அத்தியாயம் 17

“ராகவ்… “ உயிரை உருக்கும் குரலில் அந்த ஒற்றைப் பெயரை உச்சரித்த மலர்விழி, சில வினாடிகள் இடைவெளியில்,

 “நம்ம வாழ்க்கையில இப்பிடி ஒரு முடிவை நான் எடுப்பேன்னு நினைச்சு கூட பாக்கல ராகவ். ஆனா, நாம நினைச்சு பாக்காதது எல்லாம் தான இங்க நடக்குது” என்று, ஒரு பெருமூச்சோடு பேசத் தொடங்கினாள்.

 “இத்தனை நாள்ல, உங்க சொந்தம் யாரும் என்னை ஒரு மனுஷ ஜென்மமா மதிச்சதே இல்ல. அப்கோர்ஸ், இது நான் எதிர்பார்த்தது தான். மனுஷங்களோட உணர்வுகளை மதிக்கத் தெரியாதவங்களை, நானும் மதிக்கிறதே இல்ல. அவங்களுக்கே எங்கிட்ட மரியாதை இல்லைங்குறப்போ, அவங்க வார்த்தைகளோ, புறக்கணிப்போ என்னை பெருசா பாதிக்கிறதில்ல.”

“ஆனா, எம்பொருட்டு உங்க சிஸ்டர்ஸ் இரண்டு பேரோட வாழ்க்கையும், கேள்விக்குறியா மாறி நிக்குறதைத் தான் என்னால தாங்கிக்க முடியல. வெளியக் காட்டிக்கலைன்னாலும், உங்களுக்கும் அது எவ்வளவு பெரிய வலியைக் குடுக்குதுன்னு எனக்கு தெரியும்.”

“ராகவ், நம்ம காதலுக்காக நீங்களோ இல்ல நானோ, எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா, உங்க சிஸ்டர்ஸ் இரண்டு பேரும் எதுக்காக கஷ்டப்படணும்? அது தப்புல்ல. அதனால, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அடுத்தவங்களை கஷ்டப்படுத்துற காதல் நமக்கு வேண்டாம். ஐ மீன், நான் உங்க வாழ்க்கைல வேண்டாம்.”

 “இந்த முடிவுல நான் அப்பவே உறுதியா இருந்திருந்தா, இவ்வளவு மனக்கஷ்டம் யாருக்கும் வராமலயே போயிருக்கும்ல. ம்ஹூம்… ராகவனை விட்டுத்தர எனக்கு மனசில்லாமப் போயிடிச்சே… என்ன செய்ய?”

“ஆனா, இப்போ வேற வழியே கிடையாது ராகவ். நான் உங்களை விட்டுப் போய் தான் ஆகணும். இல்லைன்னா இங்க எதையுமே சரி செய்ய முடியாது. அப்படி அடுத்தவங்க வாழ்க்கையை அந்தரத்துல ஊசலாட விட்டுட்டு என்னால நிம்மதியா உங்ககூட வாழ முடியாது ராகவ். சோ, நான் உங்களை விட்டுப் போறேன்.”

“நீங்க குடுத்த படிப்பு எங்கிட்ட இருக்கு. கூடவே பிறந்த தன்னம்பிக்கை மனசுல இருக்கு. இது இரண்டையும் துணையா வச்சிட்டு, இந்த உலகத்தோட ஏதாவது ஒரு மூலையில உங்க ஞாபகங்களோட வாழ்ந்துட்டு தான் இருப்பேன்.”

“வாழ்க்கையோட கடைசி வரைக்கும் உங்ககூடவே வரமுடியாததுக்கு என்னை மன்னிச்சிடுங்க ராகவ். காலுக்கு பொருந்தாத செருப்பை கழத்தி ஓரமா வச்சிடுவோம் தானே. அதேபோல, நம்மோட பொருந்தாத காதலையும் ஒரு கனவா நினைச்சு ஒதுக்கிட்டு, உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை நீங்க அமைச்சுக்கணும், இதுதான் என்னோட ஆசை. என் ஆசையை கண்டிப்பா நிறைவேத்துவீங்கன்னு நம்புறேன், பை…”

மனப்பாடம் செய்து வைத்திருந்தது போல சில இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் தயங்கியும், சில இடங்களில் நெகிழ்ந்தும் பேசிய மலர்விழி, கடைசியில் தழுதழுத்த குரலோடு பேசி முடித்திருந்தாள்.

