அடுத்து செந்திலிடம் விஷயத்தைச் சொல்லி, வீட்டு உரிமையாளரின் ஃபோன் நம்பரையும் ராகவன் கொடுக்க, கச்சிதமாக விஷயத்தை முடித்து விட்டான் செந்தில்.
ஏற்கனவே ஆழ்வார்குறிச்சியில் வேலை பார்க்கும் சிலர், செங்குளத்தில் வாடகை குறைவு என்று குடும்பத்தோடு தங்கியிருப்பதால், வேலைக்கு செல்லும் பெண்ணிற்காக என்று விபரம் சொல்லி வீட்டை வாடகைக்கு பிடிப்பதில் செந்திலுக்கு சிரமம் இருக்கவில்லை.
அடுத்து, ராகவன் உதவி கேட்டது தீனதயாளன் குடும்பத்தாரிடம். தான் விடுதிக்கு சென்று, அதை நூறில் ஒரு சதவீதமாக அந்த சந்திரன் பார்த்து விட்டால், மலர்விழி சென்னையில் இல்லை என்று தெரிந்ததும் எங்கே போயிருக்க கூடும் என்று யூகித்து விடக்கூடாதே.
எனவே, காட்சியில் தான் இல்லாமலேயே காயை நகர்த்த முடிவு செய்த ராகவன், “குடும்பமாக வந்து, மலர்விழியை தங்கள் ஊரில் விட்டுவிட்டு செல்லலாமா?” என்று தீனதயாளனிடம் கேட்டிருந்தான்.
ஆமாம்… குடும்பமாகத் தான். சென்னை போல சூழல் இல்லையே கிராமத்தில். தனியாக ஒரு பெண் வந்து இறங்கினால், அக்கம் பக்கத்தில் ஆயிரத்தெட்டு கேள்விகள் எழும்பும். அதே ஒரு குடும்ப சூழ்நிலையில் வரும்போது கேள்விகள் இருந்தாலும் பெரிய அளவில் இருக்காது.
மலர்விழி சொன்ன கதையை வைத்து ராகவனை மரியாதையாக பார்த்த அந்த தம்பதியர், அவன் பேச்சுக்கிணங்கி குடும்பமாக வந்து மலர்விழியை செங்குளத்தில் விட்டுவிட்டு சென்றார்கள்.
பிறந்ததில் இருந்து இப்படியொரு கிராமத்து சூழலை நேரடியாக அனுபவிக்காத தீபக், தீக்ஷிதா இருவரும் அந்த பயணத்தை வெகுவாக ரசிக்க, மூன்று நாட்கள் தங்கியிருந்து பாபநாசம், குற்றாலம், மணிமுத்தாறு என்று சுற்றி பார்த்துவிட்டு பிரியாவிடை பெற்றுத் தான் சென்றிருந்தார்கள். கூடவே, அடுத்த விடுமுறைக்கு இங்கே வந்து இறங்கிவிடுவோம் என்று பிள்ளைகளிடமிருந்து வாக்குறுதி வேறு.
எல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. இதோ, ஆழ்வார்குறிச்சியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த மெட்ரிக்குலேசன் பள்ளி ஒன்றில் மலர்விழி கணித ஆசிரியராக சேர்ந்து கொள்ளவும் செய்தாயிற்று.
நாளை பள்ளி திறக்கும் முதல்நாள் என்பதால் மலர்விழியை, ஆழ்வார்குறிச்சிக்கு அருகே இருக்கும் சிவன் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போகவே ராகவன் அழைத்தது.
கேட்டை பூட்டி முடித்த மலர்விழி, சாவியை கையிலிருந்த பர்ஸ்ஸில் போட்டுவிட்டு நிமிர்ந்தாள். வீட்டு வாசலில் வந்து நின்று மலர்விழியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி கோதை, லேசாக சிரித்தார்.
பதிலுக்கு மலர்விழியும் சிரித்து வைக்க, “வெளியப் போறியா ம்மா?” மெதுவாக பேச்சுக் கொடுத்தார் கோதை.
