அடுத்து வந்த நாட்கள் அனைவருக்கும் இயல்பாக கடந்தன. வெண்ணிலா மற்றும் வருண் திருமணமும் நல்ல முறையில் முடிந்திருந்தது. செழியன் குடும்பத்திற்கு சேகர் சென்று பத்திரிக்கை வைத்தார் தான். ஆனால் “நாங்க வரலை மாப்பிள்ளை எங்களை தப்பா நினைக்காதீங்க”, என்று சொல்லி விட்டார் செழியன். அவர்கள் நிலைமையும் புரிந்தது என்பதால் சேகர் கட்டாயப் படுத்த வில்லை. செழியன் குடும்பம் இல்லாமலே அவர்கள் திருமணம் முடிந்திருந்தது.
அதிபன் இப்போது பிரகாஷ் கம்பெனியில் பணிக்கு செல்ல ஆரம்பித்தான். வேலைக்குச் சென்றாலும் அதிபன் கொஞ்சம் குழப்பங்களுடன் சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால் அவனால் யாழியிடம் தனியாக பேசவே முடிய வில்லை. அவளுக்கு செமஸ்டர் எக்ஸாம் என்பதால் முழுவதும் படிப்பில் மூழ்கி இருந்தாள். மருத்துவமனைக்கு கூட விடுமுறை எடுத்திருந்தாள். ஆனால் அவளைக் காண ஜான் தினமும் வந்து விடுவான்.
ஆனால் அதிபனால் அவளிடம் அதிகம் பேசவே முடிய வில்லை. இத்தனைக்கும் இருவரும் ஒரே வீட்டில் தான் இருந்தார்கள். ஆனால் முக்கால் வாசி நேரம் அவளுடன் ஜான் இருந்து கொண்டே இருந்தான்.
ஜானுக்கும் அவளுக்கும் இருக்கும் உறவு பற்றி கூட அவனால் பேச முடிய வில்லை. இது வரை அவள் மறைத்ததற்கு எங்கே கோப பட்டு விடுவோமோ என்றும் அவனுக்கு பயமாக இருந்தது. அதனாலே அடக்கி வாசித்தான்.
அவள் மீதான ஜானின் அக்கறை வேறு அவனை பொறாமைத் தீயில் வேக வைத்துக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் எப்போது தான் முடிவு வருமோ என்று குழப்பமாக இருந்தது. ஆனால் யாழி இயல்பாக தான் இருந்தாள்.
அவளுக்கு எக்ஸாம் முடிந்ததும் ஒரு நாள் இரவு உணவின் போது “ழி இன்னும் அஞ்சு மாசத்துல உனக்கு படிப்பு முடிஞ்சிரும். அப்புறம் இங்க வேலை பாப்பியா? இல்லை இந்தியா போயிருவியா?”, என்று கேட்டான் ஜான்.
“இல்லை ஜா இங்க தான் இருப்பேன். மாமா இங்க தானே இருக்கான்? சோ நானும் இங்கே தான்”, என்று அவள் சொல்ல இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அதிபனுக்கு தான் விளங்க வில்லை.
ஆனால் ஜானோ எந்த தப்பர்த்தமும் கண்டு பிடிக்காமல் “ஐயா நீ இனி இங்க தான் இருப்ப. எனக்கு அதே போதும்”, என்று குதூகளித்தான்.
அன்று ஜான் கிளம்பிய பிறகு “மாமா”, என்று அழைத்தாள் யாழி.
“சொல்லு யாழி”, என்றவன் இப்போதெல்லாம் பாப்பு என்று அழைப்பதை குறைத்திருந்தான். அவனுக்கே ஏனென்று தெரிய வில்லை.
“நீ இங்க வந்ததுல இருந்து உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவே இல்லை. நாளைக்கு லீவ் தானே உனக்கு? வெளிய போகலாமா?”, என்று கேட்டான்.
“பாரு டா, மேடம்க்கு என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாதது எல்லாம் நினைவு இருக்கா? எனக்கு லீவு தான். ஆனா நீங்க பிஸியா இருப்பீங்களே?”, என்றான் நக்கலாக.
“ஏன் இப்படி பேசுற மாமா?”
