தேன் சாரல் நீ 11

    ஈஸ்வர், சுகன், சுஜா மூவரும் தங்கள் பணிக்கும், கல்லூரிக்கும் திரும்பியிருந்தனர். சுஜா சிறிது நாளாகவே யோசனையில் இருக்க காயு தன் நண்பர்களுடன் அதை பகிர்ந்தாள்.

     “ப்ரெண்ட்ஸ் சுஜாவை கவனிச்சிங்களா? பழைய கலகலப்பு இல்லை. ஏதோ போல இருக்கா. சுகன் அண்ணாவை வரச்சொல்லுங்க.” என சுஜா கவுன்டரில் ஆடர் குடுத்துவரும் முன் அவளை பார்த்தபடி சொன்னாள்.

     “அப்படியா தெரியுது? இல்லையே எப்பவும் போலதான் சுஜா இருக்கு. நீ சரியா கவனிச்சி இருக்கமாட்ட காயு.” என்றான் செல்வம் சட்டென.

     “இல்லை. நிறைய சேஞ்சஸ் தெரியுது. பேச்சி குறைஞ்சி போச்சி. ஏதோ யோசிச்சிக்கிட்ட இருக்கமாதிரி இருக்கு. கவனம் இங்கில்லாதது போலவும் இருக்கு. இளைச்சி போனது போல இருக்கு. ஏதாவது பிரச்சனையா? இல்ல உடம்பு முடியலயா?ன்னு தெரியல” என ஜெயன் பதில் தர, மகேஷும், கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

    சுஜா வந்து காயுவுடன் உட்கார்ந்து பேச, எல்லோரும் மாலினி, ராகினி நிச்சயம், திருமணம் பற்றி பேசியபடி பக்கோடா சாப்பிட்டு முடிக்கும்போது சுகனும், ஈஸ்வரும் வந்தனர். காபி வந்து எடுத்துக்க சொல்லி அழைக்க, சதீஷும், ஜெயனும் காபி எடுத்துவர சென்றனர்.

     கண்ணன், மகேஷும் இடம்மாறி சுஜாவின் அருகில் ஒரு இடமும், கண்ணனின் அருகில் ஓரிடமும் இருப்பதுபோல, பேச வசதியாக இருப்பது போல, சேரை திருப்பி போட்டு உட்கார்ந்தனர்.

      பார்த்த சுகன் சிரித்தபடி ஈஸ்வரிடம் சப்தமாக, “என் முகம் பார்த்து பேசாம இந்த கடவுளால இருக்க முடியாதுண்ணா.” என்றவன் வாயசைத்து

   “ஏன்டா? ஏன் இந்த ஆராய்ச்சி உனக்கு? பல்லு கொட்டுனா நான் வைத்தியம் பாக்கமாட்டேன்”  என்றான் கண்ணனிடம்.

     கண்ணனோ, “ஏன்டா போன் பண்ணா எடுக்க மாட்டியா? அவ்வளவு பிஸியோ ஸாரு? அங்க வந்து பிச்சிப்புடுவேன்” என்றான் தங்களை திரும்பி பார்த்தவர்களை சமாளிக்க.

   காபியுடன் திரும்பி வந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாய் கொடுத்தபடி இருந்த இடத்தில் அமர்ந்தனர். கண்ணன் பக்கத்துல சதீஷும், சுஜா பக்கத்துல ஜெயனும் உட்கார, ஈஸ்வர், “பாப்பா எதுக்கு என்னை வரச்சொன்ன?” என்க

    “அண்ணா வெளியில போயிட்டு வரலாமா? எனக்கு கொஞ்சம் திங்ஸ் வேணும். என்கூட வெளிய வர்றிங்களா?”  என ஈஸ்வரை கேட்க எல்லோரும் கேள்வியுடன் சுஜாவை பார்த்தனர்.

      அவளுக்கு ஒரு இருசக்கர வாகனத்தை பிறந்தநாளன்று பரிசளித்திருந்தனர் அண்ணன்கள் இருவரும்.

    காயுவும், அவளும் நகையும், சதையும் போல எப்போதும் ஒன்றாகவே இருப்பர். கடைகளுக்கு இருவரும் ஒன்றாகவே செல்வர்.

