எப்போதும் போல் தினசரி தேவைகளான உணவு, உறக்கம் போன்றவை தங்கு தடையில்லாமல் நடைபெற்றாலும், இரண்டிலும் ஒரு முழுமையை மீனாவினால் உணர முடியவில்லை. அவருடைய மாமியார் வீட்டில் இல்லாதது வெறுமையை ஏற்படுத்தியிருந்தாலும், மனத்தில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மைக்கு அவர் காரணமில்லை என்று தெரியும். அதற்குக் காரணம் அவருடைய கைப்பேசி அழைப்புக்களை நிராகரித்துக் கொண்டிருந்த அவருடைய மகன்.
நாகேஸ்வரனிடம் உமேஷைப் பற்றி பேசினாலே, ‘என்ன நடக்கணுமோ அத்தனையும் நடந்திடுச்சு..என்னைக்குப் பேசணுமோ அன்னைக்குப் பேசாம இன்னைக்குப் பேசி என்ன ஆகப் போகுது? என்று விட்டேத்தியாகப் பேசினார்.ஜெயந்தியிடமிருந்து உமேஷைப் பற்றி எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.அவளுக்கே தெரியவில்லையா? இல்லை அவருக்குத் தெரிவிக்க விரும்பவில்லையா? என்று புரியவில்லை.ப்ரீத்தியிடம் எதையும் பேச முடியாமல், திடீரென்று, தயக்கம் முளைத்திருந்தது.இப்படியே நாள்களைக் கடத்திக் கொண்டிருந்த மீனாவிடம்,
“நாளைக்கு நானும் ப்ரீத்தியும் சென்னைக்குப் போறோம்..ஒரு நாள் தங்கிட்டு அடுத்த நாள் திரும்பிடுவோம்.” என்றார் நாகேஸ்வரன்.
ஏன்? என்று சொல்லாமல், இந்தத் தகவல் எதற்கு? என்று குழப்பமடைந்தார் மீனா.அதனால், அன்றிரவு, கடையிலிருந்து திரும்பிய ப்ரீத்தியிடம்,
“எதுக்கு ஒரு நாளைக்குச் சென்னைக்குப் போறீங்க?” என்று கேட்டார்.
“அண்ணி வெளிநாடு போறாங்க.” என்று நாகேஸ்வரனை விட ஒரு வரி கூடுதலாக தகவல் கொடுத்தாள்.ஆனால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று மீனாவிற்குத் தெரியவில்லை.சென்னைக்குச் சென்ற பிறகு அவருடைய மாமியார் அவரிடம் பேசவில்லை. இவரும் அவருடன் பேச முயலவில்லை.எத்தனை முயன்றும் மகனிடம் பேச முடியவில்லை.மகனைப் பற்றிய யோசனையில் இவர் இருக்க, மகனோ வேறு யோசனைகளில் இருந்தான்.
உமேஷைத் தவிர வேறு யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் சிந்திக்க உமாவிற்கு நேரம், வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவளுக்கு அத்தகைய அவகாசம் கொடுக்கக் கூடாது என்று கவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான் அவளுடைய கணவன். கல்யாணம் என்ற நிகழ்வைப் பற்றி அவள் யோசித்ததேயில்லை.அவளுடைய சூழ் நிலையில், அதைப் பற்றி யோசிப்பது கூட கால விரயமென்று எண்ணிக் கொண்டிருந்தவளின் யோசனை முழுவதும், இப்போது, அவளுடைய கணவன் தான் வியாபித்திருந்தான்.
