“என்னோட கணிப்பு சரின்னா எங்க மேரேஜ்க்கு முன்னமே நான் தான் ஜெய்ன்ற விஷயம் உனக்குத் தெரிஞ்சிருக்கணும். ஐயம் ரைட்” என்றான் நேர் பார்வையாய்.

“இல்லை சார், எனக்குத் தெரியாது. நீங்க தான் ஜெய் அண்ணாவா?” என்றாள் வரவழைத்த ஆச்சர்யத்துடன்.

“இதை விட ஆஸ்கார் நடிப்பையெல்லாம் நான் கேமரால பார்த்துட்டேன் மித்ரா” என்றான் நக்கலாய்.

“சார்” என்று அவள் ஏதோ சொல்ல வர,

“ஜெய் அண்ணா” அந்த ஒத்த வார்த்தையில தான் நான் ஸ்டக் ஆகிட்டேன்” என்றவன்,

“சொல்லு மித்ரா எதுக்காக இப்படி பண்ண? நான் பார்த்த வரைக்கும் ஆராக்கு ஒரு நல்ல பிரண்ட் மாதிரி தான் இருந்த? அப்பறம் ஏன் இப்படி நடந்துக்கணும்? நேத்து வீட்டுக்கு வந்தப்போ கூட, நீ அவளை மைன்ட் டைவேர்ட் பண்ற மாதிரி பேசின, லைக் என்னைத் தப்பானவனா போட்ரேட் பண்ண ட்ரை பண்ண? நான் ஜெய்யா இருக்கும் போது கூட அதைத் தான் பண்ண? அப்போ கூட பிரண்ட் மேல இருக்குற அக்கறைன்னு எடுத்துக்கலாம். ஆனா, இப்போ அவ புருஷனை அவகிட்டயே தப்பா போட்ரேட் பண்றதுல என்ன ஆதாயம் உனக்கு?” என்றான் குரலை உயர்த்தாமல், ஆனால் அழுத்தமாய்.

“நான் எப்பவும் அவ நல்லதுக்குத் தான் யோசிப்பேன் சார்” என்றாள் விடாமல்.

“எது நல்லது? நடந்த எல்லாத்தையும் அவ அப்பாகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு தான் வந்திருக்கேன். எல்லா சிச்சுவேஷன்லயும் நீ தான் ஆரா கூட இருந்திருக்க” என்று நிறுத்தியவன்,

“லைக் அவ லவ்வைக் கெடுத்ததும் நீதான், அவ வாழ்க்கையை கெடுத்ததும் நீ தான். உனக்கு அவளோட சப்போர்ட் தேவைப் பட்டது. ஆரண்யா நல்ல டேலன்ட். வசதியான பொண்ணும் கூட. சோ அவளை பகடைக் காயா வச்சு லைப்ல முன்னேறனும்னு பார்த்த? அவமேல உனக்கு பொறாமை வேற கூடுதலா. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு கூடவே இருந்து குழி பறிச்சிருக்க. நீ பிரண்ட் எல்லாம் கிடையாது, துரோகி” என்றான் தேவ்.

“இல்லை இல்லை” என்று கத்தியவள்,

“நான் அப்படி எல்லாம் நினைக்கலை. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்” என்றாள் பட்டென்று.

“நானா?” என்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஆமா நீங்க தான் காரணம்.  நீங்க எங்க வாழ்க்கையில வராத வரைக்கும் நிம்மதியா இருந்தோம். என்னைக்கு ஆரா வாழ்க்கையில நீங்க வந்திங்களோ அன்னைக்கே என்னோட நிம்மதி போய்டுச்சு” என்றவளை விநோதமாய் பார்த்தான் தேவ்.

“அவளுக்கு எல்லாத்துக்கும் நான் வேணும். ஆனா, உங்களைப் பார்த்ததுக்கு அப்பறம் உங்க புராணம் பாட ஆரம்பிச்சா. ஆரம்பத்துல எனக்கு பெரிசா தெரியலை. ஆனா, போகப் போக எனக்கு அது பிடிக்கலை. ஆரா என் கூட மட்டும் தான் இருக்கணும்னு தோணுச்சு. அவளுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி பண்ணிப் பார்த்தேன். அவ எதுக்குமே அசையாம ஜெய் புராணம் பாடிட்டு இருந்தா.

