புதுப்புது அர்த்தங்கள்….. நாள்-12 (1)

அத்தியாயம் 33

சந்தியா…..

இங்கே விஸ்வாவிற்குத் திருமணம் , வரவேற்பு , விருந்து என்று எல்லாம் முடிந்தது  . சந்தியா விருப்பப்பட்டது போல் தேனிலவுக்கு  சுவிஸ் சென்று ஒரு வாரம் தங்கி வந்தனர் . புதுமண தம்பதிகளுக்கான அனைத்துக் கொண்டாட்டங்களுடன், மகிழ்வுடன் முதல் மூன்று மாதங்கள் சென்றன .

 இயல்பு வாழ்கைக்குத் திரும்பினர் . சந்தியாவும் ராஜியிடம் கேட்டு , வீட்டுப் பொறுப்புகளில் பங்கு கொண்டாள் . 

அன்று காலை விஸ்வா உடற்பயிற்சி செய்து வர , வழக்கம் போல் ராஜியும் , சங்கரனும் ஹாலில் அமர்ந்திருக்க , விஸ்வா இணைந்து கொண்டான் .

விஸ்வா வந்ததைக் கவனித்த சந்தியா , அவனுக்கு காபி எடுத்து வந்து கொடுக்க ,

டம்ளரைக் கவனித்த ராஜி , “என்ன சந்தியா இது? “

“காபி அத்தை….” 

“அவன் சத்துமாவுக் கஞ்சி தானே குடிப்பான்…” 

“ஆமாம் அத்தை , ‘அவர் காபி ரொம்ப பிடிக்கும்’ என்றார் ,  அதனால் தான் ஒரு நாள் மாற்றிக் கொடுப்போமே என்று எடுத்து வந்தேன் .”

“இது என்ன கெட்டப் பழக்கம்? என்னிடம் கேட்காமல் ஒரு  விசயத்தை மாற்ற முயலுகிறாய்… “  என்றார் கோபமாக.

“இல்லை அத்தை , ஒரு நாள் தானே….” என்று கணவனைப் பார்த்தபடி இழுக்க ,

“ஒரு நாள் தான்… . ஆனால் இது உருப்படியான விசயமா?   கெட்ட பழக்கத்தை உருவாக்குகிறாய் . என்ன படித்துக் கிழித்தாயோ ?”என்று  சலித்துக் கொண்டார்.

பின், “இதைக் கொட்டி விட்டு , கஞ்சி கலந்து எடுத்து வா சந்தியா…”

சந்தியா அவமானமாக உணர்ந்தாள் . ‘அடுத்து என்ன செய்வது..?’ என்று தெரியாமல் விஸ்வாவைப் பார்த்து தயங்கி நிற்க ,

“அம்மா சொல்வதைச் செய் சந்தியா..”என்று விஸ்வாவும் கூற , 

தேன்நிலவில் விஸ்வா ஆசையாக காப்பி குடித்ததையும் , மிகவும் பிடிக்கும் என்று சொன்னதையும் யோசித்தபடி, கஞ்சியைத் தயாரித்தாள் சந்தியா .

சந்தியா கஞ்சியை எடுத்து வந்து தர , விஸ்வா அமைதியாக பெற்று கொண்டான்

“நீயாக எதையும் முடிவு செய்யாதே சந்தியா , பெரியவர்கள் சொல்படி நட…” என்று ராஜி ஒரு குட்டும் வைக்க தவறவில்லை .

“சரி அத்தை….” என்று சந்தியா உள்ளே செல்ல , 

சங்கரன் விஸ்வாவை உறுத்து விழித்து விட்டு, எழுந்து சென்றார் .

விஸ்வா அமைதியாக மீதி கஞ்சியை குடிக்க , பக்கத்தில் வந்த ராஜி , “அம்மா உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன்…” என்று முதுகைத் தடவ ,

“தெரியும் அம்மா , எதற்கு விளக்கமெல்லாம் சொல்கிறீர்கள்”என்று வேகமாக தடுத்தான் . 

அடுக்களையில் இருந்து இதைப் பார்த்த சந்தியா குழம்பிப் போனாள் .

அரைமணி நேரம் கழித்து விஸ்வா அறைக்கு வர , சந்தியா  தலை சீவி பின்னல் போட்டுக் கொண்டிருக்க , பின்னால் வந்த இறுக்கி அணைத்தான் .

