அவருடைய மருமகள் உமாவும் மாமியார் பார்வதியும் சென்னைக்குக் கிளம்பியது கூட தெரியாமல், அவருடைய அறையில், சின்ன சைகையின் மூலம் அவருடைய அதிருப்தியைத் தெரிவித்த திருப்தியில் அமிழ்ந்திருந்தார் மீனா.எப்போதும் போல் மதிய உணவை முடித்துக் கொண்டு அவர்களுடைய அறையில் சிறிது ஓய்வு எடுத்த நாகேஸ்வரனின் முகத்திலிருந்து அவரால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.அன்று மாலை, அவருடைய அறையிலிருந்து வெளியே வந்தவரை, வெறிச்சோடி இருந்த வீடு வரவேற்றது.
ஒருவேளை, பேரனின் மனைவியை அழைத்துக் கொண்டு வேறு எங்கேயாவது சென்றிருக்கிறாரோ அவருடைய மாமியார் என்ற எண்ணம் தோன்றிய நொடியே, இன்று எங்கேயும் போக முடியாது, இன்னும் மூன்று நாள்களுக்கு வீட்டில் தானே இருக்க வேண்டுமென்று கணக்கிட்டார்.ப்ரீத்தியும் கண்ணில் தென்படவில்லை.
கல்யாணம் முடித்த வீடு போல் இல்லாமல், சாதாரணமாக இருந்தது வீடு.ப்ரீத்தியைத் தேடி அவளறைக்குச் சென்றார்.அது பூட்டியிருந்தது.மாடியேறி போய்ப் பார்த்தார்.அங்கேயும் இல்லை.கீழே வந்தவர், பார்வதியின் அறை கதவைத் தட்ட, உள்ளே ஆள் ஆரவாரமில்லை. அவரைத் தவிர வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்தவுடன், மற்றவர்களெல்லாம் எங்கே என்ற கேள்வி எழுந்தது. மதியம் வீட்டிற்கு வந்திருந்த அவருடைய மாமானருடன் பேசியிருந்தால் விஷயம் தெரிந்திருக்கும்.ஆனால் அவர் தான் அறையை விட்டு வெளியே வரவே இல்லையே. அதனால், கணவரை ஃபோனில் அழைத்தார் மீனா.
மீனாவின் அழைப்பை ஏற்க நாகேஸ்வரனுக்கு மனம் வரவில்லை.அப்போது, உமேஷ் செய்த போதனைகள் மனத்தில் வர, அழைப்பை ஏற்று,”என்ன?” என்றார்.
“ப்ரீத்தி எங்கே? வீட்லே இல்லை? என்கிட்டே சொல்லாம எங்கேயும் வெளியே போக மாட்டா.” என்றார்.
“என்னோட கடைக்கு அழைச்சிட்டு வந்திருக்கேன்.” என்றார்.
“கடைக்கா? எதுக்கு?”
“வியாபாரத்தைப் பார்த்துக்க தான்.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தார் நாகேஸ்வரன்.
அதன் பின், ஜெயந்தியிடம் பேசிய போது தான், அவருடையை மாமியாரும் மருமகளும் சென்னைக்கு சென்று விட்டார்களென்ற விவரம் அவருக்குத் தெரிய வந்தது.அப்போது கூட அவருடைய செய்கையை ஆராயாமல், போகட்டும், எனக்கு என்ன என்ற எண்ணம் தான் அவரிடம் மேலோங்கி இருந்தது.
