அடுத்து மூவரும் ரேவதியைக் காணச் சென்றார்கள். நடந்த விஷயத்தைக் கேட்டு அவருக்கும் அதிர்ச்சி தான். “டேய் குட்டா அந்த பொண்ணு உன் மேல பாசமா இருக்குறது எல்லாம் சரி தான். உனக்காக உயிரையே கொடுக்க முன் வந்திருக்குறது எல்லாம் பெரிய விஷயம் தான். ஆனா இப்படி சின்ன பிள்ளை தனமா நடந்துக்குறா. அவ தான் வேணுமா? நல்லா யோசிச்சு முடிவு எடு. நாளைக்கு என் கிட்ட கண்ணை கசக்கிட்டு வந்துராத”, என்று ரேவதி சொல்ல மூவருக்கும் சிரிப்பு தான் வந்தது. 

அவர்கள் மருத்துவமனை சென்ற போது அனைவரும் சாதாரணமாக தான் இருந்தார்கள். வெண்ணிலாவின் வயிற்றைச் சுத்தப்படுத்தி அவளுக்கு டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.  

உள்ளே சென்ற வருண் சோர்ந்து படுத்திருந்த வெண்ணிலாவின் கையை இறுக பற்ற அதில் கண் விழித்துப் பார்த்தவளின் கண்கள் அவனைக் கண்டதும் கலங்கிப் போனது. 

“திருப்பி திருப்பி தப்பு பண்ணுற நிலா”, என்றான் அதட்டலாக. அவள் கண்கள் மேலும் கலங்கியது “சாரி, எனக்கு நீங்க இல்லாத உலகத்தை நினைச்சு பாக்க முடியலை வருண்”, என்று முணுமுணுத்தாள். 

என்ன தான் அவள் தவறு செய்திருந்தாலும் இப்படி ஒரு பெண்ணின் அன்பை அவன் எப்படி நிராகரிப்பதாம்? அவனும் அல்லவா அவள் மீது உயிரையே வைத்திருந்தான். நேற்று அன்னைக்காக சரி என்று சொல்லி இருந்தாலும் யாழியை எல்லாம் அவன் திருமணம் செய்திருக்க மாட்டான். வெண்ணிலாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவே அவன் சம்மதம் சொன்னது. ஆனால் இப்போது அவள் தான் அவனுக்கு அதிர்ச்சி கொடுத்தாள். 

“இனி உன்னை விட்டு எங்யும் போக மாட்டேன் நிலா பேபி. சீக்கிரம் எந்திச்சு வா. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

“யாழி”, என்று குழப்பமாக கேட்டாள். 

“அவ உன்னை விட வித்தியாசமா இருக்கா டி. அதிபன் அண்ணா மன்னிக்கச் சொன்னாங்களாம். உடனே உன்னை மன்னிச்சிட்டாளாம். உனக்கே என்னை விட்டுக் கொடுத்துட்டா”, என்று சொல்ல வெண்ணிலா உண்மையாகவே நெகிழ்ந்து போனாள். யாழியை எண்ணி மட்டும் இல்லை அதிபனை எண்ணி கூட அவள் மனம் குற்ற உணர்ச்சியில் சுருங்கியது. 

அனைவரும் அவளை வந்து பார்த்து விட்டுச் செல்ல யாழியும் அதிபனும் மட்டும் அவளை பார்க்க கூட செய்யாமல் ஊர் சுத்த கிளம்பி விட்டார்கள். அவர்களை யாரும் தடுக்கவும் செய்ய வில்லை. 

செழியனும் புவனாவும் வீட்டுக்கு கிளம்பினார்கள். வேணுகோபாலனிடம் மட்டும் “போய்ட்டு வறோம் அப்பா”, என்றார் செழியன்.

“சரி டா”, என்றவர் “பாத்து போங்க”, என்றார். செழியன் தண்டாயுதபாணி புறம் திரும்பக் கூட இல்லை. அப்படி ஒருவர் அங்கே இருக்கிறார் என்று கூட கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். 