ஆழ்க் கடலே அமிழ்ந்து போகும் இடமாக , அமைதியே ஏங்கும் ஏகாந்தமாக,உமாவின், உமாவிற்குச் சகலமுமாகிப் போயிருந்தான் உமேஷ்.எப்போதும், பேரன், பேத்தி இருவரைப் பற்றிய யோசனையில் இருந்த பார்வதியின் முன், எப்போதும் போல், அமைதியாக வளைய வந்து கொண்டிருந்தாள் உமா.உமேஷிடமும் அவரிடமும் ஒரே போல் நடந்து கொண்டதால், உமாவின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம் பார்வதியின் கண்களுக்குப் புலப்படவில்லை. உமாவின் செய்கையில் ஏதாவது மாற்றம் தென்படுமா? அவருடன் நெருக்கம் ஏற்படுமா? என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார் பார்வதி.
அதனால், மதுரையில் நடந்ததைப் பற்றி அவளுடன் பேச அவருக்குத் தயக்கமாக இருந்தது.அவளுடைய மனத்தில் இருப்பதை எப்படித் தெரிந்து கொள்வது? என்று அவருக்குப் பிடிபடவில்லை. ஒருமுறை, உமேஷிடம், தனிமையில் அதைப் பற்றி பேசிய போது,
“அவ என்ன நினைக்கறான்னு நீங்க ஏன் தெரிஞ்சுக்கணும்? அப்படியே அவ மனசிலே இருக்கறதை உங்ககிட்டே சொல்லிட்டாலும்..அம்மா செய்ததை எப்படி நியாயப்படுத்துவீங்க? இங்கே, அவ வீட்லே அவளுக்குத் தேவையானது எல்லாம் இருக்கு..அவளுக்குச் சாப்பாடு, துணி எதுவும் வேணாம்னு அவ சொன்ன போது எனக்கு எவ்வளவு வேதனையா இருந்திச்சு தெரியுமா? அவ என்னோட மனைவி ..உங்களை மாதிரி, அம்மா மாதிரி நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திருக்கா..உங்க இரண்டு பேருக்கும் அந்த வீட்டிலே என்ன உரிமை இருக்கோ அது தானே அவளுக்கும் இருக்கு…
அப்படி அவ சொன்ன பிறகு, ஒரு நிமிஷம் கூட நம்ம வீட்லே இருக்க எனக்குப் பிடிக்கலை..நல்லவேளை, அன்னைக்கு அவளுக்கும் அதெல்லாம் நினைவுலே இல்லை..இருந்திருந்தா அந்த நிலைலே கூட நம்ம வீட்லே ஒரு பிடி சோறு சாப்பிட்டிருக்க மாட்டா..எதுக்கு என்னோட வீட்டைக் காலி செய்திட்டு இங்கே வந்தேன்னு நினைக்கறீங்க..என்னோட வீட்டுக்கும் வர மாட்டேன்னு அவ சொல்லியிருந்தா நான் என்ன செய்திருக்க முடியும்? அதனாலே தான் அவளோட, அவ வீட்லே இருந்துகிட்டு அவ தான் எனக்கு முக்கியம்னு அவளுக்குப் புரிய வைச்சிட்டு இருக்கேன்…
அவ வெளிநாடு போன பிறகும், இதே வீட்லே தான் இருக்கப் போறேன்..என்னைப் புரிஞ்சிகிட்டு, என் மேலே நம்பிக்கை வைச்சு அவளா நம்ம வீட்டுக்கு போகலாம்னு சொல்லணும்..அன்னைக்குத் தான் நம்ம வீட்டு ஆளுங்களோட சொல், செயலைக் கடந்திட்டான்னு சொல்ல முடியும்..அந்த நம்பிக்கை கடைசி வரை வரலைன்னா? வரலை தான்….அப்புறம் நானும் இங்கேயே அவளோட இல்லை அவ எந்த ஊருக்குப் போகறாளோ அங்கே அவகூட..எந்த நிலைலேயும் அவளைக் கட்டாயப்படுத்த மாட்டேன்.” என்றான் உமேஷ்.
