அத்யாயம் 21:

சுவற்றை வெறித்த படி அமர்ந்திருந்த ஆரண்யாவின் மனம் ஒரு நிலையில் இல்லை. மித்ராவின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததை அவ்வப்போது அவள் உணர்ந்திருந்தாலும், அது இப்படியாக இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. உயிர் தோழியாய் நினைத்தவள் இப்படி உடனிருந்த துரோகியாய் இருந்திருப்பாள் வேறு யாராவது கூறியிருந்தால் நிச்சயம் நம்பியிருக்க மாட்டாள் ஆரண்யா.

மீண்டும் மீண்டும் நடந்தவைகளையே அசை போட்டுக் கொண்டிருந்தாள்.

தன் குட்டு  வெளிப்பட்டு விட்டதில் அதிர்ந்திருந்த மித்ரா,

“ஆரா, நான் என்ன சொல்றேன்னு ஒரு நிமிஷம் கேளுடி” என்றாள்.

“ஜூஸ் எடுத்துக்கோ மித்ரா” என்றாள் ஆரா. அவள் குரலில் மருந்துக்கும் எந்த உணர்வுமில்லை.

“ஆரா..நான்” என்று மித்ரா எதையோ சொல்ல முற்பட,

“மித்ரா பிளீஸ்! சின்ன வயசுல இருந்து எனக்கு பிரண்ட்ஸ் அதிகம் கிடையாது. நீயும் கணேஷும் தான். ஏன்னு தெரியலை அவனும் கொஞ்ச வருஷமா என்கிட்டே சரியா பேசுறது இல்லை. அதுக்கு காரணமும் எனக்குத் தெரியாது.  இப்ப வரைக்கும் இருக்குற ஒரே பெஸ்ட் பிரண்ட் நீதான்னு நினைச்சுட்டு இருந்தேன். இனியும் அப்படியே நினைச்சுக்கிறேன். மேற்கொண்டு எதுவும் சொல்லிடாத. தெரிஞ்ச விஷயங்களை ஜீரணிக்கவே எனக்கு இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியலை” என்றாள் ஆரா.

“ஆரா நான் வேணும்னு அப்படி பண்ணலை. நீ என்னை விட்டு போய்டக் கூடாதுன்னு தான் அப்படி பண்ணேன்” என்றாள் மித்ரா.

“உன்னோட சுயநலத்துக்காக இத்தனை வருஷம் என் வாழ்க்கையோட விளையாடி இருக்க மித்ரா. என் உணர்வுகளோட விளையாடி இருக்க. கிட்டத் தட்ட என்னை ஒரு பைத்தியக்காரியா மாத்தியிருக்க? இப்போ கூட உன்மேல என்னால கோபப்பட முடியலை. நீ வேணும்னா எனக்கு துரோகியா இருந்திருக்கலாம். நான்  எப்பவும் உனக்கு ஒரு நல்ல பிரண்டா தான் இருந்திருக்கேன். இந்த பிரன்ஷிப் அப்படியே இருக்கணும்னு நினைச்சா தயவு செஞ்சு இந்த நிமிஷமே கிளம்பிடு.” என்ற ஆராவிற்கு படபடவென்று வர, அவளைத் தன்னருகில் இழுத்துக் கொண்ட தேவ்,

“ஆரா, உணர்ச்சிவசப்படாத” என்றான்.

“ஆரா நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. நான் நம்ம ரெண்டு பேர் நல்லதுக்காகத் தான் பண்ணேன். எனக்கு எப்பவும் நீ என்கூட இருக்கணும். அதைத் தவிர வேற எதுவும் எனக்கு வேண்டாம். இந்த தேவ் உனக்கு வேண்டாம் ஆரா, பிளீஸ் வாடி” என்றவளை ஓங்கி  அறைந்திருந்தாள் ஆரா.

