அத்தியாயம் 18

“அப்ப்ப்பா…”

 ஒரே நேரத்தில் அழைத்த இரண்டு இளங்குரல்களில், கட்டிலில் அமர்ந்திருந்த ராகவன், தன் மடியிலிருந்த லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு, புன்னகை முகமாக நிமிர்ந்தான்.

ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று, நான்கு வயது மதிக்கத்தக்க இரண்டு குழந்தைகள் ராகவனை நோக்கி உற்சாகமாக ஓடிவந்தார்கள். ஆமாம்… இருவரும் இரட்டையர்கள்.

 உற்சாகப் பந்தாக ஓடிவந்த இளஞ்சிட்டுக்கள் இரண்டும், தகப்பன் அமர்ந்திருந்த கட்டிலில் வேகவேகமாக ஏறி, அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தார்கள்.

“ப்பா… யாரோட ‘டாம்’ நல்லாயிருக்கு சொல்லுங்க?” தங்கள் கைகளிலிருந்த ட்ராயிங் நோட்டை தகப்பனின் முகத்துக்கு நேராக உயர்த்திப் பிடித்து, கண்களில் ஆர்வம் மின்ன ஒரே நேரத்தில் இருவருமே கேட்டார்கள்.

தன் முன்னே இருக்கும் இரண்டு ட்ராயிங் நோட்டையும், மாறி மாறிப் பார்த்தான் ராகவன். சாம்பல் வண்ணத்தில் திருட்டு முழியோடு, கார்ட்டூன் நாயகன் டாமை, அவன் மக்கள் இருவரும் ஓவியமாக்க முயற்சி செய்திருந்தார்கள்.

நான்கு வயது பிள்ளைகளின் விரலில் டாம் ஒரு மார்க்கமாகவே உருபெற்றிருக்க, அதில் யாருடையது நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாமல் திருட்டுப்பூனை டாமைப் போலவே திருதிருத்தான் ராகவன்.

அவன் அவஸ்தையை ரசித்தபடியே கட்டிலில் வந்தமர்ந்தாள் மலர்விழி. காலையிலேயே குளித்து முடித்து, தலையில் மல்லிகை சூடியிருந்தவளின் கண்கள், கணவனைப் பார்த்து, “பதில் சொல்லுங்க” என்று சிரித்தது.

“ப்பா… என்னோட டாம் தானே நல்லாயிருக்கு?” தகப்பனின் மௌனத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், சலுகையாக அவன் மடியில் ஏறி அமர்ந்த ராகவனின் பெண்ணரசி, தகப்பனின் கன்னம் தட்டி கேட்டாள். குரலிலோ, எனக்கு சாதகமாகத்தான் உன் பதில் இருக்க வேண்டும் என்ற கட்டளையே இருந்தது.

உண்மையில், தன்னுடைய நான்கு வயதுக்கு, தங்கையை விட ராகவனின் மகன் கைகளில் டாம் ஓரளவிற்கு நன்றாகவே உருப்பெற்றிருந்தான். ஆனால் அதை பளிச்சென்று மகளிடம் சொல்லிவிட முடியாமல் பரிதாபமாக முழித்தான் ராகவன்.

“ப்பா… என்னோட டாம் தானே ப்பா நல்லாயிருக்கு?” இப்போது மகனும் ராகவனின் மடியில் தொற்றிக் கொள்ள, இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைதான் ராகவனுக்கு.

மகளோ, இன்னும் ஒருபடி முன்னேறி தகப்பனின் கழுத்தை தன் தளிர்கரங்களால் பற்றி, அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “சொல்லுங்க ப்பா…” என்று சிணுங்கினாள்.

“அப்பாவுக்கு முத்தம் குடுத்தாச்சா? இனி அவ்வளவு தான், பாப்பாவோட டாம் தான் நல்லாயிருக்குன்னு அப்பா சொல்லப் போறாங்க.” இத்தனை நாட்களில் தகப்பனையும் தங்கையையும் நன்றாக படித்து வைத்திருந்த சிறுவன் அங்கலாய்த்தான்.

“அப்பிதி இல்ல ண்ணா… இங்க பாரு, பாப்பா டாம் தானே நல்லாயிருக்கு, நீயே சொல்லு.” தன் கோலிக்குண்டு கண்களை உருட்டியபடி கொஞ்சிக் கொஞ்சி கேட்ட அந்த வீட்டின் இளவரசி, தமையனுக்கும் ஒரு முத்தத்தை லஞ்சமாகக் கொடுத்தாள்.