அதைக் கேட்டு அதிர்ச்சியான பார்வதி,”டேய்..என்ன டா இப்படி சொல்ற?உங்கம்மாக்கு ஏதோ கிறுக்குப் பிடிச்சிருக்கு..கொஞ்ச நாள்லே சரியாகிடுவாடா..உன்னோட தாத்தவைப் பற்றி கவலைப்படாத..அவரை நான் பார்த்துக்கறேன்.” என்றார் பார்வதி
“பத்து வயசுலே அவளை விட்டிட்டு ப்ரீத்தியை மட்டும் அழைச்சிட்டு வந்திருக்கீங்க..அது அத்தனை ஆழமா அவ மனசுலே பதிஞ்சு போயிருக்கு..எங்க கல்யாணம் முடிஞ்ச பிறகும் அப்பாவை ப்ரீத்தி மாமான்னு கூப்பிடறா..அவளாலே யாருக்கும் எந்தக் கஷ்டமும் வேணாம்னு சொல்றா..அவளுக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும் நான் இருக்கேன்னு அவகிட்டே வேற எப்படி சொல்லுவேன் பாட்டி..அவகூட இருந்து தானே நான் அதை அவளுக்குப் புரிய வைக்க முடியும்…
அவ வெளிநாட்டுக்குப் போன பிறகு, எப்போவும் போல, வாரா வாரம் மதுரைக்கு வருவேன்..அவ திரும்பி வந்த பிறகு எப்போ முடியுதோ அப்போ தான் வருவேன்..நீங்க ஊருக்குப் போயிட்டு முதல்லே ப்ரீத்தி கல்யாணத்தை முடிங்க..மற்றதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றான் உமேஷ்.
“மாப்பிள்ளை வீட்லே ஒத்துக்கிட்டா ஆறு மாசத்துக்குள்ளே நல்ல காரியம் செய்யலாம் டா.” என்றார் பார்வதி.
“அப்பாகிட்டே பேச சொல்லியிருந்தேன்..பேசினாரான்னு தெரியலை..ஃபோன்லே கடையைப் பற்றி தான் பேசறோம்..வேறு எதுவும் பேசறதில்லை..உமாவை வழியனுப்ப அப்பாவும் ப்ரீத்தியும் வரேன்னு சொல்லியிருக்காங்க..அவங்களோட நீங்க போயிடுங்க..இரண்டு நாள் பொறுத்து நான் வரேன்.” என்றான் உமேஷ்.
“ஏன் டா, இப்போ அவ அந்த ஊருக்குப் போயே ஆகாணுமா?..அதே வேலையை இங்கேயிருந்து செய்ய முடியாதா?”
“அவ கண்டிப்பா போகணும்..அவளுக்குக் கிடைச்சிருக்கற வாய்ப்பை எதுக்கு அவ விட்டுக் கொடுக்கணும்.”
“உன்கிட்டே காசு பணத்துக்கு என்ன டா குறைச்சல்? அன்னைக்கு அந்த மீரா பொண்ணு வந்து நிறைய பணம் கிடைக்கும் பாட்டி..என் புருஷன் தான் என்னைப் போக விடமாட்டேங்கறார்ன்னு என்கிட்டே அழுதிட்டுப் போனா.”
“திவாகர்கிட்டே பேசி நான் தான் சம்மதிக்க வைச்சேன்.” என்று பார்வதிக்குப் பதில் சொன்ன உமேஷின் மனது அவனுக்கும் திவாகருக்கும் இடையே நடந்த உரையாடலுக்குச் சென்றது.
மீராவிற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை அவள் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று அவனுக்குப் புரியவில்லை. ‘உங்களைப் போல படிச்ச, உங்களைப் போல சம்பாதிக்கற பொண்ணு உங்களுக்கு மனைவியா வரணும்.ஆனா, உங்களுக்கு கிடைக்கறது போல வேலை வாய்ப்புக்கள் அவங்களுக்குக் கிடைச்சா, உங்களுக்கு மனைவி, உங்களோட குழந்தைக்கு அம்மாங்கறதுனாலே அதை அவங்க விட்டுத் தரணும். அப்போ எதுக்கு அந்த மாதிரி தகுதியோட இருக்கற பொண்ணைக் கல்யாணம் செய்துகிட்டீங்க?’ என்று திவாகரிடம் கேட்டான் உமேஷ்.
