தன்னுடைய பதில் ராகவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை உர்ரென்ற அவன் முகமே தணிகாசலத்திற்கு சொல்ல, அதைக் கண்டு கொள்ளாமல் நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தார் தணிகாசலம்.

“மலர்விழி உங்ககூட சென்னைக்கு வந்ததும் நாங்களும் மதுரைக்கு போயிட்டோம். போயிட்டோம்னு சொல்லுறதைவிட மாயன் போகவச்சிட்டான்னு தான் சொல்லணும். அவ்வளவு தொந்தரவு, நாங்க தான் மலர்விழியை மறைச்சு வச்சிருக்கோம்னு.”

“இருக்குறது வாடகை வீடு. சொத்துன்னு இருந்தது ஒரு ஆட்டோ மட்டும் தான். மதுரைல உள்ள காலேஜ்ல சுந்தருக்கு இன்ஜினியரிங் சீட் கிடைக்கவும், ஆட்டோவை எங்க ஓட்டுனா என்ன ங்குற எண்ணத்துல, அதை வித்து காசை கையில எடுத்துட்டு மதுரைக்கு கிளம்பிட்டோம். அந்த நேரத்துல என்னோட ஃபோன் வேற தொலைஞ்சு போச்சு. அதனாலத் தான் உங்ககூட எல்லாம் என்னால தொடர்புல இருக்க முடியல.”

 எத்தனையோ முறை மலர்விழியும், தானும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றும், முடியாதது ஞாபகம் வந்தது ராகவனுக்கு.

“எம்பொண்ணும் அந்நேரம் டிகிரி முடிச்சிருந்தா. மதுரைக்கு போனப்புறம் மேலப்படிச்சா‌. படிச்சிட்டு இருக்கும் போதே கல்யாணத்துக்கு அவளை கேட்டு வந்தாங்க. நல்ல சம்மந்தம்னு நம்பி நாங்களும் அவளுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சோம். ஆனா…” மேலே பேசத்தொடங்கிய தணிகாச்சலத்தின் குரலில் விரக்தி. சுந்தர், அவன் அம்மா, இருவரின் முகங்களும் கூட ஒருவிதமான இயலாமையை பூசிக்கொண்டன.

“எம்பொண்ணை அவளோட புகுந்தவீட்டு உறவுகள் அவ்வளவு கஷ்டப்படுத்துனாங்க. நின்னா குத்தம், நடந்தா குத்தம், உக்காந்தா குத்தம்னு ரொம்பவே கஷ்டப்படுத்துனாங்க. அவ புருஷனும் அதை எல்லாம் கண்டுக்குறது இல்ல. அவ வாழ்க்கையை சீர்படுத்துறதுலயே என்னோட மொத்த ஜீவனும் தொலைஞ்சு போச்சுன்னே சொல்லலாம்.”

“ஏதோ நல்லகாலம், ஒருகட்டத்துல அவ புருஷன் வீட்டுல நடக்குற குடும்ப அரசியலை புரிஞ்சிகிட்டு, அவர் வேலப்பாக்குற இடத்துக்கே எம்பொண்ணை கூட்டிட்டு போய்ட்டார். எம்பிள்ளையோட வாழ்க்கையும் தப்பிச்சது.”

“நாங்களும் மனநிறைவோட, பீஹார்ல வேலைப் பார்த்துட்டு இருந்த சுந்தர்கிட்ட போறதுக்காக ட்ரெயின்ல உக்காந்திருந்தோம். அப்போத்தான் மதுரை ரெயில்வே ஸ்டேஷன்ல மலர்விழியைப் பாத்தோம்” என்றவர் ராகவனின் முகத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

“ரொம்ப வருஷம் கழிச்சு மலர்விழியைப் பார்த்ததும் வேகவேகமாக ட்ரெயின்லயிருந்து இறங்கி அவகிட்ட போனேன். என்னைக் கண்டதும் அவளுக்குமே சந்தோஷம். சுந்தரோட அம்மா ட்ரெயின்ல தான் இருக்குறான்னு தெரிஞ்சதும், ட்ரெயினுக்கு வந்தா.”

