புதுப்புது அர்த்தங்கள்….  நாள்-10

அத்தியாயம் 29

ரஞ்சனி வீட்டுக்குச் சென்ற பின் , மருத்துவர் அறிவுறுத்திய  அனைத்தையும் தவறாது கடைபிடித்தாள் . 

அஞ்சலி வலியால் சோர்வாகும்  போது, அவளை ஊக்கப்படுத்தினர் . 

ஓடி ஆடி விளையாடிய மகள் , கட்டை உதவியோடு வலம் வருவதைக் கண்டு நொந்தனர் . கண்ணீர் விட்டனர். ஆயினும் அவள் முன் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டனர்.

அவள் தனிமை உணராமல் இருக்க , வருத்தத்தில் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல் இருக்க , யாரவது ஒருவர் மாறிமாறி அவள் கூடவே இருந்தார்கள் . 

கோகிலா  சமையலுக்கு மெனு கேட்பது , ராமநாதன் கடையில் நடக்கும் நிகழ்வுகளை அவளுடன் பகிர்வது , அனைவரும் சேர்ந்து சினிமா , நாடகம் பார்ப்பது என்று அனைத்தையும் அவளோடு இணைந்து செய்தனர் . 

இதற்கிடையில் அவள் தோழிகள் அடிக்கடி வந்து பார்த்தனர் . வரும் வேளையில் சீட்டு , கேரம் , லூடோ என்று ஏதாவது  விளையாடி, அவளைத் தனிமை உணராது பார்த்து கொண்டனர் . 

ராகவ்  மோட்டிவேஷனால் பேச்சுகள், மீண்டு வந்தவர்களின் கதைகளை அவளிடம் பேசினான் . நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தான். 

ஆக மொத்தம், ரஞ்சனி சுயபச்சாதாப்பத்தில் , சுய இரக்கத்தில் ஆட்படாமல் பார்த்துக் கொண்டனர் .

ரஞ்சனி தன் குடும்பத்தினர் தனக்காகச். செய்யும் அனைத்து முயற்சிகளையும் கவனித்தே இருந்தாள் . 

‘இவர்களுக்காகவாவது தான் சீக்கிரம் சரியாகி ,  நார்மல்   வாழ்க்கைக்குப் போக வேண்டும்’ என்ற முனைப்போடு  செயல்பட்டாள் . 

இயல்பிலே தைரியமான , பக்குவமான பெண் என்பதால் சுணங்கிப் போகாமல்  இலக்கை  நோக்கிப் பயணப்பட்டாள் .

மூன்று மாதங்களுக்குப் பிறகு, செயற்கைக் கால் பொருத்தும் வேளையில் ஈடுபட்டனர் . மருத்துவர்கள் உதவியோடு அவளுக்குப் பொருத்தமான காலைத் தேர்ந்தெடுத்தனர் . 

மீண்டும் அனைவரும் சென்னையில் சர்வீஸ் அபார்ட்மெண்ட் எடுத்துத் தங்கி , செயற்கை காலுக்கான பயிற்சியில் ஈடுபட்டனர் .

ரஞ்சனி அதில் நடை பழக மிகவும் சிரமப்பட்டாள் . முதலில் ஒரு நாளைக்குச் சில மணிநேரம் என்று ஆரம்பித்தார்கள் , இடையில் செயற்கைக் காலின் அழுத்தத்தால் காயம் ஏற்பட்டு அவதியும் பட்டாள் . 

மெதுவாக  நம்பிக்கை வர ,   இப்போது தான்  அதிக நேரம் போடுவதற்குப் பழகியிருந்தாள் . இப்போது தான் நன்றாக நடக்கத்  தொடங்கியிருந்தாள் . இப்போதைக்கு செயற்கைக் காலோடு வீட்டில் மட்டும் நடந்து பழகிக் கொண்டிருந்தாள் . 

இப்படியாக ஆறு மாதங்கள் கடக்க , ஒரு சந்தோஷச் செய்தி அவர்களை வந்தடைந்தது . அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ரஞ்சனி , நல்ல மதிப்பெண்களைப் பெற்று , முதல் முயற்சியிலே வெற்றிக் கனியைப் பறித்திருந்தாள் .  அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் .  

