“இப்போ புரியுதா வாத்தியார் மவனே, வாத்தியார் பிள்ள மக்குனு சொன்னது சரியாத்தான் இருக்கு” என சிரித்தாள் வசுமதி.

“அவன் தான் டவுன்ல வளர்ந்த பையன் இதுக்கும் தெரியல பாரு” என இளங்கோவை பார்த்து சிரித்தாள் வேல்விழி.

“சரி ரொம்ப சிரிக்காதீங்க வேலை கிடக்கு” என சொல்லி இருவரையும் அழைத்து சென்றாள் வல்லகி. போகும் போது ஒருமுறை இளங்கோவை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தன. சிறு புன்முறுவலுடன் அதை ஏற்று நடந்து கொண்டிருந்தாள்.

கார்த்திக்கு நிறைய புதிய அனுபவங்கள் கிடைத்தன. மரம் ஏறுவது, கிணற்றில் குளிப்பது, வரப்பில் வேலை செய்வது, கோவிலுக்கு உதவுவது என அனைத்து வேலைகளையும் மிக மகிழ்ச்சியுடன் செய்தான். ஆனால் சாமி நம்பிக்கை மட்டும் எப்போதும் கசப்பாகவே இருந்தது. வேல்விழிக்காக என்பதால் தினமும் அப்பாவிற்கு தெரியாமல் கோவிலுக்குச் சென்றான்.

அன்று முதல் பாடவேளை அறிவியல், பாலன் வாத்தியார் பாடம் எடுக்க வந்தார். மாணவர்கள் “காலை வணக்கம்” சொல்லிவிட்டு அமர்ந்ததும். புத்தகத்தை புரட்டினார். பாடம் அண்டம், பிரபஞ்சம் பற்றியது, எப்பொழுதும் போல் கேள்வி உடன் ஆரம்பித்தார்.

“குழந்தைகளா சொல்லுங்க இந்த உலகம் எப்டி உருவானது? உங்களுக்கு எதாவது தெரியுமா?”

பிரபு சொன்னான், “கடவுள் படைச்சாரு” என்றான் பிரபு.

பாலன் வாத்தியார் சொன்னார். “கடவுள்னு ஒரு விஷயம் உண்மை கிடையாது. முதல்ல அந்தப் புரிதலுக்கு எல்லாரும் வாங்குங்க. சரியா?”

உடனே அன்பு கைத் தூக்கினான். “கடவுள் இல்லன்னா இந்த உலகம் எப்படி வந்துருக்கும்னு நீங்கச் சொல்றீங்க?” என்று கேட்டான்.

பாலன் வாத்தியார் சொன்னார் “இந்த உலகம் மொத மொதல்ல உருவானது அண்டப் பெருவெடிப்பில் இருந்துதான். அண்டத்துல ஒரு பகுதி பெரு வெடிப்பால பாதிக்கப்பட்டது அதுல சிதறிப்போய் உருவானதுதான் இந்தக் கோள்கள் எல்லாம். அதுக்கப்புறம் அதுக்கேத்த மாதிரி தட்பவெப்பநிலை சூழ்நிலை எல்லாமே உருவாகி இந்த உலகம் உருவாச்சு. இந்த உலகம் உருவானது அண்டப் பெருவெடிப்புனால தான். கடவுள்னு யாரும் இல்ல. அதுவும் இல்லாம இந்த ஒரு உலகம் மட்டும் கிடையாது. பிரபஞ்சத்துல நிறைய உலகம் இருக்குது. அது எல்லாத்தையுமே கடவுள் படைச்சாரு அப்டின்னா வானத்துல இப்ப வரைக்கும் எவ்வளவோ ஆராய்ச்சி நடத்தியும் அப்படி ஒரு கடவுள்  விஷயத்துக்கான எந்தவித ஆதாரமும் கண்டுபிடிக்கப்படல. புரியுதா?”

“படைப்பாளி இல்லாம எப்படி படைப்பு இருக்கும்” என கேட்டாள் கோதை.

“இயற்கை தான் அதற்கு காரணம் இயற்கை படைப்பாளி இல்ல இந்த இயற்கைல இருக்குற வேதிப்பொருள் எல்லாம் ஒன்னோட ஒன்னு வேதி வினை புரிஞ்சு புதிய உயிரினங்கள் எல்லாம் உருவாகுது”

“அப்புறம் ஏன் கடவுள்னு எல்லாரும் கும்பிடுறாங்க. இவ்ளோ மக்கள் நம்புற ஒரு விஷயம் பொய்யா எப்படி இருக்க முடியும்?” என்று கேட்டாள் வல்லகி”.