“அறிவில்லை உனக்கு? இவ்வளவு நடந்தும் ஏன் இவ்வளவு பொறுமையா பேசுறேன் தெரியுமா? இவ்வளவு யோசிக்கிற நீ ஏன் அங்கிள் ஆன்ட்டியை பத்தி யோசிக்கலை? நீ பண்றதும், பேசுறதும் தப்புன்னு உனக்கே தோணலையா மித்ரா. ஆனா எனக்கு இதெல்லாம் கேட்கவே அருவருப்பா இருக்கு” என்றாள் ஆரா.

“என்னடி அருவருப்பா இருக்கு? உனக்கு இத்தனை நாள் நான் தானே சப்போர்ட்டிவா இருந்தேன். உன்னோட அத்தனை கஷ்ட்டமான சிச்சுவேஷன்ஸ்லயும் நான் தான் கூட இருந்திருக்கேன். இந்த தேவ் உனக்கு கஷ்ட்டத்தை மட்டும் தான் கொடுத்திருக்கான். நான் அப்படியா ஆரா. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை ஆரா. ஆனா நாம கடைசி வரை பிரண்டா, இப்படியே ஒண்ணா இருப்போம். நம்ம லைப்பில் வேற யாரும் வேண்டாம். எப்பவும் நான் சொல்றதைத் தானடி கேட்ப?” என்று கோபமாய் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்திருந்தாள்.

“என் வாழ்க்கையில ஏற்பட்டஅத்தனை  கஷ்ட்டத்துக்கும்  காரணகர்த்தாவே நீதானடி. இப்பவும் அங்கிள் ஆன்ட்டி முகத்துக்காக பார்க்குறேன். தயவுசெஞ்சு கிளம்பிடு. இல்லைன்னா ஜெய் ஆக்சன் எடுக்குறேன்னு போனா என்னால தடுக்க முடியாது” என்றாள் ஆரா.

“இப்படி பேசாத ஆரா. என்னால கேட்க முடியலை. அப்பறம் நான் ஏதாவது பண்ணிப்பேன்” என்றாள் மித்ரா கலங்கிய கண்களுடன்.

“இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம் மித்ரா” என்றான் தேவ் எரிச்சலுடன்.

அவளை தீர்க்கமாய் பார்த்த ஆராவோ,

“பண்றதுன்னா பண்ணிக்கோ. யார் உயிரையும் யாரும் பிடிச்சு வைக்க முடியாது. நான் இப்பவும் உனக்கு நல்ல விதமா தான் அட்வைஸ் பண்றேன். உன்னை மாதிரி பிரண்டுக்கு துரோகம் பண்ண என்னால முடியாது. நீ துரோகின்னு தெரிஞ்ச பிறகும் கூட. நல்ல டாக்ட்டரா பாரு. கவுன்ஸ்லிங் போ.  உனக்குன்னு ஒரு லைப் பார்ட்னரை சூஸ் பண்ணிக்கோ. ஹேப்பியா இரு. சோ, சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.” என்றாள் ஆரா.

“முடியாதுன்னு சொன்னா?” என்றாள் மித்ரா.

“ப்ரண்டா என்னால இருக்க முடியாது. வாழ்க்கை முழுசுக்கும் எனக்கு துரோகியா தான் இருக்க உனக்கு விருப்பம்னா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. என் முகத்துலையே முழிக்காத” என்றவள்,

“ஆங்..அப்பார்ட்மென்ட்டை காலி பண்ணிடு” என்றாள் ஆரா.

“ஆரா.. நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளேன்” என்று மித்ரா மீண்டும் ஆரம்பிக்க, அதுவரை பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்த தேவ்,

“கெட் லாஸ்ட் மித்ரா” என்றான் கோபமாக.

மித்ரா ஆராவின் கையைப் பிடிக்க, அவளோ வெடுக்கென்று உருவிக் கொண்டாள்.

“என்னைத் தொடாத மித்ரா. எனக்கு அருவருப்பா இருக்கு” என்றாள்.

அவளின் அந்த வார்த்தை மித்ராவை ஏதோ செய்ய, சட்டென்று அங்கிருந்து கிளம்ப முற்பட்டாள்.

