தொடர்ந்து பாலன் வாத்தியாரிடம் வேல்விழி கேட்ட கேள்வி கார்த்தியை துளைத்துக்கொண்டிருக்கவே, எப்பொழுதும் வேலன் கோவிலுக்குச் செல்லும்போதும் வேல்விழியின் பாடலுக்காக மட்டுமே செல்பவன் முதல் முறையாக வேலனிடம் வேண்டுவதற்காகச் சென்றான். வேலனுக்கு பாடல் பாடும் போது எப்பொழுதும் பிரபுவும் வேல்விழியுடன் இருப்பான். அவள் பாடல் பாடி முடித்ததும் கண்களை இறுக்கமாக மூடி கையை எடுத்துக் கும்பிட்டு முழு பக்தியுடன் வேலனிடம் மனத்திற்குள் வேண்டிக்கொண்டான்.
“நீ உண்மையா என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா அவ ரொம்ப நம்புறா. ஒருவேளை நீ உண்மையா இருந்தா அவள எனக்குப் பிடிக்கிற மாதிரி பண்ணு” என்று முதல் முறையாக வேலனிடம் ஒன்று வேண்டிக்கொண்டான்.
கண் விழித்து பார்க்கும்போது எதிரில் வேல்விழி மிகவும் பக்தியுடன் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள். அவள் அருகில் நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்த பிரபு, கார்த்தி வேல்விழியை பார்ப்பதை கவனித்தான். உடனே கார்த்தி கண்களை மீண்டும் மூடுவது போல் நடித்தான். குறுநகையுடன் வேல்விழியை பார்த்தான், அவள் கண்திறக்கவே இல்லை.
கோவிலில் இருந்து கிளம்பும் போது கார்த்தி
“வேலா ஒரே நிமிடம் நில்லேன்” என்று சொன்னான்.
“சொல்லு கார்த்தி என்ன?” என்று கேட்டாள்.
“உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கணும். பதில் சொல்றியா?” என்று கேட்டான்.
பிரபு, இங்கு எதோ பெரிதாக நடக்க போகிறது கார்த்தி அவன் வேலனிடம் வேண்டியது வேல்விழியை தான் என கூற போகிறான், இதை பார்க்கும் பாக்கியம் தனக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது என கனவில் மிதந்து கொண்டு இருக்க,
“கேளு” என்றாள் வேல்விழி.
“நம்ம ஊர்ல எத்தனை சாமி கோவில் இருக்குது. உனக்கு ஏன் வேலனை மட்டும் பிடிச்சிருக்கு?” என்று கேட்டான்.
பிரபுவின் கனவு கோட்டை மொத்தமும் உடைந்தது அவன் உச்சு கொட்டினான். வேல்விழி புன்முறுவளுடன் பிரபுவை திரும்பி பார்த்தால் அவன் மிகவும் ஏமாற்றத்துடன் கார்த்தியை பார்ப்பதை கண்டு நகைத்துவிட்டு,
“அது ஒரு பெரிய கதை. உனக்கு நேரம் இருக்கா? கோவில் வாசல்ல உக்காந்து பேசலாமா” என கேட்டாள்.
“நமக்குப் பனுவன் தாத்தா சொன்ன ஞானப்பழக்கதை ஞாபகம் இருக்கா உங்களுக்கு? என்று கேட்டாள்.
“ஆமா பழத்துக்காகக் கோச்சுட்டு
வேலன் பழனிக்கு வந்துடுவான். அதுல என்ன இருக்கு” என்று கேட்டான் கார்த்தி.
“அந்தக் கதைய சரியா யோசிச்சு பாத்தீங்கன்னா எல்லாருக்குமே வேலனை பிடிக்கும்” என்று சொன்னாள்.
“எனக்குப் புரியலையே”,
“ஞானப் பழத்தை எதுக்காக ரெண்டு பழமா மாத்தலனு நான் அப்ப பனுவன் தாத்தா கிட்ட கேட்டேன் தாத்தா என்ன சொன்னார்னு ஞாபகம் இருக்கா? அப்படி அவர் ரெண்டா மாத்தி இருந்தா அந்தக் கதையே வந்துருக்காதுன்னு சொன்னாரு”.
