கோபத்தில் கண்களை உருட்டினாள் அந்த பெண் சுசீ. திருமணமாகாத பெண் தான். இருந்த போதும் அவள் அணிந்திருந்த நகைகளைப் பார்க்கும் போதே கண்களைக் கட்டியது மலர்விழிக்கு.
“ஹேய் சுசீ… கழுதைன்னா அழகிய இளம் பெண். அப்போ நீ கழுதை இல்லையா?” கூடியிருந்த இளம்பெண்களில் ஒருத்தி வம்பு செய்ய, கொல்லென்ற சிரிப்பு சத்தம் எழுந்து அடங்கியது.
“அப்படின்னா, சரி டீ கழுதைங்களா.” அந்தப் பெண் சுசீ பதிலுக்கு சொல்ல, மறுபடியும் சிரிப்பு அலை அறையில்.
மலர்விழியின் இதழ்கள் கூட அந்த பெண்களின் அலம்பலில் புன்னகையில் விரிந்தது.
“பொண்ணை தயார் செய்து விடச் சொன்னா, இங்க என்னங்கடி நடக்குது? சிரிப்பு சத்தம் வாசல் வரைக்கும் கேக்குது?” என்றபடியே அறைக்குள் வந்த பெண்மணி, ஜெயந்திக்கு அலங்காரம் செய்ய உதவி செய்து கொண்டிருந்த மலர்விழியைப் பார்த்து,
“இது யாரு?” என்றார் முகத்தைச் சுருக்கி.
“டீச்சர், நம்ம ஊர்ல தான் தங்கியிருக்காங்க அத்த.” மெதுவாக பதில் சொன்னாள் ஜெயந்தி.
ஆமாம்… அந்த பெண், குமாரசாமியின் உடன்பிறந்த தங்கை கஸ்தூரி. சுசீ என்ற சுசீலா அவருடைய மகள்.
“கூறு கெட்டவளே, நீ நிக்க வேண்டிய இடத்துல வேற ஒருத்தி நின்னுட்டு இருக்குறா, நீ பல்லைக் காட்டிட்டு இருக்கியா?” கோபத்தில் மகளிடம் சாடினார் கஸ்தூரி.
“அண்ணி தான் இவங்களை ஹெல்ப் பண்ண சொல்லிட்டு போனாங்க ம்மா.” பவ்யமாக பதில் வந்தது சுசீலாவிடமிருந்து.
“அவ சொன்னா, உனக்கு எங்க டி போச்சு அறிவு?” என்றவர், “நீ எல்லாம் ராகவனை கல்யாணம் பண்ணிட்டு எப்படி தான் இந்த வீட்டுல குப்பகொட்ட போறியோ?” என்று சத்தமாகவே முணுமுணுத்தார்.
கஸ்தூரி வந்தவுடன் சொன்ன வார்த்தைகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்த மலர்விழிக்கு, சிரமம் கொடுக்காமல் பதிலையும் அவரே சொல்லிவிட, அதிர்ந்து போனாள் மலர்விழி.
தன் மனம் விரும்புபவனுக்கு திருமணத்திற்கு பெண் தயாராக இருக்கிறது என்ற தகவல், எந்த பெண்ணுக்கு தான் உவப்பானதாக இருக்கும்?
‘தான் அங்கே அதிகப்படியோ?’ என்ற எண்ணம் மழைக்கால காளானாய் மலர்விழிக்கு தோன்ற, ஆமாம் என்றது அங்கு வந்த ஆனந்தியிடம், கஸ்தூரி பேசிய பேச்சு.
“கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளையும் பெத்தாச்சு, இன்னும் நம்ம வீட்டு நடப்பு எதுவும் உனக்கு தெரியல. உன் வருங்கால தம்பி பொண்டாட்டி தான் உங்கண்ணுக்கு தெரியலைன்னாலும், இந்த ரூம் முழுசும் இருக்குற நம்ம பிள்ளைங்கள்ல யார்கிட்டயாவது பொறுப்பை ஒப்படைச்சிட்டு போக வேண்டியது தானே. யாரோ, எவரோ, எந்த குலமோ, கோத்திரமோ. ஆள் அழகா இருந்தா மனையில ஏத்திடுவியோ? என்று ஆனந்தியிடம் சண்டைக்கு சென்றார் கஸ்தூரி.
“அத்த… அந்த பிள்ளையை வச்சிகிட்டே என்ன பேசுறீங்க?” அவஸ்தையான குரலில் கேட்டாள் ஆனந்தி.
“நல்லா கேக்கட்டுமே. இப்போ, என்ன வந்து போச்சி? இனிமேலாவது யாராவது இப்பிடி பெருந்தன்மையா அழைப்பு வச்சா, பந்தலோட இருந்துட்டு போகணும். இப்படி தொறந்த வீட்டுக்குள்ள…” என்றவர் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், “நுழையக் கூடாதுன்னு தெரியும்ல” என்றார், அலட்சியமாக உதட்டைச் சுழித்து.
அவருக்கு, மகள் நிற்க வேண்டிய இடத்தில் திருத்தமான தோற்றத்தோடு நின்றிருந்த மலர்விழியைக் கண்டதும், ஏதோ ராகவனே கைவிட்டுப் போனது போல ஒரு கோபம். அவருடைய கற்பனைக்கே இப்படியொரு ஆர்ப்பாட்டம் என்றால், மலர்விழியின் இதயச்சிறையில் ராகவன் ஆயுள் கைதியாகி வருடங்கள் பல கழிந்து விட்டன என்ற உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ?
தங்கள் திருமணத்திற்கு பிறகு அவமானம், அலட்சியப்படுத்துதல், எல்லாம் தனக்கு வெகுமானமாக ராகவனின் குடும்பத்தாரிடமிருந்து கிடைக்கும் என்று மலர்விழிக்கு தெரியும் தான்.
அதற்காக, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அமைதியாக போகவேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லையே. எனவே, கஸ்தூரிக்கு அருகில் வந்த மலர்விழி அடிக்குரலில்,
“கொஞ்சம் யோசிச்சு பாத்தா, நீங்க சொல்லாம விட்ட உயிர் போல நடந்துக்கிறது நீங்க தான்னு நல்லாவே புரியும். சத்தத்தை கொஞ்சம் குறைங்க, சுத்தியிருக்குறவங்க பயந்துடப் போறாங்க” என்றாள் நையாண்டியாக.
அவ்வளவு தான்… “ஏய்… என்னை நாயின்னு சொல்லுறியா?” அவர் சொல்லும் உயிரினம் அடிபட்டு கத்தியது போலவே கத்தினார் கஸ்தூரி.
“புரிஞ்சா சரி.” அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்லியபடியே அறையை விட்டு வெளியேறினாள் மலர்விழி.
கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்ததில் மலர்விழியின் மனம் கொஞ்சம் திருப்தியாக உணர்ந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக, ராகவனோடு இணை சேர்த்து பேசும் போது, அந்தப்பெண் சுசீலா கண்களில் வந்து போன நாணம் அவளை அலைப்புறச் செய்தது.
‘ஒரு பெண்ணின் அழுகையிலா எங்களுடைய காதலை நிறைவேற்றிக் கொள்ள போகிறோம்?’ யோசிக்கும் போதே பைத்தியம் பிடித்தது போல இருந்தது.
அதற்கு மேலும் அங்கேயிருக்க மனமின்றி, வெளிவாசலை நோக்கி நடந்தாள் மலர்விழி. அந்த நேரம் மாப்பிள்ளை வீட்டாரும் வந்து இறங்க, ராகவனால் அவளிடம் எதுவும் கேட்க முடியவில்லை.