அன்றிலிருந்து ப்ரீத்தியை இரண்டு கடைகளும் அழைத்துச் சென்று, அவருடனேயே வைத்துக் கொண்டார் நாகேஸ்வரன்.வீட்டிலிருக்கும் நேரத்தில், மீனாவுடன் பேச்சு வார்த்தையைக் குறைத்துக் கொண்டாள் ப்ரீத்தி.ப்ரீத்தி கடைக்கு வருவது ஏகாம்பரத்திற்குப் பிடிக்கவில்லை.அதை நாகேஸ்வரனுக்குத் தெரியப்படுத்தியவுடன்,
“உமேஷ் தான் அழைச்சிட்டுப் போகச் சொன்னான்..அவனாலே முன்னே போல வாரா வாரம் வரமுடியாதுன்னு சொல்லிட்டான்..நீங்க அவன்கிட்டே பேசிக்கோங்க.” என்றவுடன் வாயை மூடிக் கொண்டார் ஏகாம்பரம். அதே போல், அவருக்குத் தெரிவிக்காமல், அவரிடம் அனுமதி கேட்காமல், பேரனுடன் சென்னைக்குச் சென்றிருந்த மனைவி மீது கடுங்கோபத்தில் இருந்தார் ஏகாம்பரம்.பேரனுடைய பாதுகாப்பில் இருக்கும் போது பார்வதியை ஒன்றும் சொல்ல முடியாது என்பதால், பார்வதி மதுரைக்குத் திரும்பி வரும் நாளிற்காக காத்திருந்தவர் அறியவில்லை, பார்வதியும் அந்த நாளிற்காக காத்திருந்தாரென்று.
சென்னையை சென்றடைந்த பின் சுந்தரி பாட்டி அறையில் முடங்கிக் கொண்டாள் உமா.அதே அறையில் பார்வதியும் தங்கிக் கொண்டதால், அவர் தான் உமாவைக் கவனமாகப் பார்த்துக் கொண்டார். முதல் இரண்டு நாள்கள் எப்படிக் கடந்தது என்று உமாவிற்குத் தெரியவில்லை.சுந்தரி பாட்டி அவளுடைய வீட்டில் தங்கி இருந்த போது, அந்த அறையில் அவருடன் அவளும் தங்கியதால், அவளுடைய பொருள்கள், சோப்பு, சீப்பு முதற்கொண்டு அனைத்தும் அந்த அறையின் அலமாரியில் இருந்தது. அதனால், குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்று அனைத்தையும் அந்த அறையிலேயே முடித்துக் கொண்டாள்.சாப்பாடு எங்கேயிருந்து வருகிறது? என்று கேட்கவில்லை.நீங்கள் சாப்பிட்டீர்களா? என்று பார்வதியை விசாரிக்கவில்லை.கணவன் என்று ஒருவன் அதே வீட்டில் நடமாடியது அவளுடைய கருத்தில் பதியவில்லை.
அவனுடைய மனைவி இன்னும் அவனைக் கணவனாக உணரவில்லை என்று உணர்ந்த உமேஷ், அவசரப்படாமல், முதலில், அவளை அவளுடைய இயல்பிற்குக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தான். மூன்றாவது நாள், முற்பகல் வேளையில், வரவேற்பறையிலிருந்து கேட்ட சத்தத்தில், உறங்கிக் கொண்டிருந்த உமா வெளியே வந்தாள்.வரவேற்பறை முழுவதும் அட்டைப்பெட்டிகள். அத்தனையும் உமேஷினுடையது.
ஒரே நாளில் உமாவின் வீட்டிற்கு முழுவதுமாக குடிப்பெயர்ந்திருந்தான் உமேஷ்.உமாவை அவனுடைய வீட்டிற்கு அழைத்துப் போவான் என்று நினைத்திருந்தார் பார்வதி. அதற்கு மாறாக, அவனுடைய வீட்டை காலி செய்து கொண்டு உமாவின் வீட்டிற்கு வந்து விட்டான் அவருடைய பேரன்.கடந்த இரண்டு நாள்களாக, கீழே இருந்த விருந்தினர் அறையில் தங்கியிருந்தான் உமேஷ்.இன்று, விடியற்காலையில் வெளியே சென்றவன் இப்போது தான் திரும்பியிருந்தான்.