“உங்ககூட நடந்த கல்யாணத்தைப் பத்தி சொன்னவ, உங்க கூடப்பிறந்த பொண்ணுங்க வாழ்க்கை அதால பாதிக்கப்பட்டதையும் வருத்தத்தோடு சொன்னா. அதனால உங்க வாழ்க்கைலயிருந்து கொஞ்சநாளைக்கு ஒதுங்கியிருக்கலாம்னு முடிவெடுத்துருக்கதாவும், எங்க போறதுன்னு தெரியாம உக்கார்ந்திருக்கேன்னு சொன்னவ, எங்க கூடவே பீஹாருக்கு வரட்டுமான்னும் கேட்டா.”

“வாழ்க்கைல நல்லாயிருக்கணும்னு நாங்க மனசார நினைச்ச பிள்ளை துவண்டு நிக்கும் போது, எங்களால அப்படியே விட்டுட்டு போக முடியல. அதோட, கல்யாணத்துக்கு பிறகு ஒருசில பொண்ணுங்க படுறபாட்டை, எம்பொண்ணு மூலமா அனுபவப்பூர்வமா பாத்த எங்களுக்கு, மலர்விழியோட முடிவு இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையை நேர்பண்ணும்னா, சரின்னு தான் தோணிச்சு. அதனால கூடவே கூட்டிட்டு போய்ட்டோம்.”

 தங்களோடு மலர்விழி வந்த கதையை சுருக்கமாக சொன்ன தணிகாசலம், ஏதோ மலையையே புரட்டி போட்டது போல, ஆயாசத்தோடு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, சில வினாடிகள் இடைவெளியில் மீதிக்கதையை சொல்லத் தொடங்கினார் சரோஜா.

“தன்னோட சர்டிபிகேட்ஸ்ஸை வச்சு ஸ்கூல்ல வேலைக்கு சேர்ந்த மலர், கொஞ்சநாள்லயே கர்ப்பமா இருக்கிறது தெரியவும், எங்களுக்கு கொஞ்சம் பதட்டமாகிப் போச்சு. அதுவும் ரெட்டை பிள்ளைங்கன்னு உறுதியாகவும், உங்ககிட்ட சொல்லிடணும்னு நாங்க சொன்னோம்.”

“நான் அங்க போனா, திரும்பவும் அவரோட கூடப்பிறந்தவங்க வாழ்க்கைல பிரச்ச‌னை வரலாம். அது என்னோட மனநிலையை பாதிச்சு, பிள்ளைங்க வளர்ச்சியைக் கூட பாதிக்கலாம். அதனால உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு பிடிவாதம் பிடிச்சா மலர்.”

“எங்களுக்கும் பிள்ளைங்க விஷயத்துல ரிஸ்க் எடுக்க தோணல. அதனால உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சதை தள்ளி வச்சோம். பெருசா கர்ப்பகால தொந்தரவு எதுவும் இல்லாததால, மலர் வேலைக்கு போய்ட்டு தான் இருந்தா. அப்போத்தான் திடீர்னு ஒருநாள், கலெக்டருக்கு படிக்கலான்னு நினைக்கிறேன்னு சொன்னா மலர்.”

“எங்களுக்குமே, அதிகாரம் பண்ணுற இடத்துல மலர்விழி இருந்தா, அவளை யாரும் அலட்சியப்படுத்த முடியாதுன்னு தோணிச்சு. அதனால அவளை உற்சாகப்படுத்துனோம்.”

“படிக்கிறதுன்னா தான் அவளுக்கு அல்வா சாப்பிடுறது போல ஆச்சே. வேலைக்கு போய்ட்டே படிச்சா. பிள்ளைங்களுக்கு மூனு வயசு முடியும் போது எக்ஸாம் கிளியர் செய்து அம்மணி ட்ரையினிங்கே முடிச்சிருந்தாங்க” இதைச்சொல்லும் போது சுந்தர் அம்மாவின் முகம் பெருமிதத்தில் மின்னியது.

