இரண்டுநாளில்சந்தியாவின்பெற்றோர், தூத்துகுடிக்குஅழைத்துப் போக வந்தனர்..
கார்புறப்பட்டதும் , சந்தியாநிம்மதியாகஉணர்ந்தாள்
அத்தியாயம் 41
அன்று தங்கள் கடை கணக்குப் பற்றிச் சில விசயங்களைப் பேச , சுவாமிநாதனின் ஆடிட்டர் அலுவலகத்திற்குச் சங்கரன் வர , அங்கு ரஞ்சனியைப் பார்த்து அதிர்ந்தார் .
ரஞ்சனியும் அவர் உள்ளே நுழையும் போதே பார்த்து விட்டாள் , தர்மசங்கடம் வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டாள் .
“நல்லா இருக்கியாமா? “என்று அவரே வழிய வந்து நலம் விசாரிக்க ,
“நன்றாக இருக்கிறேன்….” என்று புன்னகைத்தாள் .
சங்கரன் கண்கலங்க , “உன்னை இங்கே பார்த்தது மிகவும் சந்தோஷம் . சி.ஏ. பாஸாகி விட்டாயாமா?”
“முதல் முயற்சியிலே பாஸ் செய்து விட்டேன்” என்றாள் பெருமையாக .
“வாழ்த்துக்கள் . வீட்டில் எல்லோரையும் கேட்டதாகச் சொல்லும்மா . நீ எப்படி இருக்கிறாயோ…? என்ற கவலை மனதில் இருந்து கொண்டே இருந்தது…”
“இன்று உன்னை இப்படிப் பார்க்கையில்…” என்று கண்ணில் ஒரு பெருமிதத்தோடு ,
“ நிம்மதியாக இருக்கிறதும்மா . “
ரஞ்சனியும் அவருடைய உண்மையான தவிப்பையும் , அன்பையும் கண்ணில் பார்த்தாள் , புரிந்து கொண்டாள் .
ரொம்ப நேரமாக இருவரும் பேசிக்கொண்டு இருப்பதைத் தன் அறையில் இருந்து கண்ணாடி வழியாக பார்த்த ரகு , “பிரச்சனையோ…?” என்று நினைத்து அருகில் வந்து ,
“ஹலோ ஸார்….” என்றான் .
பின் ரஞ்சனியைப் பார்த்து , “ஏதாவது உதவி தேவையா?” என்று கேட்க ,
“இல்லை…..” என்றவள், பின் ரகுவிற்கு தன் முன் கதைச் சுருக்கம் தெரிந்து இருக்கும் என்று அனுமானித்தவள் , “உங்களுக்கு தெரியுமே , சங்கரன் அங்கிள்… , ரொம்ப நாள் கழித்து…. , சற்றே தயங்கி என்னை இப்படிப் பார்க்கிறார் , அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் .”
சங்கரனும் மெலிதாகப் புன்னகைக்க , ரகுவிற்கு நிலைமை தெளிவாகப் புரிந்தது .
அவனுக்கு சங்கரன் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் , ரஞ்சனிக்குத் தான் இருப்பதைக் காட்ட விரும்பினான் . அதனாலே தான் வேண்டும் என்றே வந்து இடைபுகுந்தான் .
“ஓ.கே…, ஓ.கே…. நீங்கள் பேசுங்கள்….” என்று இருவர் மீதும் ஒரு அர்த்தமுள்ள பார்வையை வீசி விட்டு நகர்ந்தான் .
“நன்றிம்மா, என்றும் நான் உனக்கு அங்கிள் தான்..” என்றவர் ,பின், ரகுவைக் கண்ணால் காண்பித்து ,” நீ நல்ல இடத்தில் தான் இருக்கிறாய் . நீ நன்றாக வருவாய்…” என்று வாழ்த்தி விட்டு கிளம்பினார் .
சங்கரன் சொன்னதை யோசித்தபடியே ரகுவைப் பார்க்க , அதே நேரம் ரகுவிற்கும் உள்ளுணர்வு உந்த , அவனும் திரும்பிப் பார்க்க ,
ஒரு சில விநாடிகள் இருவர் கண்களும் உரச , ரகுவின் பார்வையைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் , ரஞ்சனி பார்வையைத் திருப்ப ,
ரகு மனதில் ஒரு குறுகுறுப்பை உணர்ந்தான் .
சங்கரனிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்து அமர்ந்தவன் . ரஞ்சனிக்காகப் பதட்டபட்டு , உள்ளே புகுந்த செயலை என்னவென்று யோசிக்க முயல ,
அதற்குள் போன் அடிக்க , அதில் கவனமானான் .
வழக்கம் போல் ஹரிணி தன் விசாரணையை ஆரம்பிக்க , அப்பாவின் நண்பர் என்று மட்டும் சொன்னாள் .
பின்னர், கால்களை காண்பித்து, “உணர்ச்சி வசப்பட்டு விட்டார்…” என்று முடித்துக் கொண்டாள் .
ரஞ்சனி அன்றே சங்கரனைப் பார்த்ததை , நடந்த விசயங்களை வீட்டில் தெரிவித்தாள் .
