“நாள் பார்த்திட்டீங்களா? ராம் அங்கிள்கிட்டே நான் பேசறேன்.” என்றான்.
சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய,”கல்யாணமே வேணாம்னு சொல்றா ப்ரீத்தி..என்ன, ஏதுன்னு கேட்டிட்டேன்..பதில் சொல்ல மாட்டேங்கறா.”
அவன் எதிர்பார்த்தது தான்.அதனால்,”வேண்டாம்னா அவளை வற்புறுத்த முடியாது ப்பா.” என்றான் உமேஷ்.
“ஊரைக் கூட்டி நிச்சயம் செய்தோம்..விஜய் தான் மாப்பிள்ளைன்னு அவ மனசுலே வந்தாச்சு..சில விஷயங்களாலே கல்யாணம் தள்ளிப் போயிருச்சு..இப்போ எல்லாம் கூடி வரும் போது இவ வேணாம்னு சொல்றா..கல்யாணத்தை உடனே முடிக்கணும்னு உன்னோட தாத்தா ஒத்த கால்லே நிக்கறார்.உன்னோட பாட்டி வீட்டுக்கு வர்றத்துக்காக காத்திட்டு இருக்கார்..என்ன செய்யறதுன்னு தெரியலை.” என்றார்.
“விஜய்க்குத் தெரியுமா இந்த விஷயம்?”
“எனக்குத் தெரியாது டா.”
“அவங்ககிட்டே தான் முதல்லே சொன்னேன்.” என்றாள் ப்ரீத்தி.
மதுரை வீட்டின் வரவேற்பறையில் இரவு சாப்பாட்டிற்குப் பின் அனைவரும் கூடியிருந்தனர்.உமேஷையும் அழைத்துக் கொண்டு பிற்பகல் போல் வீடு வந்து சேர்ந்திருந்தார் நாகேஸ்வரன்.இதற்கு மேலும் ப்ரீத்தியின் கல்யாண விஷயத்தை ஒத்திப் போட முடியாது என்பதால், உமாவை விமான நிலையத்தில் விட்டவுடன், அவர்களுடன் மதுரைக்குப் புறப்பட்டு விட்டான் உமேஷ்.
“என்ன ஆயிடுச்சு உனக்கு? வீட்லே பெரியவங்க நாங்க இருக்கும் போது நீயா எப்படி இப்படியொரு முடிவு எடுக்கற?..இந்த வீட்டுக் கௌரவம் என்ன ஆகிறது? உனக்கும் அதைப் பற்றி கவலையில்லையா?” என்று ப்ரீத்தி மீது பாய்ந்தார் மீனா.
ஏகாம்பரத்திற்குப் பயங்கர அதிர்ச்சி.நிச்சயம் செய்த மாப்பிள்ளைய வேண்டாமென்று ப்ரீத்தி நிராகரிக்ககூடும் என்று அவர் நினைக்கவேயில்லை.
அதற்கு ப்ரீத்தி வாயைத் திறக்கவில்லை.திறந்தது பார்வதி.
“உனக்கு அந்தக் கவலை இருந்திருந்தா உன்னைப் போல கல்யாணம் செய்துகிட்டு இந்த வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்டே நீ அப்படி நடந்துப்பேயா?” என்று கேட்டார் பார்வதி.
“அத்தை” என்று அதிர்ச்சியானார் மீனா.