“மலர்விழி இங்க போஸ்டிங் ஆகி கிட்டத்தட்ட ஒருவருஷம் ஆகப்போகுது. ராகவன் தம்பியோட நம்பர் குடு, நான் ஃபோன் பண்ணி பேசுறேன். இல்லைன்னாலும் பரவாயில்ல நான் ஊருக்கே போய் விஷயத்தை சொல்லிட்டு வரேன்னு இப்போ கொஞ்ச நாளா, இவங்க அடிக்கடி சொல்லிட்டு தான் இருந்தாங்க. அதுக்குள்ள இப்பிடி ஒண்ணு நடந்து நீங்களே வர்ற மாதிரி ஆகிடிச்சி. இதைத்தான் கெட்டதுலயும் ஒரு நல்லது நடக்கும்னு பெரியவங்க சொல்லுவாங்க போல” என்று தன் பேச்சை முடித்தார் சரோஜா.

‘ஒருபெண் வாழ்க்கையில் துவண்டு நிற்கும் போது, அவளுக்கு தோள் கொடுத்து, அவள் வாழ்க்கையின் அடுத்த படிக்கு முன்னேற ஊக்கசக்தியாக உடன் இருந்தவர்கள் எங்கே,

 காலத்துக்கு உதவாத கொள்கைகளை பிடித்து தொங்கிக்கொண்டு, தன்னம்பிக்கை மிக்க பெண்ணை, பலவீனப்படுத்தி ஊரைவிட்டே ஓடி ஒளிந்து கொள்ளச் செய்த தன் பெற்றோர்கள் எங்கே’ என்று ராகவனால் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அந்த ஒப்பீடு, அதற்கு மேலும் தணிக்காசலம் குடும்பத்தினர் மீது கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடியாமல் செய்ய, “என் வைஃபையும், பிள்ளைகளையும், உங்க பிள்ளைங்க மாதிரி பாத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி” என்று கைகளைக் குவித்தான் ராகவன்.

“ஐயோ தம்பி… நீங்க எங்களை புரிஞ்சிக்காம போய்டுவீங்களோன்னு ரொம்பவே பயந்துருக்கேன். இப்போ, ரொம்ப நிம்மதியா இருக்கு.” லேசாக தழுதழுத்தக் குரலில் சொல்லிய சரோஜா புடவை முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அந்நேரம் தன்னிரு கைகளில் அண்ணன் மக்களை தூக்கியபடி கதிரேசன் வீட்டுக்குள் நுழைய, அவன் கைகளிலிருந்து, சரசரவென்று இறங்கிய கபிலன், “என்னாச்சு சரோ ம்மா? என்றபடி அவரிடம் சென்றான்.

குட்டி காமாட்சியோ, தகப்பன் நீட்டிய கைகளுக்குள் அடைக்கலமாகி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “நீங்க ஏன் ப்பா எங்களைப் பாக்க வரவேயில்ல? அம்மா கூட நீங்க டூ விட்டுட்டீங்களோன்னு நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா?” என்று கேட்டு விசும்பினாள்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்லுவார்களே, அப்படித்தான், எந்த வயதினராக இருந்தாலும் பெண்களின் நுண்உணர்வுகள் மட்டும் எப்போதுமே தனித்துவமானது என்று நிரூபித்தாள் ராகவனின் பெண்ணரசி.

 சிறியவளின் கேள்வியில் வாயடைத்துத் தான் போனார்கள் எல்லோரும். “அப்பிடி எல்லாம் இல்ல டா” உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி அங்குமிங்கும் நடந்தபடியே மகளின் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்திய ராகவனின் குரலுமே கம்மியிருந்தது.

“நிஜம்ம்மா… இனி எங்களை விட்டுட்டு எங்கயும் போக மாட்டீங்கல்ல?” தகப்பனின் தோளில் முகம் புதைத்துக் கொண்டு பிள்ளைத் தமிழில் காமாட்சி கேட்க, ராகவனும் மெல்லிய குரலில் பதில் சொல்ல என்று, தகப்பனுக்கும் மகளுக்குமான உணர்வுப் போராட்டம் சற்றுநேரம் அங்கே நடந்தது.