“என்னை பேச வைக்காதே யாழி, கோபமா எதாட்டும் சொல்லீற போறேன். நாளைக்கு உனக்கு வெளிய தானே போகணும். போகலாம் வரேன். இப்ப தூங்கலாம்”, என்றான் பொறுமையாக.
“இப்ப எதுக்கு உனக்கு கோபம்? புராஜெக்ட் முடிக்கணும்னு தீஸிஸ் வேலை இருந்துச்சு. அதான் கொஞ்சம் பிஸி”, என்றாள் பாவமாக.
“உன் வேலையையோ உன் வேலை நேரத்தையோ நான் குறை சொல்லலை யாழி. இந்த வீட்ல இருக்கும் போது கூட நீ என் கிட்ட பேசுறது இல்லை. இன்னைக்கு தான் அதிசயமா வந்து பேசுற”
“நாங்க பேச தான் செய்யுறோம் மாமா. நீ தான் ரூமுக்கு ரூமுக்கு போற”
“அதை தான் நானும் சொல்றேன். நீங்க பேசுறீங்க. நீங்க மட்டும் தான் பேசுறீங்க. நான் எதுக்கு இடைல பேசணும். பிளீஸ் விடு யாழி. எனக்கு எரிச்சலா இருக்கு”
“எதுக்கு இப்படி பேசுற? நான் என்ன செஞ்சேன்?”
“என்ன செஞ்சியா? என்னை பேச வைக்காதே. பிளீஸ் விடு தூங்க போகலாம்”
“எனக்கு தெரியணும் மாமா”
“ஜானுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”, என்று கேட்டவன் அவளையே கூர்மையாக பார்த்தான்.
அவள் ஒரு நொடி திகைத்து பின் அமைதியாக இருக்க “உன் கிட்ட தான் கேக்குறேன் யாழி, உனக்கும் ஜானுக்கும் என்ன சம்பந்தம்?”, என்றான்.
“அவன் என்னோட பிரண்ட்”
“அப்ப அவனுக்கு?”
“அவன்..”
“அவன் உன்னை லவ் பண்ணுறான் கரெக்டா?”
“அது மாமா.. ஆமா”
“இதை எதுக்கு என் கிட்ட சொல்லலை. என் கிட்ட இன்னும் எவ்வளவு விஷயம் மறைச்சிருக்க யாழி? நான் தான் லூசு மாதிரி உன் கிட்ட எல்லாத்தையும் உளறி கிட்டு இருக்கேன்ல? எதுக்கு என் கிட்ட இதை நீ சொல்லலை?”
“என்னால எப்படி உன் கிட்ட இதைச் சொல்ல முடியும்?”, என்று கேட்க உண்மையிலே அவள் சொல்ல வருவது புரியாமல் “புரியலை. இது உன்னோட பர்சனல். அதை உன் கிட்ட எதுக்கு சொல்லணும்னு சொல்ல வரியா?”, என்று கேட்டான்.
“அப்படி இல்லை மாமா”
“அப்புறம்? வேற என்ன?”
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் மாமா”
“அதான் தெரியுமே. நான் என்ன கேக்குறேன், நீ என்ன சொல்லிட்டு இருக்க?”
“அதை தான் சொல்றேன், உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னை மட்டும் தான் பிடிக்கும். உன் கிட்டயே வந்து அவன் என்னை லவ் பன்றான், இவன் என் கிட்ட புரொப்போஸ் பண்ணுறான்னு எப்படி சொல்ல முடியும்?”, என்று அமைதியான குரலில் சொல்ல அதை அதிபனால் புரிந்து கொள்ள முடிய வில்லை.
“எனக்கு உண்மையிலே இப்பவும் புரியலை யாழி. இதுல என்ன இருக்கு? என் கூட படிச்ச நளினி அப்புறம் உன் பிரண்ட் வர்ஷா என் கிட்ட புரொப்போஸ் பண்ணினதை உன் கிட்ட சொன்னேன் தானே? அப்ப நீ ஏன் இது வரை எதுவும் சொல்லலை? நமக்குள்ள எதுக்கு இந்த ஒழிவு மறைவு?”
