இரண்டு நாட்களாக அதை கையில் எடுப்பதும், பின் வேண்டாம் என்று பார்க்காமல் வைப்பதுமாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். இன்றும் கையில் எடுத்தவளுக்கு, மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, டக்கென்று வைத்துவிட்டாள்.
“நேர்லயே பார்த்துப்போம்” என்று நினைத்தவளுக்கு அப்படியேவும் இருக்க முடியவில்லை.
“என்னக்கா? ஓவர் எக்சைட்மென்டா?” என்று கிண்டல் பண்ணியபடி வந்தாள் மகதி.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை” என்றவள் புடவையை சரி செய்து கொண்டிருக்க,
“அழகா இருக்க நதி அக்கா” என்றாள் மகதி.
“தேங்க்ஸ்டி என் செல்ல தங்கச்சியே” என்றவள்,
“ஆமா நரேன் எங்க?” என்றாள் கேள்வியாய்.
“அம்மா எங்க அவனை வீட்ல இருக்க விடுறாங்க. இதை வாங்கிட்டு வா, அதை வாங்கிட்டு வான்னு பாவம் காலையில இருந்து கடைக்கும் வீட்டுக்கும் நடையா நடக்குறான்” என்றாள் மகதி சிரித்தபடி.
“அது சரி, சும்மாவே அம்மாவை கையில பிடிக்க முடியாது. இன்னைக்கு சொல்லவா வேணும்?” என்றாள் நதி.
“அம்மாடி நதி” என்று வரதனின் குரல் கேட்க,
“அப்பா..!!” என்று வெளியே வந்தவளைப் பார்த்தவர், புடவையில் இருந்த மகளை ஒரு தந்தையை கண் குளிர பார்த்தவர்,
“அம்மா பூ வாங்கிட்டு வர சொன்னாடா. ரெண்டு பேரும் வச்சுக்கங்க” என்று நீட்ட, அவளுக்குப் பிடித்த குண்டு மல்லி, மலராமல் மொட்டாகவே வாசம் வீசிக் கொண்டிருந்தது.
மல்லியையும் வைத்து மணாளனுக்காய் காத்திருந்தாள் தீராநதி.
“அவங்க வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். நதி நீ உள்ள போம்மா” என்ற சாரதா, மகதி நீயும் உள்ள போ என்று அவளையும் விரட்டினார்.
“ம்மா..! மாப்பிள்ளையை நான் பார்க்க வேண்டாமா?” என்ற மகதி சட்டமாய் அவருடனேயே நின்றாள்.
“சொன்னா சொன்ன பேச்சு கேட்குறது இல்லை” என்று கடிந்து கொண்டவர், வரதனுடன் வாசல் வரை சென்று அவர்களை வரவேற்றார்.
குமரனின் மொத்த குடும்பமும் இரண்டு கார்களில் வந்து இறங்கியிருந்தனர்.
“வாங்க” என்று அழைத்தவர்களின் பார்வை மாப்பிள்ளையைத் தேடியது.
“தம்பி பின்னாடி வந்துட்டு இருக்கான்” என்றான் கல்யாண். உடனே தகவலை நதியிடம் ஒலிபரப்பு செய்திருந்தாள் மகதி.
“அக்கா மாப்பிள்ளை இன்னும் வரலை. அவங்க வீட்ல இருக்க எல்லாரும் ஆஜர் ஆகிட்டாங்க” என்று சொல்ல, ஏனோ தன்னை அறியாமல் சுணக்கம் கொண்டாள் நதி.
அறையிலிருந்து லேசாக எட்டிப் பார்த்தாள் தீராநதி. சங்கரனும், கோதாவரியும் அருகருகே அமர்ந்திருக்க, கல்யாணும் யுவராணியும் அவர்களை அடுத்து அமர்ந்திருந்தனர். தீபாவும் கண்ணனும் அமர்ந்திருந்தனர். கண்ணனின் பார்வை வீட்டை அளவெடுத்துக் கொண்டிருந்தது. கோதாவரியோ பார்வையாலையே அங்கிருந்த அனைத்தையும் எடை போட்டுக் கொண்டிருந்தார். அவர்களின் ஒவ்வொருவரின் முக உணர்வுகளை படித்தவளுக்கு, அவர்களின் குணநலமும் அப்போதே தெரிந்திருந்தது. விதிவிலக்காய் இருந்தவர்கள் சங்கரனும், தீபாவும் மட்டுமே.
“குமரனுக்கு போன் பண்ணு கல்யாண். இன்னும் என்ன பண்றான்?” என்றார் சங்கரன் மெதுவான குரலில்.
“இதோ பண்றேன்ப்பா” என்ற கல்யாண் தம்பிக்கு போன் செய்ய, அவன் போனின் ரிங் டோன் நேரிலேயே கேட்க,
“வந்துட்டான்ப்பா” என்றான் கல்யாண். அதுவரை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நதி அப்போது தான் திரும்பியிருந்தாள். அதனால் அவன் வந்ததை கவனிக்கவில்லை. அவனும் அவளுக்கு தெரியாத இடத்தில் அமர்ந்து கொள்ள, அவளுக்கு அவன் வந்தது தெரியவில்லை.
“வாங்க தம்பி” என்று வரதன் சம்பிரதாயமாய் வரவேற்க,
“பொண்ணை வர சொல்லுங்க “ என்றார் கோதாவரி.