எப்படி வீட்டுக்கு வந்தாள் என்று மலர்விழியிடம் கேட்டால், அவளுக்கே தெரியாது. ஆனால் வந்திருந்தாள். புடவையைக் கூட மாற்ற மனமின்றி அப்படியே கட்டிலில் சரிந்தாள் மலர்விழி.
‘என்ன செய்ய போகிறேன்?’ மனமெங்கும் யோசனை. ராகவனின் இடைவிடாத அழைப்புகளையும் எடுக்கவில்லை. அவன் வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த செய்திகளையும் திறந்து பார்க்கவில்லை.
நேரம் தான் சென்றதேயொழிய முடிவு கிடைக்கவில்லை. சோர்ந்து போய் கிடந்தவளின் காதுகளில் கதவு திறக்கும் சத்தத்தோடு, “மலர்…” என்ற ராகவனின் அழைப்பும் கேட்க, ‘இங்கே எப்படி?’ என்பது போல காதுகள் கூர்மையாகின.
“மலர்விழி…” தன் அறைவாசலில் இப்போது சத்தம் கேட்கவும், அடித்துப் பிடித்து எழும்பினாள் மலர்விழி. ராகவன் நின்றிருந்தான். நம்பமுடியாமல் கண்களை அழுந்த மூடித்திறந்தாள். அப்போதும் அங்கேயே தான் நின்றிருந்தான்.
உண்மையிலேயே ராகவன் வந்துவிட்டான் எனத் தெரியவும், “என்ன காரியம் செய்து வச்சிருக்கீங்க நீங்க? இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?” என்றாள் பதறிப்போனவளாக.
இந்த சிலமணி நேரத்திலேயே வாடிப்போயிருந்த மலரை, ஆழ்ந்து பார்த்தபடி, “என்னாச்சு மலர்? எதுக்காக உடனே வந்துட்ட? நான் ஃபோன் பண்ணப்பண்ண நீ ஏன் எடுக்கல?” கேள்விகளை சரமாரியாக வீசினான் ராகவன்.
ஜெயந்தியின் நிச்சயதார்த்தம் முடிந்து, சாப்பாடு பந்தி ஆரம்பிக்கும் வரை அங்கேயே நின்றிருந்த ராகவனை, மலர்விழியின் சோர்ந்த முகம் அதற்கு மேலும் பொறுமையாக அங்கே நிற்க விடவில்லை. அதோடு அவனுடைய அழைப்புகளையும் மலர்விழி எடுக்கவில்லை என்றதும், யாருடைய கவனத்தையும் கவராமல் மலர்விழியின் வீட்டுக்கு வந்துவிட்டான்.
கைகளை கட்டிக்கொண்டு தன்னையே கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தவன் தன்னிடமிருந்து பதில் வாங்காமல் விடமாட்டான் எனத்தெரிந்து, “கொஞ்சம் தலைவலியா இருந்தது, அதான் வந்துட்டேன்.” வாயில் வந்ததை சொன்னாள் மலர்.
அவனோ, “இவ்வளவு நேரத்துக்குள்ள, நீ சோர்ந்து போற அளவுக்கு தலைவலின்னா, அதை அலட்சியமா நினைக்கக் கூடாது. வா, ஹாஸ்பிடல் போலாம்” என்றான் உறுதியான குரலில். இவ்வளவு ஏன்? விட்டால் தூக்கிக்கொண்டே சென்றுவிடுபவன் போலத்தான் நின்றிருந்தான்.
‘ஐயோ… சூழ்நிலை தெரியாமல் வதைக்கிறானே.’ மனதிற்குள் புலம்பிய மலர்விழி,
“ஊரே, உங்க வீட்டுல இருக்கு. நீங்க போங்க, நாம இதப்பத்தி பிறகு பேசலாம்” என்றாள் கெஞ்சலாக.
