“இப்போ சொல்லப் போறியா இல்லையா யாதவ்? உனக்கு எப்படி தெரியும்?” என்றான் மீண்டும்.
“அ..அது..! ஷூட்டிங் ஸ்பாட்ல ஆக்சிடென்ட் ஆகி, நீ சென்னை திரும்பி வந்து ஹாஸ்பிட்டல்ல இருந்தல்ல, அப்போ” என்றான் யாதவ்.
“அப்போவேவா?” என்று அதிர்ந்த தேவ்,
“எப்படி தெரியும்?” என்றான்.
“அதுக்கு முன்னமே ஒருத்தன் உன்னைத் தேடி வந்து வீட்டு வாசல்ல கிடையா கிடந்தான். உன்னைப் பார்க்கணும், உன்கிட்ட பேசணும்னு. நான் ஏதோ உன்னோட ரசிகன் தான் அப்படி தொந்தரவு பண்றான்னு, ஆளை வச்சு அடிச்சு விரட்டிட்டேன்” என்று யாதவன் சொல்ல,
“எங்க இருந்து வந்தேன்னு சொன்னான்?” என்றான் தேவ்.
“அது” என்று யோசித்த யாதவன்,
“அது ஞாபகம் இல்லை” என்றான்.
“அப்பறம்?”
“நீ ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ உன்னோட நம்பருக்கு ஒரு பொண்ணு கால் பண்ணுச்சு” என்றான் திக்கித் திணறி.
“என்ன சொல்ற?” என்று அதிர்ந்தவனின் கை அவன் சட்டையை இறுகப் பிடித்ததில் இருந்து தளர,
“என்ன சொன்னா?” என்றான் தேவ்.
யாதவன் அந்த நாளுக்கே சென்றான்.
“என்ன யாதவா இப்படி நடந்திடுச்சு? உங்கப்பா இறந்த துக்கமே முடியலை. அதுக்குள்ள தேவ்க்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. எனக்கு பயமா இருக்குப்பா” என்று சிவகாமி புலம்பிக் கொண்டிருக்க,
“அவனுக்கு பெரிய அடியெல்லாம் இல்லம்மா. அங்க இருந்த ஹாஸ்பிட்டல்லயே செக் பண்ணிட்டாங்க. இங்கயும் பர்தரா ஒரு செக்அப் முடிச்சுட்டா நல்லா இருக்கும்னு பீல் பண்ணித்தான் இங்க வந்திருக்கோம். பிராக்சர் எதுவும் இல்லைன்னாலும் ஸ்கேன் பண்ணிடுறது நல்லது தான?” என்று யாதவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, கையில் இருந்த தேவ்வின் போன் அலறியது.
“மை வோர்ல்ட்” என்று பெயர் வர,
“யார் இது?” என்ற யோசனையுடன் போனை எடுத்தான் யாதவ்.
அவன் ஹலோ கூட சொல்லவில்லை. எதிர்புறத்தில் கதறிக் கொண்டிருந்தாள் ஆரா.
“ஜெய் எங்க போனிங்க ஜெய்? ஏன் இத்தனை நாளா ஒரு போன் கூட பண்ணலை. இத்தனை மாசம் எப்படி ஜெய் என்கிட்டே பேசாம இருந்திங்க. எதுக்கு கடைசி வரைக்கும் உங்க முகத்தை காட்டாமையே போனிங்க? நான் என்ன பண்ணேன்? என் மேல் என்ன கோபம் உங்களுக்கு? தினமும் உங்களுக்கு டயல் பண்ணி பண்ணி நான் ஓய்ஞ்சுட்டேன் ஜெய். ஏதாவது பேசுங்க” என்று எதிரில் அவள் கதறிக் கொண்டிருக்க, இங்கு யாதவுக்குத் தான் அதிர்ச்சியாய் இருந்தது.
“ஹோ..! அதான் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கானா?” என்று நினைத்த யாதவன்,
“நான் ஜெய் இல்லமா” என்றான்.
அவனின் குரலில் நிதானித்தவள்,
“சாரிங்க..! நீங்க” என்றாள்.
“நான் ஜெய் அண்ணன்” என்றான்.
“அவர் எங்க? அவர்கிட்ட போனை குடுங்க நான் பேசணும்” என்றாள்.
“நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றிங்களா?” என்றான்.
கொஞ்சம் தயங்கியவள்,
“ஆமா..!” என்றாள்.
‘அப்பா இறந்து இப்பத்தான் இவன் பீக்ல வர ஸ்டார்ட் பண்ணியிருக்கான். இவ்வளவு கடனையும் இவனை வச்சுத்தான் கட்டி முடிக்கணும். இந்த நேரத்துல இவன் லவ்வு கல்யாணம்னு போய்ட்டா, இதையெல்லாம் அடைக்கிறது யாரு?’ என்று யோசித்த யாதவன், சிவகாமியை விட்டு கொஞ்சம் தள்ளி வெளியே வந்தான்.