“அது”, என்று அவள் பதில் சொல்ல திணற “நீ தானே கேட்ட? எனக்கு இப்ப பதில் வேணும்”, என்றான்.
“நாம வேற பேசலாம் மாமா”
“எனக்கு இதுக்கு பதில் வேணும் யாழி. ஏன் என் கிட்ட சொல்லலை?”
“ஏன்னா.. என்னால அதை சொல்ல முடியாது”
“அதான் ஏன்னு கேக்குறேன் யாழி?”
“நீ என் கிட்ட அவங்க லவ் பண்ணுறாங்கன்னு சொன்னப்ப எனக்கு ரொம்ப வலிக்கும். அதனால தான் நான் உன் கிட்ட சொல்லலை. நான் சொன்னா உனக்கு வலிக்காது தான். ஆனா எனக்கு சொல்லணும்னு தோணலை”, என்று சொல்ல அவள் சொன்னதைக் கேட்டு மொத்தமாக அதிர்ந்து போனான்.
அது உணர்த்திய செய்தி அவனுக்குள் பெரும் பூகம்பத்தை உருவாக்கி இருந்தது. அவள் சொன்னதை நான் சரியாக கேட்டேனா? அதற்கு நான் நினைத்தது தான் அர்த்தமா என்று எண்ணியவன் “யாழி..”, என்று அதிர்வாக அழைத்தான்.
அவளும் ஒரு முடிவுடன் இருந்தாளோ என்னவோ? “ஆமா மாமா, நீ சொல்ற அந்த விஷயம் எல்லாம் எனக்கு பிடிக்காது. இவன் நம்ம கிட்ட சொல்லாம இருக்க கூடாதானு தோணும்”, என்றாள்.
“இதுக்கு என்ன அர்த்தம் யாழி?”, என்றவனுக்கும் அதிக குழப்பம் மட்டுமே. அதனால் அவளிடமே கேட்டான்.
“அர்த்தமெல்லாம் எனக்கு தெரியாது. உன்னைப் பிடிக்கும். உன்னை மட்டும் பிடிக்கும். நீ என்னோட மாமா. உன்னைத் தவிர எனக்கு வேற யாரையும் பிடிக்காது. உன்னையும் யாருக்காவது பிடிச்சா எனக்கு கஷ்டமா இருக்கு. எதுக்குன்னு தெரியாது”, என்று உளறிக் கொட்ட அவனும் விழித்துக் கொண்டு தான் இருந்தான். அவளிடம் இருந்து இப்படி ஒரு பதிலை அவன் எதிர் பார்க்க வில்லையே.
“ஏய் நீயும் கொஞ்ச நாள்ல வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போவ தானே டி? அப்புறம் என்ன இதெல்லாம்?”
“கல்யாணம் பண்ணினா தானே?”, என்று அவள் கேட்க உண்மையிலே அதிர்ந்து தான் போனான்.
“யாழி..”
“கடைசி வரை உன் கூட தான் இருப்பேன். உன் அத்தை மகளா என்னால உன்னைப் பாத்துட்டே இருக்க முடியும். இலக்கியா மாதிரி வேற ஒருத்தனைக் கட்டிக்கிட்டு உன்னை விட்டுட்டு உன்னைப் பாக்காம எல்லாம் என்னால இருக்க முடியாது”
“எனக்கும் கல்யாணம் முடியும் தானே டி?”
“முடிச்சிக்கோ, யார் வேண்டாம்னு சொன்னா?”, என்று அவள் கேட்க அவனுக்கு திகைப்பு கூடிக் கொண்டே போனது. ஜானின் காதலை கடந்த நாட்களில் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு இப்போது அதே காதலை யாழியிடம் பார்ப்பது போல இருந்தது.
“என்னை லவ் பண்ணுறியா யாழி?”, என்று வெளிப்படையாகவே கேட்டான்.
“அப்படி தான் நினைக்கிறேன்”, என்று அவளும் பட்டென்று பதில் சொல்லி விட்டாள். ஒரு நொடி கூட அவள் யோசிக்கவே இல்லை.
“என்ன பதில் டி இது?”, என்று அவன் திகைப்பாக கேட்க “தெரியலையே? நீ கேட்ட. நான் சொல்லிட்டேன்”, என்றாள்.