     பொருட்கள் வாங்க போகும்போது சுஜாவைவிட காயு நன்றாக பேரம் பேசுவாள். இப்போ ஈஸ்வரை கூப்பிடவும் சுகனும் ஆச்சரியமாக பார்த்தான்.

     “பாப்பா ஆர் யூ ஆல் ரைட்? ஆர் யூ பீலிங் சிக்?” சுகன் கேக்க

     “குட்டிமா வண்டி சாவிய காயுகிட்ட குடுத்துட்டு வா. போயிட்டு வரலாம்.  வாங்க போலாம்ன்னு நீ ஆடர் போடனும், வர்றிங்களான்னு ரிக்வஸ்ட் பண்ணகூடாது. சரி காபி குடிச்சி முடி போலாம்.” என்றான் ஈஸ்வர்.

     “சுத்தம். இனி   பாப்பாகிட்ட இருந்து ஒன்லீ ஆடர்ஸ் மட்டும் தான் வரும்.” என்று சொல்லி சுகன் சுஜாவின் பதிலை எதிர்பார்த்து அவளை பார்க்க, அவளோ வேறு உலகில் இருப்பவள் போல கவனமின்றி நின்றிருந்தாள்.

     இருவரும் கிளம்ப, “கண்ணா இனி விளையாட்டுக்கூட இப்படி செய்யாத. வேண்டாம் இந்த விளையாட்டு… விட்டுடு. இருவரில் யாருக்கு காயம் ஏற்பட்டாலும் நமக்கும் வலிக்கும்.” என்றான் சுகன் மெதுவாக. கண்ணனும் சற்றுமுன் நடந்த விசயங்களை கூற சுகன் வெறுமனே தலையை ஆட்டியபடி,

     “ ஜெயன்  நினைப்புல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம். பட் சுஜாவை கணிக்க முடியாது. பிடிச்சாலும் சொல்லாம இருக்க வாய்ப்பு அதிகம். ஸோ நாம தலையிட வேண்டாம்.” என்று சொல்லி கிளம்பினான் சுகன்.

    பத்திருபது நிமிடத்தில் ஈஸ்வரின் அறையில் அவனுடன் இருந்தனர் சுஜாவும், சுகனும்.

    “அண்ணா நாம  போன்ல சொன்னதும் பனிரெண்டு மணிநேரத்துக்குள்ள எப்படி இவ்வளவு ஏற்பாடுகளை செய்ய முடிஞ்சது சக்தி மாமாவால? ஏற்கனவே ஏற்பாடு செஞ்சிருப்பாரா?”

    “ பாட்டி அம்மாங்கிட்ட  இனி எப்படி நடந்துப்பாங்க? சொத்து பத்தி கவலை இல்லை. யாருக்கோ குடுத்துட்டு போறாங்க. ஆனா தனியா இந்த ஊமைங்க ரெண்டுபேரும் மாட்டுனா வச்சி செய்யுமே இந்த பாட்டி. ஏற்கனவே சூடு வச்சாங்க, அம்மாவும், மகளும். இனி எப்படி இவங்க ரெண்டுபேரும் பாட்டிய சமாளிப்பாங்க?” என்றவள்,

    “தாத்தா என்னிடம் பேசி ஒரு வாரமாகுது. போன் போட்டா எடுக்க மாட்டேங்கிறாங்க. அப்பாக்களும் ஏதாவது கேட்டா ஒரு வார்த்தையில பதில் சொல்றாங்க. என்னால முடியல அண்ணா.” என்று கண்கலங்கினாள் சுஜா.

     “அந்த சுழ்நிலையில எனக்கு ஒன்னும் தோணல. பாட்டி பேசின பேச்சை கேட்டு, அவங்க நம்ப அம்மாக்களிடம் நடந்துகிட்டத பாத்து, பாசமா பாத்துக்கிற பாட்டியே இப்படி இருக்கும்போது, இவங்களும் இப்படி தான்னு நான் நினைச்சதுல என்ன தப்பிருக்கு?”