“பார்த்துக்கலாம்….” என்று அவர்களும் தைரியப்படுத்தினர் .
அத்தியாயம் 42
தூத்துக்குடியில் சந்தியா முதல் வாரம் நிம்மதியாகப் பிடித்ததை உண்டு உறங்கினாள் .
சந்தியாவும் அதிகம் பேசாத குணம் என்பதால் மாமியாரைப் பற்றி போனில் லேசாக சொல்வதோடு நிறுத்தி கொள்வாள் .
அப்படிச் சொல்லும் பொழுதும் எல்லா வீட்டிலும் நடப்பது தான் சீக்கிரம் சரியாகி விடும் என்று விடுவார் அம்பிகா.
சந்தியா சற்று தெம்பான பின் , யாரிடமாவது இதைப்பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற ,
மெதுவாக, வீட்டில் நடக்கும் கதைகளை அம்மாவிடமும் தங்கையிடமும் பகிர ஆரம்பித்தாள்.
“உனக்கு எவ்வளவோ பரவாயில்லை , உன் பாட்டி ஏத்திவிட்டு , நான் பலமுறை உன் அப்பாவிடம் அடியே வாங்கியிருக்கிறேன் . உன் புருஷன் தங்கம் , உன்னை அதிர்ந்து கூட திட்டுவதில்லை , அட்ஜெஸ்ட் செய்து போ…” என்று அம்பிகா எழுந்து போய் விட்டார்.
தன் அம்மா தன்னுடைய வேதனைகளைக் கேட்க கூடத் தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டாள் . சந்தியா தொடர்ந்து பேசாமல் அமைதியானாள்.
“அம்பிகாவோ பிரச்சனை பெரிதாகிவிடுமோ…?” என்ற பயத்திலே முடிக்க நினைத்தாள் .
விந்தியா அவள் கவலைகளைப் புரிந்து கொண்டாள் . அக்காவிற்கு ஆதரவாக தட்டிக் கொடுத்தாள் .
பின் மெதுவாக , “எனக்கு உன் உணர்வுகள் நன்றாகப் புரிகிறது அக்கா…” என்று ஆரம்பிக்க ,
சந்தியா உடைந்தாள் .
“அது என்னுடைய வீடு என்ற உணர்வே இல்லை விந்தியா . என் இஷ்டத்துக்கு எந்த விசயமும் செய்ய முடியாது . சின்ன சின்ன மாற்றங்கள் கூட செய்ய முடியாது . கணவனுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுக்கக் கூட முடியாது , பரிமாற முடியாது . அப்படிச் செய்யாதே…, இப்படிச் செய்யாதே…. , என்று தினமும் குற்றம் குறைகள் இல்லை எங்கள் வீட்டில் இப்படித்தான் என்று கட்டளைகள் ” சலித்து, அலுத்துவிட்டதுவிந்தியா….. இப்படித்தான் ஒருமுறை , யூ டுயுப்பில் பார்த்துப் பாகற்காயை வறுவல் செய்திருந்தேன்… .”
“ம்ம்….”
“ மாமாவுக்கும், அவருக்கும் பிடித்திருந்தது . மாமா கூட இதில் கசப்பு தெரியவில்லை, நன்றாகவே உள்ளது . இனி இப்படியே செய்யம்மா…” என்று பாராட்டினார் . இவரும் விரும்பி உண்டார் .
“ஆனால், அதன் பின் எங்கள் வீட்டில் பாகற்காயே வாங்குவதில்லை . நானும் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டேன் . பலன் என்னமோ பூஜ்ஜியம் தான் .”
“அத்தானிடம் பேச வேண்டியது தானே….”
“பல நேரம் என்னுடைய உணர்வுகள் அவருக்குப் புரிவதே இல்லை. அப்படியே புரிந்தாலும் இதெல்லாம் சின்ன விசயம் , விடு சந்தியா…” என்று முடித்து விடுகிறார்.
“என் மகன், எனக்குத் தான் என்று தன் உரிமையை அதிகம் நிலைநாட்டப் பார்க்கிறார் . இவர்களெல்லாம் ஏன்தான் மகனுக்குத் கல்யாணம் செய்கிறார்கள்?” என்று சலித்தாள்.
“இது எல்லா ஒற்றை பிள்ளைகள் வீட்டிலும் நடக்கும் விசயம் தான் அக்கா .”
“புரிகிறது விந்தியா , அதைக் கூட பொருத்துப் போகலாம் பெரியவர்கள் வீட்டில் இருக்கும் போது நிகழ்வது தான் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாலும், தானே முதன்மை என்று காட்டுவதற்காக என்னை மட்டம் தட்டுவதைத் தான் தாங்க முடியவில்லை….” என்று கண்ணைத்துடைத்தவள்,
“ பட்டிக்காடு , ரசனை கிடையாது , விவரம் தெரியாது , முட்டாள்…” என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை கேவலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
“இதற்கு அத்தான் என்ன சொல்கிறார்…?” என்று கடுப்புடன் கேட்க,
“பாதி நேரம் அவர்கள் மட்டம் தட்டுவது , இவருக்குப் புரிவதே இல்லை , அப்புறம் நான் விளக்கினால் இன்ஸ்டென்டாக ‘ஸாரி’ என்று ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார் . அதைச் சொல்லி சமாளித்து விடுவார் . “
“என் வலி அவருக்குப் புரியவே இல்லை . எனக்காக அம்மாவிடம் பேசுவோம் , அதைத் தீர்ப்போம் என்று எந்த முயற்சியும் கிடையாது . அம்மா பேச்சைக் கேட்கும் அம்மா பிள்ளை . மொத்தத்தில் தலையாட்டும் பொம்மை…” என்றாள் விரக்தியாக .