“நாச்சி குட்டி, அப்பா ட்ராவல் பண்ணி வந்ததுல டயர்ட்டா இருப்பாங்க தானே? ஃப்ரெஷ்ஷப் பண்ண கூட்டிட்டு போறீங்களா?” சிறுமியை திசை திருப்பும் வகையில் பத்மா கேட்க,

“வாங்க ப்பா, நம்ம ரூமுக்கு போலாம்” என்று தகப்பனின் கையைப் பிடித்தான் கபிலன்.

நேற்று இரவிலிருந்து ஆரம்பித்த பயணம், குளித்தால் நன்றாக இருக்கும் என்று ராகவனுக்கும் தோன்றவே பிள்ளைகளோடு சென்றான். கதிரேசனை கெஸ்ட் ரூமிற்கு அழைத்துச் சென்றான் சுந்தர்.

ஒரு எதிர்பார்ப்போடு பிள்ளைகளோடு சென்ற ராகவனுக்கு, அறைக்கதவை திறந்ததுமே அது மலர்விழியின் படுக்கையறை என்பது புரிந்தது.

ஆமாம்… இருவரும் மாலையும் கழுத்துமாக நின்றிருந்த ஆளுயர புகைப்படம் தான் படுக்கைக்கு எதிர்ப்புற சுவரில் ஜம்மென்று வீற்றிருந்ததே.

அதைப் பார்த்தவன், “இதுக்கொண்ணும் குறச்சலில்ல” என்று மனதிற்குள் நொடித்துக் கொள்ள, “அழகா இருக்கீங்க ப்பா.” புகைப்படத்தை பார்த்து விட்டு தகப்பனின் கன்னத்தை தன் முத்தத்தால் நனைத்தாள் நாச்சி.

பிள்ளைகளின் ஒவ்வொரு செயலுமே அவனை எவ்வளவு தேடியிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல, அதற்குப் பிறகும் கூட தன்னைத் தேடாத மனைவி மீது கோபம் அதிகரித்து கொண்டே தான் சென்றது ராகவனுக்கு.

குளித்து முடித்தவன், சுந்தரோடு சேர்ந்து எஸ்பி அலுவலகத்திற்கு சென்று வந்தான். என்ன செய்தாவது நாளைக் காலையில் மலர்விழியை கண்டிப்பாக மீட்டுவிடுவோம் என்று உறுதி கூறினார்கள்.

 இரவு உணவுக்கு பிறகு பிள்ளைகளோடு மனைவியின் அறைக்கே தூங்கச் சென்றான் ராகவன். கட்டிலில் சாய்ந்தவன் மீது சிட்டுக்குருவிகளாக அவன் பிள்ளைகள் தொற்றிக் கொண்டார்கள்.

மலர்விழி கேம்ப் சென்றிருப்பதாக பிள்ளைகளிடம் சொல்லியிருப்பதால், அவளைத் தேடவில்லை இருவரும்.

ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தகப்பனிடம் பேசியவர்கள், ஒருகட்டத்தில் தூங்கிவிட, அந்த விசித்திரமான இரவை எண்ணி வியந்தபடி விழித்தே கிடந்த ராகவன் எப்போது தூங்கினான் என்று அவனுக்கேத் தெரியாது.

மறுநாள் காலை எல்லோருக்குமே பரபரப்பாக விடிந்தது. தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஐந்து வருடங்கள் கழித்து காணப்போகும் மனைவிக்காக ராகவனும் ஆவலாக காத்திருக்க, அவன் உடன்பிறந்த பெண்கள் இருவரும் தங்கள் குடும்பத்தோடு வந்திறங்கினார்கள். கூடவே சிதம்பரமும் தன் குடும்பத்தோடு வந்திருந்தார்.

ஆச்சர்யப்பட்டுப் போன ராகவன், “எப்படி?” என்று புருவத்தை உயர்த்த, “உங்க பின்னாடியே நாங்களும் கிளம்பிட்டோம்ல” என்று சிரித்தாள் ஜெயந்தி.