       “ நிச்சயத்தன்னைக்கு அத்தனைபேரும் இருக்கப்பவே என்னா பேச்சி பேசுச்சி இந்த வளரு. யாராவது ஏன் இப்படி பேசறன்னு கேட்டாங்களா?” கேள்வி கேட்டவள்,

     “முடியலதான, இதனாலதான், இப்படிதான் நடக்குமுன்னு நினைச்சி வளர சென்னைக்கு சுபாஷை பாத்துக்க பேக் பண்ணினேன். இதுல தப்பிருக்கிறதா எனக்கு தெரியல.” என்றாள்.

     “வளரு சென்னை போனதால சுபாஷு ஐபிஎஸ் சீக்கிரம் பாஸ் பண்ண முடிஞ்சது. இப்படி யோசிக்க சொல்லுங்க இவங்கள” என்றவள், தயங்கிக்கிட்டே

   “அண்ணா, நான் இன்னொரு விசயத்தையும் தாத்தா காதுல போட்டுட்டு வந்திருக்கேன்” என்க

      “இதுக்கே வீடு பத்தி எரிஞ்சிக்கிட்டு  இருக்கும். இதுல இன்னும் ஒன்னா……? பாப்பா அது என்ன விசயம்?” என ஈஸ்வர் கேக்க

     “உங்க கல்யாணம் தான்!” பாவமாய் பார்த்த படி சுஜா சொல்ல

    “குட்டிமா என்மேல கோபமிருந்திருந்தா பேசி தீர்த்திருக்கலாமே? ஏன் இந்த கொலவெறி என்மேல?” என ஈஸ்வர் பரிதாபமாய் சொல்ல

     “நம்ம வீட்டுப் பிரச்சனை எல்லாம் முடிஞ்சி திரும்பி பாத்தா நீலா கையில ஒரு குழந்தையும், இடுப்புல ஒரு குழந்தையும் இருக்கும். ஓகேவா?” என இருவரும் கோரஸாக கேக்க

      “உங்களுக்கு எப்படி தெரியும்? நான் யாரிடமும்…. ஏன் நீலாவிற்கே இன்னும் சொல்லல. அப்புறம் உங்களுக்கு எப்படி….?” என்று வேகமாக கேட்டுவிட ,

    “அண்ணா நாங்க உங்க ஜெராக்ஸ். உங்களுக்கு புடிச்சதெல்லாம் எங்களுக்கும் புடிக்கும். ஸோ வீ நோ யூ, அண்டு யுவர் பீலிங்ஸ்” என்றனர் இருவரும் கோரஸாக. ஈஸ்வரோ தயங்கியபடி,

      “இது சரிவராது பாப்பா. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். விட்டுடு பாப்பா. வளரத்தை இதை நடக்க விடமாட்டாங்க. ஆசைபட்டது உண்மை தான். ஆனா நடக்காதுன்னு தெரிஞ்ச பின்னாடி காயமில்லாம, வலியில்லாம இருக்க பாக்கனும். வாழ பழகனும். அதுதான் புத்திசாலித்தனம். புரிஞ்சிக்கோ குட்டிமா” என்றவன்

     “நம்மை சார்ந்தவங்க நம்மால காயப்படக்கூடாது. வளரு வீடேறி போய் சண்டை போட்டுட்டு வரும். அதுக்கு வெக்கம், மானம் எல்லாம் ரெண்டாம்பட்சம். ஆனா நீலா வீட்டுல வெளிய தலைகாட்ட முடியாதபடி ஆயிடும். ஏன் குட்டிமா இப்படி பண்ணின?” என்க

    “ வளரத்தையும், வசந்தி அத்தையும் ஒன்னா படிச்சவங்களாமே? தாத்தா சொன்னாரு.” சுஜா கதை கேட்க ஆர்வமாக

      “வசந்தி அத்தைக்கு வந்த வரன்தான் சக்தி மாமா. அவர பாத்ததும் பிடிச்சதினால ஏதோ தில்லுமுல்லு செஞ்சி வளரத்தை கல்யாணம் பண்ணிகிட்டாங்க. வசந்தி அத்தை காலேஜ் சேர விரும்பினதால இதை கண்டுக்காம விட்டுட்டாங்க.”