“அக்கா……” என்று தங்கை வருத்தப்பட ,
“இதையெல்லாம் ஜீரணிக்க முயன்றாலும் , இந்த மூன்று மாதமும் அவர்கள் படுத்திய பாடு , தாங்க முடியவில்லை விந்தியா ….“
குழந்தை உண்டாகியிருக்கிறாளே , அவள் ஆசை என்ன? பிடித்தம் என்ன? என்ற கேள்விகளே கிடையாது , இது நல்லது , ஆரோக்கியமானது , சத்தானது என்ற கட்டளைகள் மட்டுமே . மறுத்தால் ஒரே பெரிய கதாகாலட்சேபமே நடை பெறும் . முடியவில்லை விந்தியா . எப்போது பிய்த்து கொண்டு வருவோம் , தப்பித்து வருவோம் என்று காத்திருந்தேன் . மீண்டும் அங்கே போக வேண்டும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது… .”
“அக்கா உன் பிரச்சனை நன்றாகப் புரிகிறது . ஆனால் நீ ஒரு விசயத்தை யோசிக்க வேண்டும் . நம் அம்மா பழைய பஞ்சாங்கம் , அவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை . மேலும் அவர் குரல் எடுபடாது….“
இதை அப்பாவிடம் எடுத்துச் சென்றால் , அவருக்கு இந்த நுண்ணுணர்வுகளெல்லாம் புரியும் என்று நம்பிக்கை எனக்கு இல்லை . அப்படியே புரிய வைத்தாலும் நம் அப்பாவோ வெட்டு ஒன்று துண்டு இரண்டு பேசும் ஆசாமி . இந்த விசயத்தை உன் வீட்டில் அவர் பேசினால் , ஏதாவது ஒருபக்க உறவு தான் உனக்கு கிடைக்கும்….” என்று வீட்டின் நிலைமையைப் பளிச்சென்று போட்டுடைத்தாள் .
“மேலும் நம் பக்க உறவுகள் , எப்போதுடா வம்பு கிடைக்கும் அலையும் கோஷ்டிகள் . உன் விஷயம் வெறும் வாய்க்கு அவல் கொடுத்த மாதிரி ஆகிவிடும் . இதைப் பெரிய விசயமாக்கி விடுவார்கள் . அப்படியே இதை வைத்தே ,பொண்ணை வளர்க்க தெரியவில்லை என்று அம்மாவையும் ஒரு வழி பண்ணிவிடுவார்கள் ….“
அனைத்தையும் கேட்டு சந்தியா திகைத்தாள் .
தன்னுடைய நிலைமை பட்டவர்த்தனமாகப் புரிந்தது . தனக்கான கதவுகள் பிறந்த வீட்டில் மூடப்பட்டதைத் தெளிவாக உணர்ந்தாள் . மனம் வாடினாள் .
அக்காவையே பார்த்து கொண்டிருந்த விந்தியா , “கவலைப்படாதே அக்கா , நான் சொல்வதைக் கவனமாக கேள் . நீ விரும்பிய மாற்றத்தை அத்தான் இப்போதைக்கு நிகழ்த்தவில்லையென்றாலும் காது கொடுத்தாவது கேட்கிறார். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள் , பொறுமையாக கையாள் . நிச்சயம் மாற்றம் நிகழும்… .”
“எனக்கு நம்பிக்கை இல்லை விந்தியா . அவருடைய நோக்கம் என்னை சமாளிப்பது மட்டுமே…” என்றாள் விரக்தியாக .
“சரி அப்படியே இருக்கட்டும் , உனக்கு ஒரு குழந்தை வரப் போகிறது , அதில் கவனத்தைச் செலுத்து , மற்றதெல்லாம் உனக்கு இரண்டாம் பட்சமாகிவிடும் . மேலும் அத்தானுக்கும் கொஞ்ச நாட்களில் என் பிள்ளை , என் குடும்பம் என்று பிடிப்பு வந்து சீக்கிரம் மாறுவார்” என்று நம்பிக்கை ஊட்டினாள்.
‘தன் குழந்தை தான் தன்னோட பிடிப்பு…’ என்று சந்தியாவிற்கு ஆணித்தரமாக மனதில் பதிந்தது . நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்நோக்க தயாரானாள் .
ஒரு மாதத்திற்குப் பின் சென்னை சென்றாள் . பிள்ளை என்ற பிடிப்பை மனதில் வைத்துச் சமாளித்து , ஏழாம் மாதம் வளைகாப்புச் செய்து , மீண்டும் தூத்துக்குடி வந்தாள் .