அத்தனை பேரின் பாசமழையில் ராகவனின் பிள்ளைகள் உற்சாகமாகவே நனைந்தார்கள்.

“பாப்பா கொஞ்சம் என் சாயல்ல இருக்குறா ல்ல ண்ணா.” ஜெயந்தி ஆரவாரமாக கேட்க, கனவில் கண்ட காட்சி ஞாபகத்திற்கு வந்தது ராகவனுக்கு. பதில் சொல்லாமல் மௌனமாக சிரித்தான்.

“நீங்க ஒத்துக்கலைன்னாலும், பாப்பா கொஞ்சம் என்னைப் போலத்தான் இருக்கா.” சிலிர்த்துக் கொண்டாள் ஜெயந்தி.

எண்ணி ஏழு பேரை மட்டுமே இதுவரை பார்த்திருந்த அந்த கலெக்டர் பங்களா, உறவுக்கூட்டத்தில் உற்சாகமாக பிதுங்கியது.

அத்தனை பேரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருந்த மலர்விழி காலை பதினோரு மணிக்கெல்லாம் வந்துவிட்டாள். இரு அரசாங்க வாகனம் பின்தொடர வந்தவள், தன் காரிலிருந்து இறங்கினாள்.

இறுக்கி பின்னப்பட்ட இடைதாண்டிய கூந்தல், காலர் நெக் ஜாக்கெட், முழங்கை வரை நீண்ட கை, காட்டன் புடவை என்று மலர்விழியின் தோற்றம் கம்பீரமாக இருந்தது.

தன் உடன் வந்த காவல் அதிகாரிகளுடன் பேசிவிட்டு திரும்பியவளை, “அம்ம்மா… யார் வந்திருக்காங்க பாத்தீங்களா?” உற்சாகமிகுதியில் கத்தியபடியே நாலுகால் பாய்ச்சலில் சென்ற பொடிசுகள் ரெண்டும் கட்டிக் கொண்டார்கள்.

 பிள்ளைகளிடம் இத்தனை உற்சாகம் வருமளவிற்கு, அப்படி யார் தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக வீட்டு வாசலைப் பார்த்த மலர்விழியின் கால்களுக்கு கீழே பூமி நழுவியது.

ஆமாம்… அத்தனை பேருக்கு நடுவிலும் அவள் கணவன் தான் முதலில் மலர்விழியின் கண்களை நிறைத்தது. அவனை அங்கே எதிர்பார்த்திராத மலர்விழியின் மனது படபடவென்று அடித்துக் கொண்டது. கால்கள் தடுமாறியது.

“அப்பா வந்துருக்காங்க, பாருங்க ம்மா.” உற்சாக பந்தாக துள்ளிய பிள்ளைகள் தாயின் கையைப் பிடித்து இழுத்தார்கள். அவர்களோடு நகர்ந்த மலர்விழியை, வாசலில் நின்றிருந்தவர்களும் ஆவலோடு எதிர்கொண்டார்கள்.

அனைவரையும் பொதுவாக, “வாங்க” என்று வரவேற்ற மலர்விழியின் பார்வை, கணவனின் முகத்தில் மையம் கொண்டது. அங்கோ உணர்ச்சிகளை தொலைத்த பாவமே.

“கொஞ்சம் நில்லு மலர். ஆரத்தி எடுத்தப்புறம் வீட்டுக்குள்ள போலாம்.” உரிமையாக அவளை பிடித்து நிறுத்திய ஆனந்தி, “ராகவா, நீயும் மலர் பக்கத்துல வந்து நில்லு” என்றாள். காது கேளாதது போலவே நின்றான் மலர்விழியின் நாயகன்.

“உன்அக்கா கூப்பிடுறா ல்ல, நீயும் போய் தங்கச்சி கூட ஜோடியா நில்லு மாப்ள.” சொன்னதோடல்லாமல், ராகவனை லேசாக தோளால் தள்ளினான் மாதவன். ம்ஹும்… கொஞ்சம் கூட நகராமல் அப்படியே நின்றிருந்தான் ராகவன்.