     “வளரத்தைக்கு, வசந்தி அத்தைகூட  நாம யாராவது பேசினா உண்மை தெரிஞ்சிடுமோன்னு பயம் இருக்கும்போல, அதனால அவங்கள பாத்தாலே டென்ஷன் ஆகி சண்டைக்கு போயிடறாங்க” என யோசித்தபடி சொல்ல

     “இல்லண்ணா. மாமா சொன்னாங்க. விசயம் தெரிஞ்சதும் ஒருமுறை அவர் அத்தைகிட்ட ஏன் இப்படி செஞ்சன்னு கேட்டுட்டாராம். ‘அந்த பொண்ணு என்னை பாத்ததில்லை அதனால பிரச்சனை இல்லை. ஒருவேளை அவங்க என்னை எங்காவது பாத்திருந்து, பாத்ததும் பிடிச்சிபோய், இவங்கதான் நம்ம வாழ்க்கையின்னு நம்பி இருந்தா என்ன செஞ்சிருப்ப? இது நம்பிக்கை துரோகம். உனக்கெல்லாம் பிரண்டா இருக்கவேண்டிய துர்திஷ்டம் அந்த பொண்ணுக்கு’ அப்படின்னு திட்டியிருக்கார். அதிலிருந்து இன்னமும் அதிகமா வசந்தி அத்தைய திட்டிட்டு இருக்காங்களாம்.”

    “அவர் இவங்க ரெண்டுபேரையும் கம்பேர் பண்ணிட்டா என்ன செய்யறதுன்னு இவங்களுக்கு பயம். அதனால ஏற்படற பொறாமை, அதான் சண்டை போடறது. குற்ற உணர்வு இல்ல இது. பொறாமை” என்ற சுஜா

    “அலை எப்ப ஓயறது? கடல்ல எப்ப குளிக்கிறது? அதான் தாத்தாவோட குழப்பத்துக்கு இடையில இதையும் யோசிக்க சொல்லிட்டு வந்திருக்கேன்.”

    “அண்ணனுங்க பொழைக்கிறதையே  பொறுக்காத  உங்க மகளுக்காக நாங்க எதுக்கு எங்க ஆசைகளை விட்டுக் கொடுக்கனுமுன்னு கேக்காம கேட்டுட்டு வந்திருக்கேன். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு”

     “அண்ணா முயற்சியே பண்ணாம மூலையில முடங்கி கிடக்கிறது சரியில்ல.”

     “ நான் உங்களுக்கு பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்லல. எனக்கு அண்ணியா வர்றவங்கள பத்தின என்னோட கற்பனைக்கு ஏத்ததுபோல நம்மூருல நீலாதான் இருக்காங்க.”

    “ உங்க மக விடுமா? அது வீட்டுலயும் அது வச்சதுதான் சட்டம். இங்கேயும் அது வச்சதுதான் சட்டமா? இது உங்களுக்கே சரியா படுதான்னு மாமாவையும் சேர்த்து கேட்டுட்டு வந்திருக்கேன்” என்றாள் சுஜா.

     “அண்ணா வளர சமாளிக்க மாமா இருக்காங்க. அப்படி இல்லையா மாமாகிட்ட சொல்லிடுவோமுன்னு  மிரட்டி அமைதியா இருக்க வைப்போம். அதுக்குகாக நாம நம்ம வாழ்க்கையை மிஸ் பண்ண முடியாதுண்ணா.” என்று சுகன் தைரியம் கொடுக்க, சுஜாவோ

     “குழம்பின குட்டையில மீன் பிடிக்கிறது ஈசிண்ணா. அதான் நானே குட்டையையும் குழப்பி தூண்டிலும் போட்டுட்டு வந்திருக்கேன். அம்மாக்கள் தைரியமா இருந்தா நாம ஜெயிப்போம். பார்க்கலாம், இப்பவாவது அவங்களுக்கு நாம முக்கியமா தெரிஞ்சா எதிர்த்து போராடட்டும்” எனச் சொல்லி,

     “அண்ணா காயு பர்த்டே நாளைக்கு. ராணிஸ் கடைக்கு போயி ஒரு டிரஸ் வாங்கிகிட்டு போலாம் வாங்க.” சுகனை இழுக்க

     “வர்றப்போ என்னையா கூப்பிட்ட? ஆறுதல் சொல்ல அண்ணன், இப்போ செலவு பண்ண மட்டும் நானா? முடியாது அண்ணனையே கூட்டிட்டு போ குட்டிபிசாசே” என சுகன் வம்பிழுக்க

      “சுகா என்ன பேசற? பாட்டி, வளரத்தை ஓதம் அடிக்குதா? பாப்பாவை திட்டாத” என்றான் ஈஸ்வர் கண்டிப்புடன்.

