அனைவருக்கும் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. சத்யாவதியால் மகனை நிமிர்ந்து கூட பார்க்க முடிய வில்லை. இப்படி ஒரு விஷயம் அதுவும் தங்கள் வீட்டில் நடந்திருக்கிறது என்று அவர்களால் நம்பவே முடிய வில்லை. இனியன் திக் பிரம்மை பிடித்தது போல நின்றான்.
“ஒவ்வொரு நாளும் ஊசியா அந்த மனுசனை குத்தி இருந்திருக்கா, அதை தாங்க முடியாம தான் அந்த மனுஷன் ஒரேடியா போய் சேர பாத்துருக்கார்”, என்று சொல்ல அனைவருமே சத்யாவதியைப் புழுவைப் பார்ப்பது போல தான் பார்த்தனர்.
“டேய் சின்னவனே சேகர் மாப்பிள்ளை கட்டுன பொண்டாட்டியை கூட பாக்கலைன்னு சொன்னியே. இப்ப சொல்லு இவ மூஞ்சுல முழிச்சா கூட விளங்குமா? டா”, என்றார்.
“அப்பா என்னை மன்னிச்சிருங்க பா. அவர் நெஞ்சை பிடிச்சிட்டு விழுந்ததுமே என் தப்பை நான் உணர்ந்துட்டேன்”, என்ற படி சத்யாவதி அவர் காலைப் பற்றிக் கொள்ள “சி என்னைத் தொடாதே. உன்னைப் பாத்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு”, என்று உதறித் தள்ளியவர் “நான் பெத்த பாவத்தால ஒரு நல்ல மனுஷன் சாக கூடாது. ஒழுங்கு மரியாதையா இதுல ஒரு கையெழுத்து போடு”, என்றார்.
“நான் போட மாட்டேன். எனக்கு என் புருஷன் வேணும்”
“எதுக்கு அவரை ஒரேடியா கொன்னு அனுப்புறதுக்கா?”, என்று கேட்டது வேணு கோபாலன் இல்லை, சத்யாவதியின் புதல்வன் விஷ்வா.
“விஷ்வா நான் உன் அம்மா டா”
“சீ, அந்த வார்த்தையை சொல்லாதீங்க. எனக்கு உங்களை பாத்தாலே பத்திக்கிட்டு வருது. தாத்தா ஒழுங்கா உங்க பொண்ணைக் கையெழுத்து போடச் சொல்லுங்க. இல்லைன்னா மரியாதை கெட்டுரும்”, என்று சொல்ல மீண்டும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தார் சத்யாவதி. தாத்தாவும் பேரனும் உறுதியாக இருந்தார்கள்.
“உன் கைல கிடைச்ச அருமையான வைரத்தை உன் திமிர் தனத்தால சீனி கல்லுன்னு நினைச்சு தூக்கி போட்டுட்ட, இனி எந்த காலத்துலயும் அது உனக்கு கிடைக்காது சத்யா. கையெழுத்து போடு”, என்று வேணு கோபாலன் சொன்னதும் “நான் கடைசியா ஒரு தடவை அவரை பார்த்து பேசுறேன் பா”, என்றார்.
“உன்னைப் பாத்தாலே அவர் உயிர் போயிரும். இவ்வளவு நாள் தான் அந்த மனுசனை வாழ விடலை. இனியாவது நிம்மதியா வாழட்டும். போடு”, என்று சொல்ல வேறு வழி இல்லாமல் போட ஆரம்பித்தார்.
எந்த கணவரை காலில் போட்டு மிதித்து சுடு சொல்லால் வதைத்தாரோ இன்று அவருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கையெழுத்திட்டார் சத்யாவதி.
“உன் கழுத்துல இருக்குற தாலியை கூட அறுத்து எறிஞ்சு அந்த மனுசனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க தான் தோணுது. ஆனா அப்பவும் அவருக்கு ஏதாவது ஆயிருமோன்னு பயமா இருக்குறதுனால விடுறேன்”, என்ற வேணுகோபாலன் “இங்க பாருங்க இந்த விஷயம் கடைசி வரை சின்னவளுக்கும் அவ புருஷனுக்கும் தெரியவே கூடாது. ஏதோ கருத்து வேறுபாடு அதான் பிரிஞ்சிட்டாங்கன்னு மெதுவா சொல்லிக்கலாம். சின்னவளுக்கு விஷயம் தெரிஞ்சா தன்னால ஒரு மனுஷன் வாழ்க்கை போச்சுன்னு அவளுக்கு ஏதாவது ஆகிரும். இல்லைன்னா இந்த தறுதலையை காரி துப்பிருவா. நான் சாகப் போற வயசுல என்னவெல்லாம் பாக்க வேண்டி இருக்கு”, என்றார் வேதனையாக.
“விஷ்வா உன் அப்பாவோட பொருளை எல்லாம் எடுத்துட்டு போய் உன் பெரிய மாமா வீட்ல வச்சிரு. இனி அவர் அங்க தான் இருப்பார். நானும் அங்க தான் போக போறேன்”
“அப்பா நீங்க எதுக்கு?”, என்று கேட்டார் தண்டாயுதபாணி.
“உனக்கு என்ன டா தண்டபாணி, அதான் சொத்து எல்லாம் உனக்கே கொடுத்துட்டேனே? எல்லாத்தையும் நீயும் உன் மகனும் அனுபவிங்க. பாவபட்டு அந்த விஷ்வா பயலுக்கு ஏதாவது செய் இனியா. அவனை நீயாவது பாத்துக்கோ. எனக்கு இங்க இருக்குற யாரையும் பாக்கப் பிடிக்கலை”
“தாத்தா எனக்கு ஒரு விஷயம் சொல்லணும்”, என்றான் இனியன்.