“ஹலோ இருக்கிங்களா?” என்று ஆரா அத்தனை முறை கத்திவிட்டாள்.
“அதும்மா..! உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை, ஆனா” என்று அவன் தயங்குவது போல் தயங்க,
“என்னன்னு சொல்லுங்க பிளீஸ்” என்றாள்.
“ஜெய்க்கு நடந்த ஆக்சிடென்ட்ல அவன் இப்போ உயிரோடவே இல்லம்மா. நீ அவனை நினைச்சு கவலைப் படுறதை விட்டுட்டு, உனக்குன்னு வேற வாழ்க்கையை தேடிக்கிற வழியைப் பாரு” என்றான் அவள் நம்பும் படியான பேச்சில்.
“நீங்க பொய் சொல்றிங்க?” என்ற ஆரா அழ ஆரம்பிக்க,
“என் தம்பி இறந்துட்டான்னு நான் எப்படிமா பொய் சொல்லுவேன். அதனால எனக்கு என்ன கிடைக்கப் போகுது சொல்லு?” என்றான்.
“நீங்க எங்க இருக்கீங்க? நான் வந்து பார்க்குறேன்” என்றாள் அப்போதும் விடாமல்.
“நீங்க பொய் சொல்றிங்க. நான் நம்ப மாட்டேன்” என்று அவள் கத்தி அழ,
“அதுக்கு மேல நம்புறதும் நம்பாததும் உன்னோட விருப்பம்மா” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே பின்னால் வந்தார் சிவகாமி.
“என்னாச்சுப்பா? யார் போன்ல” என்றார்.
“அதும்மா நம்ம ஜெய்க்கு தான் போன்மா..! அவனுக்கு நடந்ததைப் பத்தி விசாரிக்கிறாங்க” என்றான் யாதவன்.
“என்னவோப்பா என் பையனுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்” என்ற சிவகாமியின் குரலில் எதிர்புறம் இருந்தவள் உடைந்துவிட்டாள்.
“அப்போ நிஜமாவே ஜெய் இறந்துட்டாரா?” என்று எண்ணியவள், அழுது கொண்டே போனை வைத்துவிட்டாள்.
“அது என்ன யாதவா? புதுசா அவனை ஜெய்ன்னு சொல்ற? நம்ம தேவ்னு தான கூப்பிடுவோம்” என்று சிவகாமி கேட்க, யாதவனோ வேகமாய் செல்லைப் பார்த்தான். நல்ல வேளையாக அவள் கட் செய்திருந்தாள்.
“அது பேசுனவங்க அவன் பிரண்ட் போலம்மா..! ஜெய்ன்னு சொல்லித்தான் பேசுனாங்க” என்றவன் கால் ஹிஸ்டரியை டெலிட் செய்தான்.
அங்கு ஆராவோ கேட்ட விஷயத்தில் செல்லைத் தூக்கி சுவற்றில் அடிக்க, அது சுக்கு நூறாகி உடைந்திருந்தது.
யாதவ் சொன்னதை கேட்ட தேவ் முழுவதுமாக உடைந்து விட்டான்.
‘நீங்க செத்துட்டிங்கன்னு நான் சொல்லலை’ என்ற மித்ராவின் குரல் தான் அவன் காதில் கேட்டது.
“கூடப் பிறந்தவனை, உயிரோட இருக்கும் போதே செத்துட்டான்னு சொல்லியிருக்க? என்ன மனுஷன்டா நீயெல்லாம்?” என்று அவன் முகத்தில் காரி உமிழாத குறையாக கேட்க,
“உனக்காகத் தான் பண்ணேன். அதனால தான் இன்னைக்கு ஆரண்யா மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைச்சிருக்கா. அப்படிப் பார்த்தா உனக்கு நான் நல்லது தான் பண்ணியிருக்கேன்” என்றான் யாதவ் அப்போதும் விடாமல்.
அவனை சுவற்றோடு தள்ளி தூக்கிப் பிடித்திருந்தான் தேவ்.
“என்னை விடுடா!” என்று அவன் திணற, ஒரு கட்டத்தில் முகத்தில் இருந்த அத்தனை உணர்ச்சிகளையும் துடைத்தெறிந்தபடி, அவனை பட்டென்று கீழே விட்டவன்,
“உன்னோட சுயநலத்துக்காக பண்ணேன்னு சொல்லு” என்றான்.
வெளியே அவர்கள் கதவைத் தட்டிக் கொண்டிருக்க, பட்டென்று கதவைத் திறந்தான் தேவ்.
“என்னாச்சு? என்ன பண்ணிங்க?” என்றாள் பதட்டமாய்.
சாருவோ அங்கிருந்த யாதவின் நிலை கண்டு கத்தத் துவங்கினாள்.