டி ஷர்ட், ஷார்ட்ஸில் மாடியிலிருந்து இறங்கி வந்தவன், மனைவியை வரவேற்பறையில் பார்த்து, எத்தனை நாள் ஒரே அறையில் அடைந்துகிடப் போகிறாள் என்ற கவலை மறைந்து, சிறிது மன நிம்மதி அடைந்தான்.
“பாட்டி, சாமானைத் தூக்கிட்டு, பத்து முறை மாடி ஏறி இறங்கினது டயர்டா இருக்கு..பெரிய ஜக்லே ஜுஸ் கொண்டு வாங்க.” என்று பார்வதிக்கு ஆர்டர் போட்டான். உமாவின் வீட்டில் எந்தச் சாமான்? எங்கே இருக்கிறது? என்று தெரியாமல், அவர்கள் இருவரும் இரண்டு நாள்களாக தடுமாறிக் கொண்டிருந்தனர். அதனால்,
“எது எங்கே இருக்குன்னு எனக்கு என்ன டா தெரியும்? நீயே தேடி எடுத்துக்க..அப்படியே அந்த மெஷினை எப்படிப் போடறதுன்னு சொல்லிக் கொடு..அழுக்குத் துணி சேர்ந்து போச்சு.” என்றார்.
அவர்களின் உரையாடலை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த உமா, நேரே சமையலறைக்குச் சென்று, பெரிய கிளாஸில் ஜுஸ் எடுத்து வந்து உமேஷிடம் கொடுத்தாள். அவனின் நன்றியை அவள் கண்டு கொள்ளவில்லை.அதே போல், அவனுடைய சாமான்களை செட் செய்ய உதவி செய்யவில்லை.ஆனால், அன்றிலிருந்து சமையல், வீட்டு வேலை இரண்டையும் பொறுப்பாகச் செய்ய ஆரம்பித்தாள். விடுமுறையை நீடித்தாள்.
இதற்கிடையே ஊரிலிருந்து திரும்பிய மீரா, உமேஷைப் பார்த்து வியப்படைந்து, விசாரிக்க, சுந்தரி பாட்டியின் மறைவை அவளுடன் பகிர்ந்து கொண்டான்.உடனே, அவளுடைய மகனை அழைத்துக் கொண்டு உமாவைச் சந்திக்க வந்து விட்டாள் மீரா.அவளின் வருகைக்குப் பின் உமாவிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டது.அடுத்த நாள், மீரா வேலைக்குச் சென்றிருந்த போது அவளுடைய மாமியாரும் பிரஷாந்தும் உமாவின் வீட்டிற்கு வந்தனர். இது பார்வதிக்கு சிறிது மாற்றத்தைக் கொடுத்தது. அவர்களை அழைத்துச் செல்ல திவாகர் வர, அவர்களுடைய திருமணத்தில் அவனைச் சந்தித்திருந்தாலும், மீண்டும் அவனை உமேஷிற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் உமா. இதையெல்லாம் எதிர் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜானகிக்குப் குழப்பம் அதிகரித்தது.
இந்தப் பெரியம்மாவும் இந்தப் பையனும் ஏன் இங்கே இருக்காங்க? இவங்களுக்கும் உமாக்கும் என்ன உறவு என்று யோசித்தவருக்குப் பதில் கிடைக்கவில்லை.உமா வெளிநாட்டிற்குப் போகும் முன் அவர்களுடைய கல்யாணத்தை முடித்து வைக்க, பலவிதத்தில் பேசி, அவருடைய மனத்தை கரைத்திருந்தான் ஈஷ்வர்.அவனுடைய திட்டத்தில் ஏற்பட்டிருந்த இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம், வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், சென்னையில் தொடர்ந்து வேலை செய்ய சம்மதம் தெரிவித்திருக்காள் உமா என்ற தகவல் தான்.