அன்று மாலையே வெண்ணிலாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். அவர்களுடன் வந்த ரேவதி “பேசிய படியே கல்யாணம் வச்சிக்கலாம் முந்தின நாள் நிச்சயம் வச்சிக்கலாம்”, என்று சொல்லி முடிவு செய்து விட்டே சென்றார். 

அதே நேரம் பீச்சில் கால் நீட்டி அமர்ந்திருந்தான் அதிபன், அவன் அருகே கடலையே வெறித்த படி அமர்ந்திருந்தாள் யாழி. 

“என்னை மன்னிச்சிரு பாப்பு, உன் பர்த்டேக்கு  கூட விஷ் பண்ண முடியலை. அன்னைக்கு நான் நானாவே இல்லை டி”, என்றான். 

“எனக்கு புரியுது மாமா. அதான் முன்னாடியே கிப்ட் கொடுத்துட்டியே?”, என்று கேட்டவள் முகம் ஏதோ யோசனையை காட்டியது. 

“ம்ம், என்ன பாப்பு ஒரு மாதிரி இருக்க?”

“இனி நம்ம வீட்டுக்கு வரவே மாட்டியா மாமா?”

“அங்க வரத் தோணலை பாப்பு, புரிஞ்சிக்கோ”

“அப்ப நம்ம இனி எப்பவுமே முன்னாடி மாதிரி ஒண்ணாவே இருக்க முடியாதா?”

“ஏன் இருக்க முடியாது? நம்ம வீட்டுக்கு வந்துரு, அங்க ஜாலியா இருப்போம்”, என்றான் அவன். அவன் சொல்வது சாத்தியம் இல்லை என்று புரிந்தவள் மேலும் வாதாடாமல் “கேரியர் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க? அடுத்து என்ன பண்ண போற மாமா?”, என்றாள். 

“நாளைக்கு பிரண்ட் கம்பெனிக்கு வேலைக்கு போக போறேன் டா பாப்பு”

“வீட்டுக்கு தான் வர மாட்டேனு சொல்லிட்ட, ஆபீஸ்க்காவது வரலாம்ல?”

“அதெல்லாம் உங்க சின்ன மாமா பாத்துக்குவார். எங்களுக்கு வேண்டாம் பாப்பு. சில விஷயம் வெறுத்து கசந்து போச்சு டா”

“அவருக்கு பெரிய மாமா கொடுத்த அடி எல்லாம் பத்தவே பத்தாது டா. எனக்கே செம கோபம் வருது மாமா”

“என்னது? எங்க அப்பா அவரை அடிச்சாங்களா?”, என்று அதிர்ந்து கேட்டான். அவனுக்கு இந்த விஷயம் தெரியாதே. 

“உனக்கு தெரியாதா?”, என்றவள் அந்த கதையை விளக்க “என் மனசுல உள்ள பாரமே போன மாதிரி இருக்கு டி பட்டுக்குட்டி. என் அப்பானா அப்பா தான்”, என்று பூரித்து போனான். 

தனக்காக கூட பிறந்த தம்பியை அடிக்கும் தந்தையை எந்த மகனுக்கு தான் பிடிக்காது. 

“சரி நீ எப்ப கிளம்ப போற? உன் அக்கா கல்யாணம் முடிஞ்ச பிறகா?”

“எவளுக்கு கல்யாணம் முடிஞ்சா எனக்கு என்ன? நான் நாளைக்கே கூட கிளம்ப தயார் தான். ஆனா போகனுமான்னு இருக்கு”

“என்ன டி? படிப்பை முடிக்க வேண்டாமா? இன்னும் எட்டு மாசம் இருக்கு. அதுவும் அடுத்த வாரம் இந்த செமஸ்டர் பரீட்சை வேற இருக்கு”

“ஒரு தடவை உன்னை விட்டுட்டு போனதுக்கே இப்படி இருக்க? மறுபடி எல்லாம் நான் மாட்டேன் பா”

“அப்ப உன் படிப்பு என்ன ஆகுறது?”