“ஒரு நிமிஷம்” என்றாள் ஆரா.

மித்ரா அவளைப் பார்க்க,

“கணேஷ் ஏன் என்கூட பேசுறது இல்லை. அதுக்கு காரணம் கூட நீதானா? ஏன் கேட்குறேன்னா? நீங்க பண்ணது கொஞ்ச நஞ்சம் இல்லையே? லிஸ்ட் ரொம்ப பெரிசு, அதான் கேட்குறேன்.” என்றாள் ஆரா.

“எனக்குத் தெரியாது”

“இத்தனை வருஷத்துல ஒரு தடவையாவது எனக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நீ நினைச்சிருந்தா உண்மையை சொல்லிட்டு போ” என்றாள் ஆரா.

ஆரா ஹாஸ்பிட்டலில் இருந்த சமயம்,

வெளியே கோபமுடன் நின்றிருந்தான் கணேஷ். மித்ரா அவனிடம் வரவும் அவளை முறைத்தவன்,

“எதுக்காக மித்ரா என்னை பேசவே விடாம அங்கிளை வச்சு என்னை விரட்டி அடிச்ச? என்ன பிரச்சனை உனக்கு? ஆரா எதுக்கு பாய்சன் சாப்பிட்டா? நீ ஏன் என்னை வில்லன் மாதிரி அவங்க முன்னாடி பேசி வைக்கிற?” என்றான் கோபமாய்.

“ஜெய் அண்ணா இறந்துட்டாராம். அதான் இவ இப்படி பண்ணிட்டா. எல்லாம் உன்னால தான? நீதான அவங்க காதலுக்கு தூது போன? இப்ப உனக்கு சந்தோஷமா?” என்றாள் மித்ரா.

“என்ன உளர்ற மித்ரா? ஜெய் அண்ணா உயிரோட தான் இருக்கார். யாரோ அவளுக்கு தப்பா சொல்லியிருக்காங்க. இந்த லூசும் அதை நம்பி இப்படி பண்ணி வச்சிருக்கா. நீ வழியை விடு முதல்ல. நான் அவகிட்ட உண்மையை சொல்லிட்டு வரேன்” என்றான் கணேஷ்.

“சொல்லி என்ன செய்ய போற கணேஷ்?” என்றாள் மித்ரா கேள்வியாய்.

“மித்ரா” என்றவன் அதிர்ந்தபடி அவளைப் பார்க்க,

“சொல்லு சொல்லி என்ன செய்ய போற? ஜெய் கூட அவளை சேர்த்து வைக்க முடியுமா உன்னால? இல்லை அந்த ஜெய்யை அவ்வளவு சீக்கிரம் போய் உன்னால பார்க்கத்தான் முடியுமா? நீ அவனை பார்க்க போய் அசிங்கப்பட்டு வந்த கதையெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியா?” என்றாள் மித்ரா.

“ஜெய் அண்ணா யாருன்னு தெரியுமா உனக்கு?” என்றான் கணேஷ்.

“தெரியும்” என்றாள்.

“தெரிஞ்சும் ஏன் அவகிட்ட சொல்லலை. என்ன பண்ணி வச்சிருக்க? நீ ஆரம்பத்துல இருந்தே சரியில்லை” என்றான் கோபமாய்.

“நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு கணேஷ். அந்த ஜெய் கூட இவளை உன்னால சேர்த்து வைக்க முடியுமா?” என்றாள் மித்ரா.

எப்படி சொல்வான் அவன்? யாதவ் அவனை நாயை விரட்டிய மாதிரி விரட்டிய கதையை. அவன் ஒரு நிமிடம் யோசிக்க,

“பார்த்தியா உனக்கே இது நடக்காதுன்னு தெரியும். ஜெய் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது. நம்மல்லாம் அவரை பார்க்கக் கூட முடியாது. அப்பறம் ஏன் இந்த வேண்டாத வேலை. இப்பத்தான் அவளை காப்பாத்தி கொண்டு வந்திருக்கோம். இன்னொரு தடவை நீ பழைய பல்லவியை பாடி அவளை பழைய படி மாத்திடாத. அவளுக்கு ஏற்கனவே மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க. இறந்து போன ஜெய் இறந்து போனவனாவே இருக்கட்டும்.” என்றாள் மித்ரா.

