அப்போது ஏதோ புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருக்க சந்தேகமே இல்லாமல் முகப்பு புத்தகத்தில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் ஜான்.
வேறு வழி இல்லாமல் அந்த எண்ணை ‘கிறுக்கு ஜே’ என்று பதிந்து வைத்தான். அதன் பின்னும் கடுப்பை கிளப்பும் விதமாக அவனது ஸ்டேட்டசில் நேற்று அவர்கள் வெளியே சென்ற போது எடுத்த புகைப்படங்களை வைத்திருந்தான். அதுவும் யாழியுடன் அவன் இருக்கும் புகைப்படங்களே அதிகம் இருக்க இவனும் பிரகாசும் ஒப்புக்கு சப்பாணி போல சில புகைப்படங்களில் இருந்தார்கள்.
“ரொம்ப படுத்துறானே இவன்? பெரிய யானையோட காதுல சின்ன எறும்பு போய் என்ன பாடு படுத்துமோ அப்படி இருக்கு இவன் நடவடிக்கை”, என்று எரிச்சல் அடைந்தவன் தன்னுடைய தந்தைக்கு அழைத்து பேசி விட்டு தாயிடமும் பேசினான்.
பெற்றோரிடம் பேசி விட்டு மனம் கொஞ்சம் இதமாக மாற பிரகாசை அழைத்து எப்போது வருகிறான் என்று கேட்டான். அவன் வர அரை மணி நேரம் ஆகும் என்பதால் சரி உண்ணலாம் என்று எண்ணி உணவு மேசைக்கு சென்று அவள் எடுத்து வைத்த டப்பாவை திறந்து பார்த்தான்.
மஞ்சள் கலரில் உப்புமா தான் இருந்தது. “இதையா டா அப்படி சாப்பிட்ட?”, என்று எண்ணிக் கொண்டு இரண்டு வாய் எடுத்து வாயில் வைத்தான்.
அவனுக்கு உப்மாவே பிடிக்காது. அதிலும் யாழி செய்தது கொஞ்சம் மட்டமாக தான் இருந்தது. ஆனால் அதை ஜான் சப்பு கொட்டி உண்ண விதம் “ஒரு வேளை அவன் நடிக்கிறானோ? யாழி கிட்ட பாராட்டு வாங்குறதுக்கு அவ கிட்ட புகழுறானோ?”, என்று எண்ணியவனுக்கு “இல்லை இல்லை பையன் நிஜமாவே பைத்தியம் தான். என்ன தான் நடிப்புக்கு புகழ்ந்தாலும் அவ்வளவு சாப்பிட முடியாதே”, என்று எண்ணிக் கொண்டு மேலும் இரண்டு வாய் எடுத்து வைத்தவன் அப்படியே கொண்டு வைத்து விட்டான்.
பிரகாஷ் வந்ததும் சாப்பாடு மற்றும் ஜான் பற்றி அவனிடம் அவ்வளவு புலம்பி விட்டான் அதிபன். “இங்க பாரு அதிபா, உண்மையான காதல் இருந்தா காதலி கழனி தண்ணியை கொடுத்தா கூட தேவாமிர்தமா தான் இருக்கும். உனக்கு எல்லாம் காதலைப் பத்தி என்ன தெரியும்?”, என்று கேட்டு அவனிடம் ஒரு முறைப்பை பெற்றுக் கொண்டான் பிரகாஷ்.
எப்படியும் வீட்டுக்கு சீக்கிரம் வந்தாலும் யாழியும் ஜானும் தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதால் அன்று பிரகாசுடன் வெகு நேரம் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான் அதிபன்.
வீட்டுக்கு வந்ததும் “நாளைக்கு எனக்கு ஆபீஸ் இருக்கு டா அதிபா. சோ ஒரு நாள் நீ தனியா தான் சுத்தனும். நாளானைக்கு என் ஆபீஸ் அட்ரஸ் அனுப்புறேன். அங்க வந்துரு, ஜி.எம் பாத்துட்டு அடுத்த நாளே வேலைல சேந்துறலாம்”, என்றான் பிரகாஷ்.
“ஓகே டா,. நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னதும் அவனை வீட்டில் விட்டு சென்றான் பிரகாஷ்.
அப்போதும் ஜானும் யாழியும் வீட்டுக்கு வந்திருக்க வில்லை. உடனே போனை எடுத்து அவளுக்கு அழைத்தான். அவள் அழைப்பை எடுக்க வில்லை என்றதும் சுள்ளென்று கோபம் வந்தது.
“உண்மைலே இவளுக்கு வேலை இருக்கா? இல்லை அவன் கூட சேந்து ஊரைச் சுத்துறாளா? என்னமோ இணை பிரியாத ரெட்டையர்கள் மாதிரி சுத்திக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு வரட்டும் இருக்கு அவளுக்கு”, என்று எண்ணிக் கொண்டு குளிக்கச் சென்றான்.
அவன் குளித்து முடித்து வெளியே போன போது அவனை முறைத்து பார்த்தாள் யாழி. “ஓய் என்ன டி முறைக்கிற? கால் பண்ணினா எடுக்க மாட்டியா? வீட்டுக்கும் இவ்வளவு லேட்டா வர? நான் தான் உன்னை முறைக்கணும்”, என்று கோபமாக கேட்டான் அதிபன்.