அந்த சமயத்துல தான் கணேஷ் வந்து அவன் லவ்வை சொன்னான். அந்த நிமிஷம் நான் ஆராவைத் தான் பார்த்தேன். அவ மேல எனக்கு இருந்ததுக்கு பேரு நட்பா, பொசிசிவ்னஸா  இல்லை அதையும் தாண்டி வேற மாதிரி உணர்வான்னு என்னால அப்போ உணர முடியலை.

அப்பவும் என்னை நான் கண்ட்ரோல் பண்ணிட்டு அவ லவ்க்கு ஹெல்ப் பண்ணத்தான் அவ கூட கோவிலுக்கு போனேன். ஆனா, அங்க வரேன்னு சொன்ன நீங்க வரலை. அன்னைக்கு ஆரா பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். என்னால அவளை அப்படி பார்க்க முடியலை. அதுக்கு காரணமான உங்க மேல கொலைவெறியே வந்தது.

அழுது வீங்கி காய்ச்சல்ல படுத்துட்டா. இதெல்லாம் யாரால? உங்களால? அப்போ முடிவு பண்ணேன், ஆரா வாழ்க்கையில நீங்க இருக்கக் கூடாதுன்னு.

நீங்க மெசேஜ் பண்ணதை பார்த்தது நான்தான், உங்களுக்கு ரிப்ளே பண்ணது நான்தான். முழுக்க முழுக்க அவளை உங்க வாழ்க்கையில இருந்து விலக்கி வச்சதும் நான்தான். போதுமா?” என்றாள் ஆங்காரமாய்.

“நோ..! எங்க லவ்க்கு நீ ஹெல்ப் பண்ணவே இல்லை. இன்பேக்ட் அவ என்னை பார்த்திடக் கூடாதுன்றதுல நீ உறுதியா இருந்த. அவளைத் தனியா பார்க்கனும்னு நான் சொன்னதை, நீ ட்ரிகர் பண்ணி விட்டதை கணேஷ் அப்பவே சொன்னான். அப்பவும் பிரண்ட் மேல் இருக்குற அக்கறையில இப்படி பண்றேன்னு நினைச்சு அசால்ட்டா விட்டுட்டேன். சோ ஆரம்பத்துல இருந்து ஆரா உன் கண்ட்ரோல்ல இருக்கணும்னு தான் நீ நினைச்சிருக்க” என்றான் தேவ் தெளிவாக.

“ரொம்பத் தெரியுமோ?” என்றாள் நக்கலாய்.

“ஏன் தெரியாம?” என்று நிறுத்தியவன்,

“நான் தான் பிரச்சனை ரைட். நீதான் அவ நலம் விரும்பியாச்சே? அப்பறம் ஏன் வேற வாழ்க்கைக்குள்ள அவளை போக விடலை?. உயிரோட இருந்த என்னை செத்துட்டேன்னு சொல்லி, அவளைத் தற்கொலைக்கு தூண்டியிருக்க” என்றான்.

“நீங்க செத்துட்டதா நான் ஒன்னும் சொல்லலை.அவ ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ விஷயம் கேள்விப்பட்டு, நீங்க உயிரோட தான் இருக்கிங்கன்னு சொல்ல வந்த கணேஷை மட்டும் தான் நான் தடுத்தேன். அவ வீட்டு ஆளுங்களை வச்சே அவனை விரட்ட வச்சேன். வேற எதுவும் பண்ணலை. அவளை நான் ஏன் தற்கொலைக்குத் தூண்டனும். அவ சாகுறதுக்காகவா இத்தனையும் பண்ணேன். எனக்கு எப்பவும் ஆரா நல்லா இருக்கணும், அதுவும் என் ஆராவா இருக்கணும்” என்றாள் பட்டென்று.

“இதுக்கு பேரு என்னன்னு தெரியுமா?” என்றான் முகத்தை கடுமையாய் வைத்துக் கொண்டு.