“ம்ம்…” ஒரு சிரிப்போடு தலையசைத்தாள் மலர்விழி.
“எங்கயோ?” அடுத்த கேள்வியை வீசினார் கோதை.
“இங்க தான்…”
அனாவசியமாக யாரிடமும் வாய் கொடுத்து மாட்டிக்கொள்ளாதே என்று ராகவன் ஏற்கனவே கைபேசி வழியாகவே பாடமெடுத்திருந்ததால், உஷாராகவே பதில் வந்தது மலர்விழியிடமிருந்து.
“இங்க தான்னா?” விட்டேனா பார் என்று கோதையும் நிற்க,
வேறுவழியில்லாமல், “கோவிலுக்கு” என்றாள் மலர்விழி.
“தனியாவா போற? எம்பொண்ணு மாதவி வீட்டுலத்தான் இருக்கா, வேணும்னா கூட்டிட்டு போறியா?”
“இ… இல்ல க்கா, நான் இப்போ தான் ஸ்கூட்டி ஓட்டி பழகியிருக்கேன். டபுள்ஸ் வச்சி ஓட்டி பழக்கமில்ல” என்றாள் மலர்விழி அலறாத குறையாக.
“ஓ… அப்பிடியா?” என்று பதில் சொன்ன பெண்மணியிடம் நம்பாத பார்வையே.
எப்போதுமே அதீத அன்பு இருக்கும் கிராமத்து மக்களிடம், அடுத்தவர்களைப் பற்றி அறிந்து கொள்ள அதீத ஆர்வமும் இருக்கும். அதன் வெளிப்பாடு தான் அந்த கோதையின் பேச்சு. ஆனால், தன்னைப் பற்றி சொல்லும் நிலையிலா இருக்கிறாள் மலர்விழி?
விட்டால் போதும் என்று வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து நகர்ந்த மலர்விழி, ராகவனின் வீட்டை கடக்கும் போது ஓரக்கண்ணால் பார்த்தாள். யாரும் தென்படவில்லை.
‘என் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய இடம். இங்கே மட்டும் வரவில்லை என்றால், ராகவனை சந்தித்திருக்கவே முடியாது. ஒருவேளை என் வாழ்க்கை கூட தடம் மாறிப் போயிருக்கலாம்.’
நினைவே ஒருவித அச்சத்தைத் தர, அதிலிருந்து தப்பிப்பது போல வேகமாக வண்டியை விட்டவள், ராகவன் சொன்னது போலவே வந்து, மெயின் ரோட்டில் இடது பக்கமாக வண்டியைத் திருப்பினாள்.
அங்கே ஒரு மரத்துக்கு கீழே பைக்கை நிறுத்திவிட்டு நின்றிருந்தான் ராகவன். அவன் பார்வையோ, மலர்விழி வரும் பாதையையே தொட்டுத் தொட்டு மீண்டபடி இருந்தது.
ராகவன் கண்களில் தனக்கான தேடலைக் கண்டவளின் மனம் அமைதியாகிப் போனது. அவனுக்கருகில் வந்து வண்டியை மெதுவாக நிறுத்திய மலர்விழி,
“தலைவரே, இப்போ பேசலாம் தானே? ஸ்பை யாரும் பாத்துட்டு உங்க வீட்டுல போட்டு குடுத்துட மாட்டாங்களே?” என்றாள் கேலியாக.
“ம்ம்… நக்கலு” என்ற ராகவனின் கை இயல்பாக மலர்விழியின் காதைத் திருக நீள, சட்டென்று சூழ்நிலை ஞாபகம் வந்தது போல கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டவன் சுற்றும் முற்றும் பார்த்தான். வெடித்துச் சிரித்தாள் மலர்விழி.
“வேற யாரும் வேண்டாம், நம்மளை நாமளே காட்டிக் குடுத்துடுவோம் போல.” மெல்லிய புன்னகையோடு சொல்லிய ராகவன்,
“இதே ரோட்ல, நேரா போ மலர். ஒரு ஆற்றுப் பாலத்தை கடந்ததும் வலது பக்கம் கோவில் வரும். உன் பின்னாடி நான் வந்துட்டு இருப்பேன், பயப்படாமல் போ” என்றான்.