“அது இதுக்கு முன்னாடி நாம முன்னேறாம நமக்கு அறிவியல் வளர்ச்சி இல்லாதபோது மக்களால் நம்பப்பட்ட மூடநம்பிக்கைகள் இதெல்லாம், புதுசா ஒரு விஷயம் கண்டு கண்டுபிடிக்கப்பட்டாலோ இல்ல தான் சக்திக்கு மீறின ஒரு சக்தியைப் பாத்தாலோ அத கடவுளா கும்பிட ஆரம்பிச்சாங்க. அதனால தான் சூரியன், நிலா, காத்து, மண்ணு இதெல்லாம் சாமியா பாத்தாங்க. சூரியன் சாமி கிடையாது. சூரியன் ஒரு நெருப்புக்கோள். அது கிட்ட கூட யாராலயும் போக முடியாது. புரியுதா? அது அதுவா எரிஞ்சுகிட்டு இருக்கு. அதால பேச முடியாது. அதால எதையுமே உணர முடியாது. அப்படி உயிர் இல்லாத ஒரு பொருள் எரிஞ்சுகிட்டு இருக்குற ஒரு பொருளைச் சாமியா கும்பிட்டு இருக்காங்க. சாமி உலகத்துக்கு வந்தார்னு கதை சொல்றாங்க. சூரியன் இந்த உலகத்துல பட்டா என்ன ஆகும் தெரியுமா? உலகம் இருக்க கூட முடியாது. அதனால இதெல்லாம் யாரும் நம்பாதீங்க. புரியுதா?” என்றான்.

கார்த்தியின் கண்களுக்கு அவன் தந்தை ஒரு பெரிய கதாநாயகன் போல் தோன்றினார். பிள்ளைகளும் இதைப் பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள விரும்பவில்லை. இந்தப் பேச்சை வளர்க்கவும் அவர்கள் விரும்பவில்லை. இடைவேளை பொழுது பிரபு இளங்கோவிடம் கேட்டான்.

“எதுக்குடா பாலன் வாத்தியாருக்கு இப்படி சாமி மேல நம்பிக்கை இல்லாம இருக்காரு?” என்றான்.

“என்கிட்ட கேட்டா கார்த்திட்ட கேளு. அவங்க அப்பா தான” என்று சொன்னான்.

“ஏய் கார்த்தி! உங்க அப்பா என்னடா சாமி நம்பிக்கை இல்லாம இருக்காங்க. அப்படி யாராவது இருப்பாங்களாடா?”

“ஏன் இருக்க மாட்டாங்க? எங்க அப்பா தான் இருக்காருல்ல”.

“சரி, எதுக்கு உங்கப்பாக்கு சாமி நம்பிக்கை இல்ல”

“எங்க பாட்டிக்கு ரொம்ப சாமி நம்பிக்கை இருந்துச்சு. ஆனா எங்க பாட்டிக்குக் கேன்சர் வந்தப்போ இருக்குற எல்லா கோவிலுக்கும் மாலை போட்டு எல்லா கோயிலுக்கும் போயி எல்லாமே செஞ்சும் எங்க பாட்டி பிழைக்கல. எங்க பாட்டி இறந்தப்ப எங்க அப்பாவுக்கு வயசு பதினாறு. அவங்க மேல உயிரையே வச்சிருந்தாங்க. எங்க பாட்டிய எந்தச் சாமியும் காப்பாத்தலங்குறதுனால அன்னைல இருந்து சாமி நம்பிக்கை விட்டவர் தான். அதுக்கப்புறம் யாராவது சாமி பத்தி பேசுனா கூட எங்க அப்பாவுக்குப் பிடிக்காது. இப்ப சொல்லுங்க சாமி உண்மையா இருந்தா அன்னைக்கு எங்க பாட்டி ஏன் இறந்தாங்க” என கேட்டான்.

