அத்தியாயம் 13 

காதலின் மின்னல்கள் உணர்வு 

பூர்வமானது, அதை உணர

மட்டுமே முடியும்!!!

அடுத்த நாளும் அதிபனுக்கு லேசாக காய்ச்சல் இருக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று டிரிப்ஸ் போட்டு விட்டாள். அவன் வேண்டாம் என்று சொல்லியும் அவள் கேட்க வில்லை.

அன்று மாலை காச்சல் நன்றாக இறங்கி இருக்க இருவரும் ஜானிடம் சொல்லி விட்டு வெளியே வந்தார்கள்.

“ஏதாவது சாப்பிட்டு போகலாமா மாமா?”, என்று கேட்டாள் யாழி.

“எனக்கும் ஏதாவது காரமா சாப்பிடணும் போல இருக்கு? வா போகலாம்”, என்றான்.

உணவு விடுதிக்குச் சென்று இருவரும் உணவை உண்ண ஆரம்பித்ததும் அவர்களிடம் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. முன்பு போல இருவராலும் உரையாட முடிய வில்லை.

இருவரும் அமைதியாக இருக்க “ஏன் மாமா எதுவுமே பேச மாட்டிக்க? என் மேல எதுவும் கோபமா?”, என்று அவளே கேட்டாள்.

“நீ பேசுனதுல இருந்தே நான் நானா இல்லை. எனக்கு உன் கூட ஒண்ணா இருக்கவே பயமா இருக்கு டி”, என்று அவன் உளறிக் கொட்ட  அதை தவறாக புரிந்து கொண்டவளோ “நான் வேணும்னா வேற இடத்துல தங்கிக்கவா? உனக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்”, என்று சொன்னாள்.

“ஏய், நான் அப்படிச் சொல்லலை டி. இதை உனக்கு எப்படி புரிய வைக்க?”, என்று அவன் ஆரம்பிக்க அப்போது வெளியே ஏதோ பெரிதாக சத்தம் கேட்டது. அனைவரும் அவசரமாக கை கழுவி விட்டு வெளியே வந்தார்கள். அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர்.

“ஐயோ டெரரிஸ்ட் அட்டாக் மாதிரி இருக்கு மாமா”, என்றாள் யாழி.

“வா இங்க இருக்குறது சேப் இல்லை. நாம உடனே போகணும்”, என்றவன் அவளுடன் வேகமாக ஓடினான். சில மக்கள் அங்கே சுடப் பட்டுக் கொண்டிருக்க இருவரும் வேகமாக அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.

அப்படியும் ஒருவன் துப்பாக்கியோடு அவர்களை நெருங்க ஒரு மறைவுக்குள் அவளுடன் புகுந்தவன் அப்படியே ஒளிந்து நின்றிருந்தான்.

“மாமா இந்த பக்கம் போயிறலாமா?”, என்று கேட்க “ஸ்ஸ்”, என்றவன் அவள் வாயை தன் விரலால் மூடினான்.

அவன் விரல் அவள் வாயை அழுத்தமாக மூடி இருக்க அவன் கண்களோ சத்தம் வரும் திசையை நோக்கி இருந்தது. அவன் நெஞ்சில் பின் பக்கமாக சாய்ந்திருந்தவள் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தாள்.

இது அவர்களின் முதல் அணைப்பில்லை தான். ஆனால் அவளுக்கு தான் இன்று ஒரு மாதிரி இருந்தது. இத்தனை நாள் இப்படி வரும் உணர்வை அவனுக்கு பயந்து மறைத்து விடுவாள், இன்றோ மறைக்க அவசியம் இல்லாமல் கண்களில் வழிய விட்டாள். இதுவரை இல்லாத ஏதோ ஒரு உணர்வு. அவள் லேசாக அசைய எங்கே வெளியே சென்று விடுவாளோ என்று பயந்து இன்னும் இழுத்து இறுக்கி அணைத்தான் அதிபன்.

அவள் தேகம் மொத்தமும் முழுதாக அவன் மேல் பதிந்து போனது. அவன் அதை உணர வில்லை என்றாலும் அவளுக்கு அனைத்தும் தெரிந்தே இருந்தது. கொஞ்சம் அல்ல அதிகமே தடுமாறிப் போனாள். அவனது தவிப்பான விழிகளும் களைந்திருந்த கேசமும், லேசாக வியர்த்திருந்த அவனது உதடுகளும் என்று அவள் பார்வை சென்று கொண்டே இருந்தது. அதிலும் துடிக்கும் அந்த இதழ்களில் முத்தமிட வேண்டும் என்ற ஆவல் வர அவளே அதிர்ந்து தான் போனாள். உள்ளுக்குள் பெரும் போராட்டம் நிகழ்ந்தது உண்மை.