“ஆமா உண்மை தான” என்றான் பிரபு.
“ஆனா அந்த இடத்துல அங்க இருந்தது உண்மையிலேயே ரெண்டு பழம். ஒரு பழம் அந்த ஞானப்பழம், இன்னொரு பழம் வேலன். அதனால தான் அவன் பழநிக்கு கோச்சிட்டுப் போகும்போது அவங்க அம்மா அங்க போயி அந்த ரெண்டாவது பழமே நீ தான் அப்படின்னு சொன்னதுனால தான் அந்த ஊருக்குப் (பழம்+நீ) பழநீன்னு பேரு வந்துச்சு”.
“அது எப்படி வேலா?” என்று ஆச்சரியத்துடன் பிரபு கேட்டான்.
“நல்லா யோசிச்சு பாருங்க. விநாயகர் யாருக்காகப் படைக்கப்பட்டார்? அவங்க அம்மாவ பாதுகாக்கறதுக்காக, அவங்க அம்மாவால உருவானவர் தான் விநாயகர். ஆனா சிவனையே அம்மாவ பாக்க விடாம தடுத்ததுனால சிவன் கோபத்துல விநாயகர் தலையை வெட்டிட்டாரு. ஆனா பார்வதி அம்மா அழுததுனால யானத்தலையை கொண்டு வந்து ஒட்டி வச்சாங்க. ஒட்டி வச்சு சிவன் மறுபடியும் அவருக்கு உயிர் கொடுத்தாங்க. அவரு, அம்மாவ பாதுகாக்கறதுக்காகப் படைக்கப்பட்டு. அப்பாவால அடிக்கப்பட்டு, அம்மாவோட அன்பால மீண்டும் ஒன்றா சேர்க்கப்பட்டவர். அவரோட உலகம் அவங்க அப்பா அம்மா தான். யாரு இல்லன்னு சொல்றது. அப்ப அவர் செஞ்சது சரிதான். ஆனா வேலனை யோசிச்சு பாருங்க. வேலன் சிவனோட நெற்றிக்கண்ல இருந்து உலகத்தை காக்கறதுக்காகவே படைக்கப்பட்டவன். அவனுகிட்ட போய் உலகத்தைச் சுத்திட்டு வான்னு சொன்னா, நம்ம ஞாபகம் தான் அவனுக்கு வரும். அன்னைக்கு சோதனை நடந்தது ஞானப்பழத்துக்காக இல்ல. வேலன் உலகத்தை விட்டுக் கொடுக்கறானா அப்படின்னு பாக்குறதுக்காக. ஆனா வேலன் சோதனைல வென்றுட்டான். எங்க அப்பா அம்மா தான் உலகம்னு ஒத்துக்குவானோனு சிவன் சோதிச்சாரு. ஆனா அவன் அப்பா அம்மாவே எதிர்த்து உங்களுக்கு உங்க மூத்த பையன் தான் புடிச்சிருக்கு. அதனால தான் இப்படி ஒரு போட்டி வச்சீங்க. எனக்கு உங்க ஞானப்பழமும் வேண்டாம். இந்தக் கைலாயமும் வேண்டாம். எனக்காகப் படைச்ச உலகம் இருக்குது. நான் அங்க போய் என் மக்களைப் பாத்துக்குறேன் அப்படின்னு சொல்லிச் சிவன் கூடவும் பார்வதி கூடயும் சண்டை போட்டு ஆண்டி கோலத்துல வந்து பழநீல நின்னுட்டான். இப்ப புரியிதா, இந்த உலகத்த பாதுகாக்கறதுக்காகப் படைக்கபட்டு அதைவிட்டு கொடுக்காமல் படைச்சவங்க கிட்டயே அதுக்காக சண்டை போட்டுட்டு வந்த வேலன் எனக்குப் பெருசு தான்” என்று சொன்னாள் வேல்விழி.
“இந்தக் கதைக்கு இப்படி ஒரு அர்த்தம் கூட இருக்கா வேலா? இவ்ளோ நாள் எனக்குத் தெரியாது” என்றான் பிரபு.
