…” என்று உள்ளதை உள்ளபடி சொல்ல,
“இருக்கிறதையும் கெடுத்துக்காம இருந்தா சரி…” என்று முணுமுணுத்தார் அவர்.
யாரின் கெட்ட நேரமோ இவர்கள் இருவரும் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக்கொண்டிருந்ததை மேனகா கேட்டு வைக்க, அவள் தனக்குள் ஒரு திட்டத்தைத் தயார் படுத்திக் கொண்டாள்.