நதியை அழைத்தவர், கையில் காபி அடங்கிய ட்ரேவைக் கொடுக்க, அவளோ சுணங்கிய மனத்துடன் ஏதோ சிந்தனையில் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அனைவருக்கும் கொடுத்தாள்.
குமரனிடமும் கொடுத்துவிட்டு அவனைத் தாண்டிச் செல்ல முற்பட,
“மாப்பிள்ளையை பார்த்துக்கோமா” என்றார் வரதன்.
“மாப்பிள்ளையா?” என்று அதிர்ந்தவள்,
“நாம பார்க்கும் போது இந்த சேர் காலியா தான இருந்தது. எப்போ வந்திருப்பார்” என்று நிமிர்ந்தவளுக்கு பதட்டத்தில் கை லேசாக நடுக்கம் கொடுக்க, அதுவரை அவளையே பார்த்திருந்தவன், அவளின் தடுமாற்றம் கண்டு, அவள் கையிலிருந்த தட்டை வாங்கி டீப்பாய் மீது வைத்தான்.
அவள் கையை உரிமையுடன் பிடித்துக் கொண்டவன்,“ரிலாக்ஸ் நதி” என்றான். அந்த சிறிய ஹாலில் அவன் குரல் மட்டும் தணித்து ஒலிக்க, அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டவளின் மனதிற்குள் இனிய படபடப்பு. அவன் அவளின் கையை வேறு பிடித்திருக்க, அவளால் நிமிரவே முடியவில்லை. நடுக்கமும், கூச்சமும் புது விதமான உணர்வும் சேர்ந்து அவளைத் தாக்க, சட்டென்று அவனிடமிருந்து விலகி அறைக்குள் சென்றவளின் இதயத் துடிப்பு அவளுக்கே கேட்டது.
அவளின் படபடப்பையும், வெட்கத்தையும் உணர்ந்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. மேற்கொண்டு பேசி முடிக்கிறதை முடிச்சுடலாம்” என்றார் சங்கரன்.
“நீங்க என்ன எதிர்பார்க்குறிங்கன்னு சொல்லிட்டா, எங்களுக்கும் வசதியா இருக்கும்” என்றார் வரதன் தயங்கியபடி.
“உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்ய விருப்பப்படுறிங்களோ அதை செய்ங்க. மத்த எதைப் பத்தியும் பேசக் கூடாதுன்னு என் பையன் தெளிவா சொல்லிட்டான். அதே மாதிரி நாங்களும் மிடில் கிளாஸ் பேமிலி தான். குமரன் வேலைக்கு சேர்ந்த பிறகு தான் ஏதோ இந்த அளவுக்காவது இருக்கோம். என் பையனைப் பத்தி நானே பெருமையா சொல்லக் கூடாது. நம்பி பொண்ணைக் குடுங்க. நல்லா பார்த்துப்பான்.இப்போ சப்-இன்ஸ்பெக்டரா இருக்கான். சீக்கிரம் இன்ஸ்பெக்டர் ப்ரமோஷன் வந்துடும். அவனைப் பத்தி நீங்களும் விசாரிச்சிருப்பிங்க தானே” என்றார் சங்கரன்.
“எங்களுக்கு பரிபூரண சம்மதம் சம்மந்தி” என்றார் வரதன் முழு மகிழ்ச்சியுடன்.
“உங்க பொண்ணு ஒன்னும் சொல்லையே?” என்றார் கோதாவரி.
“எங்களுக்குப் பிடிச்சா அவளுக்கு பிடிச்ச மாதிரி தாங்க” என்றார் சாரதா.
“நான் நதிகிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசிக்கலாமா? வித் யுவர் பர்மிஷன்” என்றான் குமரன் எழுந்து நின்றபடி.
அறைக்குள் இருந்தாலும் காதுகளை வெளியே வைத்திருந்த நதிக்கு அவன் கேட்பது தெளிவாய் காதில் விழுந்தது. ஏனோ அவன் குரலின் ஆளுமை அவளை அவன் பால் ஈர்த்திருந்தது.
“பேசுங்க தம்பி” என்றிருந்தார் வரதன்.
“அதென்ன தனியா போய் பேசுற பழக்கம்?” என்றார் கோதாவரி.
“ம்மா! எந்த காலத்துல இருக்கீங்க. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்று தன் தாயை அடக்கினாள் தீபா.
“வாங்க மாமா” எடுத்த எடுப்பில் உறவு சொல்லி அழைத்த மகதியை அவனுக்கு உடனே பிடித்துவிட்டது.
“நீங்க பேசிட்டு இருங்க” என்றவள் வெளியே ஓடி விட்டாள். நதிக்கோ, தலையை எங்கே கொண்டு நுழைப்பது என்று தெரியவில்லை.
“உன்னோட போன்” என்று அவன் கேட்க, தன்னுடைய போனை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அதில் தன் நம்பரை டயல் செய்தவன், அவனுக்கு ரிங் கொடுத்து கட் பண்ணிவிட்டு அவளின் எண்ணை சேமித்துக் கொண்டான்.
அவளை விட்டு பிரியவே மனமில்லாமல் வெளியே வந்தான் குமரன்.
“எங்க ரெண்டு பேருக்கும் ஓகே தான்” என்று அவன் சொன்னவுடன் அனைவரின் முகமும் மலர்ந்தது.
“தீபா அந்த பூவை எடுத்து நதி தலையில வச்சு விடு” என்று கோதாவரி சொல்ல, நாத்தனாராய் பூவை அவள் தலையில் வைத்து அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்தியிருந்தனர்.