“ஆமா. கொஞ்சம் யோசிச்சு பாருங்க. சிவன் நினைச்சா வேலனை அழிக்க முடியும். ஆனா அவர் அப்படி பண்ணல. ஏன்னா வேலன் பண்றது எல்லாமே உலகத்து மக்கள் மேல இருக்குற அன்பாலனு அவருக்குத் தெரியும். அவன் எல்லாரையும் நல்லா பாத்துக்குவான். அதுக்காகத் தான் அவன் படைக்கப்பட்டான். அவன சோதிக்கிறதுக்காக நடந்தது தான் அந்த ஞானப்பழ சோதனை. அதுல வேலன் வென்றான். அதனால தான் எனக்குப் பிடிக்கும்”. என்றாள்.
கார்த்திக் கண்ணிமைக்காமல் அவள் சொல்லும் விளக்கத்தில் மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்தான். இப்பொழுது தான் வேலனை எதற்காக இவளுக்கு இவ்வளவு பிடிக்கிறது என்று தெரிந்தது. அன்று இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமில்லை. ஞானப்பழக்கதை திரும்பத் திரும்பக் கண்களுக்கு முன் வந்து சென்று கொண்டிருந்தது.
பொங்கல் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன. ஊர் முழுவதும் கலகல என ஓடி ஆடி அறுவடைத் திருநாள் விமர்சையாகக் கொண்டாடுவதற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கார்த்தி வீட்டில் அவன் அப்பா
“சாமி கும்பிடுறதுக்கெல்லாம் போனேன்னு வச்சுக்கோ அவ்வளவுதான்” என்று அவனை மிரட்டி வீட்டிலேயே இருக்க வைத்துவிட்டார். அவன் எந்த வேலையிலும் கலந்து கொள்ள முடியாது என்று மிகவும் வருத்தத்துடன் இருந்தபோது, அவனைத் தேடி ஊர்க்காரப் பையலக பத்து பேர் அவன் வீட்டு வாசல் முன்னாடி வந்து நின்று விட்டனர். வீட்டு வாசலில் நின்று அவன் வீட்டு கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்தது பாலன் வாத்தியார். அவரைப் பாவம் போல் பத்து பேரும் பார்த்தனர்.
“என்னடா வேணும்?” என்று கேட்டார்.
“உங்க பையன கொஞ்சம் அனுப்புனீங்கன்னா நல்லா இருக்கும், வேலை நிறைய கிடைக்குது. சாமி கும்பிட மாட்டீங்கன்னு தெரியும். வேலைக்கு ஒத்தாசையாக அனுப்பினா நல்லா இருக்கும்” என்று பாவம் போல் கேட்டனர்.
சாமி கும்பிட சொல்லி கட்டாயப்படுத்தி இருந்தால் கூடப் பாலன் வத்தியார் விடுவதற்கு யோசித்து இருப்பார். அன்பாக வேலை செய்ய ஆள் வேண்டும் என்று கேட்டதால் அதை மறுக்க அவரால் முடியவில்லை.
“நீங்கப் போங்க. நான் அவனை அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிப் பத்து பேரையும் அனுப்பி வைத்தார். பத்து பேரும் அங்கிருந்து செல்லவில்லை. எதிரே இருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்துவிட்டனர். இதை கவனித்துக்கொண்டிருந்த பாலன் வத்தியார், வீட்டிற்குள் வந்து கார்த்தியிடம் சொன்னார்.
“இங்க பாரு போற, வேல பாக்குற, வாரன்னு இருக்கணும். சாமி கும்பிட்டேன், அத செஞ்சேன், இத செஞ்சேன்னு, சாமி நம்பிக்கை இருக்கு, நீங்களும் சாமி கும்பிடுங்கப்பா அப்படின்னு என்ன எதாவது பண்ணனும்னு நெனச்சேன்னு வச்சுக்கோ. அப்புறம் உன்னை வீட்டுக்குள்ளே சேர்க்க மாட்டேன்” என்று சொன்னார்.