எனவே, உமா விடுமுறையில் இருந்த போது, அவனுடைய அம்மாவிடம் பேசி, அவரின் சம்மதத்தைப் பெற்றிருந்தான்.இனி, உமா விடுமுறையிலிருந்து திரும்பிய பின் அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணியிருந்த போது, அலுவலக வேலையாக ஈஷ்வர் வெளியூர் செல்ல நேர்ந்தது. மீராவைத் தவிர நெருங்கிய நட்பு யாரும் இல்லாததால், வேறு யாரையும் அவளுடைய திருமணத்திற்கு அழைக்கவில்லை உமா.பூனாவில் இருக்கும் சாதனாவிற்கு கூட இன்னும் தெரியப்படுத்தவில்லை. அதனால் உமாவிற்குத் திருமணம் ஆன விஷயம் அலுவலக வட்டத்தில் தெரியவரவில்லை.சுந்தரி பாட்டியின் மறைவில், மன வேதனையில் இருந்த உமாவை, அவளுடைய திருமணம் பற்றிய விசாரிப்பு சங்கடத்தில் ஆழ்த்தி விடும் என்று எண்ணி அலுவலகத்தில் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை மீரா.
இந்தச் சூழ்நிலையில், மீரா அலுவலகம் சென்றிருக்க, திவாகரின் அம்மாவையும் பார்வதியையும் அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றான் உமேஷ்.பிரஷாந்திற்கு உடல் நிலை சரியில்லாததால் அவனைப் பார்த்துக் கொள்ள அன்று அவனுடன் வீட்டில் இருந்தான் திவாகர். அவனுடைய அம்மாவையும் அவர் வாங்கிய சாமான்களையும் திவாகரிடம் ஒப்படைத்து விட்டு, நிதானமாக வண்டியை ஓட்டி வந்து அவர்கள் வீட்டு அருகில் நிறுத்தினான் உமேஷ்.
வண்டியிலிருந்து இறங்கிய பார்வதி, கேட்டை அடைந்த போது, எதிர்வீட்டிலிருந்து வேக வேகமாக வந்த ஜானகி,”உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்..நான் எதிர் வீட்டிலே இருக்கேன்.” என்று பார்வதியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
காரிலிருந்து பொருள்களை இறக்கியபடி அவர்களைத் தான் கவனித்துக் கொண்டிருந்தான் உமேஷ்.
பார்வதியிடம்,”நீங்க உமாக்கு உறவா?” என்று ஜானகி கேட்ட போது, அவர்களருகே வந்திருந்தான் உமேஷ். அதே நேரத்தில், வாசல் கதவைத் திறந்து, வராண்டாவில் வந்து நின்றாள் உமா பார்வதி. பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்தவுடன்,’என்ன வேணும் இவங்களுக்கு?’ என்று கடுப்பானாள். ஜானகியின் நோக்கம் புரிந்தவுடன், அவளுக்குத் திருமணம் ஆகப் போவதை அலுவலகத்தில் தெரியப்படுத்தவில்லையா என்று உமா மீது கடுப்பானான் உமேஷ்.
பல நாள்களுக்குப் பின் இன்று தான் உமாவை நேரில் பார்க்கிறார் ஜானகி.வகிட்டில் தெரிந்த குங்குமம், கழுத்தில் இருந்த கனமான தங்கத் தாலி சங்கிலி, இரண்டும் அவளுக்குத் திருமணமாகி விட்டதைத் தெரிவிக்க, அது ஏற்படுத்திய அதிர்ச்சி, அப்பட்டமாக அவருடைய முகத்தில் தெரிய,”இனி என்னோட பேத்தியைத் தொந்தரவு செய்யாதீங்க..என் பேரன், அவளோட புருஷன், இவன், வேற மாதிரி.” என்று எச்சரிக்கை செய்து விட்டு,”சாமான் எடுத்துக்கிட்டு வா டா” என்று கட்டளையிட்டு விட்டு வீட்டிற்குள் சென்றார் பார்வதி.