தன் கையிலிருந்த அலைபேசி வழியாக, பதிவு செய்யப்பட்டிருந்த மலர்விழியின் குரலைக் கேட்டுக் கொண்டிருந்த ராகவனின் முகம் இறுகி, கண்கள் சிவந்து போயிருந்தது. பத்து நாட்களாக சவரம் காணாத முகத்தில், தாடி முட்காடாக அடர்ந்திருந்தது.

ஆமாம்… ராகவனின் வாழ்க்கையிலிருந்து மலர்விழி மாயமாக மறைந்து பத்து நாட்களாகியிருந்தது.

ராகவ்… ராகவ் என்று உருகியவள், மொத்தமாக அவன் உயிரை உருவிக்கொண்டு, அவனைவிட்டு சென்றே விட்டாள்.

கையிலிருந்த அலைபேசியையே வெறித்தபடி அமர்ந்திருந்தான் ராகவன். இத்தனை நாட்களில் மலர்விழியின் வாய்ஸ்மேசேஜை குறைந்தது சில ஆயிரம் தடவைகளாவது அவன் கேட்டிருக்க கூடும்.

‘ராட்சசி, திட்டம் போட்டு என்னைத் தவிக்க விட்டுட்டு போய்ட்டா. இதுக்காகத் தான், நான் ஊருக்கு போறேன்னு சொன்னதும் எம்பின்னாடியே பூனைக்குட்டி போல உரசிகிட்டே அலைஞ்சாளா?’

‘நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன்? என்னுடைய பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தான், என்னோடு ஒட்டிக்கொண்டு அலைகிறாள் என் மனைவி என்று நான் புளகாங்கிதம் அடைந்திருந்தால், அவள் இங்கிருந்து கிளம்பிப்போகும் முடிவெடுத்து விட்டல்லவா என்னோடு இழைந்திருக்கிறாள், இணைந்திருக்கிறாள். எவ்வளவு தைரியம் அந்த ஏமாற்றுக்காரிக்கு?’

மனதிற்குள் புலம்பியபடி, அமர்ந்திருந்த மரநாற்காலியில் ஓங்கிக் குத்திய ராகவனுக்கு, தன்னை விட்டுவிட்டு மலர்விழி சென்றுவிட்டாள் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஆமாம்… தன்னுடைய பிஹெச்டி சம்மந்தமாக சென்னை வரை போக வேண்டி இருப்பதாக ராகவன் சொல்லவும், “எப்போ இங்கயிருந்து கிளம்புறீங்க? எத்தனை நாட்கள் வேலை? எப்போ திரும்பி வருவீங்க?” என்று எல்லாத் தகவல்களையும் கணவனிடம் விலாவாரியாக கேட்டு தெரிந்து கொண்ட மலர்விழி, அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ளாத குறையாக அவனுடனே சுற்றிச்சுற்றி வந்தாள்.

அதற்குத் தோதாக அவளுக்கு பள்ளி விடுமுறையாகவும் இருக்க, ராகவன் கல்லூரிக்கு கிளம்பி செல்லும் வரையிலும் வினாடி நேரம் கூட அவனை விலகாது ஃபெவிக்கால் போட்டு ஒட்டிக்கொண்டு அலைவது போலவே திரிந்தவள், மாலையில் கல்லூரி விட்டு அவன் வந்ததும் மறுபடியும் ஒட்டிக்கொள்வாள்.

பகல் நேரங்களில் இப்படியென்றால், இரவுப் பொழுதுகளில் கேட்கவே வேண்டாம், அவளுடைய பஞ்சு மெத்தையாகவே மாறிப் போனான் ராகவன்.

திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக வரும் பிரிவை எதிர்கொள்ள முடியாமலேயே மனைவி தவிக்கிறாள் என்று நினைத்த ராகவன்,

“மலர், நீயும் எங்கூட சென்னைக்கு வர்றியா? இரண்டு பேரும் சேர்ந்தே சித்தப்பா வீட்டுக்கு போவோம். உன்னை அங்க விட்டுட்டு நான் என் வேலையை பாக்குறேன். சித்தி கூட லாஸ்ட் டைம் ஃபோன் செய்யும் போது கூப்பிட்டாங்க தானே? போய்ட்டு வந்துடலாமா?” என்று மனைவியை கூடவே அழைத்தான்.

