அதிபன் குளித்து முடித்து வெளியே வந்ததும் “ஹாய் பாஸ்”, என்ற படியே உள்ளே வந்த ஜான் அவனை தூக்கிக் கொள்ள “டேய், யாரு டா நீ. என்னை இறக்கி விடு டா”, என்று அலறினான் அதிபன்.
சத்தம் கேட்டு அங்கே வந்த யாழி “ஹாய் ஜா எப்ப வந்த? முதல்ல மாமாவை இறக்கி விடு”, என்று சொன்னாள்.
“நீ இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பன்னு தெரியும். அதான் உன்னைப் பாக்க வந்தேன். அதிபன் அண்ணாவும் வராங்கன்னு நீ சொல்லவே இல்லை ழி”, என்று உரிமையாக கோபம் கொண்டான் ஜான்.
“ஹலோ ஹலோ நீ யாரு முதல்ல, அது என்ன ஜா அப்றம் ழி?”, என்று குழப்பமாக கேட்டான் அதிபன்.
“நான் ஜான் சுருக்கமா ஜா. அப்புறம் இவ யாழி. சுருக்கமா ழி”, என்று சொல்ல அவனுக்கு அவள் ஹைஃபய் அடித்து கொள்ள அந்த கிறுக்குகளைக் கண்டு அதிபன் தலையில் அடித்துக் கொண்டான்.
“உங்க ரெண்டு பேர் பேரும் ரொம்ப நீளம் தான். சுருக்கி தான் கூப்பிடனும்”, என்றான் அதிபன்.
அவன் கிண்டலைக் கண்டு கொள்ளாமல் “நீ போய் கிளம்பு ழி, நாம சாப்பிட போகலாம்”, என்று ஜான் சொன்னதும் அவள் அறைக்குள் சென்றாள்.
அவள் போனதும் ரகசியம் சொல்வது போல அதிபன் அருகில் வந்த ஜான் “எங்க ரெண்டு பேர் பேரையும் சேத்தா சந்தோஷம் தான் வரும் பாஸ். ஜாலி.. எப்படி இருக்கு?”, என்றான்.
“நீ விட்டா தானே டா கிளம்ப முடியும்?”, என்று எண்ணிக் கொண்டு “நீயும் வரியா என்ன?”, என்று கேட்டான் அதிபன்.
“பின்ன நான் இல்லாமலா? ழி கூட பிரண்ட் ஆனதுல இருந்து நாங்க மூணு நேரமும் ஒண்ணா தான் சாப்பிடுவோம். இத்தனை நாள் அவ தான் செஞ்சு தருவா? இனியன் விஷ்வா வந்த அப்ப தான் நான் இங்க இல்லை. ஒரு காண்பரன்ஸ்க்காக போய்ட்டேன். பரவால்ல. உங்களைப் பாத்தது ரொம்ப சந்தோஷம். எனக்கு ழி சமைக்கிறது ரொம்ப பிடிக்கும் பாஸ். இன்னைக்கு பாவம் டயர்டா இருப்பால்ல? அதான் வெளிய சாப்பிட போகலாம்”
“ஓஹோ அப்ப இத்தனை நாள் ஓசி சோறுன்னு சொல்லு”
“நம்ம ழி தானே பாஸ் ஒண்ணும் நினைக்க மாட்டா. அப்புறம் இன்னைக்கு என்னோட டீரீட்”, என்று தன்னுடைய கிண்டலைக் கூட பெரிது பண்ணாமல் அவன் சொல்ல அதிபனுக்கு தான் ஓவராக பேசி விட்டோமோ என்று கஷ்டமாக இருந்தது.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் கிளம்ப ஆரம்பித்தான் அதிபன். ஆனால் ஜானோ பேசிய படியே இருந்தான்.
“இன்னைக்கு எதுக்கு உன்னோட டிரீட். என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?”, என்ற படியே தலை வார ஆரம்பித்தான் அதிபன்.
“என் ழி இப்ப எனக்கு ஹைஃபய் அடிச்சா பாஸ். நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்”, என்று சொல்ல அட ஏலியனே என்று தான் பார்த்தான்.
“டேய் தம்பி, அவளை லவ் ஏதும் பண்ணுறியா என்ன? தயவு செஞ்சு அப்படி மட்டும் செய்யாத டா. உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவா”
“ஹா ஹா லவ் எல்லாம் சொல்லி பல மாசம் ஆச்சு பாஸ்”, என்று அவன் சொல்ல உண்மையிலே அதிர்ந்து தான் போனான்.
“லவ் சொல்லிட்டியா?”