“வந்துட்டேன்ல, என்ன ஆனாலும் பரவாயில்லை, பேசிட்டே போறேன்.” அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தவன், மலர்விழியின் பேச்சில்லா மௌனத்தில், “யாரும், எதுவும் சொல்லிட்டாங்களா மலர்?” என்றான் தென்றலாய் வருடும் குரலில்.
“இல்ல.” அவசரமாக தலையை ஆட்டினாள் மலர்.
மலர்விழி இல்லை என்று சொன்னாலும், வீட்டில் ஏதோ நடந்திருக்கிறது என்று ராகவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. இல்லையென்றால் இப்படி ஓய்ந்து போகின்ற ஆளில்லை மலர்விழி.
எனவே, “நாம ரெண்டு பேரும் தான் லவ் பண்ணுறோம். ஆனா, அதோட கஷ்டத்தை நீ மட்டும் ஏன் அனுபவிக்கணும்? இப்பவே நம்மளைப் பத்தி வீட்டுல சொல்லிடுறேன். எதுவா இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்தே பாத்துக்கலாம்.” முடிவாக சொல்லிவிட்டு எழும்பினான்.
“ஐயையோ… எதுவும் சொல்லிடாதீங்க.” அவசரமாக கட்டிலில் இருந்து இறங்கினாள் மலர்விழி.
“ஏன்?”
“இல்ல… உங்க அத்த பொண்ணு சுசீலாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் போல.” கொஞ்சம் திக்கித் திணறி தான் வந்தது வார்த்தைகள்.
“அதுக்கு?” கண்கள் இடுங்க கேட்டான் ராகவன்.
“நீ…ங்க பேசாம சுசீலாவையே கல்யாணம் பண்ணிக்கோங்க, நான் இந்த இயர் ஸ்கூல் முடிஞ்சதும் சென்னைக்கே போயிடுறேன்.” மனதை கல்லாக்கிக் கொண்டு சொல்லிவிட்டாள்.
‘சுசீலா’ என்ற பெயரிலேயே மலர்விழியின் மனகுழப்பத்திற்கான காரணத்தை ஓரளவிற்கு யூகம் செய்ய முடிந்தது ராகவனால்.
ஆமாம்… அத்தை மகள் சுசீலாவை தனக்கு கல்யாணம் செய்யும் எண்ணம் இல்லை என்று ராகவன் தெளிவாக சொன்ன பிறகும் கூட, வீட்டில் அந்த பேச்சு நடந்து கொண்டுதானே இருக்கிறது.
கூட்டத்தில் யாரோ எதையோ கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதைக் கேட்டுவிட்டு வந்து இப்படி உக்கார்ந்திருக்கிறாள் என்பது புரிந்து போக, “எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாருன்னு உங்கிட்ட சொன்னேனா?” என்றான் ராகவன் கோபமாக.
“அப்படியில்ல… நாம விரும்புறவங்களை விட, நம்மளை விரும்புறவங்களை கல்யாணம் செய்தா வாழ்க்கை நல்லாயிருக்கும்னு சொல்லுவாங்களே. அதனால சுசீயையே பண்ணிக்கோங்க.” குரல் கரகரக்க தத்துவம் பேசினாள் மலர்விழி.
“கரெக்ட், நீ இப்போ சொன்ன பாரு, அது பாயிண்ட். நானும் சந்திரனுக்கு போன் பண்ணி இங்க வரச்சொல்லிடுறேன்” என்றான் ராகவன்.
“சந்திரனுக்கா? எதுக்கு?” குழம்பிப் போனவளாக கேட்டாள் மலர்விழி.
“நம்மளை விரும்புறவங்களை கல்யாணம் செய்துகிட்டா வாழ்க்கை ஜெகஜோதியா இருக்கும்னு நீ தான ம்மா சொன்ன? ஐந்து வருஷம் கழிச்சும் நீதான் வேணும்னு வந்து அடியெல்லாம் வாங்கிட்டு போயிருக்கான், பாவம். நான் சுசீயை கல்யாணம் பண்ணிக்கறேன், நீ அவனை கல்யாணம் பண்ணிக்கோ” என்றான் ராகவன் பாவனையாக.