மீனாவைப் புறக்கணித்து விட்டு,”உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னா அதை நிறுத்திடலாம்.” என்று ப்ரீத்தியிடம் நேரடியாகப் பேசினார் பார்வதி. உடனே,
“பார்வதி..போதும்..எதையாவது உளறிட்டு இருக்காத..நிச்சயம் செய்த கல்யாணம் நின்னு போயிடுச்சுன்னா வெளிலே தலை காட்ட முடியாது..வாய்க்கு வந்ததைப் பேச ஆரம்பிச்சிடுவாங்க..ப்ரீத்தி வாழ்க்கை தான் பாதிக்கும்.” என்று மனைவியைச் சத்தம் போட்டார் ஏகாம்பரம். அதற்கு பார்வதி பதில் சொல்லுமுன்,
“என்னோட அப்பா, அம்மா பற்றி தெரிஞ்சு தானே என்னைக் கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டாங்க..திடீர்னு அப்பா ஸைட்லேர்ந்து உறவுக்காரங்களைக் கொண்டு வரச் சொல்றாங்க..நாளைக்கு அண்ணியோட உறவு வைச்சுக்காதே ஒதுங்கி இருன்னு சொல்லுவாங்க..என்னாலே அது முடியாது..எனக்கு அவங்க உறவு வேணும் தாத்தா..அதனாலே எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம் தாத்தா.” என்று அவளுடைய தாத்தாவிடம் நேரடியாகப் பேசினாள் ப்ரீத்தி.
“நிறுத்துங்க தாத்தா..அவங்க யாரோ இல்லை..என்னோட அக்கா..என்னோட அப்பா, அம்மாவோட முதல் குழந்தை..என்னோட குடும்பம் அவங்க..உமேஷ் அண்ணாவைக் கல்யாணம் செய்துக்கறதுக்கு முன்னாடியே அவங்களை அப்படித் தான் நினைச்சேன்..உங்களுக்கு ஏன் என்னோட மனசு புரிய மாட்டேங்குது? அப்பா, அம்மா உயிரோட இருந்திருந்தா என்னைக் கூட தான் நீங்க உங்களோட பேத்தியா பார்த்திருக்க மாட்டீங்க…
என்னோட அம்மாவும் அப்பாவும் உங்களைப் போல நினைக்கலை..எங்க இரண்டு பேரையும் ஒரே போல வளர்த்திருக்காங்க..ஒரு ஆல்பம் நிறைய அதுக்கு சான்று இருக்கு..எத்தனை புகைப்படத்திலே அம்மா மடிலே அண்ணி உட்கார்ந்திட்டு இருக்காங்க தெரியுமா? எத்தனை புகைப்படத்திலே அண்ணி என்னைத் தூக்கி வைச்சிட்டு இருக்காங்க தெரியுமா? நாங்க நாலு பேரும் குடும்பமா எத்தனை புகைப்படம் எடுத்திட்டு இருக்கோம் தெரியுமா? அதெல்லாம் பார்த்தாக் கூட நீங்க இதே போல தான் இருக்கப் போறீங்க…
காசு, பணம், படிப்பு, அந்தஸ்து வைச்சு எல்லாரையும் வேறுபடுத்தி பார்க்கற உங்களுக்கு இதெல்லாம் புரிய வைக்க முடியாதுன்னு தான் அவங்களைப் போலவே சிந்திக்கற அப்பாவைக் கல்யாணம் செய்திட்டுப் போயிட்டாங்க அம்மா..பணம், சொத்து கேட்டு உங்களை என்னோட அப்பா தொந்தரவு செய்திருக்காங்களா?..சுந்தரி பாட்டியும் ராம் அங்கிளும் ஏழை தான்..அதுக்காக யாரையும் ஏமாத்தி வாழணும்னு நினைக்கலை..உங்ககிட்டே உதவிக்கும் வரலை.” என்றாள் ப்ரீத்தி.
அவளுடைய விளக்கங்கள் வேல் போல் பாய்ந்து ஏகாம்பரத்தின் உள்ளத்தைக் காயப்படுத்தியது.
“நீ சொல்றது உண்மை தான் ப்ரீத்தி..உன் அப்பாவைப் போல தங்கமான மனுஷன் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தார்..அவரைத் தகரம்னு நினைச்சிட்டேன்..நான் தான் தகரம்னு இவ்வளவு காலம் கழிச்சு இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன்.” என்று சொல்லி கண்ணீர் விட்டார் பார்வதி.உடனே,
“நீங்க எதுக்கு அழறீங்க பாட்டி..இப்போ நீங்க அந்த மாதிரி இல்லையே.” என்று ப்ரீத்தி ஆறுதல் சொல்ல,அமைதியாக, அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மீனா.