ஆமாம்… ராகவன் மலர்விழி திருமணம் நடந்ததும், அவர்கள், இருவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆதி முதல் அந்தம் வரை மனைவி ஜானகியிடம் சொல்லியிருந்தார் சிதம்பரம்.

 உடன் பணிபுரிபவர்கள், பயிற்றுவிக்கும் மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் என்று பலதரப்பட்ட மக்களைப் பார்த்துப் பழகியதாலோ, இல்லை, மலர்விழி, ராகவனின் பக்குவப்பட்ட காதல் கதை அவரை ஈர்த்ததாலோ என்னவோ, அந்த ஜோடியையும், அவர்களின் திருமணத்தையும் மனமார ஏற்றுக் கொள்ள முடிந்தது ஜானகியால்.

 கணவர் பேசும்போது ஒன்றிரண்டு முறைகள் மலர்விழியோடு தானும் பேசிய ஜானகி, புதுமணத் தம்பதியரை தங்கள் வீட்டுக்கு அழைக்கவும் செய்திருக்கிறார்.

“ஐயையோ, உங்க சித்தி கூப்டதுக்காக, நான் இப்போ அங்க வந்தேன்னா, உங்க அப்பா அவங்ககிட்ட கோபப்பட வாய்ப்பிருக்கு. நம்மால எதுக்குங்க அவங்களுக்குள்ள பிரச்சனை?” பதறியபடி பதில் சொன்னாள் மலர்விழி.

 அப்போது மனைவியின் வார்த்தைகள் சரி என்று தோன்றிய ராகவனுக்கு, இப்போது, எல்லாம் பக்கா ப்ளான் என்று கோபம் வந்தது.

ராகவன் சென்னைக்கு கிளம்ப வேண்டிய முந்தைய நாள் இரவு, படுக்கையில் கண்மூடி அமைதியாக படுத்திருந்த மலர்விழியின் முகம் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டது போலவே ராகவனின் கண்களுக்கு தெரிந்தது.

“கூப்டாலும் வர மாட்டேங்குற, இப்போ முகத்தை இப்பிடி வச்சிட்டு இருந்தா, நான் எப்படி நாளைக்கு கிளம்புறது? மனைவியை தன் மீது அள்ளிப்போட்டுக் கொண்டு, அவள் மூக்கோடு மூக்கை உரசியபடி குறைபட்டான் ராகவன்.

சட்டென்று தன்னை மீட்டுக் கொண்ட மலர்விழி, “எம்புருஷன் ஊருக்கு போறார் மொமண்ட்ல நான் இருந்தா, உங்களுக்கு நான் சோகமா இருக்கிறது போலவா தெரியுது? இப்பிடி தப்பா ஜட்ஜ் பண்ணுறது தப்பாச்சே, அதுக்கு என்ன பனிஷ்மென்ட் தரலாம்?” கண்கள் இரண்டையும் உருட்டி யோசனை செய்வது போல நடித்தவள், ராகவனின் இதழ்களில் அழுந்த முத்தமிட்டாள்.

“அடேய்… என்னவோ கொசு கடிச்சது போல இருந்துச்சு, இதுக்கு பெயர் தான் உங்க ஊர்ல தண்டனையா?” ஒற்றை விரலால் தன் உதட்டை நீவி விட்டபடியே சிரித்தான் ராகவன்.

 அவன் கேலியில் சிலிர்த்துக் கொண்ட மலர்விழி, ராகவனின் அடர்ந்த மீசையை தன் கையிரண்டால் பற்றியிழுத்து, “இந்த பனிஷ்மென்ட் போதுமா?” என்றாள் பாவனையாக.

 “ஹேய்… வலிக்குது டி ராட்ஷசி” என்று அலறிய ராகவன், சட்டென்று புரண்டு தன் மொத்த ஆளுகைக்கு கீழ் மலர்விழியை கொண்டு வர, அவன் கழுத்தில் கைகளை கோர்த்தபடி கணவனின் கண்ணோடு கண் நோக்கியபடி கிடந்தாள் மலர்விழி.