தலையை மட்டும் சரி என்றவாறு ஆட்டிவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் பொங்கல் வேலை செய்வதற்காகக் கிளம்பினான் கார்த்தி. ஊர் முழுவதும் தூய்மைப் பணிகளும், கோலம் போடுவதும், உறி அடிப்பதற்காகப் பானை கட்டுவதும், கரும்புகளை அடுக்குவதும் என அனைவரும் கலகலப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கண்களுக்குக் குளிர்ச்சியான இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு இடமாகச் சுற்றி வரும்போது அனைத்திடமும் அவ்வளவு ரம்மியமாகவும், புன்னகையுடனும், அன்புடனும் நிறைந்திருந்தது, அவன் மனதுக்கு அமைதி அளித்தது. இப்படி பார்த்துக் கொண்டு வரும்போது பிரபு வருவதை கவனித்தான். அவன் வந்து
“என்னடா கார்த்தி இவ்ளோ தாமதமா வர. உங்க அப்பா விடலையாடா?” என்று கேட்டான்.
“ஆமாடா, நம்ம ஊர் பயலுக தான் வந்து கூப்பிட்டாங்க. வேலை செய்றதுக்கு ஆள் இல்லன்னு அதான் விட்டுட்டாங்க”.
சுற்றிமுற்றிப் பார்த்தபோது ஊரில் எங்கும் வயதான பெண்கள் வீடுகளைச் சுத்தம் செய்து கொண்டிருப்பது மட்டுமே தெரிந்தது. ஊரில் உள்ள இளைய பெண்கள் எங்க இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கார்த்தி பிரபுவிடம் கேட்டான்.
“என்னடா இந்த நம்ம வகுப்புகாரிக எவளையும் காணோம்” என்று கேட்டான்.
“உனக்கு இப்ப என்ன வேல்விழிய காணோம். அது தான தேடுற” என்று கேட்டான்.
தூக்கி வாரிப் போட்டது கார்த்திக்கு. நான் வேல்விழியை பார்ப்பது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று,
“அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்று சமாளித்தான்.
“ரொம்ப சமாளிக்காத. நேத்து கதை சொல்லிட்டு இருக்கும்போது உனக்கு அது காதுல விழுந்ததா இல்லையான்னு கூடத் தெரியல. அவள அப்படி பாத்துகிட்டு இருக்க. சாமியே இல்லனு சொல்லிட்டு இருக்குற அப்பாவோட மகன் தினமும் சாயங்காலம் சாமி கும்பிடுற, அதுவும் உங்க அப்பாவுக்குக் கூடத் தெரியாம. அப்புறம் இதெல்லாம் என்ன சொல்றது?” என்று கேட்டான்.
“சரி மச்சான் விடு பாத்துக்கலாம்” என்றான்.
“என்னடா அதுக்குள்ள என்ன மச்சான் ஆக்கிட்ட.
“ஆமா, என் ஆளு உனக்குத் தங்கச்சி தான. அதனால தான்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டான்.
“அவங்க எல்லாம் கோவில் முன்னாடி கோலம் போட்டுப் பானை வச்சிட்டு இருப்பாங்க. அவங்க பொங்கல் பொங்குனதுக்கு அப்புறம் தான் அறுவடை ஆரம்பம் ஆகும். அதனால அங்க தான் இருப்பாங்க எல்லாரும்” என்று சொன்னான்.
“சரி வா, போய்ப் பாத்துட்டு வரலாம்” என்று பிரபுவும் கார்த்தியும் அங்குச் சென்றனர். அனைத்து இளைய பெண்களும் அங்குத் தான் இருந்தார்கள். ஆனால் வேல்விழியும் வசுமதியும் மட்டும் காணவில்லை. வல்லகி ஒரு ஓரமாக அவள் அடுப்பைத் தயார் செய்து கொண்டிருந்தாள். வல்லகியை பார்த்ததும் பிரபு,
“வல்லா வேல்விழியும் வசுமதியும் எங்க” என்று கேட்டான்.
“அவங்க ரெண்டு பேரும் கிளம்புறதுக்கே நேரம் ஆயிடுச்சுடா. இப்ப தான் வந்துட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்று சொன்னாள்.
“சரி சரி வரட்டும்”
என்று திரும்பிப் பார்க்கும் போதுதான் எதிரில் தேவதைகள் போல வேல்விழி சிகப்பு நிற புடவையிலும், வசுமதி மஞ்சள் நிறப் புடவையிலும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கார்த்தியும் பிரபுவும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.