“ஏன் திருப்பி நான் பண்ண தான் செஞ்சேன், நீ எடுக்கவா செஞ்ச?”, என்று பதிலுக்கு கேட்டாள் யாழி.
“ஓ குளிக்க போய்ட்டேன் டி”
“அப்ப எனக்கும் ஏதாவது ரீஷன் இருக்கும் தானே மாமா?”
“சரி விடு பாப்பு, தெரியாம கேட்டுட்டேன்”, என்று அவன் சமாதானமாக “உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்க மாமா?”, என்று கோபத்துடன் கேட்டாள் யாழி. அதற்கு ஜான் வேறு சிரித்து வைக்க உண்மையிலே அதிபனுக்கு தலை இறக்கமாக போனது.
“யாழி”, என்று எரிச்சலுடன் அழைத்தான்.
“காலைல வச்ச சாப்பாடை அப்படியே வேஸ்ட் பண்ணிருக்க? சாப்பாடு இல்லாம எவ்வளவு பேர் கஷ்ட படுறாங்க தெரியுமா?”, என்று அவள் அட்வைஸ் பண்ணவும் அதுவும் ஜான் முன்னாடியே இதை எல்லாம் பேசவும் “ஹலோ மேடம் சாப்பிடுற மாதிரி இருந்தா சாப்பிட்டுருப்பேன் சரியா? வாய்ல வைக்க முடியலை. அப்ப எப்படி சாப்பிட முடியும்? என் வயிறு என்ன குப்பை தொட்டியா?”, என்று கோபத்துடன் கத்தினான். அதைக் கேட்டு அவள் முகம் சுருங்கிப் போனது.
“பாஸ் இதெல்லாம் அநியாயம். நீங்க இப்படி பேசக் கூடாது. ழி சமையல் சூப்பரா இருக்கும். அதுவும் இன்னைக்கு காலைல நாலு கரண்டி வாங்கி சாப்பிட்டேன். இப்ப நீங்க அதை பிரிட்ஜ்ல வச்சிருந்தா கூட சூடு செஞ்சு சாப்பிட்டுருப்பேன்”, என்று ஜான் சொல்ல “முதல்ல இந்த எலியை அடிச்சு கொல்லணுமே”, என்று எண்ணிக் கொண்டான்.
“சாரி யாழி”, என்று அதிபன் முணுமுணுக்க “ஓகே மாமா, இனி சாப்பாடை வேஸ்ட் பண்ணாத. இனி உனக்கு நான் வெளிய ஆர்டர் பண்ணிறேன். இனி எங்க ரெண்டு பேருக்கும் மட்டுமே சமைச்சிக்கிறேன்”, என்றவள் ஜான் புறம் திரும்பி “ஜா மாமாக்கு புட் ஆர்டர் பண்ணு. நான் உனக்கு பிடிச்ச பிஸ்தா புலாவ் செய்யுறேன்“, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
“ஓகே ழி பேபி”, என்று சந்தோஷமாக சொன்னவனை கொலை வெறியோடு பார்த்தவன் “டேய் ஜான் இங்க வா”, என்றான்.
“என்ன பாஸ்?”
“உனக்கு மனசாட்சி இருக்கா டா? உண்மைலே அந்த உப்மா அவ்வளவு டேஸ்டா இருந்ததா?”
“சத்தியமா பாஸ், ழி எது கொடுத்தாலும் எனக்கு தேவாமிர்தம் தான்”, என்று ரசித்து சொன்னவனை முறைத்தவன் “ஒரு வேளை எனக்கு தான் காதலை பத்தி ஒண்ணும் தெரியலையோ”, என்று யோசனையில் ஆழ்ந்தான்.
சொன்னது போலவே அதிபனுக்கு வெளியே இருந்து உணவு வந்திருக்க இவர்களுக்கு மட்டும் சமைத்து வைத்தாள். மூவரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க கவரை எடுத்து அதிபன் புறம் வைத்தவள் பிஸ்தா புலாவை தங்களுக்கு மட்டுமே வைத்தாள்.
“யாழி இதையும் ஷேர் பன்னிக்கலாம்”, என்றான் அதிபன்.
“வேணாம் மாமா, அது உனக்கு தான். எங்களுக்கு இது போதும்”, என்றாள்.
“ஆமா பாஸ், பிஸ்தா புலாவ்ஐ அடிச்சிக்கவே முடியாது. எனக்கு இதே போதும் பா”, என்று அவன் ரசித்து உண்ண ஆரம்பித்தான்.
“பிஸ்தால புலாவா? பிஸ்தால பாயாசம் இல்லைன்னா ஐஸ் கிரீம் தானே டா பண்ணுவாங்க?”, என்று எண்ணிக் கொண்டே அதிபன் உண்ண ஆரம்பித்தான். ஆனாலும் யாழி ஜானுடன் சேர்ந்து தன்னை ஒதுக்குவது போலவே இருந்தது.
“உப்புமா நல்லா இல்லைன்னு உண்மையைச் சொன்னது குத்தமாடா?”, என்று எண்ணிக் கொண்டு வேண்டா வெறுப்பாக அந்த கடை உணவை உண்ண ஆரம்பித்தான். ஆனாலும் அவள் சமைத்ததை ஒரு வாய் உண்டு பார்க்க வேண்டும் என்று கூட அவனுக்கு தோன்ற வில்லை. அதை மட்டும் அவன் சொல்லி இருந்தால் அவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டான்.