“சொல்லு பா”
“எனக்கு இந்த சொத்து சுகம் எல்லாம் எதுவும் வேண்டாம். நான் ஐ.பி.எஸ் பாஸ் ஆகிட்டேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பிஸினஸ் ட்ரிப்ன்னு சொல்லிட்டு போனது ட்ரைனிங்க்கு தான். ரெண்டு மாசத்துல போஸ்டிங் போட்டுருவாங்க. அப்புறம் எனக்கு அதிபன் அண்ணா வாங்கிக் கொடுத்த கம்பெனி மட்டும் போதும். அதுவுமே இனி விஷ்வா தான் பாத்துக்க போறான்”, என்று இனியன் சொன்னதும் அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள்.
“தாத்தா, எனக்கும் உங்க சொத்து எல்லாம் வேண்டாம். அதிபன் அண்ணா அரம்பிச்சி கொடுத்த என்னோட கேமிங் கம்பெனி போதும். என்னை எதுக்கும் கட்டாயப் படுத்தாதீங்க”, என்றான் விஷ்வா.
“அப்புறம் என்ன தண்டபாணி? இனி உனக்கு கொண்டாட்டம் தான். சொத்து, வீடு எல்லாம் உனக்கு தான். வேணும்னா கையெழுத்து வேணும்னா போட்டுத் தரேன். ஆனா உன்னை எல்லாம் என் மகன்னு சொல்றதுக்கு எனக்கு அசிங்கமா இருக்கு”, என்று சொல்ல தண்டாயுதபாணி தலை குனிந்தார்.
“நீ என் மகனுக்கு மேலன்னு எனக்கு நல்லாவே தெரியும் மா. என்னை எதுவும் பேச வைக்காதீங்க. ஒதுங்கி இருந்தா தான் எல்லாரும் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடியும்? அப்புறம் என் பேரன் அதிபனுக்கும் என் பேத்தி யாழிக்கும் கல்யாணம் செஞ்சு வைக்க போறேன். நான் சொன்னா நீங்க ரெண்டு பேரும் வேணா கேக்காம இருப்பீங்க. என் மூத்த பிள்ளையும் கடைசி பிள்ளையும் என் பேச்சை கேக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு?”, என்றார்.
“அதை நீ முடிவு பண்ணக் கூடாது மா. இதோ இங்க இருக்கானே இனியன். அவன் கிட்ட கேளு சம்மதமானு”, என்று அவர் சொன்னதும் அனைவரும் இனியனைப் பார்க்க “எனக்கு இலக்கியா எப்படியோ அது மாறி தான் யாழியும்”, என்று சொல்லி அன்னையின் மூக்கை உடைத்தான் இனியன்.
“கேட்டுச்சா சரஸ்வதி, எனக்கு பிள்ளைகள் சரி இல்லாம போனாலும் பேரபிள்ளைங்க சரியா தான் இருக்காங்க. ஏன்னா இவங்களுக்கு வழிகாட்டியா இருந்தது என் மூத்த பேரன் அதிபன். அவனே சொக்க தங்கமா இருக்கும் போது அவனை பின் பற்றி நடக்குறவங்களும் தங்கங்களா தான் இருக்கும். உன் புருஷன் கிட்ட சொல்லு. அதிபனை அவங்க அம்மா அப்பா நல்லா தான் வளத்துருக்காங்கன்னு”, என்றவர் “விஷ்வா நான் என்னோட பொருள் எல்லாம் எடுத்துட்டு வரேன். நீயும் உன் அப்பா பொருளை எடுத்துட்டு வா. இப்பவே அங்க போயிரலாம்”, என்று சொல்ல “சரி தாத்தா”, என்று சொல்லி விட்டு தாய் தகப்பன் அறைக்குச் சென்றான் விஷ்வா.
சத்யாவதி தான் கண்ணீர் விட்ட படி அசையாமல் அமர்ந்திருந்தார். அவரை பார்க்க யாருக்கும் பாவம் என்று தோன்ற கூட இல்லை.
“வேணும்னு செய்யலை சின்ன அண்ணி”, என்று சரஸ்வதியிடம் சொல்ல “நீ இப்படி செய்வேன்னு நான் எதிர் பாக்கலை சத்யா. சேகர் தம்பியை எப்படி நீ அப்படி நினைச்ச? அதுவும் சவுந்து புடம் போட்ட தங்கம். அவ அவளோட புருஷன் மேல உயிரையே வச்சிருக்கா. இந்த விஷயம் தெரிஞ்சாலே துடிச்சி போயிருவா. அண்ணன் தங்கச்சி, அப்பா பொண்ணு, எப்படி உன்னதமான உறவோ அது போல தான் சேகர் தம்பிக்கும் சவுந்துக்கும் இருக்குற உறவு. அதையே கொச்சை படுத்தின உன்னை என்னால மன்னிக்கவே முடியாது. என்கிட்ட பேசாம இருந்தா உனக்கு நல்லது”, என்று சொல்லி விட்டுச் சென்றார் சரஸ்வதி.
அதைக் கேட்டு செருப்பால் அடித்தது போல இருந்தது சத்யாவதிக்கு. கணவனைப் பார்த்து மன்னிப்பு கேட்க அவர் மனம் ஏங்க அந்த வாய்ப்பை சேகர் அவருக்கு தருவாரா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.