சந்திரனுடன் திருமணம் என்ற பேச்சே ஒருவிதமான அருவருப்பைத் தர, “அவனுக்கு மட்டும் என்னை பிடிச்சா போதுமா? எனக்கு அவனை பிடிக்க வேண்டாமா?” என்றாள் மலர் அவசரமாக.
“எனக்கு மட்டும், நாலு டூயட், நாப்பது முத்தம்னு சுசீ கூட லவ் பொங்கி வழியுதா என்ன? ஹாங்.” சற்றே குரலை உயர்த்தினான் ராகவன். பதில் சொல்ல முடியாமல் திருதிருந்தாள் மலர்விழி.
அவள் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்து தன்னை நோக்கி இழுத்த ராகவன், “தீச்சர்… எத்தனயோ பேருக்கு நம்மளை பிடிக்கும். அதுக்காக எல்லோரையும் நாம கல்யாணம் பண்ணிக்க முடியாது. புரிஞ்சுதா?” என்றான் ஆழ்ந்த குரலில்.
ராகவனின் அதிர்ச்சி வைத்தியத்தில், பரிதாபம் பார்த்து யாருக்கும் வாழ்க்கையை விட்டுக்கொடுக்க முடியாது என்பது மலருக்கு நன்றாகவே புரிந்திருந்தது. மனம் தெளிந்தவள், மெல்லச் சிரித்தாள்.
“இப்போ சிரி… மனுஷனை டென்ஷனாகிட்டு.” மலர்விழியின் மூக்கைப் பிடித்து ஆட்டியபடி சலித்துக் கொண்டான் ராகவன்.
“சாரி தல… கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகிட்டேன், இப்போ எல்லாம் சரியாப் போச்சு, நீங்க கிளம்புங்க.” அவசரப்படுத்தினாள்.
“உன்னை கன்ஃபூஸ் பண்ணுனவங்களைப் பத்தி தெரியாம நான் எப்படி போகமுடியும்?” பிடிவாதம் பிடித்தான் ராகவன். வேறுவழியில்லாமல் நடந்தது அத்தனையையும் சொன்னாள் மலர்விழி.
“எங்க அத்தைக்கு ஒருநாள் இருக்கு” என்று பல்லைக் கடித்த ராகவன்,
“உங்க அண்ணன் பையனை என் முந்தானைல முடிஞ்சு வருஷம் இரண்டு ஆச்சுன்னு சொல்லி, அவங்களை கதற விடாம, நீ அழுதுட்டு வந்தியா? அறிவாளி” என்று மலர்விழியிடம் காய்ந்தான். அவன் கைகளோ பேச்சோடு பேச்சாக மலர்விழியின் புடவை முந்தானையை உதறி, அவள் இடுப்பில் சொருக முயன்றது.
சட்டென்று அவன் கைகளை பற்றித் தடுத்த மலர், “ஆஹா…ஹா… இதை நாங்க பாத்துக்குறோம், நீங்க கிளம்புங்க சார்” என்று ராகவனின் முதுகில் கை வைத்து தள்ளினாள்.
“அதெப்பிடி? வீட்டுக்கு வந்துட்டு ஒரு முத்தம் கூட தராமப் போனா சரித்திரம் என்னைத் தப்பா பேசாது?” என்று, கண்களைச் சிமிட்டிய ராகவன், நாளையே தங்கள் விஷயம் வெடித்து சிதறப்போவது தெரியாமல், இடது கையால் மலர்விழியின் இடைபற்றி தன்னருகே இழுத்து, சிவந்திருந்த அவள் இதழ்களில், தன் உதடுகளால் முத்தக்கவிதை எழுதிவிட்டே சென்றான்…