“அது போனா போகுது போ”

“பிச்சுருவேன் பிச்சு. ஒழுங்கா போய் படிப்பை முடிக்கிற வழியைப் பாரு பாப்பு”

“அப்படின்னா நீ என் கூட வாயேன் அங்க”

“என்ன டி சொல்ற?”

“பிளீஸ் மாமா, நீ வாயேன். நம்ம இந்த இம்சை பிடிச்சவங்க கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கலாம். பிளீஸ் மாமா. நீ என் கூட இருந்தா நானும் நிம்மதியா இருப்பேன். அத்தை மாமா கிட்ட நான் பேசுறேன் டா. பிளீஸ் மாமா பிளீஸ். அங்க வந்து வேலை பாத்துக்கோ”

“அங்க வந்து என்ன டி செய்ய?”

“இங்க பாக்க போற வேலையை அங்க வந்து பாரு. உடனே உனக்கு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு, பிளீஸ் மாமா”, என்று சொன்னவள் அவன் தலையசைத்ததும் உடனே செழியன் மற்றும் புவனாவிடம் அனுமதி வாங்கி விட்டாள். அவனுக்குமே ஒரு மாற்றம் வேண்டும் போல இருந்தது. கூடவே அவனது பாப்புவுடன் இருக்க அவனுக்கு கசக்குமா என்ன?

மகன் அவனது நண்பன் கம்பெனியில் பணி புரிய விருப்பம் இல்லாத செழியன் மகனுக்கு புது வித சூழல் புது விதமாக இருக்கும் என்று எண்ணி அனுமதி கொடுத்தார். புவனாவுக்கோ தன்னை விட தன் மகனை யாழி நன்றாக பார்த்துக் கொள்வாள் என்ற நிம்மதி. அதனால் சரி என்று சொல்லி விட்டார். அடுத்த இரண்டு நாளில் வீட்டில் உள்ள அனைவரும் “வந்ததுக்கு இரண்டு நாள் இருந்துட்டு போ”, என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவனை அழைத்துக் கொண்டு சென்றே விட்டாள். 

போன முறை சென்றது போல எல்லாம் இல்லாமல் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவளுக்கு அந்த பயணம். ஏனோ அவர்களுக்கான புதிய அத்தியாயம் ஆரம்பமானது போல ஒரு உணர்வு எழுந்தது. உண்மையிலே இனி அவர்களுக்கு புதிய அத்தியாயம் தான், இது வரை அன்பு அக்கறை நேசம் என்ற உணர்வுகள் மட்டும் அவர்களை ஆட்டி படைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இனி வரும் தனிமை, காதல், பொறாமை, கோபம், காமம் போன்ற உணர்வுகளும் அவர்களைச் சுற்றி வலை பின்ன காத்திருந்தது. 

“இது தான் நம்ம வீடு மாமா, எப்படி இருக்கு?”, என்று கேட்டாள் யாழி. அந்த இரண்டு படுக்கை அறை வீட்டை சுற்றி பார்த்தவன் “நல்ல வீடா ஏற்பாடு பண்ண பிரண்ட் கிட்ட சொன்னாலும் எப்படி இருக்குமோன்னு கவலையா தான் இருந்தது. ஆனா இப்ப நிம்மதியா இருக்கு டி”, என்றான் அதிபன். 

“ஒரு வருஷத்துக்கு அப்புறம் நிம்மதி வந்துருக்கா? சரி குளிச்சிட்டு வரியா? வெளிய சாப்பிட்டு வரலாம். வீட்ல ஒண்ணும் இருக்காது. அப்படியே தேவையானது வாங்கிட்டு வரலாம்”

“சரி பாப்பு”

“ஓகே நீ அந்த ரூமை எடுத்துக்கோ. நீட்டா தான் இருக்கும்” என்று சொன்னதும் தனக்கான அறைக்குள் புகுந்து கொண்டான். 

தொடரும்….