மாலை வரவேற்பிற்குப் போக வேண்டும் என்று விஸ்வா சொல்லியிருக்க , சந்தியாவும் கிளம்பத் தொடங்கினாள் .
விஸ்வாவும் வர , இப்போதைய டிரண்டான , தம்பதியர் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிவது போல் தாங்களும் உடை அணிய ஆசைப்பட்டாள் . அதை விஸ்வாவிடம் கேட்க ,
“நிச்சயமாக அணியலாம் , நீயே உடையை எடுத்து வை , நான் குளித்து விட்டு வருகிறேன்…” என்று குளியலறைக்குள் புகுந்தான்.
சந்தியா, தன்னுடைய பச்சைச் சேலைக்கு ஏதுவாக அவனுக்கும் லைட் பச்சை நிறத்தில் சட்டை எடுத்து வைக்க , அவனும் அணிந்து கொண்டான் .
இருவருக்கும் அது அழகாகவும் பாந்தமாகவும் இருந்தது . சில செல்ஃபிகளை எடுத்துக்கொண்டனர் . பின் இருவரும் வெளியே வர ,
ஹாலில் அமர்ந்திருந்த ராஜி , “என்னடா விஸ்வா டிரஸ் இது ? பச்சை கலர் ஜிங்குச்சா… , மஞ்சக் கலர் ஜிங்குச்சா… என்று ரசனையில்லாமல் அணிந்திருக்கிறாய்?” என்று கடிய ,
“இருவரும் ஒரே நிறத்தில் அணியலாம் என்று ஐடியா அம்மா..” என்று விஸ்வா எடுத்துரைக்க ,
“அதற்காக உனக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது , இப்படிப் போனால் என்ன நினைப்பார்கள்….? அவள் தான் பட்டிக்காட்டுத்தனமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்றால் நீயும்…” என்று முகத்தைச் சுழிக்க ,
இந்த வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த சங்கரன் , “அவர்களுக்குப் பிடித்ததை அவர்கள் போடட்டும் ராஜி . உடையெல்லாம் தனிமனித உரிமை…” என்று எடுத்துரைக்க ,
“குடும்பத்தில் உரிமை , சுதந்திரம் என்றெல்லாம் பேசாதீர்கள் . எல்லோரும் இணைந்து தான் செயல்பட வேண்டும். பெரியவர்கள் பேச்சைக் கேட்டுத் தான் நடக்கவேண்டும்…” என்று படபடத்தார் ராஜி .
பின் விஸ்வாவை பார்த்து , “உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன் , வேற ஏதாவது லைட் கலர் சட்டை போடு ,நீ வேண்டுமானால் அதற்கேற்ப உன் சேலையைத் தேர்ந்தெடு சந்தியா…” என்று கட்டளையிட,
ஏற்கனவே இந்தப் பேச்சால் மனம் வாடியிருந்த சந்தியா , “கணவன் ஏதாவது சொல்வானா…?” என்று பார்க்க,
“வா சந்தியா , வேறு உடையை தேர்ந்தேடுப்போம்…” என்று விஸ்வா கூற ,
“இல்லை வேண்டாம் , இனிமேல் நான் மாற்றி கிளம்புவதென்றால் நேரமாகிவிடும் . நீங்கள் மாற்றிக் கொண்டு வாருங்கள்….” என்று தன் அழுகையை மறைக்கப் பூஜை அறைக்குள் சென்றாள் .
“சரி…” என்று விஸ்வா அறைக்குள் செல்ல ,
இவையனைத்தையும் ஒரு அதிருப்தியுடன் பார்த்து விட்டு சங்கரன் நகர்ந்தார் .
காரில் சந்தியா அமைதியாக வர , விஸ்வா பேச்சைத் தொடங்கினான் .
“அம்மா நம் நல்லதிற்குத் தான் சொல்வார்கள் , அதான் நீ தேர்ந்தெடுத்ததை மாற்றினேன் சந்தியா…” என்று வழக்கமான பல்லவியைப் பாட ,
சந்தியா மௌனமாகவே வர , “பிளீஸ் சந்தியா பேசு…” என்று தூண்ட ,
“நீங்கள் சட்டையை மாற்றியதில் எனக்கு வருத்தம் இல்லை . ஆனால் அத்தை என்னைப் ‘ பட்டிக்காடு , உடை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை…” என்று மட்டம் தட்டிப் பேசிய போது, நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே , இத்தனைக்கும் அது நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிய சட்டை…” என்று கண்கலங்க ,
“ஸாரி சந்தியா , நான் அதைக் கவனிக்கவும் இல்லை . அதைப்பற்றி பெரிதாக யோசிக்கவும் இல்லை , ஸாரி… ஸாரி… . இனிமேல் இப்படி நடக்காது…” என்று சரண்டராக ,
சந்தியா வளர்ந்த விதத்தால் அவளுக்குக் கோபப்படவோ , சண்டையிடவோ வரவில்லை .
அவன் மன்னிப்புக் கேட்டதும் அமைதியானாள் .
ஆனால் மனதில் ஒரு வலியை உணர்ந்தாள் . பின் விஸ்வா அவளை ஏதேதோ பேசிச் சமாதானப்படுத்தினான் .
கல்யாண மண்டபம் வர , நண்பர்கள் வர , விஸ்வா அறிமுகப்படுத்த , சந்தியாவும் சண்டையை மறந்து பேச ஆரம்பித்தாள் .