வேலைக்குப் போவதைப் பற்றி பேச்சு வர , “இரண்டு மாதங்கள் போகட்டும் அப்பா , இந்தக் கால்களோடு முதலில் வெளியே  போய்ப் பழகிக் கொள்கிறேன் . அப்புறம் அப்ளை செய்கிறேன்” 

அவளுக்குத்  தன்னம்பிக்கை ஊட்டும் படியாக , அவளுக்கென பிரத்தியேக ஏற்பாடுகள் செய்த , வண்டியை வாங்கினர் . அவளே அந்தக் காரை  ஓட்டிக்கொண்டு கடைக்கு வர ஆரம்பித்தாள் . அவளுக்குச் சில பொறுப்புகளைக் கொடுத்து அவளை வேலையில் மடை மாற்றினர் . ரஞ்சனியும் உற்சாகமாகப் பங்கு கொண்டாள் .

இப்படியாக ஒரு மூன்று மாதம்  போக , ரஞ்சனி மனதளவில் நன்றாகத் தேறிவிட்டாள் .  

செயற்கைக் கால்களோடு நன்றாக நடக்கவும் பழகிவிட்டாள் . 

‘இனி வெளியே வேலை தேடலாம்’ என்று முடிவெடுத்து , அறிவித்தாள் . இதற்குள் இப்படி அப்படி என்று ஒருவருடம் ஓடியிருந்தது .

அத்தியாயம் 30

ராஜி திருமணம் விசயத்தை ஆறு மாதம் ஆற போட்டு விட்டு , இப்போது தான் மீண்டும் பெண் தேடும் படலத்தைத் தொடங்கியிருந்தார் . 

விஸ்வாவும் புதுக் கடை வேலையில் பிஸியானான் . சங்கரனும் அதற்குப் பிறகு இந்த விசயத்தை வீட்டில் பேசவே இல்லை . 

தோழி கஸ்தூரி மூலம் தூத்துக்குடியில் லாஜிஸ்டிக் வியாபாரம் பார்க்கும் முத்துராமன் – அம்பிகா தம்பதிகளின் மூத்த மகள்   சந்தியா வரன் வர , 

ராஜி ஆசைப்பட்ட மாதிரி ஸ்டேட்ஸ் இருக்க , சந்தியாவும் கண்ணுக்கு லட்சணமாக இருந்தாள் , M.A முடித்து இருந்தாள் . 

அவர்கள் வீட்டில் வேலைக்கு அனுப்பப் பிரியப்படவில்லை என்றும் தெரிந்தது . கொஞ்சம் பழைய வழக்கங்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் என்றும் புரிந்தது . ‘இதுவும் வசதிதான் , பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடப்பாள்’ என்று நினைத்தார் . அனைத்தும் ஒத்து வர , இந்தச் சம்மந்தத்தை முடிப்பதில் மும்முரமானார் .

முத்துராமன் தொழிலில் கெட்டி , ஆனால் கொஞ்சம் அடாவடிப் பேர்வழி .  பதவிசான ஆள் கிடையாது . முன்கோபக்காரர் . அம்பிகா இயல்பிலே அமைதியான பெண் , புருஷன் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பார் . சுயசிந்தனை என்பதை மறந்தே போனவர் . அடுக்களை தான் அவர் உலகம் . 

சந்தியாவின் சித்தப்பா , அத்தை என்று எல்லோரும்  அருகிலே இருக்க , இவர்கள் வீட்டில் ரகசியம் என்பது கிடையவே கிடையாது . அனைத்து விசயங்களும் உடனுக்குடன் ஒளிபரப்பாகிவிடும் . பின் காது கிழியும் படியாக அர்ச்சனைகளும் , அறிவுரைகளும் நடக்கும் . அதனால் அம்பிகாவின்  அதிகபட்ச ஆசை என்பது அன்றைய நாளை புருஷன் , நாத்தனாரிடம் பேச்சு வாங்காமல் கடத்துவது தான் . 

சந்தியா அம்மாவைப் போலவே அமைதியானவள் . மேலும்  குடும்பச் சூழ்நிலை அவளை ஒடுக்கியும் விட்டது .  எதையும் வெளிப்படுத்த மாட்டாள் . எந்தக் கஷ்டம் என்றாலும் மனதில் போட்டுப் புழுங்குவாள் .

சின்னக் குட்டி விந்தியாவாவது அப்பாவிடம் பேச முடியாவிட்டாலும் அம்மாவிடமாவது சண்டை போடுவாள் . தன்னை வெளிபடுத்துவாள் . மேலும் அவளுக்கு நண்பர்கள் வட்டமும் ஜாஸ்தி . அதனால் கொஞ்சம் தைரியமாகவும் எதார்த்தமாகவும் இருப்பாள் . 