யாருக்கும் எந்தப் பதிலும் இல்லை. எல்லாரும் அமைதியானார்கள். ஒரு மகனுக்கு தாயின் இழப்பு என்பது எப்பொழுதுமே ஈடு செய்ய முடியாத ஒரு இழப்புதான். அதற்கு நாம் என்ன தான் ஈடு சொன்னாலும் அவர் மனம் அமைதியாகாது. அந்த விரக்தியில் தான் பாலன் வாத்தியார் இப்படி பேசுகிறார் என்று புரிந்து கொண்டனர். அதனால் பேச்சை அத்தோடு விட்டுவிட்டனர். பாலன் வாத்தியார் தன் வீட்டுத் தோட்டத்தில் வைப்பதற்காக ஒரு ரோஜாச் செடி கேட்டிருந்தார் மாணவர்களிடம், சாயங்காலம் ஆனது இன்று அறிவியல் பாடவேளை பிடிக்காததால் பிரபு, இளங்கோ, வல்லகி, கோதை நால்வரும் அனைத்து கோவிலுக்கும் சென்று பாலன் வாத்தியாருக்காக வேண்டி கொண்டு இறுதியாக, வேலனை பார்த்து கும்பிட்டுவிட்டு வேல்விழியிடம் உரையாடி கொண்டிருந்தார்கள்.வேல்விழி கேட்டாள்

“என்ன யார் மொகமும் சரி இல்ல, எதுக்கு அமைதியா இருக்கீங்க?என்னாச்சு” என்று கேட்டாள்.

“ஒன்னும் இல்ல வேலா சாமி பாக்கதான் வந்தோம்” என்றான் பிரபு.

“பொய்ய பாரு, மொச புடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியாதாங்கும் சொல்லு”

“அது ஒன்னும் இல்ல வேலா. இன்னைக்கு பாலன் வாத்தியார் வந்து நம்ம கும்பிடுற எல்லா சாமியும் பொய். இந்த உலகம் அதுவா தான் உருவாச்சு, அதுவா தான் இந்த எல்லாமே வந்தது. சூரிய பகவான்னு யாரும் கிடையாது. சந்திர பகவான் யாருமே கிடையாது. அதெல்லாம் உயிர் இல்லாத கோள் அப்படின்னு சொல்றாங்க, அது தான் ஒரு மாதிரியா இருக்கு” என்றாள் கோதை.

“அதுவா எப்படிடா வரும்?” என்று கேட்டாள் வேல்விழி.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. மனசு கஷ்டமா இருந்துச்சு. அதனால தான் எல்லா கோயிலுக்கும் போயிட்டு கடைசியா வேலன்கிட்ட வந்தோம்” என்றான் பிரபு.

“அவரு அம்மா சின்ன வயசுல  இறந்த அதிருப்தில அப்டி பேசுராரு” என்றான் இளங்கோ.

“ஆமா வேலா சொல்ல மறந்துட்டேன். பாலன் வாத்தியாருக்கு ரோஜாப்பூ செடி வேணும்னு கேட்டாரு” என்றாள் வல்லகி.

“அப்படியா? சரி நாளைக்கி என் வகுப்புல தான் அவருக்கு மொத பாடவேளை. நானே அவருக்குக் கொடுத்திடுறேன். இளங்கோ. உங்க வீட்டுல ரோஜா செடி நிறைய இருக்கும்ல. ஒரு சின்ன மண் பானையில் போட்டுக் கொண்டு வா. நானே வாத்தியாருக்கு கொடுத்துடுறேன். இனிமேல் வாத்தியார் இப்படி பேச மாட்டார்.  எதுவும் யோசிக்காம போய் அவங்க அவங்க சோலிபாட பாருங்க” என்றாள்.

“சரி நாளைக்கு வாங்கிக்கோ” என்றான் இளங்கோ.

மறுநாள் காலை விடிந்தது. இளங்கோ மண் பானையில் ரோஜா செடியை கொண்டு வந்து வேல்விழியிடம் கொடுத்தான் பாலன் வாத்தியார் வரும் முன்பே அவரது மேசையில் வைத்தாள். பாலன் வாத்தியார் வகுப்பிற்குள் வந்தார். அனைத்து மாணவர்களும் எழுந்து காலை வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தனர். பாலன் வாத்தியார் அவர் மேசையில் பூச்செடி இருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார்.

“என்ன 10th Aல கேட்டேன். 10th Dலே கொண்டு வந்து வச்சிட்டாங்களா? இது யாரு கொண்டு வந்தா” என்று கேட்டார்.

வேல்விழி உடனே எழுந்தாள்,
“அது யாரும் கொண்டு வந்தெல்லாம் வைக்கல. அது அதுவா தான் வந்துச்சு ஐயா” என்றாள். வாத்தியாரும் மாணவர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“அது எப்படி வேலா அதுவா வரும். அது என்ன மாய மந்திரமா அதுவா வர்றதுக்கு? நீதான கொண்டுவந்த” என்று கேட்டார்.

“அதுவா வந்ததுனு நான் நம்புறேன் ஐயா, நீங்க நம்பலனா பரவாயில்ல அவங்க அவங்க நம்பிக்க அவங்களுக்கு” என்றாள்.