இல்லறத்தின் இனிமையை, பல நாட்களாக மறந்திருந்தவர்களின் இரவு மறுபடியும் உயிர்த்தெழ, மனைவியின் மலர்க் கண்களில் அழுந்த முத்தமிட்ட ராகவனின் உதடுகள், அவள் மலர் மேனியில் ஊர்வலம் நடத்தியது. சிலிர்த்த பெண்மையோ, அவனோடு போட்டி போட்டது.

“என்னடியம்மா, இரண்டு நாள் ட்ரிப் போறதுக்கே இப்பிடி கவனிக்கிற? அப்போ ஒருவாரம், பத்துநாள் ட்ரிப் போனா ஸ்பெஷலா கவனிப்ப போலயே!” மனைவியின் காதில் முத்தம் வைத்து கிசுகிசுத்தான் ராகவன். பேச்சில்லாது, செயலிலேயே தன் பதிலைச் சொன்னாள் மலர்விழி.

ஆனால், அவள் உள்மனமோ, ‘உங்களுக்கு தான் இது ரெண்டு நாள் ட்ரிப் ராகவ், எனக்கில்ல” என்று பரிதாபமாக ஓலமிட்டது.

அத்தனை நெருக்கமாக இருந்தும் கூட, ஒருவரின் உள்மனது பேசும் வார்த்தைகளை படிக்க முடியாமல் போவது, இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் பெற்ற வரமா? சாபமா? தெரியவில்லை. ஆனால், ராகவனுக்கு அது இரண்டாவதாகவே அமைந்து போனது தான் பரிதாபம்.

ஆனாலும் அந்த காதலன், தன் காதலியின் மனம் பேசிய வார்த்தைகளை, அவள் செயலில் படிக்க முற்பட்டான் தான்.

ஆமாம்… மிச்ச வாழ்நாளுக்கும் சேர்த்து மொத்தமாக ராகவனை கொள்ளையிட முயன்ற மலர்விழியின் வேகத்தில், “என்னாச்சு டா?” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான் ராகவன்.

“ஒண்ணுமில்லயே…” அதைவிட மெல்லிய குரலில் கிசுகிசுத்த மலர்விழி இன்னும் தீவிரமாக அவனோடு ஒன்றியவள், தன்னைத் தவிர வேறு எதையும் சிந்திக்க விடாமல் ராகவனின் சிந்தையை சிதறடிக்க, நள்ளிரவைத் தாண்டியும், அங்கே இமை மூடவில்லை இளமை.

மறுநாள் காலையில் அவன் கிளம்பும் வரையிலும் கண்களால் கணவனை கபளீகரம் செய்தபடியே அலைந்தாள் மலர்விழி.

 ‘அவள் சொல்கிறாள் என்று, இனி ஒருதடவை கூட மனைவியை விட்டுவிட்டு தனியாக ஒரு பயணம் மேற்கொள்ள கூடாது’ என்று, ராகவனை முடிவே செய்து கொள்ள வைத்தது பெண்ணவளின் பார்வை.

“எவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டு வந்துடுறேன் மலர். நீ கவனமா இருந்துக்கோ” என்று கூறி, ஒரு இதழணைப்போடே மனைவியிடமிருந்து விடைபெற்றிருந்தான் ராகவன்.

அன்று முழுவதும் ராகவன் மலர்விழியோடு ஃபோனில் தொடர்பில் தான் இருந்தான். மறுநாள் காலையில் ராகவன் ஃபோன் செய்யவும், மலர்விழி பதட்டமானக் குரலில் வேகவேகமாக,

“ராகவ், ஃபோன் கீழ விழுந்து டிஸ்ப்ளே உடைஞ்சு போச்சு. உங்களுக்கு என்னால ஃபோன் செய்ய முடியல. இன்கமிங் கால்ஸ் வர்றதான்னு பாக்கத்தான் வெயிட்டிங். தேங்க் காட்… உங்க கால் வந்திடிச்சி, ஆனா வாய்ஸ் தெளிவா இல்ல. நான் போனை ரிப்பேர் பண்ணக் குடுக்கப் போறேன். என்னை தேடாதீங்க” என்றவளின் குரல் தேய்ந்து மறைந்தே போனது.