 அவனோ, அதற்கெல்லாம் நான் மயங்க மாட்டேன் என்பது போல, “நோ, என்னோட டாம் தான் நல்லாயிருக்கு” என்றான் பிடிவாதக் குரலில்.

“ம்மா… பாது ம்மா… அண்ணா பிடிவாதம் பிடிக்கத…” தாயின் மடியில் ஏறி தமையனை குற்றம் சாட்டியது அந்த சிட்டு. மகளின் செயலை வாய்கொள்ளா சிரிப்போடு பார்த்தபடி இருந்தான் ராகவன்.

‘அடியேய்… பிடிவாதம் பிடிக்கிறது நீயா? அவனா?’ மனதுக்குள் அலறிய மலர்விழி, வந்த சிரிப்பை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “அம்மாவை மரியாதை இல்லாமப் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல பட்டூ” என்றாள் கண்டிக்கும் குரலில்.

“இதெல்லாம் ஒரு விஷயமா மலர்? சின்னப் பொண்ணு, போகப்போக தன்னாலே திருத்திப்பா.” மனைவி, வார்த்தையால் கூட மகளைக் கண்டிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், இடைபுகுந்தான் ராகவன்.

அவனை நிமிர்ந்து பார்த்தாள் மலர்விழி. அந்த பார்வையில், “நான் குழந்தையைக் கண்டிக்கும் போது நீ உள்ளே வராதே” என்ற கண்டிப்பு இருந்தது. அதை சரியாகப் படித்த ராகவன் அமைதியாகிப் போனான்.

 “சாரி… இனிமே சொல்லல.” உடனே இறங்கி வந்த அவர்களின் பெண்ணரசி,

“சொல்லுங்க ம்மா… என்னோட டாம் தானே பெஸ்ட்.”

அன்னைக்கும் ஒரு முத்தத்தை அவசரமாக தந்துவிட்டு, ஆமாம் என்னும் பதிலை வாங்கிவிட முயன்றது அந்த முல்லை.

மகளின் செயலில் மயங்கத் துடித்த மனதை இழுத்துப் பிடித்தபடி, “இரண்டுபேரும் ட்ராயிங்கை எங்கிட்ட காட்டுங்க பார்க்கலாம்.” மலர்விழி சொல்ல, இருவரின் ஓவியமும் மலர்விழி முன் கடைபரப்பப்பட்டது.

 அதை பார்வையிட்ட மலர்விழி, “வாவ்… இரண்டு பேருமே சூப்பரா ட்ரா பண்ணியிருக்கீங்களே!” சற்று அதிகப்படியாகவே கண்களை விரித்து அதிசயித்தவள்,

 “இதேப்போல ஜெரியை அழகா ட்ரா பண்ணிட்டு வாங்க பார்க்கலாம்.” பிள்ளைகளைப் போலவே கொஞ்சும் குரலில் சொல்லி, அவர்களை திசை திருப்பினாள்.

தாயின் குரலிலும், பாராட்டிலும் மயங்கிப் போன அந்த இளஞ்சிட்டுகள், வந்த காரியம் மறந்து, உற்சாகமாகவே அங்கிருந்து ஹாலை நோக்கி பறந்து போனார்கள்.

பிள்ளைகள் செல்வதை புன்னகையோடு பார்த்துவிட்டு கணவனிடம் திரும்பிய மலர்விழி, “விட்டா உங்க பொண்ணோட ட்ராயிங் தான் பெஸ்ட்னு சொல்லியிருப்பீங்க போல? ஹாங்…” என்றாள் கண்டனக் குரலில்.

“அது… பாப்பா, எங்க அம்மா போலவே இருக்காளா? அதான், அவ முகம் சிணுங்குனா என்னால பொறுத்துக்க முடியல போல.” மனைவியை சீண்டிப் பார்க்கும் ஆசை வர, அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்தே தாயைப் பேச்சுக்குள் இழுத்தான் ராகவன்.

“எதே? நான் கஷ்டப்பட்டு சுமந்து பெத்தா, எம்பொண்ணை உங்க அம்மா போல இருக்கான்னு நீங்க சொல்லுவீங்களா?” கணவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், புடவை முந்தானையை உதறி இடுப்பில் சொருகியபடி, சண்டைக்கு வந்தாள் மலர்விழி.

“ஹ்ம்ம்… எனக்கென்னவோ ஒவ்வொரு தடவையும் பாப்பாவைப் பாக்கும் போதும், எங்கம்மாவைப் பாக்குறது போலவேத் தான் இருக்கு.” இதழ்களுக்குள் சிரிப்பை மறைத்தபடி அப்பாவியாக விழிவிரித்தான் ராகவன்.