 விந்தியா தான் பல நேரம் , சந்தியாவின் வாயைக் கிளரி அவள் எண்ணத்தைக் கண்டறிய முயல்வாள் . சில நேரம் அக்காவிற்கு அறிவுரைகளையும் சமாதானங்களையும் போட்டுத் தாக்குவாள்.

ஒரு சுபயோக தினத்தில் பெண் பார்க்கும் படலம் நடைபெற்று , பேச்சுவார்த்தை ஒத்து வந்து , இரண்டு மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது .

சந்தியாவும் அழகாகத்தான் இருந்தாள் . ஆனாலும் ஏதோ ஒன்று குறைவதாக  விஸ்வாவிற்கு தோன்றியது . பின் எதையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்று அவனே தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான் .

விஸ்வா முதலில் சந்தியாவுடன் அதிகம் பேசாமல் தான் இருந்தான் . பின் மெல்ல மெல்லத் தயக்கங்கள் கடந்து , இயல்பானான் . 

நேரில் சந்திக்காவிட்டாலும் , நிறைய நேரம் போனில் கதை பேசினர் . சின்னச் சின்னப் பரிசுகளை  வாங்கி அனுப்பினான் .

திருமணத்திற்கு முன்பான காலங்கள் அழகாகவே சென்றது . விஸ்வா தன்  தந்தையை  போல் அதிகாரம் செய்யாமல் இயல்பாகத் தன்மையாகப் பேசுவது சந்தியாவிற்கு மிகவும் பிடித்தது . மனம் கொள்ளா மகிழ்ச்சியில் இருந்தாள் .

 ‘நிறைய சினிமாவில் காண்பிக்கும் ரொமாண்டிக் காட்சிகள் போல் தன் வாழ்க்கை அமைய போகிறது’ என்ற கற்பனையில் மிதந்தாள் . மிகுந்த நம்பிக்கையோடு திருமணத்தை எதிர் நோக்கி இருந்தாள்.

திருமணம் நெருங்க , தந்தை என்ற கடமையை மட்டும் சங்கரன் ஆற்றினார் .  பெரிதாக எதிலும் கலந்து கொள்ளவில்லை . ராஜியும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை .

விஸ்வா மட்டும் தயங்கியபடி , “என் மீது கோபமா அப்பா?”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை விஸ்வா.”

“பின் ஏன் அப்பா நீங்கள் இந்தத் திருமணத்தில் பட்டும்படாமல் இருக்கிறீர்கள்?”

“அப்படியெல்லாம் இல்லையே ….” என்று மறுக்க ,

“இல்லை அப்பா , நான் பார்த்திருக்கிறேன் . நீங்கள் ரஞ்சனி குடும்பத்தோடு நன்றாக இணக்கமாக இருந்தீர்கள்.…” என்று குறைபட ,

“நீ தேவையில்லாமல் யோசித்துக் குழம்பிக் கொள்கிறாய் . எனக்கு அவர்களோடு  நன்றாக ஒத்துப் போனது . அதனால் உடனே இணக்கமாகி விட்டேன் . இவர்கள் அலைவரிசை வேறு மாதிரி இருக்கிறது. அதனால் கொஞ்ச நாளாகும் விஸ்வா .”

“நம்முடைய முடிவுகளில்  கூட கலந்து கொள்ளாமல் இருக்கிறீர்களே….”  என்று வருத்தப்பட ,

“ஒருவர் எடுத்துச் செய்யும் போது நடுவே புகுந்து குட்டையைக் குழப்ப வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன் .”

“இல்லை அப்பா..” என்று மறுப்பாகப் பேச வர .

“ஒரு நிமிடம்… அந்தத் திருமணமாக இருந்தாலும் இப்படித் தான் இருந்திருப்பேன் விஸ்வா . ராஜிக்குத் தானே செய்தால் தான் திருப்தி , சந்தோஷம், அதனால் தான் தள்ளி நிற்கிறேன் . மேலும் ராஜி உனக்குப் பெஸ்டாகத் தான் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது…” என்று புன்னகைத்தார். 

பின், “எனக்கு ஒரே ஓரு விசயம் தான் விஸ்வா , உன்னை நம்பி வரும் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் . அதைச் செய்வாய் தானே…?” என்று கேட்க ,

“நிச்சயமாக அப்பா” 

தூத்துக்குடியே அதிரும்படி திருமணம் நடந்தது . சென்னையில் அவர்கள் நட்புவட்டம் மற்றும் தொழில்துறை நண்பர்களுக்காகப் பெரிய வரவேற்பும் வைத்தனர் . 

தொடரும்…..