அவருடைய கண்களைத் துடைத்துக் கொண்டு,”நான் தகரம், அதான் இன்னொரு தகரத்தை மருமகளா வீட்டுக்குக் கொண்டு வந்திட்டேன்..அந்தத் தகரத்துக்கும் தங்கமாக் கிடைச்சிருக்கற அவ மருமகள் கண்ணுக்குத் தெரியலை.”என்றார் பார்வதி.
அதுவரை அமைதியாக இருந்த உமேஷ்,”பாட்டி..என்னோட மனைவியைப் பற்றி பேச நான் இங்கே வரலை..ப்ரீத்தி விஷயதத்தைப் பற்றி தான் இப்போ பேசிட்டு இருக்கோம்” என்றான்.
“நீ வரலை..நான் இங்கே வந்திருக்கிறது அதையெல்லாம் பேச தான்..பசுபதி குடும்பத்தோட பெருமையை இவங்களே கட்டி ஆளட்டும்..எனக்கு வேணவே வேணாம்..இந்தக் குடும்பத்துக்கு நான் வெளியே இருந்த தான் வந்தேன்..அப்படியே இருந்திட்டுப் போறேன்..உன்னோட தாத்தாவைக் கல்யாணம் செய்துகிட்டவுடனே நான் எங்கேயிருந்து வந்தேங்கறதேயே மறந்துட்டேன்..அதான் புத்தி கெட்டுப் போய் நான் பெத்த பொண்ணையே விட்டுக் கொடுத்திட்டேன்…
அந்தத் தவறை இப்போ சரி செய்ய விரும்பறேன்..என்னோட மகளுக்குச் செய்யாததை என்னோட இரண்டு பேத்திகளுக்கும் செய்யணும்னு நினைக்கறேன்..பெரியவளுக்கு உன்னைப் போல நல்லவன் புருஷனாக் கிடைச்சிட்டான்..அவளும் சொந்தக் கால்லே நின்னு நிறைய சம்பாதிக்கறா.” என்று சொன்ன பார்வதி, ப்ரீத்தியைத் தன்னருகில் அழைத்து,”இவளுக்கு ஒரு நல்ல வழி காட்டணும்..உன்னையே வேணாம்னு ஒதுக்கி வைக்கற உங்கம்மா.. நான் போன பிறகு இவளை என்ன செய்வாளோ? என்றவுடன்,
“அத்தை..ஏன் இப்படி அபாண்டமாப் பேசறீங்க?” என்று கோபத்துடன் கேட்டார் மீனா.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்,”நாகு, என் பொண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தைப் பங்குப் பிரிச்சு அவளோட இரண்டு பொண்ணுங்களுக்கும் கொடுத்திடு..யார்கிட்டேயும் என்னோட பேத்திங்க சோத்துக்கும் துணிக்கும் பிச்சை கேட்டு நிக்க வேணாம்.” என்றார். அதைக் கேட்டு,
“ப்ரீத்தியை அஞ்சு வயசுலேர்ந்து வளர்க்கறேன்..என்னைக்கு அவளை நான் அந்த மாதிரி நடத்தியிருக்கேன்?” என்று பொங்கி எழுந்தார் மீனா.
“உன்னோட ஒரே பையன்கிட்டே இப்படி நடந்துப்பேன்னு நீ எப்போவாவது நினைச்சுப் பார்த்தேயா?” என்று பார்வதி கேட்டவுடன், தலையைக் குனிந்து கொண்டார் மீனா.