பாதையின் இரண்டு பக்கங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை பசுமையாக சூழ்ந்திருக்க, அதன் நடுவே ஸ்கூட்டியில் செல்வதும் சுகானுபாவமாகத் தான் இருந்தது மலர்விழிக்கு. ‘நல்லவேளை, தீக்ஷி கூட சேர்ந்து வண்டி ஓட்டக் கத்துக்கிட்டேன்’ என்று தன்னைத்தானே மெச்சிக் கொண்டாள்.
ஸ்கூட்டியும் தீனதயாளன் இங்கே ஊரில் இருக்கும் போதே வந்திறங்கிவிட்டது. வீட்டுக்கு முன்பணம் கொடுத்ததில் இருந்து இந்த ஸ்கூட்டி வரை எல்லாம் ராகவனின் செலவு தான்.
ஒரு பத்து நிமிட பயணத்தில் ராகவன் சொன்னது போல ஆற்றுப் பாலம் வந்தது. உற்சாகமாக பாலத்தை கடந்தவள், அடுத்ததாக இருந்த கோவில் வளாகத்திற்குள் வண்டியை விட்டாள்.
சுற்றிலும் மரங்களோடு ரம்யமான சூழலில் இருந்தது கோவில். ஒரு பெரிய புன்னை மரத்திற்கு கீழே மலர்விழி வண்டியை விட, அருகில் வந்து வண்டியை நிறுத்தினான் ராகவன். கோவிலில் கூட்டம் இல்லை போல, ஒன்றிரண்டு வாகனங்களே அங்கே நின்றிருந்தன.
“ஆறு போகுதுங்க, இது தாமிரபரணியா?” உற்சாகமாக கேட்டாள் மலர்விழி.
“இல்ல, இது கடனா நதி.”
“எனக்கு தண்ணிகிட்ட போகணுமே” விழிகள் சுருக்கி ஆவலாக கேட்டாள்.
“வா…” என்றவன், தனக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்க்க,
“இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தலைவரே.” கிண்டலடித்தபடி உடன் நடந்தாள் மலர்விழி.
கோவில் வளாகத்தில் வலது பக்கமாக இருந்த கிளைப் பாதையில் இருவரும் சிறிது தூரம் நடந்தார்கள். கீழே பள்ளத்தில் வளைந்து நெளிந்து ஓடிய ஆறு தெரிந்தது.
அவ்வளவு தான்… அதன் அருகில் சென்று விடும் ஆவலில் படிகளின் வழியாக படபடவென கீழே இறங்க ஆரம்பித்தாள் மலர்விழி.
அவள் வேகத்தைக் கண்டு பதறிய ராகவன், “மெதுவா போ மலர், கடைசிபடி வழுக்கும்.” சத்தமாக சொல்லியபடி தானும் வேகமாக இறங்கியவன், மலர்விழி கடைசி படியில் கால் வைக்கும் முன்னரே அவள் வயிற்றோடு கை கொடுத்து தன்னோடு சேர்த்து தூக்கியிருந்தான்.
“எதுக்கு இப்படி கண்மண் தெரியாம ஓடுற?” லேசாக மூச்சிறைத்தபடி கேட்ட ராகவனிடம் கோபம்.
மான்குட்டி போல அவன் கைகளுக்குள் அடங்கியிருந்த மலர்விழியோ, புடவை விலகியதால் முற்றுமுழுதாக தன் வெற்று வயிற்றின் மீது படர்ந்திருந்த ராகவனின் வலிமையான கரத்தின் மீது வேகமாக தன் கையை வைத்தாள். பதட்டத்தில் செய்திருந்த காரியம் அப்போது தான் புரிந்தது ராகவனுக்கு.
பதட்டத்தில் செய்தது தான். ஆனால் இப்போதோ, தன்னருகே தெரிந்த ‘மலர்’ முகத்தை நோக்கி ஆவலாக குனிந்தான் ராகவன்.