அவனது திண்மையான கை அவள் வயிற்றில் படிந்திருக்க அவன் கொடுத்த அழுத்தம் அவளை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றது. அவனை மீறி அவளது இடையை இறுக்கமாக பற்றி இருந்தான். காச்சல் விட்டிருந்தாலும் அவன் உடல் வெதுவெதுப்பாக இருக்க அவளுக்கோ ஜில்லென்று அவஸ்தை உருவானது.

“சத்தம் குறைவா இருக்கு. அவனுங்க போயிட்டாங்க போல? வா இந்த பக்கம் போயிறலாம்”, என்று சொல்லிய படியே அவளை தன்னை விட்டு விலக்கி நிறுத்தியவன் அவள் பார்வையைக் கண்டு அதிர்ந்தான். அவள் கண்கள் அவனை வாரி சுருட்டிக் கொள்ள “அப்படிப் பாக்காத டி. இதுக்கு தான் சொன்னேன். நான் நானா இல்லைன்னு”, என்றவன் “வீட்ல போய்  பேசிக்கலாம் வா”, என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

வீட்டுக்கு வந்த பின்னர் அவன் இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு அவனது அறைக்குள் முடங்கிக் கொள்ள அவளுக்கு தான் அந்த சில நிமிட சலனங்கள் நினைவுக்கு வந்தது.

“நான் ஏன் அப்படி எல்லாம் நினைச்சேன்? சரியா தப்பா? நடக்குமா நடக்காதா?”, என்று சுய அலசலில் இறங்கியவள் தூக்கத்தை தொலைத்தாள்.  தன்னை பெண்ணாக உணர வைத்த தருணம் அது என்று தான் தோன்றியது.

“இது சரி வராது தப்பு தான், அவன் மனதில் தன் மேல் எந்த உணர்வும் இல்லாத போது தன்னுடைய பார்வையோ செய்கையோ  அவனைச் சலனப் படுத்தக் கூடாது”, என்று முடிவுக்கு வந்தவள் முயன்று தூக்கத்தை வரவழைத்தாள். அவன் சலனமெல்லாம் அவளை விட எல்லை தாண்டி வெகு தூரம் சென்று விட்டது என்று அவளுக்கு தெரிய வில்லை. அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது.

அவன் அறைக்கு சென்றவள் அவன் விழித்த படி படுத்திருப்பதைக் கண்டு “இப்ப காச்சல் இல்லை தானே?”, என்று கேட்டுக் கொண்டே அவன் நெற்றியில் லேசாக தொட்டுப் பார்க்க முதல் முறையாக அவள் நெருக்கத்திலும் தொடுகையிலும் தடுமாறிப் போனான் அதிபன்.

என்றும் இல்லாத வழக்கமாக அவன் கண்கள் அவளை ரசிக்க ஆரம்பித்தது. இது சரியா தப்பா என்ற போராட்டம் அவனுக்குள்ளும் எழுந்து பேயாட்டம் போட்டது. கண்களை இறுக மூடி அவள் தொடுகையை ரசித்தான். அவள் கரம் ஒரு மருத்துவராக அவனது கழுத்துக்கும் சென்று வர ஏதோ உள்ளுக்குள் கொதித்தது அவனுக்கு.

“ரெஸ்ட் எடு மாமா. நான் பிரேக் பாஸ்ட் செய்யுறேன்”, என்றவள் சமையல் அறைக்கு சென்று பிரெட்டை எடுத்து டோஸ்ட் செய்வதற்கு ரெடி செய்து கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த அதிபன் “யாழி எனக்கு ரசம் வச்சி தரியா?”, என்றான்.

“உண்மையிலே நான் வச்சா அது விஷமா தான் மாமா இருக்கும். இந்தியன் ரெஸ்டாரன்ட்ல ஆர்டர் போடவா?”, என்று கேட்டாள் .

“எனக்கு நீ செஞ்சத சாப்பிடணும். செஞ்சு தருவியா மாட்டியா?”

“முடியாது”, என்றாள் பட்டென்று.

“ஏய் அன்னைக்கு நீ செஞ்ச உப்மாவை குறை சொன்னது தப்பு தான் டி. உனக்கு தெரியாதா எனக்கு உப்மாவே பிடிக்காதுன்னு. நீ செஞ்சதையாவது ரெண்டு வாய் சாப்பிட்டேன். உங்க அத்தையோ எங்க அத்தையோ வச்சிருந்தா தொட்டுக் கூட பாத்திருக்க மாட்டேன் டி”

“சரி சரி, இந்த பிரெட்டை பாரு மாமா. நான் குக்கர்ல சாதம்  வச்சிட்டு ரசம் வச்சி தரேன்”, என்றாள்.

அவனும் அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். இந்த அனுபவமே அவனுக்கு புதியதாக தான் இருந்தது. கூடவே அவன் கண்களும் அவளை திருட்டு தனமாக வருடியது. அவன் கண்கள் அவளை தழுவி ரசிக்க அவளது ஒற்றை தொடுகை கிடைக்காதா என்று  ஏங்கித் தான் போனான்.