‘என்னாலே எப்படிப் பிரஷாந்தைத் தனியாப் பார்த்துக்க முடியும்?’ என்று மீராவிடம் சொன்ன அதே காரணத்தை உமேஷிடமும் சொன்னான் திவாகர்.
‘நீங்க வெளிநாட்டிற்குப் போன போது அவங்க தனியா தானே எல்லாத்தையும் சமாளிச்சாங்க..நீங்களும் அதே போல செய்யலாமே..இந்தப் பயணத்திற்குப் பிறகு உங்க இரண்டு பேராலே எது முடியும்? எது முடியாதுன்னு தெளிவாத் தெரிஞ்சிடும்..அதற்காகவாவது இந்த வாய்ப்பை மீரா கண்டிப்பா உபயோகப்படுத்திக்கணும்.’ என்று விளக்கியவுடன்,’ஸர்..ரொம்ப நன்றி..இந்த மாதிரி நான் யோசிக்கலை.’ என்று உமேஷிற்கு நன்றி தெரிவித்தான் திவாகர்.
அந்தச் சிந்தனைகளில் ஊழன்று கொண்டிருந்த உமேஷை நடப்பிற்குக் கொண்டு வந்தார் பார்வதி.
“நீ சம்பாதிக்கற பணம் உமாவோடது தானே டா..புருஷனோடது பொண்டாட்டிக்கு தானே..நீ எடுத்துச் சொல்லலாமில்லே அவளுக்கு.”
“அவளா அதை உணரனும் பாட்டி..அவ மனசுலே என்ன இருக்குன்னு நமக்குத் தெரியுமில்லே..அவளுக்கு அவளோட வீடும், அவளோட பணமும் தான் பாதுகாப்பான உணர்வை கொடுக்கும்னா..அதைத் தகர்க்க நான் முயற்சி செய்யக் கூடாது…
இத்தனை நாளாநம்ம வீட்டைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி ஒருமுறை கூட கேட்கலை..அந்த நினைப்பை தள்ளி வைச்சிருக்கா..இந்தப் பயணத்திலே அதைப் பற்றி சிந்திக்க அவளுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்..அவத திரும்பி வந்த பிறகு எந்த முடிவு எடுத்தாலும் அதை நாம தைரியமா ஏத்துக்கணும்.” என்று பேரனே அவனைத் தைரியப்படுத்திக் கொண்டதைப் பார்த்து பார்வதிக்கு அவருடைய கணவர், மருமகள் மீது கட்டுக்கடங்கா கோபம் ஏற்பட்டது.
சென்னை வந்த பின், ஒரேயொரு முறை ஜெயந்தியுடன் பேசியிருக்கிறாள் உமா.அவள் வெளிநாட்டிற்குப் போகும் தேதி உறுதியானவுடன், உமேஷிடம் பேசிக் கொண்டிருந்த ஜெயந்தி, திடீரென்று உமாவிடம் ஃபோனைக் கொடுக்கச் சொல்லி, அவளுக்கு வாழ்த்துத் தெரிவித்தாள்.ப்ரீத்தியோடு பலமுறை பேசியிருக்கிறாள் உமா. மாமனார், மாமியார் இருவருடனும் ஒருமுறை கூட பேசவில்லை.
நாகேஸ்வரனும் ப்ரீத்தியும் உமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது நண்பகல் பன்னிரெண்டு மணி. அவர்களை,”வாங்க..வா ப்ரீத்தி.” என்று வரவேற்ற பின் சமையலறைக்குச் சென்று விட்டாள் உமா.
ஒரு பெட்டியுடன் வந்திருந்த ப்ரீத்தியிடம்,”என்ன ஒரு நாளைக்கு இத்தனை பெரிய பெட்டியைத் தூக்கிட்டு வந்திருக்க?” என்று கேட்டான் உமேஷ்.