      “அண்ணா உங்களுக்கும்  ஒரு நாள் என் உதவி தேவைப்படும் பாத்துக்குங்க.” என சுஜா சுகனை மிரட்ட

     “தேவைபடும் போது நான் சரண்டர் ஆயிடுறேன் சரியா? அதுவரை ஐயா சுதந்திரமா இருந்துக்கிறேன்.” என்ற சுகன், சுஜாவோடு ஷாப்பிங் சென்றான்.

    சுஜா காயுவுக்கு ஒரு சுடிதாரும், கேக்கும் வாங்கிக்கொண்டு ஹாஸ்டல் திரும்பினாள்.

   சுஜா ஊருக்கு செல்ல பிரியப்பட ஈஸ்வர் வேலை இருப்பதாக சொல்லிச்சொல்லி ஓரிரு வாரங்களாக தள்ளிப்போட்டபடி இருந்தான். சுகனிடமும் ஊருக்கு செல்லாமல் தவிர்க்கும்படி சொல்ல, அண்ணன் சொல்லை தட்டாத தம்பியும் ப்ராஜெக்ட் முடிக்க வேண்டும் என கூறி  ஈஸ்வருடன் தங்கினான்.

     வீட்டினருடன், தங்கள் அம்மா தவிர்த்த ஏனையோருடன், எப்போதாவது பேசுவது, அல்லது பல முறை தவிர்ப்பது என வேடிக்கை காட்டினர் மூவரும்.

    “அப்பா பாப்பா பேசுச்சா உங்ககிட்ட?” என ஈஸ்வரின் அப்பா பசுபதி கேட்க

     “இல்லைப்பா. ரெண்டு வாரம் முன்னாடி போன் பண்ணுச்சி. நான் எதுவும் பேசாம காதுல வச்சிக்கிட்டு நின்னு பாப்பா பேசறதை கேட்டுட்டு போன்னை வச்சிட்டேன். அதுக்கப்புறம் போன் போடவே இல்லை” என கண்கலங்க,

    சுஜாவின் அப்பா ரகுபதியோ, “அப்பா நீங்க பாப்பாவுக்கு செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கிங்க. பெரியவங்க கோபமாக இருந்தா சின்னவங்க மூஞ்ச திருப்பிக்கிட்டு போறது சரியா? வந்து சமாதானம் செய்யனுமில்லை. நீங்க பேசலனாலும் பாப்பா போன் பண்ணனுமில்ல?” என கொதிக்க

      “பாப்பாக்கு ஒரு ஆசை இருக்கு. அதுக்காக எத்தனை வருசம் ஆனாலும் கோபமா இருப்பாங்க குட்டிமா.” என தாத்தா சொல்ல

     “அப்பா நீங்க குடுக்கிற இடம்தான் இப்படி நடக்க சொல்லுது. நாளக்கி நாம தலைகுனியற மாதிரி ஆயிட போகுது. பாத்து இருங்க” என எச்சரிக்கை செய்ய

     “நீங்க சரியா புள்ளைங்கள வளர்த்திட்டிங்க. நாந்தான் சரியா வளர்க்கல போல, மூணுல ரெண்டு அரை வேக்காடா இருக்கு” என முறைத்து பார்க்க

     பசுபதி சிரித்தபடி “என்னப்பா பேத்தி ஆசைய நிறைவேத்த தயாராயிட்டிங்க போல? இப்ப யாருக்கு ஆப்பு?” என்க

    “வேற யாருக்கு உங்கம்மாவுக்கும், உன் தங்கச்சிக்கும் தான். பெரிய மனுசி ஈஸ்வருக்கு பொண்ணு பாத்திருக்காங்களாம்.” என வேடிக்கையாக சொல்ல