“எங்க… எம்முகத்தை நல்லாப் பாருங்க, என்னை மாதிரி இல்லையா நம்ம பொண்ணு?” கணவனை நெருங்கி அமர்ந்து, கண்களில் எதிர்பார்ப்போடு கேட்டாள் மலர்விழி.

மனைவியின் முகத்தை, ஒற்றை விரலால் அளந்தபடி ஆராயும் பார்வைப் பார்த்த ராகவனோ, “ம்ஹூம்… கொஞ்சம் கூட இல்லையே” என்று உதட்டைப் பிதுக்கினான்.

“நல்லாப் பாருங்க, கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் என்னைப் போலவே இல்லையா பாப்பாவுக்கு?” விட்டால் அழுதுவிடுபவள் போல கேட்டாள்.

அதற்கு மேலும் சோதிக்கும் மனமின்றி மனைவியின் இடையோடு கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்த ராகவன், அவள் கீழுதட்டை இரு விரல்களால் பற்றி இழுத்து, அதில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தபடியே,

 “எம்பொண்ணு என்னைப் போலத்தான் இருக்கான்னு, அடிச்சு சொல்லுறத விட்டுட்டு, இப்பிடித்தான் கண்ணைக் கசக்குவீங்களா அழுகுணி மேடம்?” என்று கேலி செய்தான்.

கணவன் தன்னை வம்பிழுத்திருக்கிறான் என்பது புரியவும், “ஏன், அடிச்சு தான் சொல்லணுமா? கடிச்சி சொன்னா ஆகாதா சார்?” என்ற மலர்விழி, ராகவனின் முகத்தைப் பற்றி, கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்தாள்.

“ஹேய்… சில்வண்டு, வலிக்குது டி.” சத்தமிட்டபடியே மனைவியை இழுத்துக் கொண்டு கட்டிலில் சரிந்தான் ராகவன்.

“எவ்வளவு தைரியம் இருந்தா, உங்கம்மாவை சொல்லி என்னை வெறுப்பேத்துவீங்க நீங்க? ஹாங்…” சிறிதுநேரம் என்றாலும், தன்னை தவிக்கவிட்ட கணவனின் மறு கன்னத்திலும் மலர்விழி அழுந்தக் கடித்தாள்.

“பல்லுத்தடம் விழாம கடி டி. இல்லைன்னா, கன்னத்தில் என்ன டா காயம்னு, காலேஜ்ல பசங்க பாட்டுப் பாடி எம்மானத்தை வாங்கிடப் போறானுங்க.” மலர்விழியை இடையோடு அணைத்து ராகவன் சத்தமிட, அவன் அணைப்புக்குள் சிக்கவில்லை அவள் சிற்றிடை.

அதிர்ந்து போனவனாக கண் முழித்த ராகவனுக்கு, நடந்தது அனைத்தும் கனவில் என்பது புரிய அதிக நேரம் எல்லாம் எடுக்கவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக, இப்படி கனவில் தானே அவன் வாழ்க்கை ஓடுகிறது. ஆமாம்… மலர்விழி ராகவனை விட்டுச்சென்று ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அவள் இருக்கும் இடம் இதுவரைக்கும் தெரியவில்லை.

விரக்தி சிரிப்பில் இதழ்கள் வளைய, கனவில் மனைவி காயப்படுத்திய கன்னங்களை கையால் தடவினான் ராகவன். கன்னம் வலிப்பதற்கு பதில், மனது வலித்தது. மனக்கண்ணில் மறுபடியும் மனைவி, குழந்தைகளின் முகத்தைக் கொண்டு வந்தவனிடம், இப்போது ஏமாற்றம் மட்டுமே.

நீண்ட நெடிய ஐந்து வருடங்கள்… இத்தனை வருடங்களில், கனவில் கண்ட காட்சியைப் போலவே நிஜத்திலும் எத்தனையோ நடந்திருக்கலாம். அத்தனையையும், கலைத்துவிட்டு சென்ற மனைவி மீது, இப்போதும் கட்டுக்கடங்காத கோபம் வந்தது ராகவனுக்கு.

‘ராட்சஷி, இப்பிடி என்னை தனியா புலம்ப விட்டுட்டாளே.’ ராகவனின் மனது முணுமுணுத்தது. அவளில்லா படுக்கை நெருப்பாக தகிக்க, ஒரு பெருமூச்சோடு, சுவரில் கிடந்த கடிகாரத்தை பார்த்தான்.