சந்தியா அமைதியையே கடைபிடிக்க , “கோபமா சந்தியா?”

சந்தியா மெதுவாக , “இன்று ஒரு நாள் குடித்திருக்கலாம் தானே , உங்கள் ஆசைக்குத் தானே  எடுத்து வந்தேன் .”

அவளைத் திருப்பி , “எனக்குக் காபி  பிடிக்கும் தான் சந்தியா , ஆனால் அம்மா என் ஆரோக்கியத்திற்காக ஒன்றும் செய்யும் போது , எப்படி மறுக்க முடியும்?“

“சரிங்க , குடிக்காவிட்டாலும் கூட , “நான் தான் ஆசைப்பட்டேன் என்று ஏதாவது பேசியிருக்கலாமே…. ,அத்தை என்னை திட்டாமலாவது இருந்திருப்பார்களே?” என்று முனங்க ,

“ஸாரி சந்தியா , எனக்குத் தோன்றவில்லை .”

“அதற்கு மேல் என்ன பேசுவது….?” என்று புரியாமல்  அமைதியானாள் .

அப்புறம், “அம்மா எப்போதும் என் நன்மை பற்றியே யோசிப்பவர்கள் சந்தியா . அதனால் நீ எந்த மாற்றம் செய்ய நினைத்தாலும் அம்மாவைக் கேட்டே செய்….” என்று முடித்தான் . 

அவன் குளிக்கச் செல்ல , ‘ஒரு காபிக்கு இவ்வளவு அக்கப்போரா….?’ என்று சந்தியா மனதினில் அலுத்துக் கொண்டாள் . 

ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பின் , விஸ்வாவின் பின்னாலே நின்றார் ராஜி. 

 விஸ்வா சாப்பிட வந்தால் ,  உணவு மேஜைக்கு வந்து விடுவார் . அதன்பின் சந்தியா பரிமாறும் பொழுது , “இதை நிறைய வை , இது அவனுக்குப் பிடிக்கும் , தட்டைப் பார்த்துப் பரிமாறு…”  என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தார் .

வாழ்க்கை ஓட்டத்தில் தன் கணவனுக்கு எது பிடிக்கும்? பிடிக்காது? என்று கற்றுக் கொள்ள வேண்டிய விசயத்தை  வலியத் திணிக்க , சந்தியாவிற்கு அலுத்துப் போனது.

சங்கரன் கவனித்து , “விடு ராஜி , கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று கொள்வாள்…” என்று சொல்ல ,

“என்ன கற்றுக் கொள்வாளோ? இத்தனை நாளில் தெரிந்து இருக்க வேண்டாமா? இன்னமும் நானே சொல்ல வேண்டியிருக்கிறது…” என்று குறைபட , 

சங்கரன் விஸ்வாவைப் பார்க்க , அங்கே எதுவுமே நடக்காதது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்  . 

மேலும் தான் பேசினால் சந்தியா காயப்படுவாள் என்பதை உணர்ந்து சங்கரன் அமைதியானார் .

தனிமையில் இருக்கும் போது , “நான் செய்யும் முன்பே  , முந்திக்கொண்டு அத்தை சொல்லி விடுகிறார்கள் , அப்புறம் என்னைக் குறை சொல்கிறார்கள்….” என்று சந்தியா வருத்தப்பட ,

“இதையெல்லாம் பெரிதாக நினைக்காதே சந்தியா , என் மீது உள்ள அக்கறையில் தான் இப்படிப் பேசுகிறார்கள்…” என்று விஸ்வா  என்று சமாதானப்படுத்தினான் .

நாட்கள் ஓட , சந்தியா ஆசையாக, “எதையாவது மாற்றலாமா?” என்று கேட்டால் , அது மறுக்கப்பட்டது .

 அவள் குணத்திற்கு ராஜியிடம் இவ்வளவு பேசியதே பெரிய விசயம் . அதனால் போராடவெல்லாம் தோன்றாமல் ஒரு கட்டத்திற்குப் பின் சந்தியா கேட்பதையே  நிறுத்திக் கொண்டாள்.

வீட்டின் சக்கரம் ராஜியின் விருப்பப்படியே சுழன்றது .

  புதுப்புது அர்த்தங்கள்….  நாள்-12(2)

அத்தியாயம் 34

ரஞ்சனி…..