“உமாவை என்னோட பேத்தியாப் பார்க்க எனக்கு யாரும் சொல்லிக் கொடுக்கலை..நானா உணர்ந்தேன்..அவளைத் தன்னோட வாழ்க்கைத் துணையா உன் பையன் உணர்ந்திருக்கான் அதான் அவளைக் கல்யாணம் செய்துகிட்டான்..அவளை அக்காவா பார்க்க ப்ரீத்திக்கும் யாரும் சொல்லிக் கொடுக்கலை..அவளாலே அதை உணர்ந்தா..அதான் உமாவை அண்ணியா உடனே ஏத்துக்க முடிஞ்சது..அப்படித் தான் உமாவை முதல் முறை பார்த்தவுடனேயே அவளோட அம்மாவா சிவரஞ்சனி உணர்ந்திருப்பா..அதே போல அவளோட அப்பாவா மாப்பிள்ளை உணர்ந்திருப்பார்..அதான் அவளை மகளா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திட்டாங்க…
தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி எல்லா உறவுகளும் அவங்களா தான் அது போல உணரனும்..வலுக்கட்டாயமா யார்கிட்டேயும் பாசத்தை வரவழைக்க முடியாது..இன்னைவரை ராம் நாதனோட மனைவி இந்து, உமாவோட சித்தியா உணரலை…
அதே போல அவளோட தாத்தாவா இன்னும் உன் மாமனார் உணரலை..இனி அவராலே அந்த மாதிரி உணர முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்லை..இப்போவரை உன்னாலேயும் அவளை மருமகளாப் பார்க்க முடியலை..உன் இடத்திலே உன்னைப் போல தான் நான் இருந்தேன்..சுந்தரேசனை என்னோட மாப்பிள்ளையாப் பார்க்க முடியலை..அதனாலே நான் பெத்த பெண்ணையே இழந்தேன்..நீயும் என்னைப் போல இருந்தேன்னா உன்னோட பையனை இழந்திடுவே…
பத்து வயசுலேர்ந்து காயப்பட்டுப் போயிருக்கா உமா..அந்த வலியெல்லாம் இன்னும் அவ உள்ளே இருக்கு..அவளுக்கு யாருமில்லைன்னு மனசிலே பதிஞ்சு போனதாலே, என்னைக்கும், முதல் அடி எடுத்து வைச்சு யாரோடேயும் அவளாலே உறவு ஏற்படுத்திக்க முடியாது…நம்ம மனசுலே இருக்கற அன்பை அவளுக்கு உணர்த்தினா அவளும் அதே போல நம்மைப் பற்றி உணர வாய்ப்பிருக்கு..அவளோட மாமாவா நாகு உணர்ந்திட்டான்..அவ ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி அதை அவளுக்கு உணர்த்திட்டான்…அவளும் அதைப் புரிஞ்சுக்கிட்டா..அன்னைக்கு, என் வீட்டிலே எனக்குத் துணி இருக்குன்னு அவன்கிட்டே சொன்னவ, இன்னைக்கு, அவன் கொண்டு வந்த துணியை அவளோட ஊருக்கு எடுத்திட்டுப் போயிருக்கா.” என்று அவர்கள் செய்த தவறை எப்படிச் சரி செய்யலாமென்று அவருடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் பார்வதி.
இதுவரை அவருடைய அடக்குமுறையில் வாழ்ந்து வந்த மனைவி, முதல் முறையாக, அவர் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை வெளியிட, தன்னுடைய மனையாளுக்கு இத்தனை மனவேதனையை அளித்து விட்டோமே என்று மனம் வருந்தலானார் ஏகாம்பரம். பார்வதி பேசி போது மீனாவின் கவனம் முழுவதும் உமேஷிடம் தான் இருந்தது.அவனோ அவரை நேரடியாகப் பார்க்கவுமில்லை அவரோடு ஒரு வார்த்தை பேசவுமில்லை.மீதமிருக்கும் அவருடைய வாழ்க்கையை, இப்படி, மகனுடைய பாராமுகத்தைப் பார்த்து தான் கடத்த வேண்டுமோ என்று கலங்கிப் போனார் மீனா.