    “அண்ணா வயசுக்கு தகுந்ததுபோல பேச சொல்லுங்க உங்க பொண்ணுக்கிட்ட. பெரியவங்க இருக்க பாப்பாக்கு எதுக்கு இந்த பெரியத்தன வேலை எல்லாம்?” என பொரும

    “ரகு அமைதியா இரு. அப்பா இதுல என்ன பிரச்சனை?  நல்ல பொண்ணா, படிச்ச பொண்ணா, நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணாதான் பாப்பா பாத்திருக்கும். மருமக பொண்ணு எந்த ஊருப்பா? அடுத்த கல்யாணம் நம்ம வீட்டுலதானா?” பசுபதி மகிழ

      “அண்ணா பாப்பா சொல்லறதை நாம சரிபார்க்க வேணாமா? அவங்க பக்கத்து சொந்தத்துல பொண்ணு கட்டலாமுன்னு  அண்ணிக்கும் ஆசை இருக்கும். நாலையும் யோசிச்சு முடிவு செய்யிங்க. எடுத்தோம், கவிழ்த்தோம் அப்படின்னு ஆயிடப்போகுது.”  என்றார் ரகுபதி.

  அவருக்கு வேற கவலை. நல்லதா அமைஞ்சா சரி இல்லாம போன காலம் முழுவதும் இவளால போச்சின்னு பேராயிடும் என்ற கவலை.

    தாத்தா கந்தசாமி தன்னுடைய மனைவி, மருமகள்களை கூப்பிட,

     “இப்ப எதுக்கு ஏலம் போடறிங்க எங்களை?” என்றபடி பாட்டியும், அமைதியாக அவரின் மருமகள்களும் வந்தனர்.

     “நம்ம ஈஸ்வருக்கு குருபலன் வரப்போகுது. பொண்ணு பாக்கலாமா?” என மூவரிடமும் கேட்டு

    “உங்க வழியில….. ஏதேனும் பொண்ணு…..” என பெரிய மருமகளை கேக்க

     “அதை இவக்கிட்ட எதுக்கு கேக்கறிங்க? வளருக்கிட்ட அவ சொந்தத்துல இருக்கான்னு கேளுங்க.” என பாட்டி குதிக்க

     “பெரியவன் மகனுக்கு அவன் சொந்தத்துல பாக்கறது தப்பு, ஆனா உன் பொண்ணு சொந்தத்துல பாக்கனும்? நீயெல்லாம் ஒரு பெரிய மனுசி? வெளியில சொல்லிக்காத… காறிதுப்புவாங்க சாதிசனம்” என தாத்தா கோபமாக பேச

     “ஏன் இதுல என்ன தப்பு? எம்மவ வழி சொந்தத்துல கட்டினா கடைசி வரை ஒறவு நீடிக்கும். நமக்கு பொறவு நம்ம மவ இங்க வரப்போவ இருக்கனுமுல்ல?” என பாட்டி கத்தி பேச

     “போடி போக்கத்தவளே! உன் மவ ஒறவு வேணுமுன்னா நீயே வச்சிக்க. கட்டையில போவ ரெடியா இருக்க உனக்கு மவ ஒறவு வேணும். ஆனா மருமவ அது பொறந்த வீட்டுக்கு போக கூடாது, அங்க சம்பந்தம் பண்ணக்கூடாது என்னடி நியாயம் இது?”

     “ உனக்காக என் பேரன் வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது. இந்த வயசுக்கு மேல அடிக்கவோ, சண்டை போட்டு பிரிஞ்சிருக்கவோ செஞ்சா எல்லாம் சிரிப்பாங்கன்னு அமைதியா இருக்கேன். உன் மரியாதையை நீயே கெடுத்துக்காத.” என்றார் தாத்தா கந்தசாமி.

     பொண்ணு பாக்கவே இந்த அலப்பறை. இதுல சுஜா சொன்ன பொண்ணு….. இது நடக்குமா? ஈஸ்வர் நீலா கல்யாணம் நடக்க சுஜா, சுகனின் திட்டம் சரிவருமா?

   யாரு ஜெயிப்பா? பாட்டி ஆர் பேத்தி?