பாட்டியும் பேரனும் வரவேற்பறை சோபாவில் இளைப்பாற, இருவருக்கும், குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த உமா,
“அவங்க என்ன கேட்டாங்க பாட்டி?” என்று பார்வதியை விசாரித்தாள்.
“அவங்க எதையும் கேட்கறத்துக்கு முன்னாடி, இனி இந்த வீட்டுப் பக்கம் வந்தீங்க..என் பேத்தியோட புருஷன் உங்களையும் உங்க மகனையும் வெட்டிப் புதைச்சிடுவான்னு பாட்டி சொல்லிட்டாங்க.” என்று கோபமாகச் சொல்லி விட்டு அவனுடைய கைப்பேசியில் பிஸியானான் உமேஷ்.
அவனுடைய கோபத்தில் பயந்து போன உமா, பார்வதியைப் பார்க்க, “அவங்க என்ன பேசணும்னு நினைச்சாங்கன்னு எனக்குத் தெரியலை..இனிப் பேச எதுவுமில்லை..உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னேன்.” என்று அந்தப் பேச்சை முடித்தார் பார்வதி.
அன்றிரவு,சுந்தரி பாட்டி அறையில், தரையில், பாய் விரித்துப் படுத்திருந்தாள் உமா பார்வதி.அவள் என்னயென்று உணருமுன், அவளை அலக்காக தூக்கியிருந்தான் உமேஷ்.
“ஐயோ பாட்டி.” என்று அவள் கத்த, கட்டிலில், சுவரைப் பார்த்துப் படுத்திருந்த பார்வதி, திடுக்கிட்டுத் திரும்பி, ”டேய்..என்ன டா செய்யற?” என்று அவர் எழுந்து கொள்ள முயல, அதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தான் உமேஷ்.
“டேய்..ஏன் டா இப்படியெல்லாம் செய்யற..விடுடா அவளை.” என்று கதவருகில் இருந்து கத்தினார் பார்வதி.
“நீ தானே அந்தம்மாகிட்டே சொன்னே..இவ புருஷன் வேற மாதிரின்னு..அதான் எந்த மாதிரின்னு என் பொண்டாட்டிக்குக் காட்டப் போறேன்.” என்றான்.
“டேய்….பயந்திடப் போறா டா..கொஞ்சள் நாள் பொறுத்துக்கோ டா.. அவ புருஷன் என்ன மாதிரின்னு அவளே புரிஞ்சுப்பா டா.” என்றார் பார்வதி.
“நீ பயப்படாதே..உன்னோட பேத்தியை ஒண்ணும் செய்ய மாட்டேன்..நம்பிக்கையில்லைன்னா நாளைக்கு காலைலே நீயே அவகிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கோ” என்றான் உமேஷ்.
அவன் பதிலைக் கேட்டு, தலையில் அடித்துக் கொண்டு,”என்னவோ செய்.” என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டார் பார்வதி.
மாடியறையின் படுக்கையில் உமாவைக் கிடத்தி, அவள் அணிந்திருந்த தாலி சங்கிலியைத் தூக்கி, அவள் கண்ணெதிரே அதை ஆட்டி,”என்னது இது?” என்று கேட்டான் உமேஷ்.
அவனுடைய செய்கையில் பயந்து போயிருந்தவள், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,”தாலி” என்றாள்.
அதற்கு,”குட்” என்று பதில் சொன்னவன், அடுத்ததாக, திருமாங்கல்யத்தைக் காட்டி,”யார் இவங்க?” என்று கேட்டான்.
சில நொடிகள் கழித்து,”சிவா, பார்வதி” என்றாள் உமா பார்வதி.
“யெஸ்..ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்..உமேஷ் பசுபதி, உமா பார்வதி” என்று சொல்லி விட்டு,”புரிஞ்சதா?” என்று கேட்க, தலையசைவில் ‘புரிந்தது’ என்றாள்.