அடுத்த சில நிமிடங்கள் அனைவரும் மௌனமாக இருக்க,”உமேஷ், ப்ரீத்தி ஏற்கனவே சொல்லியிருந்தாலும் நீயும்விஜய்கிட்டே இந்த விஷயத்தை சொல்லிடு..அப்புறமா நான் அவங்க வீட்லே பேசறேன்.” என்றார் நாகேஸ்வரன்.
விஜய்யிடம் அன்றிரவே அவர்களுடைய விருப்பமின்மையைத் தெரியப்படுத்தி விட்டான் உமேஷ்.அடுத்த நாள், விடியற்காலையில், வீட்டினர் அனைவரும் உறக்கத்தில் இருக்க,ப்ரீத்தியைச் சந்திக்க நேரில் வந்து விட்டான் விஜய்.அவனை வீட்டிற்குள் அழைத்து, உட்கார வைத்த மீனாவிடம், ப்ரீத்தியிடம் பேச விரும்புவதாக தெரிவித்தான்.அதைப் ப்ரீத்திக்குத் தெரியப்படுத்தி விட்டு, மாடிக்குச் சென்ற மீனா, மகனின் அறைக் கதவை தட்டி, அவனை அவசரமாக எழுப்ப, முதல்முறையாக, பல நாள்கள் கழித்து, அம்மாவும் பையனும் நேரடியாக உரையாடினர்.
“விஜய் மாப்பிள்ளை வந்திருக்கார்.” என்றார் மீனா.
“கொஞ்சம் பொறுத்து வரேன்.” என்று தூக்கக் கலக்கத்துடன் சொன்ன உமேஷின் கையைப் பற்றி கீழே இழுத்து வந்தார் மீனா.வரவேற்பறையில் அமர்ந்திருந்த விஜய்யைப் பார்த்து அதிர்ச்சி அடையவில்லை உமேஷ். நேற்றிரவே வருவான் என்று எதிர்பார்த்தான். ஆனால், அவனைச் சந்திக்க வந்த ப்ரீத்தி அதிர்ச்சி காத்திருந்தது.
அதற்கு,“நான் சொல்ல எதுவுமில்லை..எல்லாம் ஃபோன்லே சொல்லிட்டேன்.” என்றாள் ப்ரீத்தி.
ப்ரீத்தியின் அருகே சென்று,”உன்னைக் கல்யாணம் செய்துக்கணும்னு தான் என் வீட்டிலே சொன்ன எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டேன்..அதை வைச்சு நீ என்னைத் தப்பா எடை போட்டிருக்க..தகுதி இல்லாத உன் மேலே நான் அன்பு வைச்சது தான் தப்பு..என்னை நேர்லே சந்திக்க தைரியமில்லாம தானே ஃபோன்லே என்னை வேணாம்னு சொன்னே..நான் நேர்லேயே சொல்றேன்..இந்த ப்ரீத்தி எனக்கும் வேணாம்.” என்று சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
அதைக் கேட்டு பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அவளுடைய அறைக்கு ஓடிச் சென்றாள் ப்ரீத்தி.அவளைச் சமாதானம் செய்ய மீனா செல்ல, அவளுடைய அறை கதவை தாழிட்டுக் கொண்டாள் ப்ரீத்தி.உடனே, சற்று முன்பு நடந்ததைத் தெரியப்படுத்த அவர்களறையில் உறங்கிக் கொண்டிருந்த நாகேஸ்வரனை எழுப்பச் சென்றார் மீனா.
அவனுடைய அறைக்குத் திரும்பிய உமேஷை அவனுடைய கைப்பேசி அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று,
“அவளை நேர்லே பார்க்கணும்னு சொன்னீங்க..சரின்னு சொன்னேன்..நேத்து என்கிட்டே பேசினது போல அவக்கிட்டேயும் பேசி புரிய வைப்பீங்கன்னு நினைச்சேன்..இப்படி அவளை அழ வைச்சுட்டீங்களே.” என்றான் உமேஷ்.