அனு- விஷால் ரொமான்ஸ் , ஹரிணியின் வம்பு என்று ரஞ்சனிக்கு அலுவலகம் நன்றாகவே சென்றது  . வேலையும் பிடித்தே இருந்தது .

முதலில் கொஞ்ச நாள் பெரியம்மா வீட்டில் இருந்து வந்த  ரஞ்சனி  , பின் அலுவலகத்திற்கு அருகிலேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டாள் . 

சமையல் செய்ய , கூடவே தங்கி இருந்து உதவி செய்ய என்று ஊரில் இருந்து சரோஜாஅம்மாவையும் அனுப்பி இருந்தார். கோகிலா. 

பின் கொஞ்ச நாட்கள் கூட இருந்து எல்லாம் சரி செய்து கொடுத்து விட்டு , சரோஜா மற்றும் ரஞ்சனியிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிக் கிளம்பினார் .  

தன் வசதிக்காகப் பிரத்தியேகமாகச் சில மாற்றங்கள் செய்து ராகவ் தந்த காரையும் ரஞ்சனி எடுத்து வந்துவிட்டாள் . முதலில் வண்டியை பார்த்து ஆச்சரியபட்டவர்கள் , ‘இவளுக்கு இந்த வசதிகள் தேவைதான்’ என்றும் உணர்ந்து கொண்டார்கள் . மேலும் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றும் புரிந்து கொண்டார்கள் .

 ரஞ்சனியிடம் அதற்கான பந்தா இல்லாததால் , அது அவர்களுக்குப் பெரிய விசயமாகத் தெரியவில்லை . நல்ல நட்புணர்வுடனே இருந்தார்கள் . 

மெல்ல மெல்ல மற்ற ஊழியர்களுடனும் பழகத் தொடங்கினாள் .

ரஞ்சனி தைரியமானப் பெண் என்றாலும் அலுவலகத்திற்குச் சிறு தயக்கத்தோடும் பயத்தோடும்  தான் வந்திருந்தாள் , சிறுசிறு குறைபாடுகள்  தவிர பெரும்பாலும் அனைவரும்  புரிந்தே நடந்து கொண்டார்கள் . 

ரஞ்சனியும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்ய , எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது .

 மொத்தத்தில் அலுவலகம் அவளுக்கு இழந்த தன்னம்பிக்கையையும் , சுதந்திர உணர்வையும் மீட்டுக் கொடுத்தது .

 ரஞ்சனி அனுவிடம் தான் ரிப்போர்ட் செய்ய வேண்டும் . அதனால் முதல் நாளுக்குப் பிறகு ரகுநந்தனை நேரிடையாகச் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை . சிலமுறை கடந்து செல்லும் போது மட்டும் ‘ஹாய்.. , ஹலோ…’ என்று பேசிக் கொண்டார்கள் . பல நேரம் சின்னச் சிரிப்போடு கடந்தார்கள் .

ஒரு மாதத்தில் ராமநாதனும் , ராகவ்வும் மாறி மாறி வந்து ரஞ்சனியைப் பார்த்து விட்டுச் சென்றார்கள் . ரஞ்சனி மூலம் விசயங்களை அறிந்து திருப்தி அடைந்தார்கள் .

 ரஞ்சனி முகத்தில் இருந்த தெளிவும் சந்தோஷமும் அவர்களுக்கு நிம்மதியைத் தர , நல்ல அலுவலகம் அமைந்ததில் சந்தோஷமானார்கள் .

அன்று ஹரிணி உடம்பு சரியில்லை என்று விடுப்பு எடுத்திருக்க ,  திருமணம்  வரவேற்பு என அனுவும் விஷாலும் அரை நாள் விடுப்பு எடுத்து முன்னமே சென்றிருக்க , அவர்கள் வேலையையும் ரஞ்சனி செய்யும் படியானது . 

மாலை அரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும் படியாக அமைய , மெதுவாக வேலையை முடித்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள் .