 “வா…டா” உரிமையாய் தம்பியின் கையைப் பிடித்து இழுத்து மலர்விழிக்கு அருகே நிறுத்தினாள் ஆனந்தி.

தன்னருகே வந்து நின்ற கணவனை ஆவலோடு நிமிர்ந்து பார்த்தாள் மலர்விழி. அவனோ குனிந்து தன்னிரு பிள்ளைகளையும் கைகளில் அள்ளியபடி, “இப்போ சுத்து” என்றான் ஆரத்தி தட்டை கையில் வைத்திருந்த தங்கையிடம்.

ஆரத்தி சுத்தி குடும்பமாக நின்ற நால்வருக்கும் பொட்டு வைத்த ஜெயந்தி, “அண்ணி…” என்று மலர்விழியைக் கட்டிக்கொள்ள, பதிலுக்கு மலர்விழியும் அவளை அணைத்துக் கொண்டாள்.

“எல்லா எக்ஸ்ப்ரஷனையும் வெளியவே வச்சி கொட்டிரணும்னு நினைப்பா? மிச்சமீதியை வீட்டுக்குள்ள போய் வச்சிக்கோங்க.” சிதம்பரத்தின் மனைவி ஜானகியின் குரலில் வீட்டுக்குள் நுழைந்தார்கள் எல்லோரும்.

அந்த நொடிக்கு காத்திருந்தது போல, மலர்விழியின் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக்கொண்ட மாதவன், “நான் மட்டும் கொஞ்சம் பக்குவமா நடந்திருந்தா, உங்களுக்குள்ள இந்த பிரிவே வந்திருக்காது ம்மா. என்னை மன்னிச்சிடு. இப்போ இருக்கிற அறிவு அன்னைக்கு இல்லாமப் போச்சு.” அத்தனை பேருக்கும் மத்தியில் தயக்கமெதுவும் இன்றி தனது தவறை ஒப்புக்கொடுத்தான் மாதவன்.

கணவனோடு ஆனந்தியும் சேர்ந்துகொள்ள, “ஐயோ… நானும் கொஞ்சம் நிதானமா யோசிச்சிருந்தா, இப்பிடி ஒரு சம்பவம் நடந்துருக்கவே செய்யாது. ப்ளீஸ்… உங்க மேல பழியைத் தூக்கி போட்டுக்காதீங்க..” கைகளை இழுத்தபடி சங்கடமானக் குரலில் சொன்னாள் மலர்விழி.

“அதானே… நிதானமா யோசிச்சிருந்தா ராகவனையும் கூட்டிட்டு ல்ல நீ போயிருப்ப? ஆனாலும் உங்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல மலர்.” சிதம்பரத்திடமிருந்து கோபமாகவே வந்தது வார்த்தைகள்.

தன்னை திட்ட, கோபப்பட அத்தனை உரிமையும், அவருக்கு உண்டு என்பதால் அமைதியாகவே ஏற்றுக்கொண்டாள் மலர்விழி.

கெஞ்சல், கொஞ்சல், கோபம், தாபம் என்று எல்லா உணர்வுகளையும் பெரியவர்கள் கூட்டணி கலந்துகட்டி அடித்துக் கொண்டிருந்தது என்றால், சிறியவர்களோ வேறொரு உலகில் இருந்தார்கள்.

மலர்விழியின் பார்வைகளை, ராகவன் புறந்தள்ளுவது அப்பட்டமாக எல்லோருக்கும் புரிந்தாலும், கணவன் மனைவிக்கிடையே சமாதானப் புறாவாக மாற யாருமே முற்படவில்லை.

ஐந்து வருட வலி, வேதனை இருவருக்குமே உண்டு. எனவே இருவருமே தங்களுக்குள் பேசி சமாதானமாகிக் கொள்ளட்டும் என்று மற்றவர்கள் வாளாதிருக்க, கணவனும் மனைவியும் தனியே சந்திப்பதை தவிர்க்கவே முடியாத இரவும் வந்தது…