அவளிடமிருந்து பதில் வரவில்லை. உடனே,”என்ன ப்பா, வியாபாரத்தைக் கத்துக்கறாளா? இல்லை இப்படிக் கடையை காலி செய்திட்டு இருக்காளா?” என்று கேலியாகக் கேட்டான்.
அப்போது, அவருடைய அறையிலிருந்து வெளியே வந்த பார்வதி,”என்ன டா இவ்வளவு லேட்டாயிடுச்சு?” என்று விசாரித்தார்.
“பாட்டி, இனி நான் தான் உங்களுக்கு டிரைவர்..எங்கே போகணும்னு சொல்லுங்க..வண்டிலே பறந்து போயிடலாம்.” அதற்கு,
“உன்னோட அண்ணி பறந்து போன பிறகு..என்னை நம்ம வீட்லே கொண்டு போய் விட்டிடு.” என்றார்.
“அதுக்கு தானே வந்திருக்கேன்..அதுக்கு முன்னாடி நாங்க கொண்டு வந்திருக்கறதை அண்ணிகிட்டே கொடுத்திடறேன்.” என்றாள் ப்ரீத்தி.
அனைவரையும் சாப்பிட அழைக்க வந்த உமாவிடம்,”அண்ணி, உங்களுக்காக.” என்று பெட்டியைத் திறந்து காட்டினாள்.அதனுள்ளே விதவிதமான உடைகள்.
“உனக்காகஸ்பெஷலா ப்ரீத்தியே பார்த்து பார்த்து ஸெலெக்ட் செய்திருக்கா ம்மா.” என்றார் நாகேஸ்வரன்.
அவளுடைய பெட்டியைப் பேக் செய்து இரண்டு நாள்களாகி விட்டது.மீராவுடன் கடைக்குச் சென்று, அவர்கள் இருவரும் கலந்தாலோசித்து தேவையானதை வாங்கிக் கொண்டார்கள்.திவாகருடன் தனியாகவும் ஷாப்பிங் செய்தாள் மீரா. ஆனால், அவளுக்கு ஏதாவது வேண்டுமா? தேவைப்படுமா? என்று உமேஷிடமிருந்து ஒரு வார்த்தை, விசாரிப்பு இதுவரை வரவில்லை.மதுரை வீட்டில் நடந்தது இன்னும் அவள்நினைவிற்கு வரவில்லை. அதனால், அவனிடம் மட்டும் அவளுடைய அனைத்தையும் பகிர்ந்து கொள்பவளுக்கு, அவனுடைய இந்த ஒதுக்கத்திற்குக் காரணம் தெரியவில்லை. ஒருவேளை, அவள் வெளிநாட்டிற்குப் போவது பிடிக்கவில்லையோ? என்ற எண்ணத்தைத் தகர்த்தது, மீராவிற்காக திவாகரிடம் பேசி அவனை ஒப்புக் கொள்ள வைத்தது.
அந்த அறையில் இருந்த நால்வரும் அவளுடை எதிர்வினைக்காக படபடப்புடன் காத்திருக்க, குனிந்து, பெட்டியிலிருந்த சில உடைகளை ஆசையோடு எடுத்துப் பார்த்தவள்,”நான் ஏற்கனவே பேக் செய்திட்டேனே ப்ரீத்தி.” என்றாள்.
“நோ பிராப்ளம் அண்ணி..சாப்டிட்டு எனக்கு வேற என்ன வேலை?” என்றாள் ப்ரீத்தி.அதே போல், சாப்பிட்டு முடித்தவுடன், பார்வதியையும் அவர்களுடன் மாடிக்கு அழைத்துச் சென்றனர் உமாவும் ப்ரீத்தியும். விருந்தினர்கள் அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு வந்தார் நாகேஸ்வரன். வரவேற்பறையில் அமர்ந்து அவனுடைய மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் உமேஷ்.