ரகுவிற்குத் தன் கல்லூரித் தோழன் திருமணத்திற்குச் செல்ல வேண்டியதிருக்க ,  ஃபைல்களை அள்ளிக் கொண்டு கார் பார்க்கிங்கிற்கு விரைந்தான் . பார்க்கிங் வந்த பின் தான் கார் சாவியை மறந்தது நினைவிற்கு வர , மீண்டும் ஆபிஸ் நோக்கிக் கிட்டத்தட்ட ஓட ,

அப்போது வேலையை முடித்து விட்டு மெதுவாக ரஞ்சனி  படிகளைக் கடந்து கொண்டிருக்க , 

எதிரே வந்த  ரகு  , அவள் மீது மோத , ரஞ்சனி தடுமாறிக் கீழே விழப் போக , கடைசி நேரத்தில் ரகு, அவளைப் பிடித்து நிறுத்தினான் .

தன் இயலாமையை நினைத்து ரஞ்சனியின் கண்கள் சட்டென்று கலங்க , அதைப் பார்த்து ரகு தடுமாறிப் போனான் . 

“ஸாரி.. ஸாரி….  கார் சாவியை மறந்து விட்டேன் ,  எடுக்க வந்தேன் , நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை….” என்று படபடத்தான் .

ரஞ்சனியும் கண்களைத் துடைத்தபடி , “பரவாயில்லை , தெரியாமல் தானே நடந்தது , விடுங்கள்….” என்று சொல்ல,

 ரகு,  சாவியை எடுகாகநகர்ந்தான் . மேலும், ‘லேசாகத் தானே இடித்தோம்’ என்று யோசித்தபடி  சிறிது தூரம் உள்ளே சென்றவன் , ஏதோ உறுத்த திரும்பிப் பார்க்க , 

ரஞ்சனி மெதுவாகக் காலைத் தூக்கி வைத்துப் படிகளைக் கடந்து கொண்டிருந்தாள் . பளிச்சென்று உண்மை புரிய அதிர்ந்தான் . 

அறைக்கு சென்றவனுக்குச் சிறிது நேரம் ஒன்றுமே ஓடவில்லை . அப்படியே இருக்கையில் அமர்ந்திருந்தான் .

 ரஞ்சனி, திருமண மண்டபத்தில் அங்கே இங்கே  துள்ளிக் குதித்து வேலை பார்த்தது படம் போல் கண் முன்னே ஓடியது . உடனே சாவியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தான் .

அத்தியாயம் 35

“அப்பா , அப்பா….” என்று கத்திக்கொண்டே ரகு நுழைய , உணவு மேஜையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சுவாமிநாதனும் , சுந்தரியும் திகைத்தனர் .

“என்னடா….? என்னாச்சு…? “என்று சுவாமிநாதன் படபடக்க ,

“ரஞ்சனிக்கு என்னாச்சு அப்பா? “

இவர் புரியாமல் விழிக்க , 

சுந்தரி தண்ணீர் குவளையை அவன் புறம் நீட்ட , “அம்மா…” என்று சிணுங்கினான் .

முதலில், ‘உட்கார்ந்து குடி’ என்று சைகை செய்ய , அவன் அமர்ந்தான் . அவன் குடித்தபின் , “இப்போது பேசு….” என்று சைகையில் சொல்ல ,

“ரஞ்சனிக்கு என்னாச்சு அப்பா? “என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான் .

“அவளுக்குக் கால் போனதைப் பற்றி கேட்கிறாயா?”

“ஆமாம் அப்பா .எனக்கு இன்று தான் தெரிந்தது , எப்படி அப்பா நடந்தது?” 

“எப்படிடா  ? இத்தனை நாள் கவனிக்காமல் விட்டாய்?”

“அவளும் நானும் சந்திக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு . ஒன்று இரண்டு முறை அவள் நடையில் இருந்த வித்தியாசத்தைக் கவனித்திருக்கிறேன் . ஆனால் பெரிதாக யோசிக்கவில்லை .  நீங்கள் ஏன் சொல்ல வில்லை அப்பா?”

“கட்டாயம் சொல்ல வேண்டிய விசயமாகத் தோன்றவில்லை .  நமக்கு அவளது திறமை தானே முக்கியம்  .”

“சரிதான் அப்பா . ஆனால்…… இவளுக்கு எப்படி இப்படி ஆனது ?”

“அது ஒரு பெரிய கதை…. “ என்று சுவாமிநாதன் நடந்ததை சொல்ல, 

ரகு அதிர்ந்து போனான் .