“ஆமா அவளை பிடிச்சு போய் லவ் சொன்னதுக்கு அப்புறம் தான் என் கிட்ட பேசவே ஆரம்பிச்சா”
“என்ன சொன்னா அதுக்கு? அவளும் உன்னை விரும்புறாளா?”, என்று கேட்டவனுக்கு ஏதோ ஒரு உணர்வு உள்ளத்தில் எழுந்தது. பொறாமையா வலியா என்று புரிய வில்லை. ஆனால் ஏதோ ஒரு புரியாத உணர்வு. இது வரை இல்லாத உணர்வு அது.
“இவன் லவ் சொல்லிருக்கான். என் கிட்ட ஒரு வார்த்தை கூட இவ சொல்லலை பாரேன்”, என்று கோபமாக எண்ணிக் கொண்டவன் பதிலுக்காக ஜானை பார்த்தான்.
“உனக்கு வந்த லவ் பீல் எனக்கு வருமா தெரியாது. வர வரைக்கும் நாம பிரண்டா மட்டும் இருக்கலாம் ஜான்னு சொல்லிட்டா”, என்று ஜான் சொன்னதும் உண்மையிலே அதிபனுக்கு அதிர்ச்சி தான்.
“இப்படி சொல்லிருக்கானா ஒரு வேளை அவளுக்கும் பிடிச்சிருக்குமா?”, என்று எண்ணம் வர “ஏன் அவளுக்கு பிடிச்சா உனக்கு என்ன?”, என்ற மனசாட்சியின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.
இவர்கள் இருவரும் கிளம்பி வந்து அமர்ந்திருக்க அதிபன் யோசனையில் இருந்தான். ஜான் விடாமல் பேசிய படியே இருந்தான்.
“நான் ரெடி கிளம்பலாமா?”, என்று கேட்ட படி யாழி வந்ததும் இருவரும் அவளை திரும்பி பார்த்தார்கள். அதிபன் அவளை சாதாரணமாக பார்க்க ஜான் அவளைச் ஜொள்ளு விட்ட படி பார்த்தான்.
“ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு யாழி. பிரகாஷ் வறேன்னு சொன்னான்”, என்றான் அதிபன். அவன் தான் யாழி அமெரிக்கா வந்த புதிதில் இந்த வீடு பார்த்து அதிக உதவிகளை செய்தவன் என்பதால் “சரி மாமா”, என்ற படி போனைப் பார்க்க அதிபனின் கையை சுரண்டினான் ஜான்.
“என்ன டா?”
“யாழி இந்த டிரஸ்ல ரொம்ப அழகா இருக்கால்ல? எல்லா டிரஸ்லயும் நல்லா தான் இருப்பா. இருந்தாலும் இந்த பிளாக் டிரஸ்ல தேவதை போல இருக்கால்ல பாஸ்”, என்று சொல்ல அவன் கண்களும் அவளை அளவிட்டது.
“உண்மை தானோ?”, என்று எண்ணிய மனதை தலையை உலுக்கி விரட்டியவன் “அவ எங்க பாட்டி மாதிரி. சின்ன பிள்ளைல இருந்தே அழகு தான்”, என்றான் பெருமையாக.
“நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரர் பாஸ்”
“எதுக்கு இந்த ஐஸ் வைக்கிற?”
“என் ழி கூட இவ்வளவு வருஷம் ஒண்ணா இருந்துருக்கீங்கள்ல?”
“ஹலோ அவ என்னோட யாழி”, என்றான் உரிமையாக.
“இருக்கட்டும் உங்களுக்கு யாழி, எனக்கு ழி”, என்றான் ஜான். இவனை என்ன தான் செய்வதோ என்று எண்ணியவன் “அவ உன்னை லவ் பண்ணலைனா என்ன டா பண்ணுவ?”, என்று கேட்டான்.
“நம்பிக்கை தான் வாழ்க்கைன்னு எங்க அப்பா சொல்லிருக்கார் பாஸ். கண்டிப்பா அவளுக்கு என்னைப் பிடிக்கும்”, என்றான். அந்த பதில் அதிபனுக்கு உவப்பானதாக இல்லை. அதனால் பேச்சை மாற்றும் விதமாக “உங்க அப்பா என்ன பண்ணுறாங்க?”, என்று கேட்டான்.
“யாழி சொல்லலையா பாஸ்? எங்க ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் அவங்க தான் பாக்குறாங்க. அவரும் டாக்டர் தான். இப்ப நெதர்லண்ட் காண்பரன்ஸ் போயிருக்காங்க”