அவள் கண்கள் கலங்க தலை குனிந்தவள்,

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இதுக்கு பேர் என்னன்னும் தெரியாது. ஆனா, அவளை என்னால விட்டுக் குடுக்க முடியாது. அவ நான் சொல்ற படி தான் கேட்கணும். என் கூடத்தான் இருக்கணும். நான் இல்லாத நேரத்துல மேரேஜ் முடிச்சுட்டோம்னு சந்தோஷப்படாதிங்க. ஆரா கண்டிப்பா உங்க கூட வாழ மாட்டா” என்றாள் வேகமாய்.

“உன்னை நம்பின உன் நட்புக்கும் நீ உண்மையா இல்லை.உன்னை நம்பி வீட்டுக்குள்ள விட்ட அவ பேரண்ட்ஸ்க்கும் நீ உண்மையா இல்லை. உன்னோட பேரண்ட்ஸ்க்கும் உண்மையா இல்லை. உன்னை லவ் பண்ண கணேஷ்க்கும் நீ உண்மையா இல்லை” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க,

“அவனை நான் லவ் பண்றேன்னு சொல்லவே இல்லை” என்றாள் பட்டென்று.

“அப்போ நீ லவ் பண்ணது ஆராவை. ஐ யாம் ரைட்” என்றான் கூர்மையான பார்வையுடன்.

“எனக்கு அதை சொல்லத் தெரியலை” என்றாள்.

“உனக்கு ஆரா மேல இருக்குறது விருப்பம் கிடையாது, ஈகோ வெறி.விருப்பமா இருந்திருந்தா நீ இந்த அளவுக்கு போயிருக்க மாட்ட. அவ காதலைப் பிரிச்சு, அவளுக்கு நடக்க இருந்த கல்யாணத்தை அவளை வச்சே நிறுத்தி, அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஒரு பொய்யை அவளை வச்சே பரப்பி, அவளை ஆறு வருஷமா தவிக்க வச்சு, அதுல நீ குளிர் காய்ஞ்சிருக்க. வேற யாரும் அவள் வாழ்க்கைக்குள்ள வந்துடக் கூடாதுன்றதுல நீ உறுதியா இருந்திருக்க. சும்மா சொல்லக் கூடாது, பார்க்க அமைதியா ஒன்னும் தெரியாத பொண்ணு மாதிரி இருந்துட்டு எவ்வளவு தெளிவா கார் நகர்த்தியிருக்க மித்ரா” என்றான் ஆச்சர்யமாய்.

“ஆமா நான் தான் பண்ணேன். இப்போ என்ன சார் அதுக்கு? இனியும் பண்ணுவேன்” என்றாள் எகத்தாளமாய்.

“உனக்கு நன்றி உணர்ச்சியெல்லாம் கொஞ்சமாவது இருக்குமா இருக்காதா?” என்றான் நக்கலுடன்.

அவள் புரியாத பார்வை பார்க்கவும்,

“உன்னோட லைப் ஸ்டேட்டசே ஆராவால தான் உயர்ந்திருக்கு. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காம, அவளோட பிரண்ட் அப்படின்ற ஒரு காரணத்துக்காக, அவ பிஸ்னஸ்ல உன்னை பார்ட்னரா சேர்த்திருக்கா, உன்கிட்ட இருந்து ஜீரோ இன்வஸ்மென்ட் கூட வாங்காம. அவ அப்பா சொன்னதை வச்சு பார்க்கும் போது, ஆதிராவுக்கும், அவ பாட்டிக்கும் கூட உன்னை பிடிக்கலை. அதையும் மீறி உன்கூட ஹெல்தியான பிரன்ட்ஷிப்பை மெயின்டெயின் பண்ணியிருக்கா. உன்னை முழுசா நம்பின ஒருத்திக்கு நீ பண்ணது எல்லாமே துரோகம் மட்டும் தான். ஆனா, இன்னமும் அந்த அரைவேக்காட்டுக்காரி உன்னை நம்பிட்டு இருக்கா? ஆனா, உனக்கு அந்த நன்றி உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லை” என்றான் தேவ். அவன் அவளை புழுவைப் பார்ப்பதைப் போல் பார்க்க,

கொஞ்சமும் பயமின்றி எதிர்பார்வை பார்த்தாள் மித்ரா.