இதழோடு இதழ் உரசிவிடும் கடைசி வினாடிகளில், இரு இதழ்களுக்கிடையே தடையாக தன் கையை கொண்டு வந்த மலர்விழி, “தலைவா… இப்போ, தெரிஞ்சவங்க யாரும் பாக்க மாட்டாங்களா?” இமைகளை படபடவென்று திறந்து மூடியபடி கேலியாக கிசுகிசுத்தாள். ஆனால் அந்த கேலியையும் தாண்டி பெண்ணவளின் முகமெங்கும் வியர்வை பூக்காடு நொடியில் பூத்திருந்தது.
“அதெல்லாம், நாங்க அப்பவே பாத்துட்டோம், யாருமில்ல.” மலர்விழியின் நெற்றிமுட்டி சிரித்தவன், “நோ தலைவா, ராகவன்… ராகவன்னு எம்பெயரைச் சொல்லு” என்றான் கண்கள் மின்ன.
இருவரும் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்ட இந்த இரண்டு வருடங்களில், எத்தனையோ முறை மலர்விழியிடம், தன்னை பெயர் சொல்லி அழைக்க சொல்லியிருக்கிறான் ராகவன்.
“நீங்க என்னைவிட பெரியவங்க, நான் எப்படி உங்களை பெயர் சொல்லி கூப்பிட?” என்று மறுத்திருக்கிறாள் மலர்விழி.
ஆனால், இன்று அவன் கை கொடுக்கும் அழுத்தமும், கண்களில் தெரிந்த பிடிவாதமும் அழைக்காமல் முடியாது என்பதை தெளிவாகச் சொல்ல, “ராகவன்” என்று ஜெட் வேகத்தில் சொன்னவள், வெட்கத்தில் கண்கள் இரண்டையும் இறுக மூடிக்கொண்டாள்.
“என்னவோ சொன்ன, ஆனா தெளிவா கேக்கலையே…” ரசனையாகச் சொன்னபடி, நங்கையின் மூடிய நயனங்களில் ராகவன் இதழ் பதிக்க, இதழ் மறைத்திருந்த அவள் தளிர்க்கரமோ அதிர்ச்சியில் தன் கடமை மறந்து ராகவனின் தோளோடு கூட்டணி வைத்துக் கொண்டது.
பிரித்தாளும் கொள்கையை கனகச்சிதமாக செய்து முடித்த ராகவனின் உதடுகள், தனித்து, தவித்து நின்ற மலர்விழியின் இதழ்களோடு வெற்றிகரமாக கூட்டணி ஒப்பந்தம் ஒன்றை அவசரமாக போட்டுக்கொண்டன.
“ஷ்ஷ்… என்ன பண்ணுறீங்க?” தன் பதட்டம் குறைக்க கீழுதட்டை பற்களால் கடித்தபடி சிணுங்கினாள் மலர்விழி.
“என்ன பண்ணுனேன்னு தெரியாத அளவுக்கா என்னோட பெர்ஃபார்மென்ஸ் இருந்தது? அப்போ, இன்னும் பயிற்சி வேணும் போலவே.” போலியாக அலுத்துக் கொண்டவன், மறுபடியும் மலர்விழியின் உதடுகளை முற்றுகையிட்டான்.
“இறக்கி விடுங்க? இல்லைன்னா குதிச்சிடுவேன்.” ராகவனை கட்டுப்படுத்த முடியாமல் கண்களை உருட்டி மிரட்டினாள் மலர்விழி.
“பார்றா… சில்வண்டெல்லாம் மிரட்டுது” என்றாலும், மலர்விழியின் பாதங்களை தரை தொட அனுமதித்தான் ராகவன்.
முதல் முத்தம், அதுவும் இதழ் முத்தம் பெண்ணவளை சுழற்றியடிக்க நெஞ்சில் கைவைத்து ஆழ்ந்து மூச்செடுத்த மலர்விழி, தன்னை நிதானப்படுத்திக் கொள்ள அப்படியே அந்த நீண்ட படியில் அமர்ந்தாள்.