அப்போது சுந்தரி , “அந்தப் பெண் பாவம் டா , ஏற்கனவே காலை இழந்து விட்டோம் என்பதே பெரிய அடி , அதிலும் திருமணமும் நின்று விட்டால் …  பெரிய சோகம்டா…” இவை அனைத்தும் சைகை மொழியில் தான் .( இனி சுந்தரி பேசினால் சைகை மொழிதான் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் )

“அவள் குடும்பம் தான் அவளுக்கு அனுசரனையாக இருந்து , அவளை இந்தத் துன்பத்தில் இருந்து மீட்டிருக்கிறது…” என்றார் சுவாமிநாதன்.,  

நண்பனின் தம்பியைக் காது கேளாதோர் பள்ளியில் கூட்டிவரச் சென்ற பொழுது , அங்கு ஆசிரியராகப் பணியாற்றிய சுந்தரியைச் சந்தித்தார் சுவாமிநாதன் .

சுந்தரி ஏதோ ஒரு விதத்தில் அவரைக் கவர, சுந்தரியை கவனிக்க ஆரம்பித்தார் .

அவருடைய குறையைப் பொருட்டுப்படுத்தாத பாங்கு,  தைரியம் , தன்னம்பிக்கை , நிமிர்வு , வேலையில் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பும் கவர, சுந்தரியை விரும்பத் தொடங்கினார்

தன் விருப்பத்தை , தன் வீட்டில் அனைவரிடமும் பேசி , அவர்கள் சம்மதத்தைப் பெற்ற பின் தான் , சுந்தரியிடம் தெரிவித்தார் . 

முதலில் சுந்தரி மறுக்க , பெரும் போராட்டத்திற்குப் பின் , சுந்தரி மற்றும் அவர் குடும்பத்தினரிடம் சம்மதத்தைப் பெற்று திருமணம் செய்திருந்தார் . இன்று இருவரும் மனம் ஒத்த தம்பதிகள் .

சிறுவயதில் பிள்ளைகள் ஒருமுறை சுவாமிநாதனிடம் , “எப்படி அப்பா ?”

அவர் சிரித்தபடி , “பார்த்தவுடனே பிடிச்சு போச்சு . இவ தான் என்று என் மனசு அடித்துச் சொன்னது ,  பட்டாம்பூச்சி பறந்தது….” என்று கண் சிமிட்டினார் .

“அப்புறம்…..?” என்று பிள்ளைகள் ஆர்வமாகக் கேட்க

 “அப்புறம் என்ன? இவள் குறை எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை…” என்று கண்ணில் காதல் வழிய சுந்தரியை அணைத்துக் கொள்ள , 

பிள்ளைகளும், “ஓ….!” வென்று கத்தியபடி வந்து கட்டிக் கொண்டனர்.

ரகு அதே கண்ணோட்டத்தில் , “ஏன் அம்மா?  நீங்களே ஒரு கால் போனதைப் பெரிய குறையாகக் கூறுகிறீர்கள்…” என்று  விளக்கம் கேட்க ,

“நீ என்ன கேட்க வருகிறாய்? என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது ரகு, நான் என்றுமே என் குறைபாட்டைப் பெரிதாக நினைத்தது கிடையாது .  மேலும் இது எனக்கு பிறவிக் குறைபாடு . எதையும் அனுபவித்து பாதியில் இழக்கவில்லை. “

“ஆனால் ரஞ்சனிக்கு….” என்று நிறுத்தியவர் , “இளமையில் இது கொடுமை ரகு . மேலும் திருமணம் நின்றதெல்லாம் கொடுமையோ கொடுமை….” என்று வருத்தப்பட்டார் .

ரகுவிற்கும் அம்மா சொல்ல வருவது தெளிவாகப் புரிய , “நீங்கள் சொல்வது சரி தான் அம்மா” என்று ஆமோதித்தான் . 

இடைபுகுந்த சுவாமிநாதன் , “ரஞ்சனியும் உன்னைப் போல் தைரியமான பெண் தான் ,  இன்று அத்தனையையும் கடந்து ஜெயித்திருக்கிறாளே….” என்று சிலாகித்தார் .

ரகு ரஞ்சனியை மனதிற்குள் மெச்சினான் . பின் வரவேற்பிற்கு நேரமானதை உணர்ந்து , தயாராக உள்ளே சென்றான் . பின் மூவரும் கிளம்பினர் .

தொடரும்…..