“அதனாலே, எல்லாக் கணவன், மனைவி போல இனி நீயும் நானும் ஒரே அறைலே, இந்த அறைலே தான் இருக்கப் போறோம்..இன்னையோட பாட்டியோட ஒட்டிக்கிட்டு திரியறதை நிறுத்திடணும்..ஓகே?” என்று கேட்க, அதற்கும் சரியென்று தலையசைத்தாள்.
அதற்கு அடுத்து வந்த நாள்களில், உமேஷ் சொன்னது போல், மாடியறை அவர்களுடைய அறையானது.உமா வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின், சில நாள்கள், இரவு வேளையில், அவளுடைய மடிக்கணினியில் அவள் வேலை செய்து கொண்டிருந்த போது, அவளருகே அமைதியாக படுத்து உறங்கிக் கொண்டிருப்பான் உமேஷ்.அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல், அவனுடைய அருகாமையை அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான்.
இப்படியே நாள்கள் அமைதியாக கழிய, உமா வெளிநாட்டிற்குச் செல்லும் தேதி உறுதியானது.அதுவரை உமாவின் போக்கில் சென்று கொண்டிருந்த உமேஷிற்கு அவளை அவள் போக்கில் விட்டால், அவனை விட்டு விலகிப் போய் விடுவாள் என்று அச்சம் ஏற்பட்டது.அதனால், அவளுடைய அமைதியை அதிரடியாக அழிக்கச் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்.
அன்று, அவனுடைய இரவு உணவை வெளியில் முடித்துக் கொண்டு தாமதமாக வீடு வந்து சேர்ந்தான் உமேஷ். அவருடையதை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றிருந்தார் பார்வதி. மாடி படுக்கையறைக்குள் உமேஷ் நுழைந்த போது, கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் உமா.அவன் உள்ளே நுழைந்தவுடன், ஒரு நொடி அவனைப் பார்த்து விட்டு, மறுபடியும் வேலையில் ஆழ்ந்தாள்.சிறிது நேரம், இங்கேயும் அங்கேயும் நடமாடிக் கொண்டிருந்த உமேஷ், கடைசியாக, குளியலறைக்குச் சென்றான்.அவன் உள்ளே சென்றவுடன், பார்வையால் அறையை நோட்டம் விட்டாள் உமா.
அவனுடைய டையைப் படுக்கை மீது போட்டிருந்தான், பேண்ட், ஷர்ட்டை அறையின் மூலையில் விட்டெறிந்திருந்தான்.அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லும் பையை, அலமாரியில் வைக்காமல், மேஜையில் வைத்திருந்தான்.கைக்கடிகாரம், கைப்பேசி, கைக்குட்டை மூன்றையும் மேஜையில் வைக்காமல் நாற்காலியில் வைத்திருந்தான். தினமும் இப்படித் தான் செய்கிறான்.அவனுடைய உடைகளை, உடைமைகளை சீர்ப்படுத்துவது அவளுடைய கடமையானது.
அவளுடைய மடிக்கணினியைக் கட்டிலில் வைத்து விட்டு, டையையும் அவனுடையை பையையும் கொண்டு போய் அலமாரியில் வைத்தாள். நாற்காலி மீதிருந்த அவனுடைய பொருள்களை மேஜை மீது வைத்தாள். அவன் விட்டெறிந்திருந்த அழுக்கு உடைகளைச் சேகரித்து, கூடையில் போட்டாள்.
அப்போது, குளியலறை கதவு திறக்க, ‘இன்னைக்கு என்ன இத்தனை சீக்கிரம் குளிச்சிட்டாங்க?’ என்று எண்ணியபடி, பார்வையைத் திருப்ப, அங்கே, குளியலறை வாயிலில்,
அரைக்கசைத்ததை அவிழ்த்து, அதில் தலையைத் துவட்டியபடி முழு உயரத்திற்கு நிமிர்ந்த அரிமானின் சர்வ தரிசனத்தில், ”ஐயோ பாட்டீ.” என்று அலறினாள் அரிவை.