“அழட்டும்..கொஞ்சம் கூட என்னோட இடத்திலேர்ந்து யோசிக்கலை..அவளுக்கு அப்பா, அம்மா இல்லைன்னு எனக்குத் தெரியாதா? உங்க வீட்லே அவளோட அக்காவை ஏத்துக்கலைன்னா நானும் அப்படித் தான்னு இவளா எப்படி முடிவு செய்ய முடியும்? அப்போ என்னைப் பற்றி அவ மனசுலே என்ன நினைச்சிட்டு இருக்கா? அந்தப் ப்ரீத்தியை எனக்குப் பிடிக்கலை..அதான் அவளை வேணாம்னு சொல்லிட்டேன்.” என்றான் விஜய்.
விஜய் சொல்வது உண்மை தானே.அவர்கள் வீட்டு ஆள்களின் நடவடிக்கைகளை வைத்து அவனையும் எப்படி அதே போல் நினைக்க முடியும்.ப்ரீத்தி செய்தது தவறு தான்.எப்படி இந்தக் குழப்பங்களை சரி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த உமேஷிடம்,
“இனி என் கல்யாண விஷயத்திலே யாரும் தலையிட மாட்டாங்க..எப்படி நடக்கப் போகுதுன்னு நான் தான் முடிவு செய்யப் போறேன்..ப்ரீத்தி கூட அதிலே தலையிட முடியாது.” என்றான் திட்டவட்டமாக.
“அவளோட சம்மதம் வேணாமா?”
“எல்லாம் சம்மதிப்பா..இப்போவே உங்களோட பேசவிடாம ஃபோன் மேலே ஃபோன் செய்திட்டு இருக்கா…நான் அப்புறம் உங்களோட பேசறேன்.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
“என்ன டா நடந்திச்சு? விஜய் மாப்பிள்ளை என்ன சொன்னார் டா? என்று உமேஷை விசாரித்தார், அவனறை வாசலில் பதற்றத்துடன் நின்றிருந்த நாகேஸ்வரன்.
“நம்ம வீட்டு மாப்பிள்ளைன்னு நிரூபிச்சிட்டார்..அவரோட கல்யாண விஷயத்தை அவர் தான் முடிவு செய்யப் போறாராம்..அதனாலே நீங்க கல்யாண வேலையை ஆரம்பிச்சிடுங்க..திடீர்னு ஒரு வாரத்திலே கல்யாணத்தை முடிக்கணும்னு வந்து நின்னா..முடியாதுன்னு சொல்லாதீங்க..இனிப் ப்ரீத்தி பற்றிய கவலை உங்களுக்கு வேணாம்..விஜய் பார்த்துப்பார்.” என்றான் உமேஷ்.
நிச்சயம் செய்தபடி ப்ரீத்திக்கும் விஜய்க்கும் கல்யாணம் நடக்கப் போகிறது என்றவுடன் அனைவரின் மனத்திலும் இருந்த பாரம் அகன்றது.ஆனால், ப்ரீத்திக்குத் தான் மனப்பாரம் கூடிப் போனது.அவளுடைய அழைப்புக்களை ஏற்றாலும் முன்பு போல் அவளுடன் சகஜமாக பேசுவதில்லை விஜய்.
திடீரென்று வெளிநாட்டிற்குச் சுற்றுப் பயணம் சென்றான் விஜய்.அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவனுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான்.அவளிடம் கூட தெரிவிக்காமல் அவன் சென்றது அவள் மனத்தைப் பாதித்திருந்ததால், அவனுடை புகைப்படங்கள் எந்த நகரத்தில் எடுக்கப்பட்டவை என்ற விவரம் ப்ரீத்தியின் மனத்தில் பதியவில்லை.