அவளருகே அமர்ந்து, “அவ்வளவு கஷ்டமாவா இருந்தது என்னோட…” என்றவன், வெட்கத்தில் குளித்திருந்த மலர்விழியின் பார்வையில், வாக்கியத்தை முடிக்காமல் உதடு மடித்து சிரித்து, “என்னோட பெயரைச் சொன்னது” என்றான்.
அவன் பார்வைக்கும், பேச்சுக்கும் ஈடுகொடுக்க முடியாமல், கைகளால் நீரை அளைந்த மலர்விழி, “ஐந்து வருஷமாச்சு, இந்த மாதிரி இயற்கையான சூழலைப் பாத்து” என்றாள் பேச்சை மாற்றும் விதமாக.
யோசித்துப் பார்த்தால், இந்த ஐந்து வருடங்களில் மலர்விழி பெற்றவை எவ்வளவு அதிகமோ, அதற்கு குறையாமல் அவள் இழந்த சின்னச்சின்ன ஆசைகளும் அதிகம் தான் என்று புரிந்தது ராகவனுக்கு.
அவள் இழந்தவற்றை எல்லாம் ஈடு செய்துவிடும் வேகத்தில், “அந்த ஃபைவ் இயர்ஸ்ஸை நாம காம்பன்சேட் பண்ணிடலாம். ஓகே யா” என்றான்.
“எப்பிடி? இதோ தனித்தனியா வண்டில வந்திருக்கோமே, அப்பிடியா? இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துட்டு போலாமே.” ஒருவழியாக தன்னிலை திரும்பியிருந்த மலர்விழி நொடித்துக் கொண்டாள்.
சத்தமாக சிரித்த ராகவன், “பருத்தி மூட்டையே தான்” என்று கண் சிமிட்ட, வைகறை வானத்தின் சிவப்பு மலர்விழியின் முகத்தில்.
இருவரும் ஆற்றுநீரில் கை, கால், முகம் கழுவி, புன்னகை முகமாகவே சன்னிதானத்திற்குள் நுழைந்தார்கள்.
அம்மையப்பர் உடனுறை அம்பாளையும் வணங்கி சுற்றுப்பிரகாரம் சுற்றி வந்தவர்கள், அம்மன் சன்னிதானத்திற்கு முன் நீண்டிருந்த மண்டபத்தில் அமர்ந்தார்கள். இருவருடைய முகமும் சந்தோஷத்தில் பூரித்துக் கிடந்தது.
அந்த பூரிப்போடு தன் வலது கையை ராகவனின் முன்னே நீட்டினாள் மலர்விழி. அதில் திருநீறும், குங்குமமும் இருந்தது. ஏற்கனவே நெற்றியில் நீறு அணிந்திருந்தாலும், எடுத்து இட்டுக்கொண்டவன், மலர்விழியின் நெற்றியிலும் கீற்றாக பூசிவிட்டான்.
அடுத்து, குங்குமத்தை அள்ளியவனின் பார்வை மலர்விழியை மையம் கொள்ள, கண்களை மூடித்திறந்து சம்மதம் சொன்னாள்.
புன்னகை முகமாக அருள்பாலித்துக் கொண்டிருந்த உமையாள் சாட்சியாக, மலர்விழியின் நெற்றியில் குங்குமத்தை தீற்றிய ராகவன், அவள் கையால் தனக்கும் வாங்கிக் கொண்டான்.
இருவரின் மனமும் சொல்லொன்னா உணர்வுகளால் நிறைந்து கிடந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்து அதை அனுபவித்துவிட்டு, கோவிலை விட்டு வெளியே வந்தார்கள்.
மறுபடியும், வந்தது போலவே வீடு நோக்கி ஒரு பயணம்.
ஜெயந்தியின் திருமணம் வரையிலும் தங்களின் இந்த நாடகத்தை நீடித்து விடலாம் என்று நினைத்த அந்த காதலர்களுக்கு, புகையைப் போலவே காதலையையும் மறைப்பது எளிதன்று என்பது தெரியவில்லை…