 அது, காலை மணி ஐந்து என்றது. அதற்கு மேலும் நடந்தவற்றையே எண்ணி, அந்த நாளை மோசமாக்கிக் கொள்ள விரும்பாத ராகவன், படுக்கையிலிருந்து எழும்பி அறையோடு இருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

 மனைவியோடு வசித்த அதே வீட்டில் தான், இப்போதும் வசிக்கிறான் ராகவன். முன்பு வாடகை வீடாக இருந்த அந்த வீடு, இப்போது அவனுடைய சொந்த வீடு.

ஆமாம்… அந்த வீடு விற்பனைக்கு வர, தானே வாங்கிக் கொண்ட ராகவன், தேவைக்கேற்றாற் போல அதைக் கொஞ்சம் மாற்றியும் அமைத்துக் கொண்டான். அதில் ஒரு மாற்றம் தான், அறையோடு சேர்ந்த குளியலறை.

 வீட்டு முகப்பை இடித்து ஹாலை நல்ல விஸ்தாரமாக அமைத்து, மாடியிலும் ஒரு ஹால், இரண்டு படுக்கை அறை என்று, வீட்டை விஸ்தரித்திருந்தான் ராகவன்.

காலைக்கடன்களை முடித்து, தினசரி வழக்கமான நடைப்பயிற்சிக்கு செல்வதற்காக அறையை விட்டு வெளியே வந்த ராகவனுக்கு, ஹாலில் தூங்கி வழிந்தபடி தனக்காக காத்திருந்த மாதவனைக் கண்டதும் சிரிப்பு வந்தது.

இங்கே வரும்போதெல்லாம் நடைப்பயிற்சிக்காக கணவனை வலுக்கட்டாயமாக அக்கா தன்னோடு அனுப்புவதும், வேறுவழியில்லாமல் அலுத்துக்கொண்டே வருவதுமாக இருக்கும் அத்தானைப் பார்த்து,

 “ரூம்ல போய் தூங்க வேண்டியது தானே அத்தான்?” கேலியாக கேட்டு சிரித்தான் ராகவன்.

“ம்ஹூம்… உங்கிட்டயும் உன் அக்காகிட்டயும் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்ல, உனக்கு சிரிப்பு தான் மாப்ள வரும்.” போலியாக அலுத்துக் கொண்டான் மாதவன்.

அதற்கே, “என்ன அங்க சத்தம்?” என்றபடியே கீழேயிருந்த மற்றொரு படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தாள் ஆனந்தி.

“சும்மா பேசிகிட்டு இருந்தோம்மா” என்றான் மாதவன் வேகமாக.

“ம்ம்… அது…” விறைப்பாக சொன்ன ஆனந்தி, “ராகவன் கூட நடந்துட்டு வாங்க, அப்போத் தான் உடம்புல இருக்குற கொழுப்பு குறையும். வந்ததும் குடிக்க அருகம்புல் ஜூஸ் ரெடி பண்ணி வைக்கிறேன்” என்றாள்.

“அது வேறயா?” முணுமுணுத்தான் மாதவன்.

“என் தம்பியைப் பாத்தீங்களா உடம்பை எப்பிடி கட்டுக்கோப்பா வச்சிருக்கான்னு. அவங்கிட்டயிருந்து கத்துக்கோங்க.” கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் கணவனைப் பார்த்து சொன்னாள் ஆனந்தி.

இது, ஐந்து வருடங்களுக்கு முன்னர், எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்த ஆனந்தி இல்லை. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் ஆனந்தி.

ஆமாம்… அன்று, சொன்னதோடல்லாம், செய்தும் காட்டிவிட்டாள் ஆனந்தி. இப்போது அவள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘சார்பதிவாளராக’ இருக்கிறாள். அதற்கு பெரிதும் துணை நின்றது அவள் தம்பியே.

ஆனந்தியை ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டு, கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படிப்பதற்கு உதவி செய்து என்று, ஆனந்திக்கு பக்கபலமாக நின்றான் ராகவன்.

சிறு நெருப்புப்பொறி ஒன்று போதுமே பெரும்காடு வெந்து தணிய. அப்படித்தான் பொருளாதார ரீதியாக, தற்சார்பு அடைந்தே ஆகவேண்டும் என்ற உணர்வு தீப்பற்றிக் கொள்ள, ஒரே வருடத்தில் அரசாங்க தேர்வில் வெற்றி பெற்று சார்பதிவாளராக பதவியில் அமரவும் செய்திருந்தாள் ஆனந்தி.