“ஜெய் அண்ணா திரும்பி வந்து கேட்டா என்ன சொல்றது? அவர் கண்டிப்பா வருவார் மித்ரா.” என்றான்.

“அவளுக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு சொல்லு. அவரைப் பார்க்க அவளுக்கு விருப்பமே இல்லைன்னு சொல்லு. இப்படி எது வேணும்னாலும் சொல்லு. ஆனா ஆரா உயிரோட இனி விளையாடாத. அவ ரொம்ப சென்சிட்டிவ். இன்னொரு ஏமாற்றத்தை எல்லாம் தாங்கிக்க மாட்டா.” என்றாள் மித்ரா.

“என்னால பொய் சொல்ல முடியாது” என்றான்.

“அப்போ உண்மையையும் சொல்ல வேண்டாம். அவ வாழ்க்கை இனிமேலாவது நல்லா இருக்கணும்னு நினைச்சா, நீ ஒரு நல்ல பிரண்டுன்னா இதை பண்ணு” என்றவள் பட்டென்று உள்ளே சென்றுவிட்டாள். என்ன செய்வதென்று புரியாமல் நின்றான் கணேஷ்.

மித்ரா சொல்லி முடித்தது தான் மாயம், அவளை மீண்டும் அறைந்திருந்தாள் ஆரா.

“பிரண்டுன்னு சொல்லி கூட வச்சிருந்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட மித்ரா. என் வாழ்க்கையில என் சம்பந்தப்பட்ட முடிவை எடுக்க நீ யாரு? உனக்கு யாரு அந்த ரைட்சை கொடுத்தா. அளவுக்கு மிஞ்சினா அமர்தம் கூட நஞ்சு தான். உன்னோட ப்ரண்ட்ஷிப் கூட அப்படித்தான் எனக்கு. வாழ்க்கையில உன்னை திரும்ப பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறேன் மித்ரா.என் கண்ணு முன்னாடி வந்துடாத” என்றவள் கலங்கிய கண்களை கட்டுப்படுத்தியபடி  வேகமாய் சென்று விட்டாள்.

“ஆரா” என்றபடி மித்ரா அவளையே பார்த்தபடி நிற்க,

“நீயே நினைச்சாலும் ஆரா மாதிரி ஒரு பிரண்ட் உனக்கு இனி கிடைக்க மாட்டா மித்ரா. இப்பவும் சொல்றேன், இனி எங்க வாழ்க்கையில தலையிடாத. நல்ல டாக்டர்கிட்ட ட்ரீட்மென்ட் போ. மீறி ஏதாவது பண்ணனும்னு நினைச்சா, நினைக்கிறதுக்கு நீ இருக்க மாட்ட, ரைட்” என்றவன், வாசலை நோக்கி கையை நீட்ட,  பிரம்மை பிடித்தவள் போல் சென்றாள் மித்ரா.

அவள் சென்றவுடன் வாட்ச் மேன் அறைக்கு கால் செய்தவன்,

“இப்போ வெளிய போறவங்களை இனி எப்பவும் உள்ள விடக் கூடாது. அவங்க ஆக்சசை கேன்சல் பண்ணிடுங்க” என்றான்.

சுவரை வெறித்துக் கொண்டிருந்தவளை தேவ் நிஜத்திற்கு கொண்டு வர, அவனை கேள்வியுடன் பார்த்தாள் ஆரா.

“இப்போ எதுக்காக இப்படி உட்கார்ந்திருக்கிற ஆரா?” என்றான் தேவ்.

“நீங்க ஏன் ஜெய் நான் கேட்டப்பவே அந்த வீடியோவை காட்டலை?” என்றாள்.