ஃபோன் உடைந்துவிட்டது என்று அவளே சொன்னதால், எதுவும் வித்தியாசமாக எண்ணத் தோன்றவில்லை ராகவனுக்கு. மனைவியோடு சேர்ந்துதான் சித்தப்பா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததால், இம்முறை வெளியே லாட்ஜில் தங்கிக் கொண்டான் ராகவன்.

ஏன் என்று கேட்ட சித்தப்பாவிடம், “உங்க வீட்டுல இருந்து நான் போக வேண்டிய இடம் ரொம்ப தூரம் சித்தப்பா, ட்ராவல்லயே பாதி நேரம் போயிடும். இதுதான் வசதி” என்று சமாளித்துக் கொண்டான். உண்மையும் அதுதான் என்பதால் அமைதியாகிப் போனார் சிதம்பரம்.

மனைவி தனியாக இருப்பாள் என்ற எண்ணமே வேலையை விரைவாக செய்து முடிக்க ராகவனைத் தூண்டியது. மூன்றாம் நாள், பின் மாலைப் பொழுதில் வீடு வந்து சேர்ந்திருந்தான் ராகவன்.

இரண்டு நாட்களாக இருவருமே பேசிக்கொள்ளாததால், ‘மனைவிக்கு தன்னைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்’ என்று எண்ணி வந்த ராகவனுக்கு தான், அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம்… இருளில் மூழ்கி, பூட்டிக் கிடந்தது அவர்களின் வீடு.

மலர்விழி கோயிலுக்கு சென்றிருக்கலாம் என்று நினைக்க முடியாமல், ஸ்கூட்டி வீட்டிலேயே நின்றிருந்தது. இருவரும் பொதுவாக வீட்டுச்சாவி வைக்கும் இடத்திலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தவன் மின்விளக்கை உயிர்ப்பித்தான்.

வீடு, புழங்கிய அடையாளம் இன்றி படுசுத்தமாக இருந்தது. குழம்பிப் போன ராகவன், ஃபோன் பழுதாகி விட்டது என்று மனைவி சொன்ன பிறகும், ஒருவேளை இப்போது தொடர்பு கொண்டுவிட முடியாதா என்ற நப்பாசையில் அவள் கைபேசிக்கு அழைத்துப் பார்த்தான். பெரும் நிசப்தமே பதிலாக கிடைத்தது. வேறுவழியில்லாமல் பக்கத்து வீட்டு கோதையிடம் விசாரித்தான்.

அவரோ, “இரண்டு நாளா வீடு பூட்டிக் கிடக்கே? அப்போ, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஊருக்கு போகலையா? நான் அப்பிடில்ல நெனைச்சிட்டு இருக்கிறேன்” என்றார் ஆச்சர்யமாக.

 கோதை என்னும் நடமாடும் சிசிடிவி கேமரா, ராகவன் ஊருக்கு கிளம்புவதற்கு முந்தைய தினமே, தாய் வீட்டுக்கு மகளோடு சென்றுவிட்டு, ஒருநாள் கழித்து வந்ததால் எதையும் அறிந்திருக்கவில்லை.

அவ்வளவு தான்… ஆடிப்போனான் ராகவன். அவனுக்கு மலர்விழி தன்னை விட்டுவிட்டு சென்றிருப்பாள் என்ற எண்ணம் கிஞ்சித்தும் வரவில்லை.

‘என்னிடம் சொல்லாமல் எங்கே சென்றிருப்பாள்? யாரைப் பார்க்க சென்றிருப்பாள்? ஏன் இன்னமும் வரவில்லை? என்ன ஆச்சு?’ இந்த கேள்விகளே எழும்பி நின்று அவனைக் குழப்பியது.

அத்தனைக்கும் விடை தருவது போல, மலர்விழியிடமிருந்து வாய்ஸ் மெசேஜ் வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது. அதை கேட்பதை தள்ளிவைத்து, பரபரப்பாக மனைவிக்கு அழைப்பு விடுத்தான் ராகவன். ஆனால் என்ன முயன்றும் மனைவியை தொடர்பு கொள்ளவே முடியவில்லை அவனால்.